Category Archives: Featured

இலங்கையின் வெளியேற்றத்திற்கு சனத்தும் கிரிக்கெட் சபையும் காரணமா?

தலைப்பிற்கான குறுகிய விடை: ஆம். அவர்களின் பங்கு மிக முக்கியமானது. விரிவான விடைக்குத் தொடர்ந்து வாசிக்குக.

கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டிகளில் 1996ஆம் ஆண்டு இலங்கை சம்பியன்களாக மாறியதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாகச் சிறப்பான பெறுபேறுகளையே இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அடுத்த உலகக்கிண்ணத்தில் (1999) ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தாலும், 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரையும், 2007ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப் போட்டி வரையும் இலங்கை முன்னேறியிருந்தது.

அதன்படி, இவ்வாண்டு இடம்பெறும் உலகக்கிண்ணத் தொடரிலும் இலங்கை அணி மீது எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியில் தோல்வி, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கெதிராக தடுமாறிப் பெற்ற வெற்றி எனக் காணப்பட்ட போதிலும், அதன் பின்னரான பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கெதிரான மிகச்சிறப்பான ஆட்டமும், பலமிக்க அவுஸ்திரேலிய அணிக்கெதிராக போராடித் தோற்றமையும் இலங்கை அணி மீது நம்பிக்கை கொள்ள வைத்தது. இதுவரை காலமும் உலகக்கிண்ணப் போட்டிகளில் 'நொக் அவுட்' போட்டிகள் எவற்றிலும் வெற்றிபெறாத, தடுமாறும் அணியான தென்னாபிரிக்காவிற்கெதிராக காலிறுதிப் போட்டி அமைய, இலங்கை அணிக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. தென்னாபிரிக்க அணி பலமான அணியென்ற போதிலும், இலங்கை அணியின் உலகக்கிண்ணத் திறமை வெளிப்பாடுகளும், தென்னாபிரிக்க அணி 'நொக் அவுட்' போட்டிகளில் தடுமாறுவதும் இலங்கைக்கான வாய்ப்புக்களை வழங்குவதாக அமைந்தது. ஆனால், இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

காலிறுதிப் போட்டி வெற்றிக்கு தென்னாபிரிக்க அணி மிகவும் பொருத்தமான அணியாக அமைந்து கொண்ட போதிலும், இலங்கை அணியின் தோல்வியின், தோல்வியடைந்த முறையும் கேள்விகளையும், வருத்தங்களையும், கோபத்தையும் இரசிகர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் தான் என்ன? அல்லது, காரணங்கள் தான் எவை? இலங்கை அணியின் பெறுபேறுகளை ஆராய முன்பதாக, ஒரு வருடமாவது முன்சென்று, இலங்கையின் திறமை வெளிப்பாடுகளை மீட்டுப் பார்ப்பது பொருத்தமானது.

கடந்தாண்டு பெப்ரவரியிலிருந்து இலங்கை அணி மிகச்சிறப்பான திறமை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷில் வைத்து பங்களாதேஷிற்கெதிராக 3-0 என்ற தொடர் வெற்றி, பங்களாதேஷில் ஆசியக் கிண்ண சம்பியன்கள், அயர்லாந்திற்கெதிரான ஒரு போட்டியில் வெற்றி, இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்திற்கெதிராக 3-2 என்ற கணக்கில் வெற்றி, பாகிஸ்தானுக்கெதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி எனச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. தென்னாபிரிக்காவிற்கெதிரான 1-2 என்ற தொடர் தோல்வியே அக்காலப்பகுதியில் இலங்கையில் ஒரே தொடர் தோல்வியாக அமைந்தது.

பாகிஸ்தானுக்கெதிரான தொடர் ஓகஸ்ட் 30ஆம் திகதி நிறைவடைய, அதன் பின்னர் இடம்பெறவுள்ள இங்கிலாந்துத் தொடர், நியூசிலாந்துத் தொடர், உலகக்கிண்ணம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, இலங்கை அணியானது உடற்தகுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டு, அதன் பின்னர் ஒரு மாத காலத்திற்கு திறன் பயிற்சிகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டு, உடற்தகுதிப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரின் நடுவே வெளியேற, அதை நிரப்புவதற்காக இலங்கை அணியை 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்தது. இதன்படி, இலங்கை அணியின் 6 வார காலத்திற்கான உடற்தகுதிப் பயிற்சிகள் நடுவே நிறுத்தப்பட்டு, ஒரு மாத காலத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்த திறன் சார்ந்த பயிற்சிகள் ஒருவார காலத்திற்கு மாற்றப்பட்டன. இதற்கான எதிர்ப்பை குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்த, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸும் போதுமான தயார்படுத்தல் இல்லாமை குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் சபையின் நட்பு, அதன் மூலமான நிதியியல் நன்மைகள் என்ற குறுகியகால அனுகூலங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, இலங்கை அணியின் உலகக்கிண்ணம் என்ற ஓரளவு நீண்டகாலத் திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்தியத் தொடரில் இலங்கை அணி 0-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது. முதலாவது போட்டியில் 169 ஓட்டங்களால், 2ஆவது, 3ஆவது போட்டிகளில் 6 விக்கெட்டுக்களால், 4ஆவது போட்டியில் 153 ஓட்டங்களால் (இதில் றோகித் சர்மா இரட்டைச்சதம் பெற்றதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்), 5ஆவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்திருந்தது. ஐந்தாவது போட்டியைத் தவிர எந்தப் போட்டியிலும் இலங்கை அணியால் இந்திய அணிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் வழங்க முடிந்திருக்கவில்லை. மிகவும் வெற்றிகரமான ஒரு வருடத்தில், முதன்முறையாக இலங்கை அணி பலவீனமானதாக, வெற்றிபெறுவது எப்படி எனத் தெரியாத அணியாகத் தெரிந்தது.

அதற்கடுத்து இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இங்கிலாந்திற்கு ஓரளவு பரிட்சயமான அவுஸ்திரேலிய, நியூசிலாந்து ஆடுகளங்களில் இடம்பெறும் உலகக்கிண்ணப் போட்டிகளின் குழு நிலைப் போட்டிகளைத் தாண்டி முன்னேறாத இங்கிலாந்து அணிக்கெதிராக, அவர்கள் வழக்கமாகவே தடுமாறுகின்ற எங்களது ஆடுகளங்களில் பெறப்பட்ட வெற்றி என்ற வகையிலேயே இத்தொடர் வெற்றியைக் கருத வேண்டியிருக்கிறது.

அதன் பின்னர் நியூசிலாந்தில் வைத்து நியூசிலாந்திற்கெதிராக 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை 2-4 என்ற கணக்கில் தோல்வியடைய, உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இரண்டு பாரிய, மோசமான தொடர் தோல்விகளுடன், குறைந்தளவு மனவுறுதியுடன் இலங்கை அணி உலகக்கிண்ணத்தில் நுழைந்தது. 

உலகக்கிண்ணத்தில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக 98 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கெதிராகத் தடுமாறியே வெற்றிபெற்றிருந்தது. அடுத்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கெதிராக சிறப்பான வெற்றிகளைப் பெற்று, இலங்கை அணி சிறந்த மனவுறுதியைப் பெற்றது. தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்கெதிராகவும் ஓரளவு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், இந்தியத் தொடரிலும் சரி, நியூசிலாந்துத் தொடரிலும் சரி, உலகக்கிண்ணப் போட்டிகளிலும் சரி இலங்கை அணி களத்தடுப்பில் மோசமாகத் தடுமாறியிருந்தது. றோகித் சர்மாவின் 264 ஓட்டங்களில் அவர் 4 தடவைகள் வழங்கிய பிடிகளை இலங்கை தவறியிருந்தது. இந்த மோசமான களத்தடுப்புப் பெறுபேறுகள் உடற்தகுதிப் பயிற்சிகள் போதுமானதாக இல்லாததால் ஏற்பட்ட விளைவா என்பதை ஆராய வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு, திறன் பயிற்சிகளும் குறைக்கப்பட்டிருந்த நிலையில், களத்தடுப்பில் மோசமான நிலைமை என்பது நிச்சயமாக அதன் விளைவாக அமைந்தன என்பது வெளிப்படையானது. இலங்கை அணி பொதுவாக சிறப்பான களத்தடுப்பிற்குப் பெயர்போன அணி என்பது முக்கியமானது.

இதனைத் தவிர, உலகக்கிண்ணத்திற்காக இலங்கை சார்பாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாமில் 5 வீரர்கள் உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக குழாமிலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டிருந்தது. அதில், ரங்கன ஹேரத் மாத்திரம் களத்தில் பந்து பட்டதன் காரணமாகக் காயமடைந்திருந்தார். ஏனைய நால்வரும் தசைநார் அல்லது தசை, என்பு சார்ந்த உபாதைகள் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களது உடற்தகுதி சிறப்பான அளவில் காணப்பட்டிருக்கவில்லை என்பதே அதன் உண்மையாகும். இலங்கை மாத்திரம் எவ்வாறு அவ்வளவு அதிகமான உடல் உபாதைகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டது என்பது வினாவிற்குரியதே.

இவற்றைத் தவிர, காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக குசால் ஜனித் பெரேரா களமிறக்கப்பட்டிருந்தார். இதற்கு முதல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகத் துடுப்பாடிய லஹிரு திரிமன்ன ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தாலும், காலிறுதிப் போட்டியில் திடீரென இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பலமான பந்துவீச்சு, அழுத்தம் கூடிய போட்டி, இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அனுபமில்லாத குசால் பெரேரா, லஹிரு திரிமன்னவில் ஓரளவு சிறந்த துடுப்பாட்டம் ஆகிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு, குசால் பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறக்கப்பட்டார். இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்திருந்தார். லஹிரு திரிமன்னவும் இரண்டாவது ஆட்டமிழந்திருக்கலாம் என்ற போதிலும், முதலாவது ஓவரிலேயே குசால் பெரேரா பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய விதமும், எப்போது வேண்டுமானாலும் ஆட்டமிழக்கப் போகிறார் என்ற உணர்வும் இருந்ததை மறுக்க முடியாது. குசால் பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கக் கூடும் என்ற செய்தி வெளியானதும், இலங்கை அணியின் பெரும்பாலானா இரசிகர்கள் அந்த முடிவு சிறப்பானதாக அமையாது என்பதை சமூக ஊடகத் தளங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தனர். சாதாரணமான இரசிகர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியுமெனில், அதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் முன்னாள் வீரர்களான தேர்வாளர்களாலும், பயிற்றுவிப்பாளராலும் புரிந்து கொள்ள முடியாமற் போனமையை எவ்வாறு அழைப்பது?

இவ்வாறு முக்கியமான போட்டியொன்றில் திடீரென மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலங்கையின் தேர்வாளர்களுக்குப் புதிதானதொன்றுமல்ல. கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 4 மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது, அதில் அஞ்சலோ மத்தியூஸ் காயமடைந்து வெளியேறியமை தவிர, ஏனைய மாற்றங்கள் விரும்பி ஏற்படுத்தப்பட்டன. அப்போட்டியின் முடிவை இலங்கை இரசிகர்கள் அறிவார்கள்.

முக்கியமான நொக் அவுட் போட்டிகளில் அணி தளம்பல் மனநிலையுடன் காணப்படுகிறது என்பதை இவ்வாறான அவசரமான மாற்றங்கள் உணர்த்துவதோடு, அணியின் மனநிலையிலும் நிச்சயமாக மாற்றங்களைச் செலுத்தும். அத்தோடு, எதிரணி தளம்பல் மனநிலையுடன் காணப்படுகிறது என்பது இலங்கையோடு விளையாடும் அணிகளுக்கு நிச்சயமாக மனவுறுதியை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என்பன இலங்கையின் தோல்விக்கான பொறுப்புக்களில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் களத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட பல முடிவுகள் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தியிருக்கின்றன என்பதை இலங்கை கிரிக்கெட் சபையும், தேர்வாளர்களும் – குறிப்பாக பலமிக்க பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய – புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவுமான தேவை ஏற்பட்டிருக்கிறது.

சாதனைகளின் புதிய பெயர் சங்கா

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம்.

கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இந்தவாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும் சாதனைகளும் அமைந்திருக்கின்றன.

4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை, முழு கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் அளவுக்குப் படைத்திருக்கிறார்.

3 சதங்களை சங்கக்கார பெற்றிருந்த போதே, அதற்கு முதல் பலர் அவ்வாறு 3 சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும், உலகக்கிண்ணத்தில் மூன்று சதங்களை அடுத்தடுத்துப் பெற்ற முதல்வராக சங்கா பெருமை பெற்றார்.

நேற்று நான்காவது.

அத்துடன் ஒரே உலகக்கிண்ணத் தொடரில் 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்தியூ ஹெய்டன் (2007), சௌரவ் கங்குலி (2003) & மார்க் வோ (1996) – 3

அதையும் சங்கக்கார முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் வசமுள்ள இன்னும் இரு உலகக்கிண்ண சாதனைகளும், சங்கக்காரவின் இந்த அபார ஓட்டக்குவிப்பால் உடையக்கூடிய அபாயத்தில் உள்ளன.

1.உலகக்கிண்ணங்களில் பெறப்பட்ட கூடிய சதங்கள். சச்சின் பெற்றது 6. சங்கக்கார இப்போது ரிக்கி பொன்டிங்கை சமன் செய்து 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

2. ஓர் உலகக்கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள். சச்சின் 2003 தொடரில் ​11 போட்டிகள், 11 இன்னிங்ஸ்களில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 11 போட்டிகள், 10 இன்னிங்ஸ்களில் 659 ஓட்டங்கள்.

இலங்கை சார்பாக இதுவரை ஓர் உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர் மஹேல ஜெயவர்த்தன. 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில்​ 548 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குமார் சங்கக்கார இப்போதைக்கு இந்த உலகக்கிண்ணத்தில் 6 போட்டிகள், 6 இன்னிங்ஸ்களில் 4 சதங்களோடு ​496 ஓட்டங்கள்.

இலங்கை இறுதிப் போட்டி வரை பயணித்தால், (இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும்) இது சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது.

சங்கக்காரவும் மஹெலவும் உலக T20 வெற்றிகளோடு T20​ போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைப் போல, உலகக்கிண்ண வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதையும், ​சங்கக்கார சாதனைகளுடன் விடைபெறுவதையும் சாத்தியமாக்க இலங்கை அணி இன்னும் கடுமையாக போராடவேண்டும்.

எனினும் சச்சின் டெண்டுல்கரின் 96 அரைச் சதங்கள் என்ற சாதனை, சங்காவின் சதங்கள் குவிக்கும் அபார ஓட்டங்களால் முறியடிக்கப்பட முடியாமலே போகலாம்.

இப்போது சங்கக்கார பெற்றுள்ள 25 ஒருநாள் சதங்களுடன், இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவகைப் போட்டிகளிலும் (​ஒருநாள் + டெஸ்ட் + T20​) ​1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 900 ஓட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.

விக்கெட் காப்பிலும் நேற்று சங்கா புதிய சாதனைகளைப் படைத்திருந்தார்.

500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கா.

இந்த சாதனை இப்போதைக்கு யாராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்பது உறுதி. பட்டியலைப் பாருங்கள் புரியும்.

நேற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்கிய சங்கா, சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதாகும்.

​அதேபோல அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2,038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவர் ​அவுஸ்திரேலியாவில் ​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.

மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3,067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவ் ரிச்சர்ட்ஸ் 2,769 ஓட்டங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ள ​நிலையில் சங்கா ​இப்போது ​3ஆம் இடத்தை​ப்​ பெற்றுள்ளார்.

​இலங்கை அணியின் மூன்றாம் இலக்கம் என்றால் துடுப்பாட்ட முதுகெலும்பாகவே மாறி நிற்கும் சங்கா, இந்த உலகக்கிண்ணம் முழுவதுமே ​2ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக ஓட்ட மழையைப் பொழிவதன் முக்கிய காரணமாக நிற்கிறார்.

டில்ஷானுடன் 210, 195 மற்றும் 130, திரிமன்னேயுடன் 212 என்று இணைப்பாட்டங்களும் சங்காவின் சாதனைகள் பேசும்.

​நாடுகள் தாண்டி, வயது வரம்பு தாண்டி எல்லா கிரிக்கெட் ரசிகர் மட்டுமன்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுமே 'சங்கா, சங்கா' என்று ஒரு புதிய கிரிக்கெட் கடவுளாகவே சங்கக்காரவை ​ஏற்றி உயர்த்தி வழிபட்டாலும், சங்கா அதே பணிவோடு அணி உலகக்கிண்ணம் கைப்பற்றவேண்டும், அது தான் முதல் நோக்கம் என்கிறார்.

ஆனால், ரசிகர்களின் ஆதங்கம் எல்லாம், இந்தத் தொடரே தனது இறுதி ஒருநாள் தொடர் என்று அறிவித்துள்ள சங்கக்கார ஏன் அந்த முடிவை மட்டும் மீள் பரிசீலனை செய்யக்கூடாது என்பதே…

ரசிகர்கள் மட்டுமன்றி இலங்கை அணித் தலைவர் மத்தியூசின் நிலையம் அதே… "காலில் விழாக்குறையாக சங்காவை ஓய்வு பெறவேண்டாம் என்று கேட்டுவிட்டேன்" என்று சொல்கிறார் அஞ்செலோ.

இன்னும் சங்கா குவிக்கவுள்ள ஓட்ட மழை, சதங்களின் குவியல், சாதனைகளின் பட்டியல்கள் என்பவற்றுக்காகவும் வாழ்த்துக்களோடு காத்திருப்போம்.

கூடவே 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடுமா என்று பார்க்கவும், சங்கக்கார தனது ஓய்வு முடிவை இத்தனை ஆயிரம் ரசிகர்களுக்காகவும் தனது சக வீரர்களுக்காகவும் மறு பரிசீலனை செய்வாரா என்று அறிந்துகொள்ளவும்.

இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் – 1996

வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஆறாம் (1996) ஆண்டு உலகக்கிண்ணத்திற்கு முன்னர் இலங்கை, அரையிறுதிப் போட்டிகளுக்குக் கூடத் தகுதிபெற்றதில்லை. இதற்கு முன்னர் 25 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றி, நான்கே நான்கு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்தது. இருபது போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவினையும் தந்திருந்தது. 

இந்தத் தொடரில் இலங்கைக்கு அர்ஜூன ரணதுங்க என்ற பலமான, தன்னம்பிக்கைமிக்க தலைவர் காணப்பட்டாலும், இலங்கைக்கு வெற்றிவாய்ப்பென்பது அதிகமானதாக இருந்ததாகக் கருதப்பட்டிருக்கவில்லை. அத்தோடு, இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகளைக் காரணம் காட்டி அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கைக்கு வந்திருக்கவில்லை. தவிர, இலங்கையின் குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய பலமான அணிகளும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாவற்றையும் தாண்டி இலங்கை அணி எவ்வாறு உலகக்கிண்ணத்தை வென்றது?

இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அரவிந்த டீ சில்வா-வின் துடுப்பாட்டமும், சனத் ஜெயசூரியவின் அதிரடித் துடுப்பாட்டமும், சனத் ஜெயசூரிய உட்பட சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சும் கருதப்படுகிறது.

ஆனால், உலகக்கிண்ணம் ஆரம்பிக்கும் போது சனத் ஜெயசூரிய 99 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, 19.73 என்ற சராசரியுடன், 74.27 என்ற அடித்தாடும் வீதத்தைக் கொண்டிருந்தார். ஒரு சதமும், ஒன்பது அரைச்சதங்களும் இதில் உள்ளடங்கும். அரவிந்த டீ சில்வா 175 போட்டிகளில் 3 சதங்களுடன் 31.23 என்ற சராசரியைக் கொண்டிருந்தார். ஆகவே, இந்த நட்சத்திரங்களுக்கும் அவர்களது கிரிக்கெட் வாழ்வை மாற்றிய தொடராக 1996 உலகக்கிண்ணமே அமைந்தது.

இத்தொடரில் இலங்கையின் முதலாவது போட்டி பெப்ரவரி 17ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கெதிராக இடம்பெறவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா, இலங்கைக்கு வருவதைத் தவிர்க்க, அந்தப் போட்டியில் இலங்கை விளையாடாமலேயே வெற்றிபெற்றது. பலம் குறைவான சிம்பாப்வே அணி 229 ஓட்டங்களை இலங்கைக்கு இலக்காக வழங்க, இலங்கை அணி – சனத் ஜெயசூரியவையும், களுவிதாரணவையும் ஆரம்பத்திலேயே இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அசங்க குருசிங்கவும், அரவிந்த டீ சில்வாவும் சிறப்பாக ஆடி இலங்கைக்கு 6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இலங்கையில் அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பங்குபற்றாமல் விட, அந்தப் போட்டிக்கான வெற்றியும் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றது.

இலங்கையின் நான்காவது போட்டி மிக முக்கியமானதாக அமைந்தது. வெற்றிபெறுவதற்கு அதிகமான வாய்ப்புக்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணியை டெல்லியில் இலங்கை சந்தித்திருந்தது. சச்சின் டெண்டுல்கரின் மிக அற்புதமான 137 ஓட்டங்களின் துணையோடு இந்திய அணி 271 ஓட்டங்களைக் குவித்தது. இதற்கு முன்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 271 ஓட்டங்களை விட அதிகமான போட்டிகள் வெற்றிகரமாகத் துரத்தியடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் 22 தடவைகள். இலங்கை செய்தது ஒரே ஒரு தடவை. யாருக்கெதிராக? சிம்பாப்வேயிற்கெதிராக.
ஆனால், 1996 உலகக்கிண்ணமென்பது இதற்கு முன்னர் செய்யாதவற்றை இலங்கை செய்வதாகவே அமைந்திருந்தது. அதை இப்போட்டியில் செய்தது இலங்கை. சனத் ஜெயசூரியவின் அதிரடி 79 ஓட்டங்கள், ஹஷான் திலகரட்ண, அர்ஜூன ரணதுங்க இருவரினதும் ஆட்டமிழக்காத முறையே 70, 46 ஓட்டங்கள், களுவிதாரண, அரவிந்த டீ சில்வாவின் அதிரடி இருபதுகள் என்பன இலங்கைக்கு வெற்றியை வழங்கின. மனோஜ் பிரபாகரின் 4 ஓவர்களில் 47 ஓட்டங்கள் அடித்து விளாசப்பட்டிருந்தன.

குழுநிலைப் போட்டிகளில் இலங்கையின் கடைசிப் போட்டியாக கென்ய அணிக்கெதிராக கண்டியில் இடம்பெற்ற போட்டி அமைந்தது. ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளில் (2 போட்டிகளில் விளையாடாமல் வெற்றி கிடைத்திருந்தது) இலங்கை அணி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருக்க, அவற்றிற்கெல்லாம் மகுடம் வைப்பது போல் இப்போட்டி அமைந்திருந்தது. அதுவரை காலமும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாக பாகிஸ்தான் அணிக்கெதிராக இங்கிலாந்து பெற்றுக்கொண்ட 363 ஓட்டங்கள் காணப்பட்டன. அதை முறியடித்த இலங்கை, இப்போட்டியில் கென்யாவிற்கெதிராக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களைக் குவித்தது. அரவிந்த டீ சில்வா 115 பந்துகளில் 145 ஓட்டங்களைக் குவிக்க, அசங்க குருசிங்க 103 பந்துகளில் 84 ஓட்டங்களையுட், அர்ஜூன ரணதுங்க 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 27 பந்துகளில் 44, களுவிதாரண 18 பந்துகளில் 33 ஓட்டங்கள் எனக் குவித்திருந்திருந்தனர். கென்ய அணி 254 ஓட்டங்களை மாத்திரம் பெற, இலங்கை அணி 144 ஓட்ட வெற்றியுடன் காலிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்தது.

காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சனத் ஜெயசூரியவின் அதிரடி 82 ஓட்டங்களின் துணையோடு 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை கொல்கத்தாவில் சந்திக்க ஆயத்தமாகியது. ஏற்கனவே இந்தியாவை டெல்லியில் வீழ்த்தியிருந்த போதிலும், ஏறத்தாழ இலட்சம் பேர் நேரடியாகப் பார்வையிடப்போகும் போட்டியில், அதுவும் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவது சற்றுக் கடினமானது தான்.

இந்த அழுத்தங்களெல்லாம் போதாது என்று, ஆடுகளமும் இலங்கைக்குத் தலையிடியை வழங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடுவதா இல்லை களத்தடுப்பில் ஈடுபடுவதா என்ற குழப்பம் காணப்பட்டது. இலங்கை நாணயச்சுழற்சியில் தோல்வியடைய, இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இலங்கை அணியின் முதலிரு விக்கெட்டுக்களும் இலங்கை ஓர் ஓட்டத்துடன் காணப்படும் போது வீழ்த்தப்பட, மூன்றாவது விக்கெட்டுக்காக 34 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதில் 33 ஓட்டங்களை அதிரடியாக விளாசியவர் அரவிந்த, மறுபுறத்தில் குருசிங்க ஓர் ஓட்டத்துடன் 3ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அரவிந்த டீ சில்வா 47 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாச, றொஷான் மஹாநாம 58 ஓட்டங்களையும், அர்ஜூன 35 ஓட்டங்களையும், ஹஷான் திலகரட்ண 32 ஓட்டங்களையும் பெற்றதோடு, சமிந்த வாஸ் இறுதி நேரத்தில் 16 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 251 ஓட்டங்களைப் பெற உதவினார்.

252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக ஆட, இந்திய அணி 98 ஓட்டங்களுக்கு விரைந்தது. இலங்கை தோல்வியடைந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட, சனத் ஜெயசூரியவின் பந்துவீச்சில் களுவிதாரணவால் ஸ்ரம்ப் செய்யப்பட்டு சச்சின் ஆட்டமிழந்தார். சச்சினோடு சேர்த்து 7 விக்கெட்டுக்கள் 32 ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. இந்திய அணி தோல்வியடைவது உறுதி என்பது வெளிப்பட, இந்திய இரசிகர்கள் இலங்கை வீரர்கள் மீது பழங்களாலும், தண்ணீர்ப் போத்தல்களாலும் வீசியெறிந்ததோடு, மைதானத்தில் பார்வையாளர் பகுதியின் ஒரு பகுதியையும் தீயிட்டனர். மீண்டும் ஆரம்பிக்கப்பட முயற்சிக்க, மீண்டும் தாக்குதல் தொடங்க, இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்தது. இலங்கை அணி தனது முதலாவது உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதுவரை காலமும் சிங்கக்குருளைகளாக இருந்தவர்கள் திடீரென சிங்கங்களாகக் கருதப்படத் தொடங்கினர். அதுவரை காலமும் கடைக்குட்டிகளாக இருந்தவர்கள், திடீரென மதிக்கப்படும் அணியாக மாறினர். ஆனாலும், மார்க் ரெய்லர், மார்க் வோ, றிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ, மைக்கல் பெவன், இயன் ஹீலி, ஷேன் வோண், கிளென் மக்ரா, டேமியன் பிளமிங் ஆகியோரைக் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் உள்ளதெனக் கருதப்பட்டது.

லாகூரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற 5 உலகக்கிண்ணங்களில், இறுதிப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அணிகளின் எண்ணிக்கை? பூச்சியம். இப்போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணியை இலங்கை எதிர்கொண்ட 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளினதும் முடிவு? அவுஸ்திரேலியாவிற்கு வெற்றி. ஆனால், இது அர்ஜூன ரணதுங்கவின் அணி. ஏற்கனவே சொன்னது போல, இதற்கு முதல் செய்யாதவற்றை செய்து, தங்களை நிரூபித்து வந்த அணி. மற்றொரு சவாலுக்கும் தயாரானது.

ஒரு விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி, மார்க் ரெய்லர், றிக்கி பொன்டிங் என இருவரின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் மிளிர, இலங்கை அழுத்தத்திற்குள்ளாகியது. ஆனால், அரவிந்த டீ சில்வாவின் பந்துவீச்சில் மார்க் ரெய்லர் ஆட்டமிழந்த, அதன் பின்னர் இலங்கை அணி மீண்டும் சிறப்பாகப் பந்துவீசியது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றது.

அரையிறுதியைப் போலவே, இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சறுக்கினர் சனத் ஜெயசூரிய ரண் அவுட் முறையில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களுடன் அழுத்தத்தில் இலங்கை. அரையிறுதிப் போட்டியில் வேகமான அரைச்சதம் பெற்றுத் தனது தயார்படுத்தலை மேற்கொண்ட அரவிந்த டீ சில்வா, இறுதிப் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்தினால். அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை ஆடுகளத்தின் இருபுறமும் அடித்தாடிய அவர், இறுதிவரை ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களைப் பெற்றார். அசங்க குருசிங்க 65 ஓட்டங்களைப் பெற்றதோடு, அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றார். அத்தோடு, வெற்றிக்கான ஓட்டங்களையும் அவரே அடித்தார். வரலாறு உருவாகியது. கத்துக்குட்டிகள் சம்பியன்களானார்கள். ரொனி கிரெய்க்-இன் 'லிட்டில் லயன்ஸ்' உண்மையில் கர்ச்சிக்கத் தொடங்கினார்கள். இலங்கையின் கிரிக்கெட் வரலாறே மாற்றி எழுதப்பட்டது.

அதுவரை காலமும் அரையிறுதிக்குத் தானும் தகுதிபெறாத இலங்கை, இத்தொடரை வெற்றிகொண்டிருந்தது. அடுத்த உலகக்கிண்ணத்தில் பரிதாபமாக முதற்சுற்றோடு வெளியேறினாலும், அடுத்த உலகக்கிண்ணத்தில் அரையிறுதிக்கும், அதற்கடுத்த இரண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கும் இலங்கை தகுதிபெற்றது. இம்முறை இன்னொரு படி மேற்சென்று, சம்பியன்களாவார்களா? வலன்டைன்ஸ் தினத்தன்று, இலங்கை நேரப்படி காலை 3.30 இற்கு நியூசிலாந்திற்கெதிரான போட்டியோடு அதற்கான விடைகள் கிடைக்கப்பெறத் தொடங்கும். 'விஸ்டன் ஸ்ரீ லங்கா' உங்களுக்கான சுவையான தகவல்களையும் தந்துகொண்டிருக்கும்.

மங்கிய நட்சத்திரங்கள்

தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது.

தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முறையற்ற பந்து வீச்சு என்ற குற்றச்சாட்டு திறமையான வீரர்களை முடக்கியது.

நம்பிக்கைதரும் நட்சத்திர வீரர்களாக மின்னிய வீரர்கள் மதிப்பிழந்து செல்லாக்காசாகி விட்டனர். உலகக்கிண்ன சம்பியனான இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்காளிகளான ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங் ஆகிய மூவரும் அணியில் தமக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார்கள். டுவென்டி 20, ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலும் அசத்திய யுவராஜ் சிங், நொந்து போயுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் 362 ஓட்டங்கள் அடித்து 15 விக்கெட்களை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை பெற்றவர் யுவராஜ் சிங். அடுத்த உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. சகலதுறை வீரரான யுவராஜ் ஓரம் கட்டப்பட்டார். டுவென்டி 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி அவரின் வாழ்க்கையை திசை திருப்பியது. இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை யுவராஜ் சிங்கின் விளையாட்டு தகர்த்தது. விளயாடக்கூடிய உடல் தகுதி அன்று அவருக்கு இருக்கவில்லை. ஆனாலும் களமிறக்கப்பட்டு பலிக்காடாவாக்கப்பட்டார்.

இந்தியா உலகக் கிண்னத்தை பெற கம்பீரின் விளையாட்டும் ஒரு காரணம். ஷேவாக்கும் சச்சினும் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் தோல்வி உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தோல்வி முகத்தைச் சகிக்க முடியாத இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படுத்து விட்டார்கள். கம்பீரின் எழுச்சி இலங்கை வீரர்களைத் திணறடித்தது.

உலகக் கிண்ணத்தை வென்ற ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன் சிங், சஹீர்கான், நெஹ்ரா ஆகியோர் அணியில் இல்லை. சச்சின் ஓய்வுபெற்றுவிட்டார். ஸ்ரீநாத் ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ளார். டோனி, கோஹ்லி, ரெய்னா, அஸ்வின் ஆகிய நால்வர் மட்டும் அணியில் உள்ளனர். ஏனையவர்கள் புதியவர்கள்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கம் 1970களில் மிக அதிகமாக இருந்தது. அந்த அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதென்பது மிகக்கடினமானது. 1975-79 களில் உலகக்கிண்ண சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.

1983ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியது. டுவென்டி 20 முன்னாள் சம்பியன் என்ற சொற்பபெருமையுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தயாரான மேற்கிந்தியத்தீவுகளின் நட்சத்திர வீரர்களான டுவைன் பிராவோ, பொலார்ட் ஆகிய இருவரும் உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்ட பழிவாங்கலாகவே கருதப்படுகிறது.

இந்தியத்தொடரை பாதியில் கைவிட்டு நாடு திரும்பிய குற்றச்சாட்டு பிராவோ மீது சுமத்தப்பட்டது. சகலதுறை ஆட்டக்காரனான பொலார்ட், பிராவோ ஆகியோர் இல்லாதது மேற்கிந்தியத்தீவுகளுக்கு பெரும் இழப்புத்தான். முறை தவறி பந்து வீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட சுனில் நரேன், உலகக்கிண்ன அணியில் இருந்து வெளியேறிவிட்டார். மேற்கிந்தியத்தீவுகளின் விக்கெட் வேட்டைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து படுதோல்வியடைந்ததனால் தலைமைப்பதவியில் இருந்துக் தூக்கப்பட்ட அலெஸ்டர் குக், உலகக்கிண்ன அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் கிண்ணப்போட்டியில் தோல்வியடைந்ததனால் பீற்றர்ஸனின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டது. நிர்வாகத்துடன் முரண்பட்ட பீற்றர்ஸன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை நிர்வாகத்தின் மீது சுமத்தினார். என்றாலும் உலகக்கிண்ன அணியில் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார்.

காயத்தால் அவதிப்படும் உமர்குல் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. சொஹிப் மாலிக் கம்ரன் அக்மல் ஆகியோரையும் பாகிஸ்தான் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தென்.ஆபிரிக்காவின் ரயன் டுமினி, பங்களாதேஷ் வீரர் ருபெல் ஹசைன், இலங்கையின் அஜந்த மென்டிஸ், அவுஸ்திரேலிய வீரர் ரியான் ஹரிஸ், நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷிம் ஆகியோரும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர்.

தடுமாறும் தவான்; இந்திய அணியில் மாற்றம் வருமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஷிகர் தவான், அண்மைய நாட்களில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து தடுமாறிவருகிறார். ஓட்டங்களைப் பெறுவதில் இவர் எதிர்நோக்கும் சிக்கல், அணிக்கும் பெரிய பிரச்சினையைத் தோற்றுவித்துவருகிறது. 

தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாக வேண்டுமானால் அடுத்து இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றேயாகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இப்படியானதொரு அழுத்தத்துக்குள் தவானின் துடுப்பாட்டத் தடுமாற்றம் இந்திய அணியின் மனோ திடத்தைப் பாதிப்பதாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான கவாஸ்கர், 'தவானுடைய துடுப்பாட்ட நுட்பத்தில் குறைபாடு காணப்படுகிறது. பந்துகளை எதிர்கொள்ளும்போதான அவரது அமைவும், நகர்வும் திருத்தத்துக்கு உட்படுத்தப்படவேண்டியவையாக உள்ளன. இதுவே அவரது தடுமாற்றத்துக்கும், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதற்குமான காரணமாக உள்ளது. இதேபோன்ற பிரச்சினை முரளி விஜய்க்கும் இருந்தது. ஆனால், அதனை அவர் விரைவாகச் சரிசெய்துகொண்டுவிட்டார். அதனால்தான் அவரால் இங்கிலாந்துக்கு எதிராகவும், அவுஸ்திரேலியாவிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாட முடிந்தது' என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது தவான் காயத்துக்கு உள்ளாகி அவுட்டாகாமலே வெளியேற நேர்ந்தது. பின்னர், அணி தோல்வியை நோக்கி நகர்ந்தபோது மீண்டும் துடுப்பெடுத்தாட வரவும் நேரிட்டிருந்தது. அந்தக் காயம் அவரது அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் தன்னம்பிக்கையைப் பாதித்திருக்கிறதா? என்ற கேள்வியும் பல தரப்பினரால் எழுப்பப்படுகிறது. 'அவரது காயத்தைக் காரணமாக்கி, உலகக்கிண்ணத் தொடருக்கான அணியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முரளி விஜய்யை உள்வாங்க வேண்டும்' என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. 

ஆனால், அணித்தலைவர் டோனியினால் இந்தக் கருத்து, 'நகைச்சுவையானது' என்று நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 

'தவான் அணியில் முக்கியமானதொரு வீரர். நம்பிக்கையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். ஒவ்வொரு போட்டியினதும் பெறுபேறுகளைக் கொண்டு வீரர்களை மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு போட்டிக்குமே வேறு வேறு அணிகளைத்தான் தெரிவுசெய்யவேண்டியிருக்கும். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள அணிக்கெதிராக விளையாடிக்கொண்டிருக்கிறோம். அதுவும், அவர்களுக்கு சாதகமான, நன்கு பரிச்சயமான ஆடுகளங்களில். அப்படிப் பார்க்கும்போது எமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களின் பெறுபேறுகள் திருப்திதரக்கூடிய அளவிலேயே உள்ளன. சில தடுமாற்றங்களிலிருந்து மீண்டுவர போதுமான கால அவகாசம் வழங்கப்படவேண்டியது முக்கியமானது' என்கிறார் டோனி.

கடந்த வருடத்தில் நியூசிலாந்துடனான தொடரில் ஆரம்பித்துப் பார்த்தால் மெல்பேர்ணில் தவான் பெற்ற ஒற்றை இலக்க ஓட்டமானது, கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் அவர் பெற்ற மூன்றாவது ஒற்றை இலக்க ஓட்டம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 

2014ஆம் ஆண்டில், திலகரட்ன டில்ஷான், ஹசிம் அம்லா ஆகியோர் மாத்திரமே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக தவானை விட அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாக உள்ளனர்.

தவான் விளையாடிய இன்னிங்ஸ்களைவிட டில்ஷான் ஏழு இன்னிங்ஸ்கள் அதிகமாக விளையாடியிருக்கும் அதேவேளை, தவானுக்கு சமமான எண்ணிக்கையான இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா, 892 ஓட்டங்களை 80.57 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில் பெற்றிருக்கிறார். தவான், தனது 815 ஓட்டங்களைப் பெற்றதோ 86.51 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில். 

தவானது கடந்த கிரிக்கெட் பருவகாலத்திலான 18 ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்னிங்ஸ்களில் தலா நான்கு போட்டிகள் நியூசிலாந்திலும் இங்கிலாந்திலும் விளையாடப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே, சில வாரங்களுக்கு முன்வரை இந்திய அணிக்கு அதிரடி ஆரம்பத்தை தந்துகொண்டிருந்த தவானுடைய தற்போதைய துடுப்பாட்டத் தடுமாற்றம் அவரை அணியிலிருந்து தூக்குவதற்கான வாய்ப்பை வழங்கிவிடுமா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே அணித்தலைவர் டோனியின் பதிலாக இருக்கிறது. அதேநேரம், தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களுக்கு இலகுவாக ஆட்டமிழந்துவிடுவது, தவானின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, அடுத்து நடக்கவிருக்கும் இறுதி லீக் போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியிலிருந்து தவானுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது. 

இது, அவருக்கு தன்னை எடைபோட்டுப் பார்க்கவும், சீர்படுத்திக்கொள்ளவும் கால அவகாசத்தை வழங்கக்கூடும். 

உடல் உபாதையிலிருந்து குணமாகிவிட்டார் என்று கருதப்படும் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடத் தயாராகிவிட்டால் தவானுக்கான ஓய்வு கிடைக்கக்கூடும். அல்லது மத்திய வரிசையில் அவரைத் துடுப்பெடுத்தாடச் செய்யும் எண்ணம் டோனிக்கு எழக்கூடும். தொக்கி நிற்கும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள 30ஆம் திகதிவரை நாம் காத்திருக்கவேண்டியிருக்கும்.

உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும்

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் பொழுது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுழற்பந்துவீச்சாளர்கள் சந்திப்பது தான் ஒவ்வொரு தேசிய அணிக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


ஐ.சி.சி விதியின் படி சுழற்பந்துவீச்சாளர்கள் 15 பாகை வரையே கையை வளைக்க முடியும். அதற்கு அதிகமாக கையை வளைக்கும் பொழுதே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பந்துவீச்சாளர்கள் சந்திக்க நேரிடுகின்றது. அது மாத்திரமல்ல பந்துவீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதான குற்றச்சாட்டு மைதான நடுவர்களால் நாகாஸ்திரம் போன்று ஒருமுறை மாத்திரம் பிரயோகிக்கப்படுவதில்லை. எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதனால் இதனை ஒரு சாதாரண பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.


இதனால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் சுழற்பந்துவீச்சாளர்களை களம் இறக்குவதற்கு ஒவ்வொரு அணியும் உள்ளுர கலங்கிய வண்ணமே உள்ளன. ஏனென்றால் அத்தொடர்களில் அவர்களது பந்துவீச்சு குறித்து குற்றச்சாட்டு எழுந்தால் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர்கள் பங்குகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தி விடும். அவுஸ்ரேலிய, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதனை உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஒரு பயிற்சியாகக் கருதியே அத்தொடர்களில் பங்குகொள்ள குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் சம்மதித்தன. 


அந்தவகையில் மேற்படி தொடர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை அதில் களமிறக்காமல் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடவிட்டால் அத்தகைய ஆடுகளங்களின் தன்மைகள் குறித்து அவர்கள் உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே தமது திறமைகளைப் பரீட்சித்துப்பார்க்க வேண்டிவரும். அதிலும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய, இலங்கை அணி வீரர்களைப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் அம்மைதானங்களில் முதன்முறையாக விளையாடுபவர்களே. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் தெரிவுத் தாக்கம் அணியின் சமநிலையைக் குழப்புவதற்கும் வாய்ப்புள்ளது. அவுஸ்ரேலிய, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதமானவை என்பதனால் உலக்கிண்ணப் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களின் வகிபங்கு குறைவாகவே இருக்கும் என்பது வேறுவிடயம்.


தற்போதைய நிலையில் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மல், இறுதி 15 பேர் கொண்ட அணிக்குள் வருவாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் நீடித்த வண்ணமே உள்ளது. எந்தவொரு அணியும் தனியொரு வீரரை நம்பியிருக்கக் கூடாது என்றாலும் உலகக் கிண்ணம் போன்ற பெருந்தொடர்களில் தனிநபரை சார்ந்திருப்பதைத் தவறென்றும் சொல்ல முடியாது. இதனால் அஜ்மலுக்குப் பதிலாக வேறு ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணி கைவசம் வைத்திருந்தாலும் அணியின் கட்டமைப்புகளில் அது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவே செய்யும். ஏனென்றால் இவ்வாறான பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்ப்பதற்கான இடம் அல்ல உலகக் கிண்ணப் போட்டிகள். 


ஐ.சி.சி போன்ற உயர் அமைப்புகள் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்குத் தடை விதிக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றில் இருந்து வீரர்கள் மீண்டெழுவதற்கு உரிய காலத்தையும் கருத்திற்கொள்வது மிக அவசியம். இன்று இலங்கை அணியின் சேனநாயக்க முதற்பரிசோதனையிலேயே வெற்றி பெற்றதனால் விளையாடுவதற்கு ஏதுவாக இலங்கை அணியில் அவரது  மீள்பிரவேசம் நிகழ்ந்துள்ளது. ஆனால் சயீட் அஜ்மல் போன்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முதற்தடவை மேற்கொண்ட பந்துவீச்சு பரிசோதனை முயற்சியில் தோல்வி கண்டு இரண்டாவது தடவையாகவும் பயோ – மெக்கானிக்கல் சோதனைக்கு ஆளாகி இருப்பது பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ணக் கனவை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.


எனவே, ஐ.சி.சி. – முறையற்ற விதத்தில் பந்துவீசியதாய் கூறி தடைவிதிக்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் இன்று நேற்றல்ல சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நாளில் இருந்தே இவ்வாறான முறையிலேயே பந்துவீசி வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்து அவர்கள் மீதான தடையை உலகக் கிண்ணம் போன்ற பெருந்தொடர்களின் பின்னர் விதித்திருந்தால் ஒவ்வொரு தேசிய அணியும் நிம்மதியுடன் உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்திருக்கும். அது ஒருவகையில் உலக்கிண்ணப் போட்டிகளின் தரத்தை அதிகரித்து போட்டியில் விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் மிகுவிப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.


அத்தோடு கிரிக்கெட் சபைகளின் பொருளாதார வளம் சார்ந்தும் இப்பிரச்சினையை ஆராய வேண்டிய தேவையுள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பயோ – மெக்கானிக்கல் நிபுணரான டோவிக் போஸ்ரரிடம் சேனநாயக்க – தெற்கு அவுஸ்ரேலியப் பல்கலைக்கழகத்தில் இந்தப் பயிற்சி பெறுவதற்காக இலங்கை மதிப்பில் சுமார் 20லட்சம் ரூபாவை இலங்கை கிரிக்கெட் சபை செலவிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய, இங்கிலாந்து, அவுஸ்ரேலிய உட்பட சில நாட்டு கிரிக்கெட் சபைகளே செல்வச் செழிப்போடு விளங்குகின்றன. ஏனைய நாட்டு கிரிக்கெட் சபைகள் வீரர்களின் சம்பள நிலுவைகளைக் கூட வழங்க முடியாத கையறு நிலையில் உள்ள போது, பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளான வீரர்களுக்கு பல லட்சங்களை வாரியிறைக்க அவர்களால் முடியாது. இந்தப் பின்னணியிலேயே அஜ்மலுக்கு பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக் பயிற்சி அளிப்பதையும் நோக்க வேண்டியுள்ளது.


எனவே, இவ்விடயத்தில் ஐ.சி.சி கிரிக்கெட் சபைகளால் செலவிடப்பட்டதொகையை மீளளிப்புச் செய்வதற்கான நடைமுறையையும் அமுல்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஏனென்றால் சேனநாயக்க, அஜ்மல் போன்ற வீரர்களைத் தவிர ஏனைய தடைசெய்யப்பட்ட வீரர்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக எந்தவொரு நடவடிக்கையும் கிரிக்கெட் சபைகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கும் பொருளாதார கையறுநிலையே முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.


அதுமாத்திரமல்ல அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாக இடம்பிடிக்கும் வீரர்களையும் பகுதிநேரமாக சுழற்பந்தை வீசும் வீரர்களையும் ஒரே தரத்தில் வைத்துக் கணிப்பிட முடியாத தன்மையும் கிரிக்கெட் சபைகளில் நிலவுகின்றது. சேனநாயக்கவையும் சாமுவேல்ஸையும் எடுத்துக்கொண்டால் சேனநாயக்க ஒரு முழுநேரப் சுழற்பந்துவீச்சாளர் என்பதனால் அவரது பங்களிப்பு கட்டாயம் அணிக்குத் தேவை என்ற ரீதியில் அணுகப்படுகின்றது. ஆனால், சாமுவேல்ஸ் அடிப்படையில் ஒரு துடுப்பாட்ட வீரராக விளங்குவதனால் பகுதிநேர பந்துவீச்சினை அவர் மேற்கொள்ளாவிட்டாலும் அது அணிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தப் போவதில்லை என்ற பார்வையிலும் உரிய பயிற்சிநெறிகளை வீரர்களுக்கு வழங்குவதில் அக்கறை செலுத்தவில்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. ஆனாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சயீட் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் விடயத்தில் எந்தப் பேதமும் பாராமல் பயிற்சி வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.


எனவே, இவ்வாறான பந்துவீச்சு சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு கிரிக்கெட் சபையும் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அவர்கள் பந்துவீசுவதில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதில் கூடிய கவனஞ்செலுத்துவதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இளமைப் புயலின் கையில் ஆஸி கிரிக்கெட்டின் எதிர்காலம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. 


அவுஸ்திரேலியாவுக்கு புதிய டெஸ்ட் அணித் தலைவர், இந்திய அணிக்கு மீண்டும் வழமையான தலைவர் டோனி.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 45ஆவது தலைவர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். 25 வயதில் டெஸ்ட் அணிக்கு தலைமைப் பொறுப்பேற்ற ஸ்மித்துக்கு வாழ்த்துகள்.


துடுப்பாட்டத் திறமை மட்டுமல்லாது இந்த இள வயதிலேயே முதிர்ச்சித்தன்மை, தலைமைப் பண்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே தலைவராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 


அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் மூன்றாவது இளம் அணித் தலைவர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். 


தற்போது அவரது வயது 25 ஆண்டுகள் 195 நாள்கள். இதற்கு முன் கிம் ஹியூஸ், 1975-இல் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரது வயது 25 ஆண்டுகள் 57 நாள்கள். 1958-இல் இயான் கிரேக், 22 வயதில் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஸ்மித்தின் இந்தத் துரித வளர்ச்சியும், ஒருநாள் போட்டிக்கோ, T 20 போட்டிக்கோ முழுமையான தெரிவாக இல்லாமல் bits and pieces என்று அழைக்கப்படும் அரைகுறை சகலதுறை வீரராகவே இருந்துவந்தார்.


லெக் ஸ்பின் பந்து வீசும் ஓரளவு துடுப்பெடுத்தாடும் வீரராக அணிக்குள் வந்த ஸ்மித், எந்த அடிப்படையில் தன்னை நிலைநிறுத்தப்போகிறார் என்று எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது.


இதைவிட, என்ன வகிபாகம் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அணியில் என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது.


தனது ஒருநாள் சர்வதேச அறிமுகத்தில் ஐந்து விக்கெட்டுக்கள் விழுந்தபோதும் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிட்டாத நிலையில், பந்து வீச்சாளராக 78 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.


2010இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அறிமுகமும் ஒரு குழப்பமான அறிமுகம் தான்.


இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 7, 8ஆம் இலக்கத்தில் துடுப்பாட்டம்.


சுழல் பந்துவீச்சாளராக சில ஓவர்களை ஆங்காங்கே வீசுவது என்று இவர் ஏன் அணிக்குள்ளே இருக்கிறார் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒருவராகவே ஸ்மித் வந்திருந்தார்.

தனது நான்காவது இன்னிங்க்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக எட்டாம் இலக்கத்தில் ஸ்மித் பெற்ற 77 ஓட்டங்கள், அவுஸ்திரேலியாவின் அப்போதைய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்கு நம்பிக்கை கொடுத்திருக்கவேண்டும்.


இதனால் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட ஆஷஸ் டெஸ்ட் வாய்ப்புக்கள் மூன்றில் ஒரேயொரு அரைச்சதம்.


பந்துவீச்சாளராக ஸ்மித் பெரிதாகப் பயன்படுத்தப்படவில்லை.


அதன் பின் இரண்டு வருடங்கள் அணியிலேயே இல்லை.


இந்த இரண்டு ஆண்டு காலம் தான் ஸ்டீவ் ஸ்மித்தை முதிர்ச்சி அடையச் செய்து மனதளவிலும் ஒரு துடுப்பாட்ட வீரராகவும் திடப்படுத்தியது.


2013 இந்தியாவில் இடம்பெற்ற தொடர், ஸ்மித்துக்கு ஒரு திருப்புமுனைத் தொடர்.


முழுமையான துடுப்பாட்ட வீரராக தன்னை வெளிப்படுத்தியவர், பந்துவீச்சை சுருக்கிக் கொண்டார்.

5, 6ஆம் இலக்கங்களில் தன்னை திடப்படுத்திக்கொண்டவர் – பொன்டிங், ஹஸி போன்றோர் இல்லாத இடைவெளியை நீண்ட காலத்தில் நிரப்பும் திறமையைக் காட்டி இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரிலும் பிரகாசிக்க ஆரம்பித்தார்.


5ஆவதும் இறுதியுமான ஓவல் டெஸ்ட் போட்டியில் கன்னி சதம். அதன் பின் ஸ்மித்தின் ராஜபாட்டை தான்.


இப்போது 23 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 19 அரைச் சதங்கள்… சராசரி 46.02.


அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை தரும் மத்திய வரிசைத் துடுப்பாட்ட முதுகெலும்பு.


கிளார்க்கின் இடத்தை நிரப்பப்போகிறார்.


எந்தவிதமான ஆடுகளத்திலும், எந்தவிதமான பந்துவீச்சையும் லாவகமாக அடித்தாடும் வல்லமை மிக்க ஒரு துடிப்பான வீரர்.


தென் ஆபிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் போலவே கால்கள் துடிப்போடு துள்ளியாடும் சிறப்பான அவதானமிக்க வீரர்.


ஸ்மித்தோடு அவுஸ்திரேலியாவின் எதிர்காலமும் பிரகாசமாகவே தெரிகிறது.

——

முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர்  மைக்கேல் கிளார்க் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவர் இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். 


எனவே, பிரிஸ்பேனில் இடம்பெறும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு, முன்னதாக கிளார்க்கின் உப தலைவராக விளங்கிய விக்கெட் காப்பாளரான பிராட் ஹடின் தற்காலிக தலைவராக இருப்பார் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா முதலில் அறிவித்திருந்தது. 


எனினும், பின்னர் கிளார்க் தனது நீண்ட கால உபாதை தரும் நம்பிக்கையீனத்தால் எதிர்காலத்திலும் தன்னால் விளையாட முடியாமல் போகலாம் என்று தெரிவித்ததை அடுத்தே, நீண்ட கால நோக்கைக் கருத்தில் கொண்டு, ஸ்மித்தை தலைவராக நியமிப்பது என்று தேசிய தேர்வுக் குழு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் இயக்குநர்கள் சபை முடிவு செய்தது. 


சீனியர் வீரரான பிரட் ஹடின் இருக்க, ஸ்மித்தை தேர்வு செய்தது பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது. இருப்பினும், தொலை நோக்குப் பார்வையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது.


ஹடினுக்கு 38 வயதாவதால் அவரது நியமனம் மிகக் குறுகிய காலமாகவே இருந்திருக்கும் என்பது உறுதி.


கிளார்க் திரும்பி வரும் வரை ஹாடினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. இருப்பினும், தொலை நோக்குப் பார்வையுடன், இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


மைக்கேல் கிளார்க் குணமடைந்து அணிக்குத் திரும்பியதும் அவர் தலைவராகவும், ஸ்மித் உப தலைவராகவும் செயல்படுவார் என்று தேர்வாளர் சபையின் தலைவர் மார்ஷ் தெரிவித்தார்.


அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டரன் லீமனும், ஸ்மித்தை கேப்டனாக நியமித்ததற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


"துரதிர்ஷ்டவசமாக கிளார்க் காயமடைந்தார். எனவே, தற்காலிகமாக நான் தலைவனாக செயல்படவுள்ளேன். தனிப்பட்ட முறையிலும், அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையிலும் கடந்த 18 மாதங்கள் ஒரு சூறாவளி போல அமைந்தது. தலைவராக செயல்படுவது என்பது எனது கனவு. அது, இவ்வளவு சீக்கிரத்தில் வந்தது "த்ரில்லாக' உள்ளது.


தற்போதுள்ள எந்தத் திட்டத்தையும் மாற்றப் போவதில்லை என்பதை வீரர்களிடம் தெரிவித்து விட்டேன். கிளார்க் செய்த பணி பாராட்டுக்குரியது. அதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருதவில்லை.  சமீபகாலமாக அவுஸ்திரேலிய அணி போராட்ட குணத்துடன் சிறப்பாக ஆடி வருகிறது.


அதே ஆட்டத்தைத் தொடர்வோம். ஒரு தலைவனாக அணியை முன்னின்று நடத்தும் வகையில் எனது ஆட்டம் இருக்க வேண்டும்.


எனக்கான தலைமைப் பதவி வழங்கப்பட்ட காலையில் கிளார்க்கைத் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து பெருமைப்படுவதாகவும், நான் தலைவராக செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.


அதேபோல, பிரட் ஹடினும் எனக்காக பெருமைப்பட்டார். கிரிக்கெட் குறித்த அபரிமித அறிவையும் அனுபவத்தையும்  பெற்றுள்ள ஹடின், கிளார்க்குக்கு உதவியதைப் போலவே எனக்கும் உதவுவார்.


களத்தில் ஒரு வீரனாக இருக்கும்போதே, ஒரு கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.


சில சமயங்களில் எனது கருத்துகளை கிளார்க், ஹாடினிடம் தெரிவிப்பேன். நியூ சௌத் வேல்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளேன்.


சிட்னி அணியில் நான் கேப்டனாக இருந்தபோது என்னை விட வயதில் மூத்த பிரெட் லீ, ஸ்டூவர்ட் மேக்கில் ஆகியோரையும் வழி நடத்தி உள்ளேன். தலைமைப் பதவி எனக்கு சுமையாக இருக்கப் போவதில்லை" என்று நம்பிக்கையோடு கூறும் ஸ்டீவ் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் அண்மைக்கால தளம்பல்களுக்கு அணை போட்டு மீண்டும் ஒரு புதிய தலைமுறை சகாப்தம் படைப்பார் என்று நம்பியிருக்கலாம்.


முன்னைய ஸ்டீவ் (வோ) போல இந்த இளைய ஸ்டீவ் (ஸ்மித்)தும் தந்து தலைமைத்துவ தடத்தை முத்திரையாக்குவார் என்று ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள்.

சங்ககாரவும் ஓய்வும்

சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும் அது குறித்து சங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டாலும் அது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

உண்மையிலே சங்கா, ஓய்வு பெற்றுச் சென்றால் இலங்கை அணி பலவீனப்பட்டு விடும் என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவுக்கு இன்னொரு உண்மையும் இதில் அடங்கி இருக்கின்றது. அது டெஸ்ட் போட்டிகளில் பிரட்மன் அடித்த இரட்டைச் சதங்களின் மொத்த எண்ணிக்கையை முறியடிப்பதற்கு சங்காவுக்கு இன்னும் 3 இரட்டைச் சதங்கள் தேவைப்படுகின்றன என்பதும் ஒருநாள் போட்டிகளில் அரைச்சதங்களில் சாதனை படைத்த டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு இன்றைய நிலவரப்படி இன்னும் 7 அரைச் சதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுமாகும்.

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் அரைச் சதச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் சங்கா இனிவரும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற முடியாது. அத்தோடு தற்போதைய நிலையில் ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் பெற்ற 49 சதங்களை முறியடிக்க சங்காவால் முடியாது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ இனிவரும் ஒருநாள் போட்டிகளில் அவர் 99 ஆட்டமிழந்தாலும் இலங்கை ரசிகர்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள். சதத்துக்கு டெண்டுல்கர்போல் அரைசதத்துக்கு சங்கா இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

அதுபோல, பிரட்மனின் சாதனையை முறிடிக்க அவர் எதிர்காலத்தில் விளையாடவுள்ள ஒவ்வொரு போட்டியையும் மனஅழுத்தத்துடனேயே சந்திக்க நேரிடும். அதாவது டெண்டுல்கர், சர்தேச கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது சதத்தைப் பெறுவதற்காக எத்தகைய மனஉளைச்சலைச் சந்தித்தாரோ அதேநிலையை சங்காவும் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றுள்ள சிறந்த சராசரியில் கூட அது தாக்கத்தை உண்டு பண்ணலாம். அது மாத்திரமல்ல தனிநபர் சாதனைகளை முன்னிறுத்தி ஆடுகையில் ஆட்டமிழப்புகளில் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கேள்விக்குள்ளாவதால் இதுவரை காலம் கிரிக்கெட் உலகில் சங்கா கட்டிக்காத்த கனவான் குணத்துக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆட்டத்திறன் (Form) காரணமாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடுவதும் சகஜமானதொன்றே. அந்தவகையில், எதிர்வரும் புத்தாண்டு சங்காவுக்கு எவ்வாறான ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதும் கணிப்பிட முடியாத ஒன்றே. அதனால் தான் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்று விட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெற்றுச் செல்லும் வரையில் இலங்கை ரசிகர்களிடம் இந்திய வீரர்கள் என்றாலே தனிநபர் சாதனைகளுக்காக விளையாடுபவர்கள் என்றும் இலங்கை வீரர்கள் அணியின் வெற்றியையே கருதிக் கொள்பவர்கள் என்றும் ஒரு மனோநிலை கட்டமைக்கப்பட்டிருந்தது. டெண்டுல்கர் 200 போட்டிகள் வரை விளையாடியதையும் மஹேல 150 போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றுச் செல்லாமல் 149 டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றுச்சென்றமை உட்பட சிலவற்றை சுட்டிக்காட்டுவார்கள்.

ஆனாலும் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த உலக சாதனைக்காக அந்தப் போட்டியையே சமநிலை ஆக்கியது உட்பட சில புள்ளி விபரங்கள் அவர்களின் மனோநிலைக்கு எதிராக உள்ளமை வேறு விடயம். அது குறித்துப் பேசுவதற்கு இக்கட்டுரை முனையவில்லையாதலால் அவ்விவாதத்தை இங்கே தவிர்த்து விடுகிறேன்.

உலகக் கிண்ணப் போட்டி முடிவடைவதற்குள் டெண்டுல்கரின் சாதனையை சங்கா முறியடிப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் பிரட்மனின் சாதனையை முறியடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. ஏனென்றால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே உள்ளன. எனவே, நான்கு இனிங்ஸ்களில் 3 இரட்டைச் சதங்களைப் பெற்றுக் கொள்வதென்பது அசாத்தியமானதொன்றாகவே காணப்படுகின்றது.

எது எப்படியோ உலகக் கிண்ணப் போட்டிகளோடு ஓய்வு பெறாமல் அதன் பின்னரும் அணியின் நன்மை கருதி என்ற போர்வையில் டெஸ்ட் போட்டிகளில் சங்கா தொடர்ந்து விளையாடுவாராயின் தனிப்பட்ட சாதனைகளுக்காக அணியில் நீடித்த ஒரு சராசரி வீரருக்கும் சங்காவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.

-சின்னராஜா விமலன்

கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல

காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். 
 
மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந்த மஹேல ஜெயவர்த்தன பற்றிய தகவல்களை சுமந்து வரும் ஒரு சிறிய பதிவே இது. 
 
1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் செனெரத் ஜெயவர்த்தன, சுனிலா தம்பதிகளுக்கு புதல்வனாய் பிறந்தவர் மஹேல ஜெயவர்த்தன. தன்னுடைய இளைய சகோதரன் திஷாலை 16 வயதிலேயே புற்று நோய்க்கு பலிகொடுத்த மஹேல, அந்த பாதிப்பில் மிக நீண்ட நாட்களை கழித்தார். பெற்றார், நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து மீண்ட மஹேல – மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் ஆரம்ப கால கல்வியை கற்கும் போதே மஹேல ஜெயவர்தன NCC அணிக்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது. பின்னர் 1995ஆம் ஆண்டு SSC அணிக்காக மஹேல ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருடைய எதிர்காலமும் தான் ஆரம்ப கால கட்டத்தில் விளையாடும் கழகத்திற்காக அளித்த சேவையிலே தங்கியிருப்பது நாம் அறிந்ததே. அதேபோல் தான் கழகங்களுக்கு செய்த சேவைக்காக 1997ஆம் ஆண்டு மஹேல ஜயவர்தனவிற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. இலங்கை டெஸ்ட்டின் 69ஆவது வீரர் மஹேல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடயம். 

1997ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி இந்திய அணிக்கெதிராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சர்வதேச அரங்கில் ஆரம்பித்தார் மஹேல. அந்த போட்டியை பொறுத்த வரை இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெருமையை தனதாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சனத் ஜயசூரிய, ரொஷான் மஹனாம அதிகூடிய இணைப்பாட்டம் என பல சாதனைகளால் சொல்லப்பட்ட ஒரு போட்டியில் தன் கிரிக்கெட் சகாப்தத்தை ஆரம்பிப்பது என்பது ஒவ்வொரு வீரனுக்கும் ஒரு கனவாகவே இருக்கும். அந்த போட்டியிலும் கூட 66 ஓட்டங்களையும் பெற்று இரண்டு ஓவர்களும் பந்து வீசியிருந்தார் மஹேல ஜெயவர்த்தன. இந்த 66 ஓட்டங்களும் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு சிறந்த வீரரின் வருகையை அந்நாட்களில் நினைவூட்டியது. 
 
மஹேல ஜெயவர்தன தன் வாழ் நாளில் பல சாதனைகளை கடந்திருந்தாலும் தக்க நேரத்தில் தேவைப்பட்ட ஓர் உலக சாதனையாக 2006ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணிக்கெதிராக குமார் சங்கக்காராவுடன் பெற்ற 624 ஓட்டங்கள் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் தன்னுடைய முதலாவது டெஸ்ட் போட்டியில் நிலை நாட்டப்பட்ட சாதனையை தானே முறியடித்தல் என்பதுவும் மஹேலவிற்கு மேலதிக உந்துகோலாக இருந்தது. அதே போட்டியில் 374 ஓட்டங்களை பெற்ற மஹேல இன்றுவரை இலங்கை அணி சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக திகழ்கின்றமையும் விஷேட அம்சமாகும். இதையும் தாண்டி ஒரு பந்துவீச்சாளர் வீசிய பந்துகளுக்கு அதிகூடிய பிடி எடுப்புகளை பெற்ற வீரர் என்ற பெருமையையும் மஹேல கொண்டிருக்க, அது முத்தையா முரளிதரன் பெற்ற விக்கெட்டுகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  
 
டெஸ்ட் போட்டிகளில் 11,671 ஓட்டங்களை பெற்றுள்ள மஹேல ஜெயவர்த்தன 50.09 என்ற சராசரியில் ஓட்டத்தை குவிதிருப்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. இதில் 34 சதங்களும் 48 அரைச்சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 200 பிடியெடுப்புகளையும் மஹேல பெற்றிருப்பது மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் பாரிய பங்கினை மஹேல வழங்கியிருப்பதை கிரிக்கெட் ரசிகர்களால் அவதானிக்க கூடியதாய் இருக்கும். 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்திய "Captain of the Year 2006" விருதும் மஹேலவின் கைகளை சேர்ந்தது. 2007ஆம் ஆண்டு "Spirit of Cricket Award 2007" விஸ்டன் விருதும் மஹேல ஜெயவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்றது இலங்கை கிரிக்கெட்டை மேலும் பெருமை படுத்தியது.

இவற்றையும் தாண்டி ஒரு மனித நேயத்துடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மஹரகமவில் "Hope Cancer Hospital" என்ற ஒரு மருத்துவமனையை நிர்மாணிப்பதிலும் மஹேல ஜயவர்தன தன்னாலான பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச அளவில் உயர்த்திய மஹேல ஜெயவர்த்தனவை இனி டெஸ்ட் போட்டிகளில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தாலும், 2015 உலகக்கிண்ண போட்டிகள் வரையில் ஒருநாள் போட்டிகளில் மஹேல விளையாடவிருப்பதாக அறிவித்திருந்தமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இலங்கை கிரிக்கெட் இருக்கும்வரை அது மஹேல புகழ் பாடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.