Category Archives: Main Picture

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து, தென்னாபிரிக்கா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, நொட்டிங்ஹாமில், இலங்கை நேரப்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   

 

முதலாவது போட்டியில், இலகுவான வெற்றியை இங்கிலாந்து பெற்ற நிலையில், அழுத்தத்துக்கு மத்தியிலேயே, இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா களமிறங்கவுள்ளது.   

 

எவ்வாறெனினும், தனது முதலாவது குழந்தையின் கடினமான பிறப்புக் காரணமாக, முதலாவது போட்டியைத் தவறவிட்ட, தென்னாபிரிக்க அணியின் வழமையான அணித்தலைவர் ஃபப் டு பிளெஸி, அணிக்குத் திரும்பியிருப்பது, அவ்வணிக்கு உத்வேகத்தை வழங்கலாம்.   

 

ஆயினும், ஒரு போட்டித் தடையை எதிர்கொண்டுள்ள, தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கஜிஸ்கோ றபடா, இப்போட்டியைத் தவறவிடவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக, ஏறத்தாழ அவர் போன்றே பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளரான டுவன்னே ஒலிவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குழாமில், வேகப்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களான கிறிஸ் மொறிஸ், அன்டிலி பெக்லுவாயோ ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

இந்நிலையில், துடுப்பாட்டப் பக்கம், டு பிளெஸி அணிக்குள் வருகையில், அண்மையில் ஓட்டங்களைப் பெறத்தடுமாறிவரும் ஜே.பி டுமினியா அல்லது இளம் வீரர் தெனுயுஸ் டி ப்ரூனா அணியிலிருந்து வெளியேறுவர் என்பது தெளிவில்லாமல் உள்ளது. டு பிளெஸிக்குக்காக குழாமில் கொண்டுவரப்பட்ட ஏய்டன் மர்க்ரமும் குழாமில் தொடருகின்ற நிலையில், மிகுந்த அழுத்தத்தில் டுமினி காணப்படுகின்றார்.   

 

இங்கிலாந்து அணி, மொய்ன் அலியின் சகலதுறை ஆட்டத்தாலும் புதிய அணித்தலைவர் ஜோ றூட்டின் சிறப்பான துடுப்பாட்டத்தாலும் முதலாவது போட்டியை இலகுவாக வெற்றிகொண்டபோதும், கரி பலன்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ் ஆகியோரிடமிருந்து மேலதிக ஓட்டங்களை எதிர்பார்க்கும்.   

 

பந்துவீச்சுப் பக்கம், உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ், ஜேக் போல் ஆகியோர் பயிற்சிக்குத் திரும்பியுள்ள நிலையில், பெறுபேற்றை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் மார்க் வூட் உள்ளார்.     

இலங்கை எதிர் சிம்பாப்வே டெஸ்ட் இன்று ஆரம்பம்

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைத் தொடர்ந்து, ஒற்றை டெஸ்ட் போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. புதிய தலைவர் டினேஷ் சந்திமாலின் கீழ், இலங்கை அணி களமிறங்குகிறது.

 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

இலங்கை அணி, அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தடுமாறியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறந்த பெறுபேறுகளையே வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 11ஆவது இடத்திலுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக, சொந்த நாட்டிலேயே வைத்துத் தொடரை இழந்து விட்டு, பின்னர் அந்த நாட்டையே டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ளும் அழுத்தத்தை, இலங்கை கொண்டுளளது.

 

இவற்றுக்கு மேலதிகமாக, கடந்த நான்கரை ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அணியில் அவரது பங்களிப்பு எவ்வாறு அமையுமென்ற கேள்வியும் காணப்படுகிறது.

 

மறுபக்கமாக, புதிய தலைவர் சந்திமாலின் கீழ், புத்துணர்வுடன் களமிறங்கக்கூடிய வாய்ப்பும், இலங்கைக்குக் காணப்படுகிறது.

 

டெஸ்ட் போட்டிகளில் 7ஆவது இடத்தில் காணப்படும் இலங்கை அணி, இந்தப் போட்டியில் சிறப்பான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டால், களத்துக்கு வெளியே காணப்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும்.

 

இலங்கை அணியின் பிரதானமான நம்பிக்கையாக, சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தே காணப்படுகிறார். அவர் தனது மாயச்சுழலை வெளிப்படுத்துவாராயின், இலங்கை அணிக்கு வெற்றி கிடைப்பது, ஓரளவு உறுதியாகிவிடும். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடும் அவர், இறுதியில் மார்ச் மாதத்திலேயே போட்டியொன்றில் விளையாடியிருந்தார். எனவே, போட்டிக்கான தகுதியுடன் அவர் காணப்படுவாரா என்பதே, பிரதானமான சவாலாக அமையவுள்ளது.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தனுஷ்க குணதிலக, தனது அறிமுகத்தை மேற்கொள்வது ஓரளவு உறுதியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.

 

மறுபக்கமாக, சிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பெறப்பட்ட வெற்றி, அவ்வணிக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. தொடரின் நாயகனாகத் தெரிவான ஹமில்டன் மஸகட்ஸா, டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாகச் செயற்படுவாரென, அவ்வணி எதிர்பார்க்கிறது.

 

எனவே, இலங்கை அணிக்கான தெளிவான வாய்ப்புகள் தென்பட்டாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைப் போலவே, அதிர்ச்சியை வழங்கக்கூடிய அத்தனை திறன்களையும், சிம்பாப்வே அணி கொண்டிருக்கிறது என்றே கருதப்படுகிறது.
(புகைப்படம்: பிரதீப் டில்ருக்‌ஷன)

அரையிறுதிகளில் ஆஸி, தென்னாபிரிக்கா

பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணி, அரையிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டன. இலங்கை அணி, தனது 6ஆவது தோல்வியைப் பதிவுசெய்துகொண்டது.

 

இதன்படி, இந்தத் தொடரில், எந்தவித வெற்றிகளையும் பதிவுசெய்யாத அணிகளாக, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

 

தென்னாபிரிக்கா எதிர் இலங்கை:
இலங்கை: 101/10 (40.3 ஓவ.) (துடுப்பாட்டம்: டிலானி மனோதரா 25 (49), சாமரி பொல்கம்போல 25 (61) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேன் வான் நிகேர்க் 4/24, ஷப்னிம் இஸ்மாயில் 3/14)

 

தென்னாபிரிக்கா: 104/2 (23.1 ஓவ) (துடுப்பாட்டம்: லாரா வொல்வார்ட் ஆ.இ 48 (66), மிக்னொன் டு பிறீஸ் ஆ.இ 38 (53) ஓட்டங்கள்)

 

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா:
இந்தியா: 226/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: பூனம் ராவட் 106 (136), மித்தாலி ராஜ் 69 (114) ஓட்டங்கள். பந்துவீச்சு: எலைஸ் பெரி 2/37, மேகன் ஷூட் 2/52)

 

அவுஸ்திரேலியா: 227/2 (45.1 ஓவ.) (துடுப்பாட்டம்: மென் லனிங் ஆ.இ 76 (88), எலைஸ் பெரி ஆ.இ 60 (67), பெத் மூனி 45 (68), நிக்கோல் போல்ட்டன் 36 (48) ஓட்டங்கள்.)

 

இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து:
இங்கிலாந்து: 284/9 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: நட்டாலி ஷிவர் 129 (111), டம்மி பியூமொன்ட் 93 (102) ஓட்டங்கள். பந்துவீச்சு: அமெலியா கெர் 4/51, லெய்க் கஸ்பெரெக் 2/49)

 

நியூசிலாந்து: 209/10 (46.4 ஓவ.) (துடுப்பாட்டம்: சுஸி பேட்ஸ் 44 (68), கேற்றி பேர்க்கின்ஸ் ஆ.இ 43 (53), அமி சட்டர்த்வைட் 35 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலெக்ஸ் ஹார்ட்லி 3/44, அனியா ஷ்ரப்சோல் 2/19, ஜெனி கண் 2/32)

உமர் அக்மலுக்கு ஒப்பந்தம் இல்லை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்த மத்திய ஒப்பந்தப் பட்டியலில், துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இடம்பெறவில்லை. அண்மைக்காலத்தில் அணியில் அவருக்கு இடம் கிடைக்காத நிலையிலேயே, அவர் இப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

வகை ஏ: அஸார் அலி, மொஹமட் ஹபீஸ், ஷொய்ப் மலிக், சப்ராஸ் அஹமட், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர்.

வகை பி: பாபர் அஸாம், இமாட் வசீம், அசத் ஷபீக், ஹஸன் அலி.

 

வகை சி: வஹாப் றியாஸ், றஹாத் அலி, ஹரிஸ் சொஹைல், சமி அஸ்லாம், ஷான் மசூட், சொஹைல் கான், ஃபக்கார் ஸமன், ஜுனைட் கான், அஹ்மட் ஷெஷாத், மொஹமட் அப்பாஸ், ஷடாப் கான்.

 

இவர்களைத் தவிர, வகை டி இல், 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஷாஸ்திரியை நியமிக்க கங்குலிக்கு விருப்பமில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக, ரவி ஷாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது நியமனத்துக்கு, அவரை நியமித்த கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான சௌரவ் கங்குலி விரும்பியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஷாஸ்திரியின் நியமனம், நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு மேலதிகமாக, பந்துவீச்சுப் பயிற்றுநராக சகீர் கானும், வெளிநாட்டுத் தொடர்களுக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக ராகுல் ட்ராவிட்டும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், ஷாஸ்திரிக்கும் முன்னாள் வீரர் விரேந்தர் செவாக்குக்கும் இடையில், பயிற்றுநர் பதவிக்காக அதிக போட்டி காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில், அணித்தலைவர் விராத் கோலியின் உயர்ந்த சிபாரிசு காரணமாகவே, ஷாஸ்திரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இதில், கங்குலிக்கும் ஷாஸ்திரிக்கும் இடையில், இதற்கு முன்னர் முரண்பாடுகள் காணப்பட்டிருந்த பின்னணியில், அவரை நியமிப்பது குறித்து, பெரிதளவிலான விருப்பத்தை, கங்குலி கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அணியின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என, கிரிக்கெட் ஆலோசனைச் செயற்குழுவின் ஏனைய உறுப்பினர்களான சச்சின் டென்டுல்கர், வி.வி.எஸ். லக்‌ஷ்மன் ஆகியோர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கு மத்தியில், பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க ஷாஸ்திரி விரும்பி, பாரத் அருணுக்குப் பதிலாக, கங்குலியின் விருப்பமான சகீர் கான் நியமிக்கப்பட்ட பின்னரே, ஷாஸ்திரியை நியமிக்க, கங்குலி ஒப்புக் கொண்டார் என்று, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

கைவிடப்பட்டது ஆப்கான் – எம்.சி.சி போட்டி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் மரிலிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும் (எம்.சி.சி) இடையிலான கிரிக்கெட் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

 

லோர்ட்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில், மழை பாதிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய எம்.சி.சி அணி, 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. சாம் ஹெய்ன் 76 (100), சமித் பட்டேல் 53 (47) ஓட்டங்களைப் பெற்றனர். ஷபூர் ஸட்ரன் 3, குல்படின் நைப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போனது.

இலங்கைக் குழாமில் தனஞ்சய நீக்கம்

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளம் வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இந்தப் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில், நாளை (14) ஆரம்பிக்கவுள்ளது.

 

புதிய தலைவர் டினேஷ் சந்திமாலின் தலைமையில் விளையாடப்படவுள்ள முதலாவது போட்டியாக அமையவுள்ள இப்போட்டியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்திய தனுஷ்க குணதிலக, முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். அதேபோன்று, காயம் காரணமாக அண்மைக்காலத்தில் இடம்பெற்றிருக்காத அஞ்சலோ மத்தியூஸ், நீண்டகாலத்தின் பின்னர், சாதாரண வீரராகக் களமிறங்கவுள்ளார்.

 

அண்மைக்காலத்தில் சிறப்பாகச் சோபிக்கவில்லை என்றாலும், அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட தனஞ்சய டி சில்வா, காயமடைந்த வீரர்களான குசல் பெரேரா, நுவான் பிரதீப் ஆகியோர், இக்குழாமில் இடம்பெறவில்லை.

 

குழாம்: டினேஷ் சந்திமால், உபுல் தரங்க, அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சந்தகான், விஷ்வா பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார.

 

அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களாக, டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி என, 3 வகையான போட்டிகளினதும் தலைவராக, மத்தியூஸ் விளங்கிய போதிலும், தற்போது 2 பேருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, டெஸ்ட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ள அதேநேரத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றின் தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்றுநராக ஷாஸ்திரி; ட்ராவிட், சகீரும் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக, முன்னாள் தலைவரான ரவி ஷாஸ்திரி அறிவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை, அவருக்கான பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

தவிர, குறித்த காலத்துக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, சகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, அக்காலப்பகுதியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக, முன்னாள் தலைவரும் 19 வயதுக்குட்பட்ட அணி, ஏ அணி ஆகியவற்றின் பயிற்றுநருமான ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே, பயிற்றுநர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கான புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, நேற்று முன்தினம் இடம்பெற்றது. கிரிக்கெட் ஆலோசனைக் செயற்குழுவின் உறுப்பினர்களான சச்சின் டென்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ். லக்‌ஷ்மன் ஆகியோர், பயிற்றுநர் பதவிக்கானவர்களை நேர்கண்டனர்.
இதில் ரவி ஷாஸ்திரி, டொம் மூடி, விரேந்தர் செவாக், றிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் நேர்காணப்பட்டனர்.

 

முன்னைய பயிற்றுநரான கும்ப்ளே, அணித்தலைவர் கோலியுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே பதவி விலகியிருந்த நிலையில், கோலியுடன் நெருக்கத்தைக் கொண்டுள்ள ரவி ஷாஸ்திரி, தற்போது புதிய பதவியைப் பெற்றுள்ளார்.

 

பயிற்றுநராக கும்ப்ளே இருக்கும் போதே, புதிய பயிற்றுநருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, ரவி ஷாஸ்திரி, அப்போது விண்ணப்பித்திருக்கவில்லை. அப்பதவி, கும்ப்ளேவுக்குத் திரும்பவும் கிடைக்குமென அவர் எதிர்பார்த்தமையே அதற்கான காரணமாகும். இவற்றுக்கு நடுவில், தனது பதவியிலிருந்து விலகுவதாக கும்ப்ளே அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய பயிற்றுநருக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது, மேலும் நீடிக்கப்பட்டது. அப்போதே, ஷாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகினார் மத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3 வகையான போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

சிம்பாப்வே அணிக்கெதிராக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

 

மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தலைமை தாங்கியிருந்தார்.