Category Archives: Main Picture

மைக்கேல் க்ளார்க் விளையாடுவது உறுதி

அண்மைக் காலத்தில் காயம் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் ஓய்விலிருந்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் க்ளார்க், உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பங்களாதேஷ் அணியுடனான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அழைப்பு அணியின் சார்பில் விளையாடிய மைக்கேல் க்ளார்க், களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். இந்தப் போட்டியின்போது முன்னைய காயங்கள், உடல் உபாதைகள் காரணமான சிரமங்கள் எதுவும் அவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அவர் உலகக் கிண்ணத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. 

அதேநேரம், க்ளார்க் அணிக்குத் திரும்பினாலும் உலகக் கிண்ணத் தொடருக்கான அணித் தலைவராக அவர் செயற்படுவாரா என்கிற கேள்வி தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. ஏனெனில், தொடரின் நடுவில் மறுபடியும் க்ளார்க் உபாதைக்கு உள்ளானால் அணித்தலைமையில் மாற்றம் செய்ய நேரிடும். எனவே, தற்போதுள்ளதைப்போன்றே ஜோர்ஜ் பெய்லி அல்லது ஸ்டீபன் ஸ்மித் இருவரில் ஒருவரை அணித் தலைவராக நியமிப்பது அணிக்கு நல்லது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. 

இது குறித்து அவுஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் ஃபின்ச் கருத்துத் தெரிவிக்கும்போது, ''இது ஒரு பிரச்சினையே அல்ல. மூவருடைய தலைமையின் கீழும் எமது அணி மிகச்சிறப்பாக செயற்பட்டிருக்கிறது. எனவே, யார் தலைவராக இருந்தாலும் நாம் உலகக் கிண்ணத் தொடரில் எமது முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடுவோம். அணியில் க்ளார்க் இருப்பது மேலதிகப் பலத்தை தரும். அவரது அனுபவம், கிண்ணத்தை வெல்ல எமக்கு உதவிடும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசியாவில் முதலாவது உலகக்கிண்ணம்; அவுஸ்திரேலியாவின் எழுச்சி: 1987 உலகக்கிண்ணம்

இதுவரை நடைபெற்ற 10 உலகக்கிண்ணங்களில் நான் பார்த்த, அனுபவரீதியாக கேட்டு, அறிந்த உலகக்கிண்ணத் தொடர்கள் பற்றி நான் எழுதும் தொடர் கட்டுரையின் முதல் பாகம்…

இணையத்தளங்களும், தேடி தகவல் அறிய விக்கிப்பீடியாக்களும், ஏன் எல்லா போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சிகளும் இல்லாத அந்த 80களின் கடைக்கூறுகளில் என்னுடைய கிரிக்கெட் களஞ்சியம், எனக்கான கிரிக்கெட் அகராதி என்னுடைய அப்பா தான்.

 

வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்டு வளர்ந்த காலம், ஆங்கிலப் பத்திரிகைகள் மூலம் கிரிக்கெட் போட்டிகள் பற்றி அறிந்த காலம், முன்னைய டெட் டெக்ஸ்டர், ரிச்சி பெனொட், சோபர்ஸ், வொரல், லில்லீ, தோம்சன், கவாஸ்கர், விஸ்வநாத் கதைகளையெல்லாம் வரலாறு தப்பாமல் சுவாரஸ்யமாக சொல்லிச் சொல்லியே கிரிக்கெட்டின் மீது காதலை அப்போதே ஊட்டி வளர்த்த அப்பாவினால், அப்போது டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபிமானம் எனக்குத் தொற்றிக்கொண்டது.

 

நினைவு தெரிந்து அப்போதைய தென்னிந்திய தூதர்ஷனில் அப்பாவுடன் சேர்ந்து பார்த்த முதலாவது கிரிக்கெட் போட்டியே இந்தியாவுக்கு அப்போது விஜயம் செய்திருந்த இலங்கை அணி விளையாடிய கான்பூர் டெஸ்ட் போட்டி.

 

அப்போது அப்பா வழியில் இந்திய அணியின் ரசிகனாக இருந்த எனக்கு, அசாருதீன் 199 ஓட்டங்களுடன் LBW முறையில் ஆட்டமிழந்த அந்த இன்னிங்க்ஸ் இப்போதும் கவலையுடன் மனதில் நிற்கும்.

 

அப்பா அடிக்கடி சொல்வார் "கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் தான் நிஜமான மகுடம், Test matches are the ultimate form of Cricket"

 

அடுத்து வந்த அவுஸ்திரேலிய – இந்திய டெஸ்ட் தொடர், அதிலும் நானும் அப்பாவும் விடாமல் பார்த்த அப்போதைய மெட்ராஸ் – சேப்பாக்கம் Tied டெஸ்ட் போட்டியும் டெஸ்ட் போட்டிகளின் மீது தீராத வெறி ஒன்றையே தந்திருந்தன.

 

ஆனால், 1987 வந்தது…

 

இலங்கையில் யாருக்குமே குறிப்பாக வடக்கில் வாழ்ந்த தமிழருக்கு மறக்கமுடியாத ஆண்டு.

 

இந்திய அமைதி காக்கும் படை யாழ். குடா நாட்டில் வந்திறங்கியது. திலீபனின் உண்ணாவிரதம், செப்டம்பர் 26இல் திலீபனின் மரணம், தொடர்ந்த புலிகள் – இந்தியப் படை மோதல் என்று அப்போதிருந்த சூழ்நிலையில் நாம் கிரிக்கெட்டை தொடர்வதோ, இல்லாவிட்டால் எந்தெந்தப் போட்டிகள் எங்கே நடக்கிறது என்பது பற்றி அறியவோ வாய்ப்போ, விருப்பமோ இல்லாத சூழ்நிலை.

 

1987ஆம் ஆண்டு சம்பியன் – அவுஸ்திரேலியா

 

நான்காவது உலகக்கிண்ணம் 1987 ஒக்டோபரில் ஆரம்பிக்கும் நேரம் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி இணுவில் கந்தசுவாமி கோவிலில் – சொந்த ஊரிலேயே அகதிகளாக. வெளியே தலைகாட்ட என்ன, கால் வைக்கக் கூட முடியாத அகோர யுத்தம். எங்களுக்குப் பாடசாலைகளும் இல்லை; அப்பாவுக்கு வேலையும் இல்லை. கூடவே அப்போதைய கொக்குவில் இந்துக்கல்லூரி உப அதிபராக இருந்த எங்கள் மாமாவும். அவரும் ஒரு கிரிக்கெட் பிரியர்.

 

அப்பாவுக்கு அடுத்தபடியாக எனக்கான கிரிக்கெட் ஆர்வத்தை, வாசிப்பதில் தூண்டிவிட்ட ஒரு நடமாடும் ஆங்கில கலாசாலை. அவரது வீட்டு நூலகத்தில் இருந்த Sports Star, Cricketer இன்னும் ஆங்கில விளையாட்டு நூல்கள் தான் எனக்கு தீனி போட்டவை.

 

ஆனால், அப்பா இந்திய ரசிகர் என்பதாலோ என்னவோ மாமா பாகிஸ்தானிய தீவிர ரசிகர். ஜாவிட் மியன்டாட் தான் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பார்.

 

ஜாவிட் மியன்டாட்

 

மாமாவின் சின்ன பொக்கெட் ரேடியோவின் உதவியுடன் இந்திய ஆங்கில வானொலியின் நேர்முக வர்ணனை மூலம் 1987ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளோடு இந்த 9 வயதுப் பையன் கிரிக்கெட்டின் உயர் பரவசங்களைப் பெற ஆரம்பிக்கிறான்… நாசகார குண்டுவீச்சுக்களின் பின்னணியுடன்..!!! (சிறுவனாக அப்போது ரசித்த போட்டிகளை மீண்டும் மீட்டிப் பார்ப்பதோடு, பின்னர் வளர்ந்து தெரிந்துகொண்ட விபரங்களையும் இங்கே சேர்த்து தருகிறேன்)

 

நாலாபுறம் வந்து வீழ்ந்துகொண்டிருந்த குண்டுகளின் மத்தியில், கந்தசுவாமி கோவிலின் பிள்ளையார் பிரகாரத்துக்கு நேரே எங்களுக்கான தற்காலிக இருப்பிடத்தில், மாமாவுடன் சேர்ந்து 'கேட்ட' முதல் போட்டியே இன்றுவரை மறக்கமுடியாத நினைவுகளை தரும் ஒரு போட்டி.

 

அவுஸ்திரேலியா ஒரேயொரு ஓட்டத்தால் இந்தியாவை வென்ற அந்தப் போட்டியில் தான், டொம்  மூடி, நவ்ஜோத் சிது ஆகிய இருவரும் அறிமுகமாகினர்.

 

நவ்ஜோத் சிது

 

சிதுவின் சிக்ஸர் அடிக்கும் அபாரமான ஆற்றல் 'கேட்டு' வியக்கிறேன்.

 

​ஸ்டீவ் வோ என்னும் கூலான மனிதர், அவரது அணியைப் போலவே எதிர்கால கிரிக்கெட்டை ஆளப்போவதை அப்போது உணரவில்லை நான்.

 

ஸ்டீவ் வோ

 

கேட்டு ரசிக்கின்ற போட்டிகளைப் பற்றி இடையிடையே அப்பா, மாமாவுடன் பேசி, தெரியாத வீரர்கள், விஷயங்களை அறிந்துகொள்வேன்.

 

அப்போது ஹிந்தி தெரிந்த மாமா, ஹிந்தி நேர்முக வர்ணனைகளின் விவரங்கள் சொல்லித் தருவார்.

 

அப்பா ஒவ்வொரு வீரர்களின் பின்னணி, அணிகளின் முன்னைய உலகக்கிண்ண வரலாறுகள், பெறுபேறுகள் பற்றியெல்லாம் தனக்குத் தெரிந்ததை சொல்வார்.

 

இணையம் உள்ள இன்றைய நாட்களில் அப்பா அன்று சொல்லித் தந்த விடயங்களை தேடி வாசிக்கும்போது அவர் அச்சொட்டாக சொன்ன விஷயங்களின் துல்லியம் ஆச்சரியமாக இருக்கிறது.

 

ஆனாலும், இப்போதும் இந்த கணித கோலங்கள், எண், இலக்க சுவாரஸ்யங்களில் ஆர்வமுள்ள எனக்கு ஒலிம்பிக் போட்டிகள் லீப் வருடங்களில் நடக்கின்றன, கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் கூட அழகாக, இரண்டால் வகுபடும் வருடங்களில் நடக்கின்றன.

 

அப்படியிருக்க கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகள் மட்டும் ஓர் ஒழுங்கில்லாத 75, 79, 83, 87 என்ற இலக்கங்களில் நடைபெறுவது மனதுக்கு ஒவ்வாதிருந்தது.

 

அப்பாவிடம் கேட்டபோது, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆரம்பித்ததே தற்செயலாகத் தான் (மெல்பேர்னில் மழையினால் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டியாக மாறியது), இதனால் உலகக்கிண்ணப் போட்டியும் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை என்றார்.

 

தொடர்ந்து வந்த போட்டிகளின் பல முக்கிய திருப்பங்கள், சம்பவங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மனதில் அப்படியே நேரில் பார்த்தது போலவே இருக்கின்றன.

 

முக்கியமாக, சிம்பாப்வேயின் டேவ் ஹௌட்டனின் அபார சதம், நியூசிலாந்து அணிக்கெதிராக தோல்வியில் முடிந்தது.

 

நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சிதுவின் சிக்ஸர் தாண்டவங்கள்.

 

இலங்கை அணிக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் பெற்ற 181.

 

அப்போதிருந்த உலகக்கிண்ண சாதனையான கபில் தேவின் 175ஐ முறியடித்த அபார ஆட்டம் அது.

 

பாகிஸ்தானின் கடைசி துடுப்பாட்ட வீரர் சலீம் ஜஃபரை 'மன்கட்' முறை மூலம் ஆட்டமிழக்கச் செய்யாமல் கனவான் தன்மையோடு மேற்கிந்தியத் தீவுகளின் கோர்ட்னி வோல்ஷ் விட்டுக்கொடுக்க, ஒரேயொரு விக்கெட்டால் பாகிஸ்தான் வெற்றிபெற்ற போட்டி.

 

மனதில் வோல்ஷை மிக உயரத்தில் தூக்கி வைத்த ஒரு சம்பவம்.

 

ஆனால், பாவம் இந்த தோல்வியானது மேற்கிந்தியத் தீவுகளை உலகக்கிண்ண அரையிறுதிக்கு தெரிவாகாமல் செய்துவிட்டது.

 

அப்போது இலங்கை அணியை பெரிதாகப் பிடிக்காது.

 

ஆனாலும் எல்லா அணிகளையும் உருட்டிக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை விளையாடிய இரண்டாவது போட்டியில் அர்ஜுன ரணதுங்க அடித்தாடி பெற்ற 86 ஓட்டங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

 

இதேபோல பாகிஸ்தானுக்கு எதிராகவும் அர்ஜுன மற்றொரு அரைச்சதம் பெற்றிருந்தார்.

 

அறிமுக வீரர்கள் கலக்கிய இந்தத் தொடரில் சிது போல கலக்கிய இன்னொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிமன்ஸ்.

 

அப்போதே மாமா, பாகிஸ்தானின் சலீம் மலிக் பற்றி புகழ்ந்துகொண்டிருப்பார். 1987 உலகக்கிண்ணப் போட்டிகளில் சலீம் மலிக் ஓர் அபாரமான சதமும், இரண்டு அரைச்சதங்களும் எடுத்திருந்தார்.

 

ஆனால், ஓட்டங்களை மலையாகக் குவித்து தொடரின் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் க்ரஹாம் கூச் – 471 ஓட்டங்கள்.

 

க்ரஹாம் கூச்

 

தொடர்ச்சியாக ஓட்டங்களை சராசரியாக பெற்று, 5 அரைச்சதங்களுடன் 447 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன்.

 

இந்த உலகக்கிண்ணத்தில் இரண்டு சதங்களைப் பெற்ற ஒரேயொரு வீரர் அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய உப தலைவர் ஜெப் மார்ஷ்.

 

இந்தத் தொடரில் மிக முக்கியமானதொரு சம்பவம், சுனில் கவாஸ்கர் தன்னுடைய இறுதி ஒருநாள் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற முதற்சுற்றின் இறுதிப் போட்டியில், பெற்ற அவருடைய முதலாவதும் கடைசியுமான ஒருநாள் சதம்.

 

85 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் கவாஸ்கர் பெற்ற, வழமையான கவாஸ்கர் பாணியில்லாத அந்த சதம் பற்றி அப்போதிருந்து இன்று வரை சிலாகிக்கப்பட்டது.

 

அந்த வேகமான சதமும், இந்தியா நியூசிலாந்தை வேகமாக அந்தப்போட்டியில் வென்ற விதமும் 1987 உலகக்கிண்ணத்தை மாற்றியமைத்தன என்று சொன்னால் அதுவும் உண்மையே.

 

காரணம், இந்தியாவின் அந்த வேகமான வெற்றி, அவுஸ்திரேலியாவின் ஓட்ட சராசரி வீதத்தை முந்தி (அப்போது நிகர, ஓட்ட சராசரி வீதம் இல்லையே) பிரிவு Aயில் முதலாம் இடத்தைப் பெறச் செய்தது.

 

இதனால் பாகிஸ்தான் சென்று அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கும் வாய்ப்பைத் தவிர்த்து இந்தியா அணியானது இங்கிலாந்தை மும்பையில் சந்தித்தது.

 

அவுஸ்திரேலியா அணியானது பாகிஸ்தானை மற்ற அரையிறுதியில் சந்தித்தது.

 

இந்திய – பாகிஸ்தான் இறுதியை அனைவரும் எதிர்பார்த்திருக்க, எனக்கு மிக ஆச்சரியமாக அமைந்தது ரிச்சர்ட்சின் மேற்கிந்தியத் தீவுகள். அப்பா, மாமா எல்லோரும் ஆகா, ஓகோ என்று போற்றிப் புகழ்ந்த அப்போதைய முடிசூடா மன்னர்கள் அரையிறுதிக்கும் தகுதி பெறாமல் போனது.

 

இந்த உலககிண்ணத்தில் காயம் காரணமாக நியூசிலாந்து அவர்களின் நட்சத்திர சகலதுறை வீரர் ரிச்சர்ட் ஹட்லீயின் சேவைகளை இழந்தது.

 

அதேபோல, இங்கிலாந்தின் சகலதுறை நட்சத்திரம் இயான் பொத்தம், மிக நேர்த்தியான, stylish ஆன துடுப்பாட்ட வீரர் டேவிட் கவர் ஆகியோர் இந்த உலகக்கிண்ணம் தங்களுக்குப் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்று சொல்லி விலகிவிட்டனராம். முட்டாள்கள் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

 

அப்போதே இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலின் சுவாரஸ்யத்தை அப்பா – மாமாவை பார்த்து அறிந்துகொண்ட எனக்கு, அகதி வாழ்க்கையும், வெளியே கண்ட, அறிந்துகொண்ட இந்தியப் படைகளின் அட்டூழியங்கள், இந்தியாவின் மீதான விருப்பை அகற்றி அவுஸ்திரேலியா என்ற 'வளர்ந்துவரும்' அணி மீதான பிரியத்தை வளர்த்துக்கொண்டிருந்தன.

 

அதிலும் அலன் போர்டர் பற்றியும் அவர் கட்டியெழுப்பும் போராட்ட குணம் கொண்ட அணி பற்றியும் அறிந்துகொண்ட விவரங்கள் மனதில் பெரிய மதிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தன.

 

பாகிஸ்தானை ஓர் அரையிறுதியில் மக்டெர்மொட் தனது வேகப்பந்துவீச்சில் சரிக்க, மாமா என்னைப் பார்த்து சொன்னது இன்னமும் ஞாபகமிருக்கிறது.

 

"இவன் மியாண்டாட் இருக்கிற வரைக்கும் பாகிஸ்தான் கப் வெல்லுவதை யாராலும் தடுக்கமுடியாது" என்று சொல்லிவிட்டு என்னிடம் பொக்கெட் ரேடியோவை தந்துவிட்டு சிறு வேலை விடயமாக வெளியே போய்விட்டு வந்தவர், பாகிஸ்தானின் அதிர்ச்சியான தோல்வியையே அறிந்துகொண்டார்.

 

மியன்டாட் 70 ஓட்டங்கள், இம்ரான் கான் 58. ஆனால் இதே இருவரது இணைப்பாட்டம் ஐந்து வருடங்களின் பின்னர் மெல்பேர்னில் பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்தது.

 

அடுத்த அரையிறுதியில் கூச்சின் சத்தமும், ஹெம்மிங்க்சின் 4 விக்கெட்டுக்களும் இந்தியாவை சொந்த மண்ணில் வைத்து தோல்வியுறச் செய்ய, மனதுள் அப்போது நினைத்துக்கொண்டேன் "இவங்களுக்குத் தேவை தான்". ஆனால் கொஞ்சம் உள்ளூரக் கவலை தான்.

 

என்ன இருந்தாலும் நினைவு தெரிந்த காலம் முதல் கொஞ்சக் காலம் ரசித்த அணி இல்லையா?

 

இறுதிப் போட்டி – ஈடன் கார்டன்ஸ் – கொல்கொத்தாவில்.

 

5 முக்கிய தருணங்கள் இன்னமும் இணையம் செல்லாமலே ஞாபகம் இருக்கு.

 

1. டேவிட் பூனின் 75 ஓட்டங்கள்.
2. மைக் வேலேட்டா இறுதி நேரத்தில் வந்து வேகமாக அடித்த 31 பந்துகளில் 45 ஓட்டங்கள்.
3. இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிய போது மிக அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அணித்தலைவர் மைக் கட்டிங்க்கின் விக்கெட்டை அவுஸ்திரேலிய அணித் தலைவர் அலன் போர்டர் கைப்பற்றிய விதம். அந்த ரிவேர்ஸ் ஸ்வீப் அடியை யார் இப்போது துடுப்பெடுத்தாடினாலும், 1987 உலகக்கிண்ணமும் வானொலி நேர்முக வர்ணனையும் நினைவில் வரும்.
4. அலன் லாம்பின் இறுதி வரையான போராட்டம்.
5. Ice Man என்று போர்டரினால் போற்றப்பட்ட ஸ்டீவ் வோவினால் வீசப்பட்ட மிகக் கூலான கடைசி ஓவர்.

 

இதுவரை காலமும் உலகக்கிண்ண வரலாற்றில் பெறப்பட்டுள்ள மிக நெருக்கமான இறுதிப்போட்டி வெற்றி – 7 ஓட்டங்களால். அவுஸ்திரேலியா முதல் தடவையாக சம்பியனானது..!!!

 

அலன் போர்டரின் தலைமையில் அவுஸ்திரேலியா உலகக் கிரிக்கெட்டை ஆளும் அணியாகத் தனது அடித்தளத்தை இட்டது இந்த கொல்கொத்தாவில் தான்.

 

இந்த அணியில் விளையாடிய ஸ்டீவ் வோ, டொம் மூடி, டிம் மே ஆகியோர் மீண்டும் 1999இல் உலகக்கிண்ணத்தை காவிக்கொண்டனர். அதுவும் Ice Man ஸ்டீவ் வோவின் தலைமையில்.

 

1999, 2003, 2007 ஆகிய மூன்று கிண்ணங்களையும் ஹட் ட்ரிக் மூலம் பெற்று சாதனை படைத்தது அவுஸ்திரேலியா. டெஸ்ட் சாம்பியனாகவும் மாறியது. 

 

அனைத்தும் ஆரம்பம் இங்கே தான்…

 

அந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை அப்போது பார்க்க முடியாவிட்டாலும் கூட, பின்னாளில் பார்த்த கறுப்பு – வெள்ளை புகைப்படங்கள், காணொளிகளை இப்போது பார்த்தாலும் ஒரு பரவசம்.

 

1987 உலகக்கிண்ணம் இன்னும் பல வகைகளில் கிரிக்கெட்டில் புரட்சிகளை ஏற்படுத்தியிருந்தது.

 

இங்கிலாந்தைத் தாண்டி ஆசியாவுக்குள் உலகக்கிண்ணமும் கிரிக்கெட்டும் மையம் கொள்ள ஆரம்பித்தது. 60 ஓவர்கள் போட்டிகள் கால, நேர சூழ்நிலைக்கு ஏற்ப 50 ஓவர்களாக மாறின. ஆசியாவில் ரசிகர்களின் வரவேற்பு கிரிக்கெட் உலகத்தை யோசிக்க வைத்தது.

 

ஒருநாள் போட்டிகளுக்கான பிரத்தியேக வீரர்களின் முக்கியத்துவம், விசேடத்துவம் போர்டரினால் வெற்றிகரமாகப் புரியவைக்கப்பட்டது.

 

1987 உலகக்கிண்ணம் 
அதிக ஓட்டங்கள்
க்ரஹாம் கூச்  – 471
டேவிட் பூன்  – 447
ஜெப் மார்ஷ் – 428

 

அதிக விக்கெட்டுக்கள்
க்ரெய்க் மக்டெர்மொட் – 18
இம்ரான் கான் – 17
பற்றிக் பட்டர்சன் -14
மனிந்தர் சிங் – 14 

 

www.arvloshan.com

 

தொடரைக் கைப்பற்றிய நியூஸிலாந்து

பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக்கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றிக்கொண்டது.

நெயிபியரில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது நியூஸிலாந்து. கேன் வில்லியம்ஸன் 112 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் – ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், மார்டின் குப்தில் 76 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் மொஹம்மட் இர்பான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மொஹமட் ஹபீஸ் 86 ஓட்டங்களையும் அஹமட் ஷெஹ்ஷாட் 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் ரிம் சௌத்தீ, அடம் மில்னே, நதன் மக்கெலம், கிரான்ட் எலியோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.

உலகக்கிண்ண தொடரில் ஜுனைட் கான் இல்லை

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைட் கான், உலகக் கிண்ணத் தொடரில் விளையாடமுடியாத நிலை தோன்றியுள்ளது. 

பயிற்சியின்போது காயமடைந்திருந்த ஜுனைட் கான், தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கான பாகிஸ்தான் இடம்பிடிக்கமுடியாமல் போயிருந்தது. இதனையடுத்து லாகூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அவர் உடல் உபாதையிலிருந்து மீள்வதற்கான பயிற்சிகளில் பங்கேற்றிருந்தார். ஆயினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி உடல்தகுதிக்கான பரிசோதனையில் அவர் தேர்வுபெறவில்லை என்பது தெரிகிறது. 

எனவே, உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு ஜுனைட் கானுக்கு இல்லாமற்போயிருக்கிறது.

கடந்த ஒக்டோபரில் முழங்காலில் உபாதைக்குள்ளான ஜுனைட் கான், அதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரில் விளையாடமுடியாமற்போயிருந்தது. ஆயினும் அவர் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக பூரண உடல்தகுதியைப் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் உலகக் கிண்ண அணியில் அவரது பெயரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இணைத்திருந்தது. 

இந்த நிலையில் ஜனவரி 15ஆம் திகதி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜுனைட் கான், கீழே விழுந்தபோது மறுபடியும் காயமடைந்திருந்தார். அவர் இரண்டு வாரங்களில் குணமடைந்துவிடுவார் என்று காயத்தை ஆராய்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆயினும், அந்தக் காலப்பகுதியில் அவர் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்த்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள்.

இந்த நிலையில் அவர் தனது சொந்த நகருக்கு காரில் மேற்கொண்ட நீண்ட பயணமானது அவரது உடல் உபாதையை மேலும் அதிகமாக்கியிருந்ததாகவும், அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னர் குணமடைவது சாத்தியமற்றது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, அவருக்குப் பதிலாக உலகக் கிண்ணத் தொடரில் விளையாடப்போகும் வீரர் பற்றிய தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது. இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜுனைட் கானுக்குப் பதிலாக பிலாவல் பாற்றி இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் அவர் முதலாவது போட்டியில் 8 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களைக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போல்க்னர் விளையாடுவது சந்தேகம்

அவுஸ்திரேலிய அணியின் இளம் சகலதுறை வீரர் ஜேம்ஸ் போல்க்னர், இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் உடல் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். 

24 பந்துகளில் அரைச் சதத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், அன்றைய போட்டியில் தான் வீசிய முதலாவது பந்துவீச்சிலேயே ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியிருந்தார் போல்க்னர். ஆயினும், தனது மூன்றாவது ஓவரை அவர் வீசிக்கொண்டிருந்தபோது உடல் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தைவிட்டு வெளியேறியிருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, அவரது காயமானது சற்று மோசமானதாகவே இருப்பதாகத் தெரியவருகிறது.

சகவீரர் மக்ஸ்வெல் கருத்துத் தெரிவிக்கையில், ''போல்க்னர் அணிக்கு முக்கியமான ஒரு வீரர். போட்டியை முடித்து வைப்பதில் சிறந்தவர். அவரது இழப்பு எமக்கு உலகக் கிண்ணத் தொடரில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

உடல் உபாதை காரணமாக போல்க்னர், உலகக் கிண்ணத்தொடரில் விளையாடமுடியாமல்போகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஹென்ரிக்ஸ் அல்லது ஷோன் மார்ஷ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பியனாகியது அவுஸ்திரேலியா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 112 ஓட்டங்களால் எளிதில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா அணி சாம்பியன் கிண்ணத்தை சுபீகரித்துக்கொண்டது. 

பேர்த்தில் நடைபெற்ற குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சார்பில் கிளன் மக்ஸ்வெல் 95 ஓட்டங்களையும், மிச்சல் மார்ஸ் 60 ஓட்டங்களையும், ஜேம்ஸ் பவுல்க்னர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் ஸ்ருவார்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் அன்டர்ஸன் 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 122 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டமாக 33ஐ ரவி போபரா பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் கிளன் மக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும் மிச்சர் ஜோன்ஸன் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெஸ்லிவூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குறித்த போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் கிளன் மக்ஸ்வெல்லும் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்தத் தொடரில் மற்றொரு அணியான இந்தியா, மிக மோசமான தோல்விகளுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஏழாவது போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் ஏழாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

டில்ஷான், திரிமன்ன ஜோடி ஆரோக்கியமானதொரு ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. குமார் சங்ககாரவின் சதமும் இணைந்துகொள்ள, இலங்கை அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. டில்ஷான் 81 ஓட்டங்களையும் குமார் சங்ககார ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கொரே அன்டர்சன் 3 விக்கெட்களையும், ரிம் சௌதி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

பதிலளித்துத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தது. மத்தியவரிசை வீரர்கள் ஓரளவுக்கு நிதானமாக துடுப்பெடுத்தாடினாலும் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தமை நியூசிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இறுதியில் 45.2 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. வில்லியம்ஸன் 54 ஓட்டங்களையும், லூக் ரோன்ச்சி 47 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் நுவன் குலசேகர, சமிந்த எரங்க மற்றும் தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட 23 வயதான மித வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். 

போட்டியின் நாயகனாக குமார் சங்ககாரவும், தொடர் நாயகனாக கேன் வில்லியம்ஸனும் தெரிவானார்கள். ஏழு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் சர்வதேசத் தொடரை, ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 4 க்கு 2 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றிக்கொண்டது.

தடுமாறும் தவான்; இந்திய அணியில் மாற்றம் வருமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஷிகர் தவான், அண்மைய நாட்களில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து தடுமாறிவருகிறார். ஓட்டங்களைப் பெறுவதில் இவர் எதிர்நோக்கும் சிக்கல், அணிக்கும் பெரிய பிரச்சினையைத் தோற்றுவித்துவருகிறது. 

தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாக வேண்டுமானால் அடுத்து இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றேயாகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இப்படியானதொரு அழுத்தத்துக்குள் தவானின் துடுப்பாட்டத் தடுமாற்றம் இந்திய அணியின் மனோ திடத்தைப் பாதிப்பதாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான கவாஸ்கர், 'தவானுடைய துடுப்பாட்ட நுட்பத்தில் குறைபாடு காணப்படுகிறது. பந்துகளை எதிர்கொள்ளும்போதான அவரது அமைவும், நகர்வும் திருத்தத்துக்கு உட்படுத்தப்படவேண்டியவையாக உள்ளன. இதுவே அவரது தடுமாற்றத்துக்கும், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதற்குமான காரணமாக உள்ளது. இதேபோன்ற பிரச்சினை முரளி விஜய்க்கும் இருந்தது. ஆனால், அதனை அவர் விரைவாகச் சரிசெய்துகொண்டுவிட்டார். அதனால்தான் அவரால் இங்கிலாந்துக்கு எதிராகவும், அவுஸ்திரேலியாவிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாட முடிந்தது' என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது தவான் காயத்துக்கு உள்ளாகி அவுட்டாகாமலே வெளியேற நேர்ந்தது. பின்னர், அணி தோல்வியை நோக்கி நகர்ந்தபோது மீண்டும் துடுப்பெடுத்தாட வரவும் நேரிட்டிருந்தது. அந்தக் காயம் அவரது அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் தன்னம்பிக்கையைப் பாதித்திருக்கிறதா? என்ற கேள்வியும் பல தரப்பினரால் எழுப்பப்படுகிறது. 'அவரது காயத்தைக் காரணமாக்கி, உலகக்கிண்ணத் தொடருக்கான அணியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முரளி விஜய்யை உள்வாங்க வேண்டும்' என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. 

ஆனால், அணித்தலைவர் டோனியினால் இந்தக் கருத்து, 'நகைச்சுவையானது' என்று நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 

'தவான் அணியில் முக்கியமானதொரு வீரர். நம்பிக்கையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். ஒவ்வொரு போட்டியினதும் பெறுபேறுகளைக் கொண்டு வீரர்களை மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு போட்டிக்குமே வேறு வேறு அணிகளைத்தான் தெரிவுசெய்யவேண்டியிருக்கும். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள அணிக்கெதிராக விளையாடிக்கொண்டிருக்கிறோம். அதுவும், அவர்களுக்கு சாதகமான, நன்கு பரிச்சயமான ஆடுகளங்களில். அப்படிப் பார்க்கும்போது எமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களின் பெறுபேறுகள் திருப்திதரக்கூடிய அளவிலேயே உள்ளன. சில தடுமாற்றங்களிலிருந்து மீண்டுவர போதுமான கால அவகாசம் வழங்கப்படவேண்டியது முக்கியமானது' என்கிறார் டோனி.

கடந்த வருடத்தில் நியூசிலாந்துடனான தொடரில் ஆரம்பித்துப் பார்த்தால் மெல்பேர்ணில் தவான் பெற்ற ஒற்றை இலக்க ஓட்டமானது, கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் அவர் பெற்ற மூன்றாவது ஒற்றை இலக்க ஓட்டம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 

2014ஆம் ஆண்டில், திலகரட்ன டில்ஷான், ஹசிம் அம்லா ஆகியோர் மாத்திரமே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக தவானை விட அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாக உள்ளனர்.

தவான் விளையாடிய இன்னிங்ஸ்களைவிட டில்ஷான் ஏழு இன்னிங்ஸ்கள் அதிகமாக விளையாடியிருக்கும் அதேவேளை, தவானுக்கு சமமான எண்ணிக்கையான இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா, 892 ஓட்டங்களை 80.57 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில் பெற்றிருக்கிறார். தவான், தனது 815 ஓட்டங்களைப் பெற்றதோ 86.51 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில். 

தவானது கடந்த கிரிக்கெட் பருவகாலத்திலான 18 ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்னிங்ஸ்களில் தலா நான்கு போட்டிகள் நியூசிலாந்திலும் இங்கிலாந்திலும் விளையாடப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே, சில வாரங்களுக்கு முன்வரை இந்திய அணிக்கு அதிரடி ஆரம்பத்தை தந்துகொண்டிருந்த தவானுடைய தற்போதைய துடுப்பாட்டத் தடுமாற்றம் அவரை அணியிலிருந்து தூக்குவதற்கான வாய்ப்பை வழங்கிவிடுமா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே அணித்தலைவர் டோனியின் பதிலாக இருக்கிறது. அதேநேரம், தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களுக்கு இலகுவாக ஆட்டமிழந்துவிடுவது, தவானின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, அடுத்து நடக்கவிருக்கும் இறுதி லீக் போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியிலிருந்து தவானுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது. 

இது, அவருக்கு தன்னை எடைபோட்டுப் பார்க்கவும், சீர்படுத்திக்கொள்ளவும் கால அவகாசத்தை வழங்கக்கூடும். 

உடல் உபாதையிலிருந்து குணமாகிவிட்டார் என்று கருதப்படும் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடத் தயாராகிவிட்டால் தவானுக்கான ஓய்வு கிடைக்கக்கூடும். அல்லது மத்திய வரிசையில் அவரைத் துடுப்பெடுத்தாடச் செய்யும் எண்ணம் டோனிக்கு எழக்கூடும். தொக்கி நிற்கும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள 30ஆம் திகதிவரை நாம் காத்திருக்கவேண்டியிருக்கும்.

பந்துவீச லசித் மாலிங்க ஆரம்பித்துவிட்டார்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் பந்து வீச ஆரம்பித்துள்ளார். காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட லசித் மாலிங்க கடந்த 4 மாதங்களாக பந்துவீசவில்லை. இந்த நிலையில் அவருடைய உபாதை குணமடைந்துள்ள நிலையில் மீண்டும் பந்துவீச ஆரம்பித்துள்ளார். 

24ஆம் திகதி முதல் அவர் பந்துவீச ஆரம்பித்துள்ளார். முதல் நாளில் 30 பந்துகளை அவர் வீசியுள்ளார். அதன் போது எந்த சிரமங்களையும் அவர் எதிர்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர் பந்துவீச்சை அதிகரித்து முழுமையாக தயாராகிவிடுவார் என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழுத்தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் உலகக்கிண்ண தயார்படுத்தல் திருப்தியில்லை: ஜெயசூரியா

நியூசிலாந்தில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் விதம் தனக்கு திருப்தியில்லை என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். நான்காவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி விளையாடும் விதமும், உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலும் போதுமானதாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றம் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும். இந்த தொடரில் ஒரே நல்ல விடயம் உலகக்கிண்ண தொடரின் முதற் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி விளையாடுகின்றது. அத்துடன் உலகக்கிண்ணம் நடைபெறும் ஒரு நாடான நியூசிலாந்தில் 2 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது. 

பந்துவீச்சு பிரச்சினையாக உள்ளது. அழுத்தத்தை எதிரணி உடைத்து ஓட்டங்களை பெற்றுக் கொள்கின்றது. பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். லசித் மாலிங்க இல்லாமை பின்னடைவே. நுவான் குலசேகர, சுரங்க லக்மால் ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் உள்ளது எனவும் சனத் ஜெயசூரியா மேலும் தெரிவித்துள்ளார்.