இங்கிலாலாந்து அணிக்கு வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்று வரும் 7 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.
 
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 63 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 62 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக க்றிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும், க்றிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் நான்காவது ஓவரின் போது மழை குறுக்கிட்டமையினால் போட்டி 35 ஓவர்களுக்கு மாட்டுப்படுத்தப்பட்டது. இதன் படி 35 ஓவர்களில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் சிறந்த ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமானது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியது. 84 ஓட்டங்களை 40.3 ஓவர்களில் இருவரும் இணைந்து பெற்றனர். இதில் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும், ஜோ ரூட் 48 ஓட்டங்களையும் பெற்றனர். மூயேன் அலி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜோஸ் பட்லர் போட்டியின் நாயகனாக தெரிவானார். 
 
இந்த தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.

டெண்டுல்காரின் குற்றச்சாட்டுக்கு செப்பல் பதில்

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளின் போது இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை டிராவிட்டிடமிருந்து, சச்சின் டெண்டுல்காருக்கு வழங்க முயன்றதாக தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் செப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,  

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கிரேக் செப்பல் மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்ததாகவும் இதன் போது ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக தன்னை அணியின் தலைவராக நியமிக்க செப்பல் விரும்பியதாகவும் தனது சுயசரிதை நூலான ‘Playing It My Way’ இல் டெண்டுல்கார் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நூலின் சில பகுதிகள் (சாராம்சம்) கடந்த திங்கட்கிழமை வெளியாகியதுடன் அதனூடாகவே மேற்படி தகவலும் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கிரேக் செப்பல், சச்சின் தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தனக்கு தெரியவந்ததாகவும் இது தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட தான் விரும்பவில்லையெனவும் மேலும் டிராவிட்டுக்கு பதிலாக டெண்டுல்காரை நியமிக்க தான் முயற்சிக்கவில்லை என்பதை மட்டும் தன்னால் தெளிவாக கூறமுடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செப்பல்; “புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் ஆச்சரியமடைகின்றேன். அக் காலப்பகுதியில் நான் சச்சினின் வீட்டுக்கு ஒரு தடவை மாத்திரம் எங்களுடைய உடற்கூற்று நிபுணர் மற்றும் உதவி பயிற்சியாளர் சகிதம் விஜயம் செய்திருந்தேன். அது சச்சின் காயத்திலிருந்து குணமடைந்து வந்த காலப்பகுதியாகும். மேலும் அச்சந்திப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கு முன்னர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது" என்றார்.

மேலும் இச்சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும், அதன்போது தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையெனவும் செப்பல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தனது சுயசரிதை நூலான ‘Playing It My Way’ இல் டெண்டுல்கார் இச்சம்பவம் தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்;

“2007 உலகக்கிண்ண போட்டித் தொடருக்கு சில மாதங்களுக்கு முன்னர் செப்பல் எனது வீட்டுக்கு வந்திருந்ததுடன், ராவிட்டுக்கு பதிலாக நான் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இதன் போது அவர் நாம் இருவரும் இணைந்து இந்திய கிரிக்கெட்டை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டவுடன் எனது அருகில் இருந்த எனது மனைவி அஞ்சலியும் என்னைப் போல அதிர்ச்சியடைந்தார்."

"அணியின் பயிற்சியாளர் என்ற வகையில் குறிப்பாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் அவர் அணியின் தலைவருக்கு சிறிதளவும் மரியாதை அளிக்காமை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின்னர் சில மணித்தியாலங்களை அவர் அங்கு செலவழித்ததுடன் என்னை சமாளிக்கவும் முயன்றார். பின்னர் அங்கிருந்து வெளியேறினார்."