அவுஸ்திரேலியாவில் இந்தியா: அடிலெய்டில் ஆரம்பம்

அவுஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான பந்துவீச்சுத் தாக்குதலோடு, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தை மீண்டும் பெறுகின்ற நோக்கோடு அவுஸ்திரேலியா அணியானது இந்தியாவை வெள்ளையடிக்கக் காத்திருந்த அவுஸ்திரேலியா ஒரு பக்கம், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியாத அணி என்று முத்திரை குத்தப்பட்ட இந்திய அணி, தங்களது 'புதிய' இளைய அணியானது அவுஸ்திரேலிய மண்ணிலும் சாதிக்கும் ஆற்றலுடையது என்று சாத்தியப்படுத்திக் காட்டுவதற்கும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் ஒரு விறுவிறுப்பான தொடராக அமைந்திருக்க வேண்டியது.


யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த கிரிக்கெட்டின் சோக சம்பவமான பில் ஹியூஸின் திடீர் மரணத்தின் சோக நிழலுடன் இன்று ஆரம்பிக்கிறது.


திட்டமிட்டபடி கடந்த 4ஆம் திகதி போட்டி ஆரம்பித்திருந்தால் இன்று போட்டி முடிந்திருக்கும். அப்போதிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கின் உபாதை காரணமாக, காலமான பில் ஹியூஸ், அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருப்பார்.

ஆனால், எதிர்பாராமல் எகிறிக் குதித்த ஒரு பந்து, ஓர் இளம் வீரனின் உயிரைக் குடித்து, எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது.


பில் ஹியூஸ் என்ற அவுஸ்திரேலிய வீரர் எல்லா அவுஸ்திரேலிய வீரர்களோடும் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு கலகலப்பான வீரர். களத்தில் மடிந்த வீரனாக கிரிக்கெட் உலகமே ஹியூஸை நினைவு கூர, நெருங்கிப் பழகிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த இழப்பிலிருந்து மீண்டு வர இந்த ஒரு வாரம் உண்மையில் போதுமாக இருக்குமா என்ற கேள்வி நியாயமானதே.


எந்தவொரு அவுஸ்திரேலிய வீரரையும் இந்தப் போட்டியில் விளையாடுமாறு நிர்ப்பந்திப்பதில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு செய்திருந்தது. எனினும் இந்த அடிலெய்ட் போட்டியில் அத்தனை வீரர்களும் விளையாடுவது அந்த வீரர்கள் தங்கள் வீரர்களை நேசிப்பது போலவே, தங்கள் கிரிக்கெட்டையும் மிக நேர்த்தியான கடமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று காட்டுகிறது.

வழமையாக அவுஸ்திரேலியா, எந்தவொரு டெஸ்ட் தொடரையும் பேர்த் அல்லது பிரிஸ்பேனில் ஆரம்பிக்க விரும்பும். காரணம் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகத் தன்மை அதிகம் கொண்டவை இவை. எனினும் ஹியூஸின் மரணம் தந்த மாற்றங்கள், போட்டிகளின் திகதி அட்டவணைகள் மாற்றப்பட்டு, முதலாவது போட்டி அடிலெய்ட்டில் இடம்பெறுகிறது.


நெஞ்சைத் தொடும் விடயம் ஒன்று, இறுதியாக பில் ஹியூஸ் விளையாடிவந்த தென் அவுஸ்திரேலியாவின் மைதானமான அடிலெய்ட்டில் போட்டி இடம்பெறுகிறது. கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஹியூஸை கௌரவிக்க 13ஆவது வீரராக அவரது பெயரையும் அறிவித்துள்ளது. மைதானத்திலும் ஹியூசின் டெஸ்ட் போட்டி வீரர் எண்ணான 408 பெரிதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஒரு மரித்த வீரனுக்கான கௌரவத்தை மறக்கமுடியாத அளவுக்கு வழங்கியுள்ள அவுஸ்திரேலியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


வழமையாக அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சின் முக்கிய ஆயுதமாக விளங்கும் பவுன்சர் பந்து, பில் ஹியூசின் பவுன்சர் மரணத்துக்குப் பின்னர், வழமைபோல பயன்படுத்தப்படுமா என்ற கேள்விகளே முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தன.


ஆனால், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டிகளில் இளைய அவுஸ்திரேலிய வீரர்களும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் தாராளமாக பவுன்சர்களை வீசியிருந்தார்கள்.

இதற்கிடையில் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங்கும் இந்திய அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா பவுன்சர் பந்துகளை பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது என்றும் மிட்செல் ஜோன்சனின் முதல் பந்தே பவுன்சராக இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


ஒரு தச்சு வேலை செய்பவரின் ஆயுதங்களில் ஒன்றின் காரணமாக தற்செயலாக விபத்து ஏற்படும்போது, அதற்குப்பின் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்கள் வேலைகளை செய்யாமல் இருக்கிறோமா? அதேபோல தான் தற்செயல் பவுன்சர் பந்து ஒன்றின் காரணமாக பில் ஹியூசின் மரணம் சம்பவித்ததன் காரணமாக கிரிக்கெட்டின் கலைகளில் ஒன்றான பவுன்சரை அப்படியே கைவிடுவதா?


இன்று அடிலெய்ட்டில் ஆரம்பித்த டெஸ்ட்டின் முதல் நாளிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பவுன்சர் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். இனி ஜோன்சன் & குழுவினரின் பதில் ஆரம்பிக்கும் பார்த்திருக்கலாம்.


பொதுவாக அவுஸ்திரேலியாவில் வைத்து இந்தியா, ஒரு தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்றதே கிடையாது. 10 தொடர்களிலும் 8 போட்டிகளில் தோல்வி; 2 போட்டிகளில் (இறுதியாக 2011இல்) வெற்றி தோல்வியற்ற முடிவு.


ஆனால், இப்போது விளையாடும் அடிலெய்ட் மைதானம் அதிகமாக இந்திய வீரர்களுக்கு உகந்த துடுப்பாட்ட தன்மை உடையது எனலாம்.


எனினும் இன்றைய ஆரம்பம் அவுஸ்திரேலியாவின் ஓட்டக் குவிப்போடு ஆரம்பித்துள்ளது.


அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் உபாதையுடன் வெளியேறியிருப்பது அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கலாம். (அடிக்கடி இவருக்கு முதுகு உபாதை ஏற்பட்டுக்கொண்டே இருப்பது கிளார்க்கின் இறுதி இன்னிங்சாக இது அமைந்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது)


இந்திய அணியும் தங்களது வழமையான தலைவர் மஹேந்திர சிங் தோனி இல்லாமலேயே (உபாதை காரணமாக) இந்த முதல் போட்டியில் விளையாடுகிறது. விராட் கோளி, முதல் தடவையாக டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.


இந்திய அணியானது தோனி விளையாடும் போதும் தோனி இல்லாதபோதும் பெற்றுள்ள பெறுபேறுகள்.


India Test results
with MSD     88-36-23-29 (%win 40.91)
without MSD  8-2-4-2 (%win 25.00)


இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் 87இல் அவுஸ்திரேலியா 38இலும் இந்தியா 24இலும் வென்றுள்ளன.

அப்போதைய மெட்ராஸ் (சென்னை சேப்பாக்கம்) டெஸ்ட் போட்டி 1986 இல் உலகப் புகழ்பெற்ற TIE முடிவைக் கண்டது.


24 டெஸ்ட் தொடர்களில் அவுஸ்திரேலியா 12இல் வென்றிருக்கிறது. இந்தியாவுக்கு 7 தொடர் வெற்றிகள். இந்த ஏழுமே இந்தியாவில் வைத்தே பெறப்பட்டவை.


அவுஸ்திரேலியாவில் இந்திய அணி 5 டெஸ்ட் வெற்றிகளை மாத்திரமே பதிவு செய்துள்ளது. எனினும் 26 தோல்விகள்.


இந்த மோசமான வரலாற்றை இம்முறையாவது மாற்றலாமென இந்திய அணி நினைத்தால் ஆக்ரோஷமான அணுகுமுறையும், அதேவேளை நிதானமான ஓட்டக்குவிப்பும் தேவைப்படும்.


கங்குலியின் தலைமையில் 2003-04இல் தொடரை சமன் செய்ததும், 2007-08இல் கும்ப்ளேயின் தலைமையில் 2-1 என போராடித் தோற்றதும் இந்தியாவின் அண்மைக்கால பெருமைக்குரிய பெறுபேறுகள் என்று குறிப்பிடப்பட்டாலும், தோனியின் தலைமையில் 2011-12 தொடரில் நான்கு போட்டிகளிலும் தோற்ற கறை உறுத்துவதாகவே இருக்கிறது. இதற்கு பதிலடியை இந்தியாவில் வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் அதே மாதிரி 4-0 எனக் கொடுத்தது இந்தியா.


ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடர் வெற்றி மட்டுமல்ல, அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றியும் நீண்ட காலமாக எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.


முன்பிருந்த ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கம்பீர், சாகிர் கான் போன்றோர் இல்லாமல் ஓர் இளைய அணி அவுஸ்திரேலிய மண்ணில் முதல் தடவை.
இது அவர்களது பலவீனம் அல்லாமல் பலமாக இருக்கிறது எனக் கருதலாம்.


​காரணம், இளமை வேகம், டெஸ்ட் அனுபவம் இல்லாவிடினும் இந்திய A அணி மற்றும் இளையோர் அணிகளுக்காக அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் என்பன அநேகமான இந்திய வீரர்களுக்கு சாதகமானதே.


எனினும் தோனியின் டெஸ்ட் தலைமைத்துவம், ஷீக்கார் தவானின் வெளிநாட்டு மண் டெஸ்ட் பெறுபேறுகள், ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் டெஸ்ட் எதிர்காலங்கள், அஷ்வினின் இந்தியாவின் முதற்தர சுழல்பந்துவீச்சாளர் என்ற தகுதி (இந்தப்போட்டியிலேயே இவ்வளவு காலமும் T20 வகைப் போட்டிகளின் specialist ஆகக் கருதப்பட்ட கரன் ஷர்மா அஷ்வினை முந்தியிருப்பது ஒரு சான்று) ஆகிய விடயங்கள் கேள்விக்குறியாக்கப்படக் கூடிய தொடராகவும் இந்த முறை இடம்பெறும் போர்டர் – கவஸ்கர் தொடர் அமையவுள்ளது.


அத்துடன் இந்தியாவின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரங்கள் புஜாரா, ரஹானே, கோளி போன்றோரும், இளம் வேகப்பந்துவீச்சு வீரர்களான வருண் ஆரோன், மொஹமட் ஷமி, புவனேஷ் குமார் போன்றோர் தங்களை உரக்க நிரூபிக்கும் ஒரு சர்வதேசக் காலமாக விளங்கவுள்ளது.


மறுபக்கம் அவுஸ்திரேலியா வயதேறிச் செல்லும் தங்களது முக்கிய மூன்று வீரர்களான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் ரோஜர்ஸ், விக்கெட் காப்பாளரும் உப தலைவருமான ப்ரட் ஹாட்டின், வேகப்பந்துவீச்சாளர் ரயன் ஹரிஸ் போன்றோரை கவனமாகப் பயன்படுத்தவேண்டி இருப்பதுடன், அடுத்த கட்டம் பற்றியும் யோசிக்கவேண்டியுள்ளது.


மைக்கேல் கிளார்க்கின் தொடர் உபாதை, அடுத்த நீண்டகால அணித் தலைவர் பற்றியும் சிந்திக்கவைக்கிறது. ஒருநாள் அணிக்கு ஜோர்ஜ் பெய்லி இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு ஹடின் குறுகிய காலத்துக்கு தற்காலிக அணித் தலைவராக இருந்தாலும், நீண்ட கால நோக்கில் யார்? ஸ்டீவ் ஸ்மித்?


அவுஸ்திரேலிய அணிக்காக கிளார்க் அண்மையில் சிறப்பான தலைமையை வழங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி அவரை வாட்டும் முதுகு உபாதை அவர் நீண்டகாலம் விளையாடுவாரா என்ற ஐயத்தை இப்போது ஆழமாக ஏற்படுத்தியுள்ளது.


ஆரம்பித்துள்ள அடிலெய்ட் டெஸ்ட் முதல் அடுத்துவரும் போட்டிகள் வரை தொடர்ந்துவரும் கட்டுரைகளில் இன்னும் ஆழமாக அலசலாம்.

www.arvloshan.com

இலங்கை – இங்கிலாந்து 5ஆவது போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின் 5ஆவது போட்டி, கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நாளை புதன்கிழமை (10) நடைபெறவுள்ளது.

பகலிரவாக நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் 3-1 என்ற அடிப்படையில் இலங்கை முன்னிலையில் உள்ள நிலையில் நாளைய போட்டி மிக முக்கியத்துவம் வாய்ததாக அமையவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை வெற்றிபெறுமாக இருந்தால், இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் தொடரை கைப்பற்றமுடியும்.

இங்கிலாந்து நாளைய போட்டியில் வெற்றிபெறுமாக இருந்தால், தொடரை கைப்பற்ற இலங்கை தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ஐந்தாவது போட்டி குறித்து கருத்து தெரிவித்த மாவன், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் நாம் சிறப்பாக விளையாடவில்லை. எதிர்வரும் போட்டியில் எமது அணி முழு பலத்துடன் விளையாடும் என்றார்.

பாகிஸ்தானுக்கு வெற்றி

பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில், டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (08) நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் நியூஸிலாந்து அணியினை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர், அதிகபட்சமாக ஒரு சிக்ஸர், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழப்பின்றி 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் மொஹமட் இர்பான், 10 ஓவர்கள் பந்துவீசி, ஓர் ஓட்டமற்ற ஓவருடன் 57 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்தோடு வஹாப் ரியாஸ், 51 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஷஹீட் அப்ரிடி – 36 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

247 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து தமது வெற்றியினை உறுதிசெய்தது. பாகிஸ்தான் அணிசார்பில் அதிகபட்சமாக ஹரிஸ் சொஹைல் ஆட்டமிழக்காமல் 1 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஷஹீட் அப்ரிடி – 1 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் உட்பட 61 ஓட்டங்களைப் பெற்று ரன்அவுட் ஆனார்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் டானியல் வெற்டொரி, ஜேம்ஸ் நீஸம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஹெய்ல் மில்ஸ், நதன் மக்கலம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் நாயகனாக ஹரிஸ் சொஹைல் தெரிவுசெய்யப்பட்டார்.

5 போட்டிகளைக்கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 5 இற்கு 1 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உலக T20 சம்பியன்; நீண்ட பெருங்கனவு பலித்தது

கடந்த கட்டுரையில் எழுதியிருந்த எண் கோலம் உண்மையானது. கடந்தமுறை போட்டியை நடத்திய நாடு இம்முறை சம்பியன் ஆகியுள்ளது.

எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் இப்படி ஒரு வெற்றிக்கு… எத்தனை இறுதிப்போட்டிகளில் தோற்று கவலையுடன் தொடர்ந்து வந்த நாட்களைக் கழித்து முடங்கியிருப்போம்?

ஒவ்வொரு தரமும் இதோ ஒரு கிண்ணம், அதிலும் ICC கிண்ணம் எமக்குத் தான் என்று நினைத்திருக்க, வெல்கிறோம் என்று பாதிவேளை நினைத்திருக்க, கையை விட்டுக் கிண்ணம் போக வெறுங்கையுடன் வந்திருப்போம்…

இப்படி ஏங்கிக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த ஞாயிறு இரவு தொடர்ச்சியான மகிழ்ச்சியை இன்னும் தந்துகொண்டே இருக்கிறது.

திசர பெரேராவின் வெற்றி, சிக்ஸர் உலகம் முழுவதும் வாழும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கிய உற்சாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மூலம் கிடைத்த மகிழ்ச்சி.

இலங்கை கிரிக்கெட்டின் இரு பெரும் சிகரங்கள் தமது இறுதி T20 சர்வதேசத் தொடராக இத்தொடரை அறிவித்தபிறகு விடைபெறுகின்ற நேரமாவது இந்த இரு கனவான்களுக்கும் பரிசாகக் கிண்ணம் ஒன்று வெற்றிகொள்ளப்பட்டிருப்பதானது இலங்கை கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் மனது மறக்காத விடயமாக மாறியுள்ளது.

உலக T20 கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இலங்கைக்கு ஒரு பக்கம் அழுத்தத்தையும் மறுபக்கம் வெல்லவே வேண்டும் என்ற உத்வேகத்தையும் வழங்கியிருந்தது.

இலங்கை அணியை விட இறுதிப்போட்டிக்கு செல்லும்போது இந்திய அணிக்கு மனநிலையில் அதிக உறுதியும் அணி நிலையில் அதிக உறுதியும் இருந்தது பற்றி முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

தொடர்ச்சியான இறுதிப்போட்டி வெற்றிகள் (அதிலும் டோனியின் தலைமையிலேயே) இந்தியாவுக்கு அளித்திருந்த மனவுறுதியும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிகளில் இலங்கை கண்டுவந்த தோல்விகள் இலங்கைக்கு அளித்திருந்த கிலேசமும் இந்தியாவை வெற்றிவாய்ப்பு அதிகமுடைய அணியாகக் காட்டியிருந்தன.

எனினும் இலங்கை அணியிடம் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பின் ஏற்பட்டிருந்த ஓர் உறுதியான மாறுதல், இந்தியாவுக்கு எதிரான பந்துவீச்சின் போது மிகத் துல்லியமாக தெரிந்திருந்தது.

இலங்கையும் இந்தியாவும் மோதிக்கொண்ட 3ஆவது ICC கிண்ணம் ஒன்றின் இறுதிப்போட்டி இதுவாகும். (2002 – Champions Trophy – மழையினால் கிண்ணம் பகிரப்பட்டது. 2011 உலகக் கிண்ணம் – இந்தியா வென்றது)

போட்டி ஆரம்பிக்குமுன் பெய்த மழையும், மழை வருவதற்கான அறிகுறிகளும் மழை விதியை மீண்டும் அழைக்குமோ அல்லது பகிர்வோ என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.

ஆனால், சற்றுத் தாமதித்த போட்டியானது இடைநடுவே ஒரு மழைத்துளி இடையூறு கூட இல்லாமல் இலங்கைக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பரிசளித்துப் போயுள்ளது.

இப்போது இலங்கை அணியும் இந்தியாவைப் போலவே, (மூன்றாவது அணியாக மேற்கிந்தியத் தீவுகளையும் சொல்லலாம்) ICCயின் எல்லாக் கிண்ணங்களையும் வென்றெடுத்துள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

2002 – சம்பியன்ஸ் கிண்ணம் (மினி உலகக் கிண்ணம்) – இந்தியாவுடன் இணை சம்பியன். இப்போது உலக T20 சம்பியன் 

இன்னொரு சுவாரஸ்ய விடயம்…

இந்தியா டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது முதலாவது உலகக் கிண்ணத்தை 1983இல் வென்றது. அதன் பின்னர் அவர்களுக்கான அடுத்த ICC கிண்ணத்தை வென்றெடுக்க 24 ஆண்டுகள் ஆனது. (தோனியின் தலைமையில் 2007இல் உலக T20), (சம்பியன்ஸ் கிண்ணம் 2002இல் இந்தியாவுக்கு இலங்கையோடு பகிரப்பட்டது) இந்த நீண்டகாலக் காத்திருப்புக்குப் பின்னர் அடுத்தடுத்து ICC கிண்ணங்கள் கிடைத்தன.

இலங்கையை இந்தியாவோடு ஒப்பிடும்போது விரைவு.

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகளுக்குள் 1996இல் உலகக் கிண்ணம் கிடைத்தது. இப்போது 18 ஆண்டுகளில் அடுத்த ICC கிண்ணமாக உலக T20. இது இவ்வளவு காலம் இருந்து வந்த மனத்தடை ஒன்றை உடைப்பதாக அமையலாம். இனி கிண்ணங்கள் குவியலாம்.

இலங்கை அணியின் இரண்டு பொற்காலங்களைச் சேர்ந்த இரு தலைமுறை வீரர்களுக்கும் ஓர் உலகக்கிண்ணம்/ ICC கிண்ணமாவது அவர்களது ஓய்வுக்கு முன்னர் கிடைத்திருப்பது தன்னலமற்று அவர்கள் தாய்நாட்டுக்கு விளையாடியதற்கான பரிசாக அமைகிறது.

அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, ரொஷான் மகாநாம, அசங்க குருசிங்க, முரளிதரன், வாஸ், ஹஷான் திலகரத்ன, சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, மார்வன் அத்தப்பத்து ஆகிய மூத்த வீரர்கள் இலங்கையின் முதலாவது உலகக் கிண்ணத்தைக் கொண்டுவந்தவர்கள்.

இவர்களில் அர்ஜுன, குருசிங்க, மகாநாம, களுவிதாரண தவிர ஏனையோருக்கு 2002 சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லக்கூடிய பேறும் கிடைத்தது.

இந்த 90-2000 இருந்த அணிக்குப் பிறகு இலங்கையின் மிகச் சிறந்த சாதனைகள் படைத்த சிரேஷ்ட வீரர்கள் மஹேல, சங்கா, டில்ஷான், ஏன் மாலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு காலத்தை நெருங்கி வரும் நிலையில் இதுவரை உலகக்கிண்ண, மற்றும் ICC கிண்ணங்களின் தோல்விகளுடன் கழிந்த விரக்திப் பொழுதுகள் ஒரு மிகப் பெரிய வெற்றிக் கனியைப் பரிசளித்துள்ளன.

பங்களாதேஷின் இரவுப் பனி மிர்ப்பூரில் பெரிதாகத் தாக்கம் செலுத்தாவிட்டாலும், மழையின் அச்சுறுத்தல் காரணமாக நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இருந்தது.

இலங்கையின் தலைவராக மூன்றாவது போட்டியில் தலைமை தாங்கிய லசித் மாலிங்க, இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என்று முடிவெடுக்க சில காரணங்கள் இருந்தன.

மழை குறுக்கிட்டால் டக்வேர்த் – லூயிஸ் முறைப்படி இலக்கை அடைவது சாதகமானது.

தொடர்ச்சியாக இந்தியாவை வெற்றிகரத் துரத்தியடிக்கும் அணியாகக் காடும் பலமான துடுப்பாட்ட வரிசை எந்தப்பெரிய இலக்குகளையும் அண்மைக்காலமாக வெற்றிகண்டிருந்தன. அதிலும் குறிப்பாக விராட் கோளி இரண்டாவது துடுப்பாட்டத்தில் ஒரு மன்னர்.

ஆனால், கோளி முதலாவதாக ஆடினாலும் கூடத் தன்னால் வேகம் குறையாமலும் நிதானம் தவறாமலும் ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்பதை அதிரடியாட்டம் ஆடிக் காட்டியிருந்தார்.

ஆனால் இந்தியாவின் துரதிர்ஷ்டம் அவர் மட்டுமே இறுதிப்போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

இலங்கை அணியின் வியூகங்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

இந்தியாவின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களையும் பொறியில் சிக்கவைக்க அவர்கள் வகுத்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு வியூகங்களால் ஓட்டங்களைப் பெறுவதில் இந்தியாவின் விராட் கோளி தவிர்ந்த எல்லோருமே திக்கித் திணறினர்.

அதிலும் யுவராஜ் சிங்கும் வழமையாக இறுதி ஓவர்களில் சிக்சர் மழை பொழியும் தலைவர் டோனியும் மாட்டிக்கொண்டது தான் பெரும் ஆச்சரியம்.

நான் முன்னைய கட்டுரையில், "அடிக்கடி T20 வகைப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் சந்தித்திராவிட்டாலும் கூட, இரு அணிகளினதும் ஒவ்வொரு வீரர் பற்றியும், அணிகளின் பலம், பலவீனம் பற்றியுமே இரு பக்கமும் கொஞ்சமேனும் சந்தேகம் இல்லாமல் தெரியும்" என்று சொல்லியிருந்ததைப்போல ஒவ்வொரு இந்திய வீரர்களின் பலவீனம் அறிந்து அந்த இடங்களில் பந்துகளைத் துல்லியமாக இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தார்கள்.

களத்தடுப்பாளர்கள் புதிய, புதிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

குழம்பிப்போன இந்திய வீரர்களில், குழம்பாமல், இலங்கை வீரர்களால் சலனப்படுத்தப்படாமல் அடித்தாடிய ஒரேயொருவர் விராட் கோளி மட்டுமே. உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக துரிதமாக எழுந்துவந்திருக்கிறார் கோளி.

இலங்கையின் இந்த வியூக வகுப்பில் மாலிங்கவுக்கு நிச்சயம் மஹேல, சங்கா ஆகியோரின் துணை இருந்திருக்கும்.

துடுப்பெடுத்தாடிய ஏனைய அத்தனை இந்திய வீரர்களும் 62 பந்துகளில் 53 ஓட்டங்கள்.

ஆனால் இலங்கை அணி வீசிய கடைசி 5 ஓவர்களில் இந்தியாவால் 30 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் கோளியே ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறினார்.

அவ்வளவு துல்லியமாக இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அடித்தாட முடியாதவாறு பந்துவீசி இருந்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த T20 இறுதி ஓவர்களின் பந்துவீச்சாக இதைக் குறிப்பிடலாம்.

ஆனால் கோளி, டோனி ஆகியோர் ரசிகர்களின் வசைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, யுவராஜ் சிங் மட்டும் இந்திய ரசிகர்களின் கோபத்துக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிப்போனார்.

கடைசி 4 ஓவர்களில் யுவராஜ் – 9 பந்துகளில் 4 ஓட்டங்கள், டோனி – 7 பந்துகளில் 4 ஓட்டங்கள், கோளி – 8 பந்துகளில் 7 ஓட்டங்கள்.

லசித் மாலிங்க மட்டுமில்லாமல், குலசேகர, சச்சித்திர சேனநாயக்க ஆகியோரும் கூட மிகக் கட்டுப்பாடாக, முன்னாள், இந்நாள் வீரர்களின் பாராட்டுக்களைப் பெறும் அளவுக்கு மிகச் சிறப்பாகப் பந்துவீசி இருந்தார்கள்.

ஒரு பந்துவீச்சாளர் அணித் தலைவராக இருந்து ஓர் அணிக்கு ICC கிண்ணம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்த முதல் சந்தர்ப்பம் இது.

அதேபோல, அரையிறுதி வரை எந்தவொரு போட்டிகளையும் தோற்காமல் வந்த அணி, கிண்ணம் வென்றதில்லை என்பது மீண்டும் நடந்தது.

131 என்ற இலக்கு மேலோட்டமாக இலகு போல் தெரிந்தாலும், இறுதிப்போட்டியின் அழுத்தமும் இலங்கை அணிக்கெதிராக முன்னைய இந்திய செல்வாக்கும் இந்தப் போட்டியை போட்டித்தன்மையுடையதாக மாற்றும் என்றே எண்ண வைத்தது.

அதிலும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கையில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

குசல் ஜனித் பெரேரா, டில்ஷான் ஆகியோரின் ஆட்டமிழப்புக்களுக்குப் பின், தங்கள் இறுதிப்போட்டியில் விளையாடும் கிரிக்கெட் நண்பர்களும் கிரிக்கெட் தாண்டியும் உயிருக்குயிரான நண்பர்களாக இருக்கும் இலங்கையின் இரு கிரிக்கெட் சிகரங்கள் சேர்ந்துகொண்டார்கள்.

தமக்கிடையே 1,700 மணிநேரங்களையும், 600க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளையும் கொண்டுள்ள மஹேலவும் சங்காவும் T20 சர்வதேசப் போட்டியோன்றில் இறுதியாக இணைந்தார்கள்.

இந்த இறுதி இணைப்பு தனிப்பட்ட முறையில் இருவருக்கும் ஒரு முக்கிய கிண்ணம் பெறும் பெருங்கனவுடன் தங்கள் நாட்டுக்கான பெரிய கடமையொன்றை நிறைவு செய்யும் இறுதி முயற்சியோன்றையும் முன்கொண்டு இவர்கள் பெற்ற ஓட்டங்கள் 24 ஆனால் அந்த 24உம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானவையாக அமைந்தன.

மஹேல ஆட்டமிழக்கும் நேரம் இலங்கையின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிராவிட்டாலும் கூட, முன்னைய 4 இன்னிங்ஸில் மொத்தமாக 19 ஓட்டங்களையே பெற்றிருந்த சங்கக்கார நிதானமாக நின்று ஓட்டங்கள் பெறும் நிலையில் இருந்தார்.

சங்காவுக்கு மறுபக்கம் துணை இருந்தால் வெற்றி நிச்சயம் என்னும்போது, இந்தத்தொடர் முழுதும் இலங்கைக்கு நல்ல முடிவுத் தருணங்களைப் பெற்றுக்கொடுத்த Finisher மத்தியூஸ் வருவார் என்று நம்பியிருக்க, அதிரடியாக ஆடும், ஆனால் இத்தொடரில் பெரிதாக ஓட்டங்கள் பெறாத இன்னொருவர் திசர பெரேரா அனுப்பிவைக்கப்பட்டார்.

இது இலங்கையின் இன்னொரு சாமர்த்தியமான அணுகுமுறையாக அமைந்தது.

முக்கியமான தருணங்களில் formக்குத் திரும்பி தேவையான ஓட்டங்களைப் பெறும் Big match players போல திசர நிகழ்த்திய அதிரடி ஓட்டக்குவிப்பு இந்தியப் பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.

இது நிதானமாக ஓட்டங்கள் பெற்றுக்கொண்டிருந்த சங்கா, வேகமாக ஓட்டங்கள் குவிக்க வாய்ப்பை வழங்கியது.

சங்கக்கார தனது 8ஆவது T20 சர்வதேச அரைச் சதத்தைப் பெற்ற அதேவேளை, 25,000 சர்வதேச ஓட்டங்களையும் பூர்த்தி செய்தார்.

முன்னதாக மஹேல உலக T20 போட்டிகளில் 1,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

வழமையாக மைல் கற்களை அடையும் நேரங்களில் அமைதியாகக் கொண்டாடும் சங்கா, இந்த அரைச் சதத்தை மிக உற்சாகம் + ஆவேசமாகக் கொண்டாடிய காட்சி, இந்தப் போட்டியும் சங்காவின் ஓட்டங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் காட்டி நின்றன.

திசர அடித்த மூன்றாவது சிக்ஸர், இலங்கையின் வெற்றி ஓட்டங்களைக் கொண்டுவந்தது. 13 பந்துகள் மீதமிருக்க இலகுவான வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றிக்காகவே காத்திருந்த இலங்கை ரசிகர்கள், ஓடிவந்து மைதானத்தின் நடுப்பகுதியில் சங்காவையும் திசரவையும் ஆரத்தழுவிய காட்சி மீண்டும் 1996ஐ மனதுக்குள் கொண்டுவந்தது.

சின்னக் குழநதைகள் போல குதூகலித்தாலும், மறக்க முடியாத இந்த வெற்றியின் புல்லரிப்பும் நெஞ்சு நிறைந்த வெற்றிக்களிப்புடன் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடிய இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள், எத்தனை காலம் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தார்கள் என்று சிந்திக்க செய்தது.

அதிலும் தேர்வாளர் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய (இவர் இத்தொடர் ஆரம்பிக்க முதல் மஹெல & சந்காவுடன் கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தருணம் விளையாட்டின் வெற்றி எல்லாவற்றையும் மறக்கடிக்கும் என்று காட்டி நின்றது), பயிற்றுவிப்பாளர் குழாமில் இருக்கும் முன்னாள் வீரர்கள், இன்னும் முன்னாள் வீரர்கள் அனைவரும் களத்தில் நின்று வாழ்த்தி, மகிழ்ச்சியில் கலந்துகொண்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

இலங்கையின் இந்த வெற்றி சில முக்கியமான அடிப்படைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

லசித் மாலிங்க மற்றும் இலங்கையின் பந்துவீச்சாளர்களின் இறுதி ஓவர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு.

சிரேஷ்ட வீரர்கள் கைகொடுத்த தேவையான பொழுதுகள்.

இவ்வளவுக்கும் இந்தத் தொடர் முழுவதும் அதிக ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் முதல் வீரர் விராட் கோளி.

இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன தான் இலங்கை சார்பாகக் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர். கோளி பெற்ற ஓட்டங்களின் பாதியளவு ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த மஹேல, வரிசையில் 11ஆம் இடம்.

ஆனால், இலங்கையின் ஏனைய மூன்று வீரர்கள் 100 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்கள்.

பந்துவீச்சாளரிலும் அதிக விக்கெட்டுக்களைப் பெற்றவர்கள் வரிசையில் அஷ்வின் 11, மிஷ்ரா 10. இலங்கையின் குலசேகர 8 விக்கெட்டுக்கள்.

ஆனால் மீண்டும் இலங்கையின் ஏனைய பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.

அதேபோல, இந்தியா தான் சந்தித்த அத்தனை போட்டிகளையும் வென்று வந்த அணி.

ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றுப்போனது.

இங்கே தான் இலங்கை நிற்கிறது…

பலவீனப் புள்ளிகள் குறைவாக, அணியில் ஒருவரில் மட்டும் தங்கியிராமல், அந்தந்த போட்டிகளில் ஒவ்வொருவர் அணியின் ஹீரோக்களாக மாறி பெற்றுக் கொடுத்த வெற்றியின் தொடர்ச்சி தான் இந்த அரிய கிண்ணம்.

லசித் மாலிங்கவை இலங்கையின் அதிர்ஷ்டக்காரத் தலைவர் என்றும் சொல்லலாம். மூன்று போட்டிகள், மூன்றிலும் வெற்றி…

இந்த நேரத்தில் தான் அதிருப்திப்படாமல், அணிக்குள் குழப்பம் தராமல் நியமிக்கப்பட்ட தலைமைப் பதவியை அணியின் நலனுக்காக விட்டுக்கொடுத்த தினேஷ் சந்திமாலையும் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த அணியொற்றுமை தொடர்ந்தும் இருக்குமானால், 2015 உலகக் கிண்ணம் என்னும் பெரும் கனவும் கைகளில் வசப்படும்.

இரு பெரும் சிகரங்களுக்கு வெற்றியுடன் விடை கொடுக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்குக் கிடைத்ததையும் 18 ஆண்டுகாலத்தின் பின் பெற்ற வெற்றிக்கிண்ணமும் அளித்த உற்சாகத்தைத் தான் நன்றியுடன் நேற்று இலங்கை ரசிகர்கள் விமான நிலையம் முதல் காலி முகத்திடல் வரை காத்திருந்து வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இப்போது கனவு பலித்தது…
அடுத்து உலக T20 அணி புதிய சகாப்தம் நோக்கி இனி பயணிக்க இந்த வெற்றி ஓர் ஆரம்பமே…

தொடரின் நாயகனாக மிகப் பொருத்தமான விராட் கோளி, ஓட்டங்கள் குவித்த ரோஹித் ஷர்மா, பந்துவீச்சில் அஷ்வின், மிஸ்ரா ஆகியோரின் மிகச் சிறப்பான வெளிப்பாடுகள் இருந்தும் இந்திய அணி தொற்றுப்போனதானது நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமாகவும் இருக்கும்.

ஆனால் தொடர்ச்சியான நியூஸிலாந்து – தென் ஆபிரிக்கா தொடர் தோல்விகள், ஆசியக் கிண்ணத் தோல்வி ஆகியவற்றின் பின் இவ்வளவு தூரம் இந்திய அணியின் பெறுபேறு உண்மையில் இந்தியாவுக்கான ஒரு மகிழ்ச்சியான மாற்றமே.

இனி IPL ஆரம்பிக்க இவையும் கடந்து போகும்.

இந்த உலக T 20 தொடர் தந்த அதிர்ச்சிகள், அடையாளங்கள், சாதனைகள், தடங்கல் பல இருந்தாலும் வெற்றியின் வழித் தடமாகப் பதிந்த ஹேரத்தின் நியூஸிலாந்துக்கு எதிரான பந்துவீச்சு, மாலிங்கவின் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஓவர், திசரவின் சிக்சர்கள், சங்காவின் 50 உற்சாகம்…

இவற்றோடு சங்கா, மஹேலவின் ஆதரவு அணைப்பும் ஆனந்தக் கண்ணீரும் எத்தனை காலம் சென்றும் மறக்க முடியாத நினைவுகளாகப் பதியப்போகின்றன.

மகளிர் உலக T20 கிண்ணம் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக அவுஸ்திரேலிய மகளிர் வசம்.

ஹட் ட்ரிக் அடித்த சாதனைப் பெண்களையும் வாழ்த்துவோம்.

மெக் லனிங் தலைமையிலான இந்தத் துடிப்பான அணி தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே அணி என்பது மிகப் பொருத்தமான ஒன்றே.

ஒரு மாதத்துக்குள்ளேயே இலங்கைக்கு இரண்டாவது கிண்ணம்…

ஆசிய சம்பியன்கள் இப்போது உலக T20 சம்பியன்களும் கூட…

இலங்கையின் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டே மஹேல, சங்கா ஆகியோருக்குப் பதிலாக இலங்கை இனி T20 அணிக்குள் உள்வாங்கப்போகும் இளையவர்கள் யார் என்ற ஆர்வத்தோடு… 

சச்சினின் பாராட்டு

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ உலக கோப்பை வென்ற இந்திய பார்வையற்றோர் அணிக்கு பாராட்டுக்கள். இது இந்தியாவில் உள்ள மற்ற சாதனை வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் பார்வையற்றோருக்கான 4ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, சம்பியன் கிண்ணத்தை சுபீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

சங்ககாரவும் ஓய்வும்

சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும் அது குறித்து சங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டாலும் அது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

உண்மையிலே சங்கா, ஓய்வு பெற்றுச் சென்றால் இலங்கை அணி பலவீனப்பட்டு விடும் என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவுக்கு இன்னொரு உண்மையும் இதில் அடங்கி இருக்கின்றது. அது டெஸ்ட் போட்டிகளில் பிரட்மன் அடித்த இரட்டைச் சதங்களின் மொத்த எண்ணிக்கையை முறியடிப்பதற்கு சங்காவுக்கு இன்னும் 3 இரட்டைச் சதங்கள் தேவைப்படுகின்றன என்பதும் ஒருநாள் போட்டிகளில் அரைச்சதங்களில் சாதனை படைத்த டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு இன்றைய நிலவரப்படி இன்னும் 7 அரைச் சதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுமாகும்.

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கரின் அரைச் சதச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் சங்கா இனிவரும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற முடியாது. அத்தோடு தற்போதைய நிலையில் ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் பெற்ற 49 சதங்களை முறியடிக்க சங்காவால் முடியாது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ இனிவரும் ஒருநாள் போட்டிகளில் அவர் 99 ஆட்டமிழந்தாலும் இலங்கை ரசிகர்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள். சதத்துக்கு டெண்டுல்கர்போல் அரைசதத்துக்கு சங்கா இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

அதுபோல, பிரட்மனின் சாதனையை முறிடிக்க அவர் எதிர்காலத்தில் விளையாடவுள்ள ஒவ்வொரு போட்டியையும் மனஅழுத்தத்துடனேயே சந்திக்க நேரிடும். அதாவது டெண்டுல்கர், சர்தேச கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது சதத்தைப் பெறுவதற்காக எத்தகைய மனஉளைச்சலைச் சந்தித்தாரோ அதேநிலையை சங்காவும் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றுள்ள சிறந்த சராசரியில் கூட அது தாக்கத்தை உண்டு பண்ணலாம். அது மாத்திரமல்ல தனிநபர் சாதனைகளை முன்னிறுத்தி ஆடுகையில் ஆட்டமிழப்புகளில் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கேள்விக்குள்ளாவதால் இதுவரை காலம் கிரிக்கெட் உலகில் சங்கா கட்டிக்காத்த கனவான் குணத்துக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆட்டத்திறன் (Form) காரணமாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடுவதும் சகஜமானதொன்றே. அந்தவகையில், எதிர்வரும் புத்தாண்டு சங்காவுக்கு எவ்வாறான ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதும் கணிப்பிட முடியாத ஒன்றே. அதனால் தான் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்று விட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெற்றுச் செல்லும் வரையில் இலங்கை ரசிகர்களிடம் இந்திய வீரர்கள் என்றாலே தனிநபர் சாதனைகளுக்காக விளையாடுபவர்கள் என்றும் இலங்கை வீரர்கள் அணியின் வெற்றியையே கருதிக் கொள்பவர்கள் என்றும் ஒரு மனோநிலை கட்டமைக்கப்பட்டிருந்தது. டெண்டுல்கர் 200 போட்டிகள் வரை விளையாடியதையும் மஹேல 150 போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றுச் செல்லாமல் 149 டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றுச்சென்றமை உட்பட சிலவற்றை சுட்டிக்காட்டுவார்கள்.

ஆனாலும் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த உலக சாதனைக்காக அந்தப் போட்டியையே சமநிலை ஆக்கியது உட்பட சில புள்ளி விபரங்கள் அவர்களின் மனோநிலைக்கு எதிராக உள்ளமை வேறு விடயம். அது குறித்துப் பேசுவதற்கு இக்கட்டுரை முனையவில்லையாதலால் அவ்விவாதத்தை இங்கே தவிர்த்து விடுகிறேன்.

உலகக் கிண்ணப் போட்டி முடிவடைவதற்குள் டெண்டுல்கரின் சாதனையை சங்கா முறியடிப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்தாலும் பிரட்மனின் சாதனையை முறியடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. ஏனென்றால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே உள்ளன. எனவே, நான்கு இனிங்ஸ்களில் 3 இரட்டைச் சதங்களைப் பெற்றுக் கொள்வதென்பது அசாத்தியமானதொன்றாகவே காணப்படுகின்றது.

எது எப்படியோ உலகக் கிண்ணப் போட்டிகளோடு ஓய்வு பெறாமல் அதன் பின்னரும் அணியின் நன்மை கருதி என்ற போர்வையில் டெஸ்ட் போட்டிகளில் சங்கா தொடர்ந்து விளையாடுவாராயின் தனிப்பட்ட சாதனைகளுக்காக அணியில் நீடித்த ஒரு சராசரி வீரருக்கும் சங்காவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.

-சின்னராஜா விமலன்

ஆறு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
266 ஓட்டங்களை இலக்காக கொண்டு இங்கிலாந்தை விரட்டிய இலங்கை, 49.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கனியை சுவைத்தது.
 
இங்கிலாந்து அணி சார்பாக டெய்லர் 90 ஓட்டங்களையும் மோர்கன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார 96 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இன்றைய வெற்றியுடன் 7 ஓருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 3க்கு 1 என்ற நிலையில் இலங்கை முன்னணி வகிக்கின்றது.

ஹியூஸின் இறுதிச் சடங்கு

பந்து தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்குகள்இ நியூ சவுத் வேல்ஸ்ஸில் புதன்கிழமை (03) நடைபெற்றது.

இலங்கை – இங்கிலாந்து 3ஆவது போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் புதன்கிழமை (03), ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்கள். (படங்கள்: ஏ.எஃப்.பி.)

பாகிஸ்தான் – நியூஸிலாந்து டுவென்டி டுவென்டி

பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற டுவென்டி டுவென்டி போட்டியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள். (படங்கள்: ஏ.எஃப்.பி)