‘விக்கெட்டுகளை கைப்பற்ற அவரால் முடியும்’

 

“டெஸ்ட் போட்டியொன்றில் நான்காவது இனிங்ஸில், நாங்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் எனும் போது, அவரால் செய்ய முடியும்” என மொயின் அலியை, இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஜோ றூட் புகழ்ந்துள்ளார்.

 

மொயின் அலியின் ஹட்-ட்ரிக் உடன் தென்னாபிரிக்காவை வென்ற இங்கிலாந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

 

இரண்டாவது போட்டியில் 340 ஓட்டங்களால் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பலத்த விமர்சனங்களுக்கான இங்கிலாந்து அணி, இந்த வெற்றியுடன் தலைநிமிர்ந்து கொண்டது.

 

ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனில் அமைந்துள்ள, 127 ஆண்டு கால வரலாறு கொண்ட ஓவல் மைதானத்தில், தமது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விளையாடிய நிலையில், ஓவல் மைதானத்தில், டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றப்பட்ட முதலாவது ஹட்-ட்ரிக்காக மொயின் அலியின் ஹட்ரிஜ் அமைந்தது.

 

இதேவேளை, எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் ஹட்-ட்ரிக்கைக் கைப்பற்றியிருக்காத மொயின் அலிக்கு, ஹட்-ட்ரிக்கை கைப்பற்றியமையானது, வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருந்தது.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றூட், அழுத்தம் குறைந்த வேளைகளில் மொயின் அலி சிறப்பாகச் செயற்படுவதாகக் கூறியுள்ளார்.

 

இதுதவிர, இரண்டாவது போட்டியில் பெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து வீரர்கள் மீண்டு வந்தமையையும் றூட் பாராட்டியுள்ளார். தவிர, இந்தப் பெறுபேறுகளை அடுத்த போட்டியில் தொடர வேண்டும் என றூட் கூறியுள்ளார்.

சந்திமால் வருவார்; ஹேரத் சந்தேகமே

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இலங்கை அணியின் தலைவர் டினேஷ் சந்திமால், அநேகமாகப் பங்குகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 1ஆவது டெஸ்ட் போட்டியில் தலைவராகப் பங்குபற்றிய ஹேரத், பங்குபற்றுவது குறித்துச் சந்தேகமே நிலவுகிறது.

 

இலங்கை அணியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சந்திமால், நியூமோனியா காரணமாக, காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் கலந்துகொண்டிருக்கவில்லை. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைத்தியசாலையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், அவரது நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க, "டினேஷ், கட்டாயமாகத் தகுதிபெறுவார். ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் விளையாடினார். கடந்த சில தினங்களாக, அவர் துடுப்பெடுத்தாடினார்" என்று குறிப்பிட்டார்.

 

இலங்கை அணியின் பிரதான பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், முதலாவது டெஸ்ட் போட்டியில் காயத்துக்கு உள்ளாகியிருந்தார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, விரலில் பந்து தாக்கியதன் காரணமாக, அவர் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். அதன் பின்னர் அவர், 4ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடியும் இருக்கவில்லை.

 

அடுத்த சில நாட்கள் வரை, ஹேரத்துக்கு வழங்கப்படுமெனத் தெரிவித்த குருசிங்க, அவர் முழுமையான உடற்றகுதி அடைகிறார் என்பதை உறுதிசெய்வதற்கு, கடைசி நிமிடம் வரை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

 

ஹேரத்தின் இடது கையின் விரல்களே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீசுவதற்குக் காணப்படும் இடர்பாடே, முக்கியமானதாக அமைந்துள்ளது. விரலில் வீக்கம் ஏற்படவில்லை என்றாலும், கடுமையான வலி காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

 

ஹேரத் விளையாட முடியாது என்றால், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளரான மலிந்த புஷ்பகுமார, தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கை அணியின் சகலதுறை வீரரான அசேல குணரட்னவும், முதலாவது போட்டியில் காயமடைந்த நிலையில், அவர், இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுவதற்கும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, யாரைத் தெரிவுசெய்வது என்ற கேள்வியும், இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அநேகமாக, சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈர் அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட், எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (3) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகச் சம்பியன்களாக இங்கிலாந்து

பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன்களாக, இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. இந்திய அணிக்கெதிராக இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இறுதி நேரம் வரை போராடிய இங்கிலாந்து, மயிரிழையில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

 

இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 228 ஓட்டங்களைப் பெற்றது.

 

முதலாவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. 4ஆவது விக்கெட்டுக்காக சாரா டெய்லரும் நட்டாலி ஷிவரும் சிறப்பாக விளையாடி, 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்ட அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. இறுதி நேர ஓட்டங்கள் காரணமாகவே, 228 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் நட்டாலி ஷிவர் 51 (68), சாரா டெய்லர் 45 (62), கத்தரின் பிரண்ட் 34 (42) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் ஜூலன் கோஸ்வாமி 3, பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தங்களது முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு, 229 ஓட்டங்களைப் பெற்றால் போதுமானது என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, முதலாவது விக்கெட்டை 5 ஓட்டங்களுக்கே இழந்தது. ஆனால், 2ஆவது விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களும் 3ஆவது விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களும் 4ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களும் பகிரப்பட்டன.

 

3 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 43 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்த அவ்வணி, 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் பூனம் றௌட் 86 (115), ஹன்மன்பிறீட் கெளர் 51 (80), வேதா கிருஷ்ணமூர்த்தி 35 (34) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் அனியா ஷ்ரப்சோல் 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெண்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் கைப்பற்றப்பட்ட முதலாவது 5, 6 விக்கெட் பெறுதியாக இது அமைந்ததோடு, சிறந்த பந்துவீச்சுப் பெறுபேறாகவும் மாறியது. தவிர, அலெக்ஸ் ஹார்ட்லி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகியாக, அனியா ஷ்ரப்சோல் தெரிவானார். தொடரின் நாயகியாக, இங்கிலாந்தின் தம்மி பியூமொன்ட் தெரிவானார். தெரிவானார்.

 

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில், இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்ற 4ஆவது தடவை இதுவாகும். அதிக தடவைகள் வென்ற அணியாக, 6 தடவை வென்ற அவுஸ்திரேலிய அணி காணப்படுகிறது.

போட்டியை ஆரம்பத்திலேயே எதிர்வுகூறிய அசேல

சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில், தன்னால் சதம் பெற முடியாது எனவும், தான் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் எனவும், அசேல குணரட்ன, போட்டியின் 5ஆவது நாளிலேயே கூறினார் என, இலங்கை அணியின் தலைவர் டினேஷ் சந்திமால் வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்தப் போட்டியில், ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்ற அசேல, போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

 

இந்நிலையில், 5ஆவது நாள் காலையில் நடந்த உரையாடலை, அணித்தலைவர் சந்திமால் வெளிப்படுத்தினார். “காலையில் வைத்து, அசேலவிடம் நான், ‘இன்று நீங்கள் சதம் பெறப் போகிறீர்கள்’ என்று கூறினேன். அதற்கு அவர், தன்னம்பிக்கையுடன் என்னிடம், ‘இல்லை, சந்திமால். சதம் பெறுவதற்கு எனக்குத் தேவையிருக்காது. 70 ஓட்டங்களைப் பெற்று, போட்டியை நான் வெல்வேன்’ என்று தெரிவித்தார்” என்று, சந்திமால் குறிப்பிட்டார்.

 

அசேலவின் அந்தப் பண்பைப் பாராட்டிய சந்திமால், “இவ்வாறான நம்பிக்கையைத் தான், என்னுடைய வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவர் சொன்னதைச் செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் பேசிய விதம், அணித்தலைவராக நானே, இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியது. இவ்வாறான வீரர்களைக் கொண்டிருப்பது குறித்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

 

இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு, அசேல குணரட்னவும் நிரோஷன் டிக்வெல்லவும் இணைந்து பகிர்ந்துகொண்ட இணைப்பாட்டம் முக்கியமானதாக அமைந்தது. அந்த இணைப்பாட்டத்தின் போது, நிரோஷன் டிக்வெல்ல, தன்னை எப்போதும் கதைத்துக் கொண்டிருக்குமாறு கோரினார் என, அசேல வெளிப்படுத்தினார்.

 

“மைதானத்துக்கு அவர் வந்த பின்னர், டிக்வெல்ல என்னிடம், ‘என்னோடு எந்த நேரமும் கதைத்துத் கொண்டிருந்து, என்னை ஓட்டங்களைப் பெற வையுங்கள்’ என்று கூறிக் கொண்டிருந்தார்” என்று அசேல குறிப்பிட்டார்.

 

டெஸ்ட் போட்டிகளில், நிரோஷன் டிக்வெல்ல, இதற்கு முன்னர் பெரிய இனிங்ஸொன்றைப் பெற்றுக் கொள்ளாத நிலையில், தனக்கு அந்த அனுபவமிருப்பதன் காரணமாக, இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு கோரவே, டிக்வெல்ல அப்படிக் கேட்டார் என, அசேல மேலும் குறிப்பிட்டார்.

போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டு: ‘எழுத்துமூலம் அறிவித்தால் விசாரணை’

- ஆர்.நிர்ஷன்

 

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் போட்டி நிர்ணயம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தத் தயார் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (19) தெரிவித்தார்.  

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.   

 

இதன்போது, அர்ஜுனவின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அமைச்சின் தீர்மானம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

 

“இது இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. அர்ஜுன ரணதுங்க, இந்த விடயத்தை அப்போதே சொல்லியிருந்தால், பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தியே இதனை முன்வைத்திருக்கிறார். எவ்வாறெனினும், எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில், நாம் விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

 

கேள்வி: கிரிக்கெட் சபைத் தலைமைப் பதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தரும் பட்சத்தில், அடுத்த உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளக் கூடிய அணியைத் தயார் செய்வதாக அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். அவருக்கான வாய்ப்புக் குறித்து கலந்துரையாடவில்லையா?  

 

பதில்: அவர் சிறந்த வீரர் என்பதை நான் அறிவேன். எனினும், கிரிக்கெட் சபைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால் தெரிவாகவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவாராயின், அது குறித்துப் பார்க்கலாம்.  

 

கேள்வி: கிரிக்கெட் தொடர்பில் நீங்கள் வெளியிட்ட முரண்பாடான கருத்து, இப்போது பரவலாக, பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறதே?  

 

பதில்: நான் எந்தவொரு வீரருடனும் முரண்பட்டது கிடையாது. குறிப்பிட்ட ஒரு வீரர் தான், பிரச்சினையாக்கிக் கொண்டார். அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. விளையாட்டுத்துறை அமைச்சராக, விளையாட்டைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.  

 

எமது வீரர்கள், உளவியல் ரீதியாக முன்னேற்றமடையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து, இந்தியத் தொடரில் விளையாடுவதற்காக ஆரோக்கியமான மனநிலையை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கு இடங்கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.  
(புகைப்படம்: நிசால் பதுகே)

டிக்வெல்லவின் ஸ்டம்பிங்: கிறீமர் வருத்தம்

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்ல, சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்படாமை குறித்து, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர், தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

 

388 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 237 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, நிரோஷன் டிக்வெல்ல மீது, ஸ்டம்பிங் வாய்ப்பொன்று, 3ஆவது நடுவரிடம் கோரப்பட்டது. மீள் ஒளிபரப்புக் காட்சிகளின் போது, டிக்வெல்ல ஆட்டமிழந்துவிட்டார் என்றே கருதப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய விதத்தில், அது ஆட்டமிழப்புக் கிடையாது என, 3ஆவது நடுவர் அறிவித்தார்.  அப்போது 37 ஓட்டங்களுடன் காணப்பட்ட டிக்வெல்ல, இறுதியாக 81 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியும் வெற்றிபெற்றது.

 

 

இந்நிலையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, “நான் பார்த்தவரையில், அவர் ஏன் ஆட்டமிழக்கக்கக்கூடாது என, எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்திருக்கவில்லை. உங்களிடம் தொழில்நுட்பம் இருந்தால், அது தெளிவாகக் காண்பிக்கும்.

 

“எங்களுக்கு இவ்வாறானவை, அதிகமாக நடக்கின்றன என நாம் உணர்கிறோம். இவ்வாறான விடயங்கள், எங்களுக்கு எதிராக நடக்கும் போது கடினமானது, குறிப்பாக, இறுதி நாளில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்வதற்கு முயலும் போது” என்று தெரிவித்தார்.

 

இப்போட்டி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “388 என்பது கடினமானது என எண்ணினோம் – குறிப்பாக இறுதி நாளில். 4ஆம் நாளில், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தோம், ஆகவே, 7 விக்கெட்டுகளைத் தான் கைப்பற்ற வேண்டியிருந்தது. மாற்றமடையும் உணர்வுகளாக இருந்தன.

 

“ஆனால், அணி வீரர்கள் விளையாடிய விதம் தொடர்பாகவும் அவர்கள் போராடிய விதம் தொடர்பாகவும், நான் பெருமையடைகிறேன். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றை இங்கு வெல்வதற்கு அவர்கள் விளையாடிய விதத்துக்கு, நான் மிகவும் பெருமையடைகிறேன். பின்னர், டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, கிட்டத்தட்ட வெல்லுமளவுக்குச் சென்றமை, அணி வீரர்களிடமிருந்து சிறப்பான பெறுபேறாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

பந்துவீச எரங்கவுக்கு அனுமதி

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்கவின் பந்துவீச்சுப் பாணி, விதிமுறைகளுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

எரங்கவின் பந்துவீச்சுப் பாணி, விதிமுறைகளை மீறுவதாகக் காணப்படுகிறது என, கடந்தாண்டு ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், பந்துவீச்சுப் பாணியை மாற்றுவதற்கான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில், தற்போது அவரது பந்துவீச்சுப் பாணி சரியாகிவிட்ட நிலையில், சர்வதேசப் போட்டிகளில் அவர் பந்துவீச முடியுமென அறிவிக்கப்படுகிறது.

 

கடந்தாண்டு ஜூனின் பின்னர், போட்டித்தன்மையான எந்தவொரு போட்டியிலும் எரங்க விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்கள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது.   

 

பிறிஸ்டலில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்காவை வென்றே, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது.   

 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவி டனி வான் நிக்கெரெக், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.   

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிக்னொன் டு பிறிஸ் ஆட்டமிழக்காமல் 76 (95), லாரா வொல்வார்ட் 66 (100) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஆன்யா ஷேர்ஷோபிள், அணித்தலைவி ஹீதர் நைட், ஜெனி குன், நட்டாலி ஷிவர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.   

 

பதிலுக்கு, 219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 49.4 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து, 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சாரா டெய்லர், ஹீதர் நைட்டின் துடுப்பாட்டத்தால், இலகுவாக வெற்றிபெறும் நிலையில் இருந்தபோதும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் என்றவாறு காணப்பட்டது. ஆனால், நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருப்பதன் காரணமாக, இறுதி ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தது.   

 

துடுப்பாட்டத்தில், சாரா டெய்லர் 54 (76), ஃபிரன்ட் வில்சன் 30 (38), ஹீதர் நைட் 30 (56), ஜெனி குன் ஆட்டமிழக்காமல் 27 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயபொங்கா கஹா, சுனே லுஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மரிஸன்னே கப், மொசெலின் டானியல்ஸ், ஷப்னிம் இஸ்மயில் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.   

 

போட்டியின் நாயகியாக, சாரா டெய்லர் தெரிவானார்.   

 

இந்நிலையில், அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி, டேர்பியில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.     

சிம்பாப்வேயை வென்றது இலங்கை

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான, ஒற்றை டெஸ்ட் போட்டியில், சாதனை வெற்றியைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி, சிம்பாப்வே அணியிடம் தோற்பதிலிருந்து தப்பித்ததோடு மாத்திரமல்லாது, வரலாற்றுப் புத்தகங்களிலும் இடம்பிடித்துக் கொண்டது.  

 

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியின் 5ஆவது நாளான நேற்று, 388 என்ற இலக்கை நோக்கி, 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன், இலங்கை அணி தொடர்ந்தது. நாளை ஆரம்பித்த துடுப்பாட்ட வீரர்களான குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரை, விரைவாகவே இழந்த இலங்கை, 5 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில், 185 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.  

 

அப்போது இணை சேர்ந்த நிரோஷன் டிக்வெல்லவும் அசேல குணரட்னவும், விரைவாகவும் பொறுப்பாகவும் விளையாடி, 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டிக்வெல்ல ஆட்டமிழந்த பின்னர், அசேலவுடன் இணை சேர்ந்த டில்ருவான் பெரேரா, பிரிக்கப்படாத 67 ஓட்டங்களைப் பகிர்ந்து, இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.  

 

இலங்கை அணி, மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அதிர்ஷ்டமும் இலங்கை அணியின் வசமிருந்தது. சிம்பாப்வே அணி தவறவிட்ட வாய்ப்புகளைத் தவிர, நிரோஷன் டிக்வெல்ல, 37 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, ஸ்டம்பிங் வாய்ப்பொன்று, 3ஆவது நடுவரிடம் கோரப்பட்டது. மீள் ஒளிபரப்புக் காட்சிகளின் போது, டிக்வெல்ல ஆட்டமிழந்துவிட்டார் என்றே கருதப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய விதத்தில், அது ஆட்டமிழப்புக் கிடையாது என, 3ஆவது நடுவர் அறிவித்தார்.  

 

ஆனால், அதிர்ஷ்டங்களுக்கு மத்தியில், டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவுக்கு அனுபவம் இல்லாத வீரர்களான டிக்வெல்லவும் அசேலவும் விளையாடிய விதம், அணியின் சிரேஷ்ட வீரர்களுக்குப் பாடம் கற்பிப்பது போன்று அமைந்திருந்தது.  

 

இலங்கை அணியின் இந்த வெற்றி, இலங்கையில் மாத்திரமன்றி, ஆசியக் கண்டத்திலேயே, 4ஆவது இனிங்ஸில் அதிக ஓட்டங்கள் துரத்தியடிக்கப்பட்ட சந்தர்ப்பம் என்ற சாதனையைப் படைத்தது. அதேபோல், டெஸ்ட் வரலாற்றிலேயே, 4ஆவது இனிங்ஸில்  துரத்தியடிக்கப்பட்டதில், 5ஆவது அதிக ஓட்டங்கள் என்ற சாதனையையும், இலங்கை படைத்தது.  

 

அத்தோடு, இந்தப் போட்டியின் அனைத்து இனிங்ஸ்களிலும், இரண்டு அணிகளுமே, 300க்கும் 400க்கும் இடைப்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டன. இவ்வாறான சந்தர்ப்பம், டெஸ்ட் வரலாற்றிலேயே 3ஆவது தடவையாக இப்போட்டியில் இடம்பெற்றது.    

ஸ்கோர் விவரம்…

 

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

 

சிம்பாப்வே: 356/10 (94.4 ஓவ.) (துடுப்பாட்டம்: கிறெய்க் ஏர்வின் 160, மல்கொம் வோலர் 36, சீகன்டர் ராஸா 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 5/116, அசேல குணரட்ன 2/28, லஹிரு குமார 2/68)

 

இலங்கை: 346/10 (102.3 ஓவ.) (துடுப்பாட்டம்: உபுல் தரங்க 71, டினேஷ் சந்திமால் 55, அசேல குணரட்ன 45, அஞ்சலோ மத்தியூஸ் 41, டில்ருவான் பெரேரா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 5/125, ஷோன் வில்லியம்ஸ் 2/62)

 

சிம்பாப்வே: 377/10 (107.1 ஓவ.) (துடுப்பாட்டம்: சீகன்டர் ராஸா 127, மல்கொம் வோலர் 68, கிறேம் கிறீமர் 48, பீற்றர் மூர் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 6/133, டில்ருவான் பெரேரா 3/95)

 

இலங்கை: 391/6 (114.5 ஓவ.) (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆ.இ 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 4/150, ஷோன் வில்லியம்ஸ் 2/146)

 

போட்டியின் நாயகன்: அசேல குணரட்ன

 

தொடரின் நாயகன்: ரங்கன ஹேரத்

 

தொடர்: இலங்கை 1-0

இலங்கைத் தொடரில் விஜய் இல்லை

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷீகர் தவான் இணைக்கப்பட்டுள்ளார்.

 

அண்மைக்காலமே, முரளி விஜய்க்கு, அவரது மணிக்கட்டில் உபாதை காணப்பட்டது.

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து நடந்த தொடரிலும், அவருக்கு இவ்வுபாதை காணப்பட்டது.

 

இந்நிலையில், இலங்கைத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், அவருக்கு அவ்வுபாதை மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.