Category Archives: Main Picture

அசத்தும் அவுஸ்திரேலியா

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில், நான்காவது நாளான இன்று, அசத்தலான முறையில் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி இருந்தது. 

 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்து, டேவிட் வோனர் (145), மைக்கல் கிளார்க் (128), ஸ்டெவன் ஸ்மித் (162) ஆகியோரின் சதங்களுடன் – 7 விக்கெட்களை இழந்து 517 ஓட்டங்களுடன் முதலாவது இனின்ஸுக்கான துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய விராத் கோலி – 115 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அஜின்ஹியா ரெஹேனா 62 முரளி விஜய் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் நதன் லியோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மிச்சல் ஜோன்ஸன், பீற்றர் சிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரெயான் ஹரிஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

 

தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை குவித்திருந்தது. டேவிட் வோனர் – அபாரமாக துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். களத்தில் ஸ்டிவென் ஸ்மித் 52 ஓட்டங்களுடனும் பிரட் ஹட்டின் 14 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர்.

 

இன்றைய நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 363 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.

 

நாளை இறுதிநாளாட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்துக்கு வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி, 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.

மழை காரணமாக நேற்றைய போட்டி இடைநிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் போட்டி தொடரப்பட்டது. 240 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோய் ரூட்டின் அதிரடி ஆட்டத்தினால் 49.1 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்தப் போட்டியின் நாயகனாக ஜோய் ரூட் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – இங்கிலாந்து போட்டி 2ஆவது நாளுக்கு ஒத்திவைப்பு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, மழை காரணமாக இரண்டாவது நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. குசல் பெரேரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் விக்கெட்டுக்களை விரைவாக இழந்த இலங்கை அணி, டில்ஷான் மற்றும் குமார் சங்கக்காரவின் பொறுமையான இணைப்பாட்டம் மூலமாக ஓட்டங்களைச் சேர்த்தது. 

35 ஓட்டங்களைப் பெற்றவேளையில் டில்ஷான் ஆட்டமிழக்க, குமார் சங்கக்காரவுடன் அணித்தலைவர் மத்யூஸ் இணைந்து கொண்டு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இலங்கை அணி 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் மத்யூஸ், ஜோர்டானின் பந்துவீச்சில் ஆட்டமிழ்தார். இவர் பெற்ற ஓட்டங்கள் 40. 

அதனை அடுத்து இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்துவந்தது. 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த சங்கக்கார வோக்ஸ்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது அணியின் ஓட்ட எண்ணிக்கை 199 ஆக இருந்ததது. இறுதியில், 49 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.

இங்கிலாந்து அணிப் பந்துவீச்சில், வோக்ஸ் 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும், ஜோர்டான் 2 விக்கெட்களையும், ஸ்டீவன் ஃபின் மற்றும் ட்ரெட்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடியாத அளவுக்கு பலத்த மழைபெய்தது. ஆடுகளமும் நன்கு நனைந்துவிட்ட காரணத்தால் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டின்படி, இரண்டாவது நாளான நாளைய தினத்துக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

நாளை, இலங்கை நேரம் பிற்பகல் இரண்டு முப்பதுக்கு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணி  பெற்றிருக்கும் 239 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடும். 

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்று, இவ்வாறு இரண்டாவது நாளுக்கும் தொடர்ந்த இறுதிச் சந்தர்ப்பம் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் ட்ரொபி கிண்ணத்தொடரில் இடம்பெற்றிருந்தது. 

முதல் நாளில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் மழைகாரணமாக இரண்டாவது நாளுக்கு போட்டி தொடர்ந்தது. இரண்டாவது நாளில் தொடர்ந்த போட்டியில், 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 251 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் மழை மீண்டும் மீண்டும் குறுக்கிட, 24 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 49 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நாளை தொடரும் போட்டியிலும் மழை குறுக்கிடும் அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை!

நியூஸிலாந்துக்கான இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை – நியூசிலந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரசன்னா ஜெயவர்தன மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கும் அதேவேளை, தினேஷ் சந்திமாலுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் விக்கெட் காப்பில் ஈட்டுபட்ட நிரோஷன் டிக்வெல்லவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 18 முதற் தரப் போட்டிகளில் 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ள துஸ்மாந்த சமீரவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

அஞ்சலோ மத்தியூஸ், கௌஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, குமார் சங்ககார, லஹிறு திரிமான்னே, நிரோஷன் டிக்வெல்ல, பிரசன்ன ஜெயவர்தன, தினேஷ் சந்திமால், டில்ருவான் பெரேரா, தரிந்து கௌஷால், சமின்ட எரங்க, சுரங்க லக்மால், தம்மிக்க பிரசாத், துஸ்மாந்த சமீர, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள். 

ரங்கன ஹேரத், தனது சொந்த தேவைகள் காரணமாக முதற்ப் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 27ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சிப்போட்டி இன்று ஆரம்பம்

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க அழைப்பு அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

டிசெம்பர் 17ஆம் திகதி ஆரம்பித்து மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மொதவுள்ளன. கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட ஒப்பந்த முரண்பாடுகள் காரணமாக இந்தியத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் இடைநடுவில் விலகிக்கொண்டது. இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு எட்டப்பட்டிருந்தது.

அதனை அடுத்து தென்னாபிரிக்க தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் இணைக்கப்பட்டிருந்த டரன் பிராவோ தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொண்டுள்ளதும், காயம் காரணமாக கிரிஸ் கேய்ல் விளையாடமுடியாத நிலையிலுள்ளமையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டரன் பிராவோவுக்கு பதிலாக கயானாவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் அசாட் புடாடினும், கிரிஸ் கெய்லுக்குப் பதிலாக டெவொன் ஸ்மித்தும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதேநேரம் தென்னாபிரிக்க அணியும் வீரர்களின் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சசித்திர சேனாநாயக்க

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் பந்து வீசத் தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க, மீண்டும் பந்துவீசுவதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணியுடான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பந்தை வீசி எறிகின்றார் என்ற குற்றச்சாட்டினை போட்டி நடுவர்கள் தெரவித்தனர். இதனையடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட சசித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சு விதிகளை மீறி இருப்பதாகவும் அவர் தொடர்ந்து பந்துவீச முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பரிசோதனை தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் சசித்திர சேனநாயக்க சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சு பரிசோதனைக் குழுவிடம் 14 நாட்களுக்குள் காரணங்களை கேட்டறிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இல்லாவிடின் மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற, பந்துவீச்சு பாணியை மாற்றி மீள் பரிசோதனை செய்து தனது பந்துவீச்சு பாணியை உறுதி செய்து விளையாட முடியும். மீள் வருகையின் பின்னர் இதே குற்றம் கண்டறியப்பட்டால் குறைந்தது ஒரு வருட தடவை விதிக்கப்படும் என்ற நிலையில், தனது மீள் பரீட்சையை வெற்றிகரமாக முடித்தக் கொண்டு நாடு திரும்பியிருந்தார் சசித்திர சேனாநாயக்க.

இந்நிலையிலையிலே சர்வதேசக் கிரிக்கெட் பேரவை, அவரது பந்துவீச்சு முறையில் தவறில்லை என அறிவித்திருக்கிறது. 

2011 ஆண்டு இலங்கை A அணிக்காக சசித்திர சேனநாயக்க விளையாடிய போது இதே குற்றம் முன் வைக்கப்பட்டது. பின்னர் பந்துவீச்சு பாணியில் மேம்படுத்தல்களை செய்து மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டு பந்துவீச்சு விதிமுறைகளுக்குள் இருப்பதாக முடிவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் இந்தியா: அடிலெய்டில் ஆரம்பம்

அவுஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான பந்துவீச்சுத் தாக்குதலோடு, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தை மீண்டும் பெறுகின்ற நோக்கோடு அவுஸ்திரேலியா அணியானது இந்தியாவை வெள்ளையடிக்கக் காத்திருந்த அவுஸ்திரேலியா ஒரு பக்கம், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியாத அணி என்று முத்திரை குத்தப்பட்ட இந்திய அணி, தங்களது 'புதிய' இளைய அணியானது அவுஸ்திரேலிய மண்ணிலும் சாதிக்கும் ஆற்றலுடையது என்று சாத்தியப்படுத்திக் காட்டுவதற்கும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் ஒரு விறுவிறுப்பான தொடராக அமைந்திருக்க வேண்டியது.


யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த கிரிக்கெட்டின் சோக சம்பவமான பில் ஹியூஸின் திடீர் மரணத்தின் சோக நிழலுடன் இன்று ஆரம்பிக்கிறது.


திட்டமிட்டபடி கடந்த 4ஆம் திகதி போட்டி ஆரம்பித்திருந்தால் இன்று போட்டி முடிந்திருக்கும். அப்போதிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கின் உபாதை காரணமாக, காலமான பில் ஹியூஸ், அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருப்பார்.

ஆனால், எதிர்பாராமல் எகிறிக் குதித்த ஒரு பந்து, ஓர் இளம் வீரனின் உயிரைக் குடித்து, எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது.


பில் ஹியூஸ் என்ற அவுஸ்திரேலிய வீரர் எல்லா அவுஸ்திரேலிய வீரர்களோடும் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு கலகலப்பான வீரர். களத்தில் மடிந்த வீரனாக கிரிக்கெட் உலகமே ஹியூஸை நினைவு கூர, நெருங்கிப் பழகிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த இழப்பிலிருந்து மீண்டு வர இந்த ஒரு வாரம் உண்மையில் போதுமாக இருக்குமா என்ற கேள்வி நியாயமானதே.


எந்தவொரு அவுஸ்திரேலிய வீரரையும் இந்தப் போட்டியில் விளையாடுமாறு நிர்ப்பந்திப்பதில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு செய்திருந்தது. எனினும் இந்த அடிலெய்ட் போட்டியில் அத்தனை வீரர்களும் விளையாடுவது அந்த வீரர்கள் தங்கள் வீரர்களை நேசிப்பது போலவே, தங்கள் கிரிக்கெட்டையும் மிக நேர்த்தியான கடமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று காட்டுகிறது.

வழமையாக அவுஸ்திரேலியா, எந்தவொரு டெஸ்ட் தொடரையும் பேர்த் அல்லது பிரிஸ்பேனில் ஆரம்பிக்க விரும்பும். காரணம் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகத் தன்மை அதிகம் கொண்டவை இவை. எனினும் ஹியூஸின் மரணம் தந்த மாற்றங்கள், போட்டிகளின் திகதி அட்டவணைகள் மாற்றப்பட்டு, முதலாவது போட்டி அடிலெய்ட்டில் இடம்பெறுகிறது.


நெஞ்சைத் தொடும் விடயம் ஒன்று, இறுதியாக பில் ஹியூஸ் விளையாடிவந்த தென் அவுஸ்திரேலியாவின் மைதானமான அடிலெய்ட்டில் போட்டி இடம்பெறுகிறது. கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஹியூஸை கௌரவிக்க 13ஆவது வீரராக அவரது பெயரையும் அறிவித்துள்ளது. மைதானத்திலும் ஹியூசின் டெஸ்ட் போட்டி வீரர் எண்ணான 408 பெரிதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஒரு மரித்த வீரனுக்கான கௌரவத்தை மறக்கமுடியாத அளவுக்கு வழங்கியுள்ள அவுஸ்திரேலியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


வழமையாக அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சின் முக்கிய ஆயுதமாக விளங்கும் பவுன்சர் பந்து, பில் ஹியூசின் பவுன்சர் மரணத்துக்குப் பின்னர், வழமைபோல பயன்படுத்தப்படுமா என்ற கேள்விகளே முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தன.


ஆனால், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டிகளில் இளைய அவுஸ்திரேலிய வீரர்களும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் தாராளமாக பவுன்சர்களை வீசியிருந்தார்கள்.

இதற்கிடையில் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங்கும் இந்திய அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா பவுன்சர் பந்துகளை பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது என்றும் மிட்செல் ஜோன்சனின் முதல் பந்தே பவுன்சராக இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


ஒரு தச்சு வேலை செய்பவரின் ஆயுதங்களில் ஒன்றின் காரணமாக தற்செயலாக விபத்து ஏற்படும்போது, அதற்குப்பின் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்கள் வேலைகளை செய்யாமல் இருக்கிறோமா? அதேபோல தான் தற்செயல் பவுன்சர் பந்து ஒன்றின் காரணமாக பில் ஹியூசின் மரணம் சம்பவித்ததன் காரணமாக கிரிக்கெட்டின் கலைகளில் ஒன்றான பவுன்சரை அப்படியே கைவிடுவதா?


இன்று அடிலெய்ட்டில் ஆரம்பித்த டெஸ்ட்டின் முதல் நாளிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பவுன்சர் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். இனி ஜோன்சன் & குழுவினரின் பதில் ஆரம்பிக்கும் பார்த்திருக்கலாம்.


பொதுவாக அவுஸ்திரேலியாவில் வைத்து இந்தியா, ஒரு தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்றதே கிடையாது. 10 தொடர்களிலும் 8 போட்டிகளில் தோல்வி; 2 போட்டிகளில் (இறுதியாக 2011இல்) வெற்றி தோல்வியற்ற முடிவு.


ஆனால், இப்போது விளையாடும் அடிலெய்ட் மைதானம் அதிகமாக இந்திய வீரர்களுக்கு உகந்த துடுப்பாட்ட தன்மை உடையது எனலாம்.


எனினும் இன்றைய ஆரம்பம் அவுஸ்திரேலியாவின் ஓட்டக் குவிப்போடு ஆரம்பித்துள்ளது.


அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் உபாதையுடன் வெளியேறியிருப்பது அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கலாம். (அடிக்கடி இவருக்கு முதுகு உபாதை ஏற்பட்டுக்கொண்டே இருப்பது கிளார்க்கின் இறுதி இன்னிங்சாக இது அமைந்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது)


இந்திய அணியும் தங்களது வழமையான தலைவர் மஹேந்திர சிங் தோனி இல்லாமலேயே (உபாதை காரணமாக) இந்த முதல் போட்டியில் விளையாடுகிறது. விராட் கோளி, முதல் தடவையாக டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.


இந்திய அணியானது தோனி விளையாடும் போதும் தோனி இல்லாதபோதும் பெற்றுள்ள பெறுபேறுகள்.


India Test results
with MSD     88-36-23-29 (%win 40.91)
without MSD  8-2-4-2 (%win 25.00)


இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் 87இல் அவுஸ்திரேலியா 38இலும் இந்தியா 24இலும் வென்றுள்ளன.

அப்போதைய மெட்ராஸ் (சென்னை சேப்பாக்கம்) டெஸ்ட் போட்டி 1986 இல் உலகப் புகழ்பெற்ற TIE முடிவைக் கண்டது.


24 டெஸ்ட் தொடர்களில் அவுஸ்திரேலியா 12இல் வென்றிருக்கிறது. இந்தியாவுக்கு 7 தொடர் வெற்றிகள். இந்த ஏழுமே இந்தியாவில் வைத்தே பெறப்பட்டவை.


அவுஸ்திரேலியாவில் இந்திய அணி 5 டெஸ்ட் வெற்றிகளை மாத்திரமே பதிவு செய்துள்ளது. எனினும் 26 தோல்விகள்.


இந்த மோசமான வரலாற்றை இம்முறையாவது மாற்றலாமென இந்திய அணி நினைத்தால் ஆக்ரோஷமான அணுகுமுறையும், அதேவேளை நிதானமான ஓட்டக்குவிப்பும் தேவைப்படும்.


கங்குலியின் தலைமையில் 2003-04இல் தொடரை சமன் செய்ததும், 2007-08இல் கும்ப்ளேயின் தலைமையில் 2-1 என போராடித் தோற்றதும் இந்தியாவின் அண்மைக்கால பெருமைக்குரிய பெறுபேறுகள் என்று குறிப்பிடப்பட்டாலும், தோனியின் தலைமையில் 2011-12 தொடரில் நான்கு போட்டிகளிலும் தோற்ற கறை உறுத்துவதாகவே இருக்கிறது. இதற்கு பதிலடியை இந்தியாவில் வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் அதே மாதிரி 4-0 எனக் கொடுத்தது இந்தியா.


ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடர் வெற்றி மட்டுமல்ல, அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றியும் நீண்ட காலமாக எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.


முன்பிருந்த ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கம்பீர், சாகிர் கான் போன்றோர் இல்லாமல் ஓர் இளைய அணி அவுஸ்திரேலிய மண்ணில் முதல் தடவை.
இது அவர்களது பலவீனம் அல்லாமல் பலமாக இருக்கிறது எனக் கருதலாம்.


​காரணம், இளமை வேகம், டெஸ்ட் அனுபவம் இல்லாவிடினும் இந்திய A அணி மற்றும் இளையோர் அணிகளுக்காக அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் என்பன அநேகமான இந்திய வீரர்களுக்கு சாதகமானதே.


எனினும் தோனியின் டெஸ்ட் தலைமைத்துவம், ஷீக்கார் தவானின் வெளிநாட்டு மண் டெஸ்ட் பெறுபேறுகள், ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் டெஸ்ட் எதிர்காலங்கள், அஷ்வினின் இந்தியாவின் முதற்தர சுழல்பந்துவீச்சாளர் என்ற தகுதி (இந்தப்போட்டியிலேயே இவ்வளவு காலமும் T20 வகைப் போட்டிகளின் specialist ஆகக் கருதப்பட்ட கரன் ஷர்மா அஷ்வினை முந்தியிருப்பது ஒரு சான்று) ஆகிய விடயங்கள் கேள்விக்குறியாக்கப்படக் கூடிய தொடராகவும் இந்த முறை இடம்பெறும் போர்டர் – கவஸ்கர் தொடர் அமையவுள்ளது.


அத்துடன் இந்தியாவின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரங்கள் புஜாரா, ரஹானே, கோளி போன்றோரும், இளம் வேகப்பந்துவீச்சு வீரர்களான வருண் ஆரோன், மொஹமட் ஷமி, புவனேஷ் குமார் போன்றோர் தங்களை உரக்க நிரூபிக்கும் ஒரு சர்வதேசக் காலமாக விளங்கவுள்ளது.


மறுபக்கம் அவுஸ்திரேலியா வயதேறிச் செல்லும் தங்களது முக்கிய மூன்று வீரர்களான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் ரோஜர்ஸ், விக்கெட் காப்பாளரும் உப தலைவருமான ப்ரட் ஹாட்டின், வேகப்பந்துவீச்சாளர் ரயன் ஹரிஸ் போன்றோரை கவனமாகப் பயன்படுத்தவேண்டி இருப்பதுடன், அடுத்த கட்டம் பற்றியும் யோசிக்கவேண்டியுள்ளது.


மைக்கேல் கிளார்க்கின் தொடர் உபாதை, அடுத்த நீண்டகால அணித் தலைவர் பற்றியும் சிந்திக்கவைக்கிறது. ஒருநாள் அணிக்கு ஜோர்ஜ் பெய்லி இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு ஹடின் குறுகிய காலத்துக்கு தற்காலிக அணித் தலைவராக இருந்தாலும், நீண்ட கால நோக்கில் யார்? ஸ்டீவ் ஸ்மித்?


அவுஸ்திரேலிய அணிக்காக கிளார்க் அண்மையில் சிறப்பான தலைமையை வழங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி அவரை வாட்டும் முதுகு உபாதை அவர் நீண்டகாலம் விளையாடுவாரா என்ற ஐயத்தை இப்போது ஆழமாக ஏற்படுத்தியுள்ளது.


ஆரம்பித்துள்ள அடிலெய்ட் டெஸ்ட் முதல் அடுத்துவரும் போட்டிகள் வரை தொடர்ந்துவரும் கட்டுரைகளில் இன்னும் ஆழமாக அலசலாம்.

www.arvloshan.com

இலங்கை – இங்கிலாந்து 5ஆவது போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின் 5ஆவது போட்டி, கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நாளை புதன்கிழமை (10) நடைபெறவுள்ளது.

பகலிரவாக நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் 3-1 என்ற அடிப்படையில் இலங்கை முன்னிலையில் உள்ள நிலையில் நாளைய போட்டி மிக முக்கியத்துவம் வாய்ததாக அமையவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை வெற்றிபெறுமாக இருந்தால், இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் தொடரை கைப்பற்றமுடியும்.

இங்கிலாந்து நாளைய போட்டியில் வெற்றிபெறுமாக இருந்தால், தொடரை கைப்பற்ற இலங்கை தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ஐந்தாவது போட்டி குறித்து கருத்து தெரிவித்த மாவன், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் நாம் சிறப்பாக விளையாடவில்லை. எதிர்வரும் போட்டியில் எமது அணி முழு பலத்துடன் விளையாடும் என்றார்.

ஹியூஸின் இறுதிச் சடங்கில் கதறியழுத கிளார்க்

பந்து தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்குகள், நியூ சவுத் வேல்ஸ்ஸில் புதன்கிழமை (03) நடைபெற்றது.

ஹியூஸின் இறுதிக் கிரியைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் கண்ணீர் மல்க நின்ற காட்சிகள் உலகத்தை கலங்க வைத்துவிட்டன.
 
ஹியூஸை வழியனுப்பும் இறுதிக்கிரியைகளில் சுமார் 5,000இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
 
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்றின்போது, பந்து தாக்கி படுகாயமடைந்த ஹியூஸ் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

பிலிப் ஹியூஸின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் இரங்கல் உரையாற்றும்போது அழுதேவிட்டார்.
 
'தம்பி உனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உன்னை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் உனது குரலை கேட்க, முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன். உன் ஆத்மா என்னுடன் இருக்கும். அது என்னைவிட்டு விலகாது என்று நம்புகிறேன்.
 
ஹியூக்ஸ் நீ கடைசியாக விளையாடிய மைதானத்துக்கு சென்றேன். நீ கீழே விழுந்த இடத்தில் இருந்த புற்களை தொட்டேன். அப்போது நீ எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். எனது கால்கள் மேலே செல்கிறதா என்று பார்த்தேன். ஆனால், நான் சரியாக இருந்தேன். ஹியூக்ஸ் உள் ஆத்மா என்னை ஓட்டங்களை குவிக்க ஊக்குவிக்கும்.

உன் ஆத்மா எங்களது ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கும். நீ என்னிடம் அடிக்கடி சொல்வாய். நாம் தோண்டி எடுத்து விட்டு (ஓட்டங்களை) 'டீ' குடிக்க செல்வோம் என்று. இப்போது சொல்கிறேன். நாம் தோண்டி எடுக்க… இப்படி சொல்லிவிட்டு துயரம் தாங்காமல் கிளார்க் அழுதார்.

நாம் கட்டாயம் தோண்டி எடுக்க செல்ல வேண்டும். அதன்பின் 'டீ' குடிக்க செல்ல வேண்டும். ஒன்றாக விளையாட வேண்டும். எனது இளைய சகோதரர், உனது ஆத்மா சாந்தி அடையட்டும். நான் உன்னை தேடி ஒருநாள் நிச்சயம் வருவேன்” என்றார்.