Category Archives: News

ஆறு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
266 ஓட்டங்களை இலக்காக கொண்டு இங்கிலாந்தை விரட்டிய இலங்கை, 49.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கனியை சுவைத்தது.
 
இங்கிலாந்து அணி சார்பாக டெய்லர் 90 ஓட்டங்களையும் மோர்கன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார 96 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இன்றைய வெற்றியுடன் 7 ஓருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 3க்கு 1 என்ற நிலையில் இலங்கை முன்னணி வகிக்கின்றது.

பெப்ஸி ஐ.பி.எல். 2015: திகதிகள் அறிவிப்பு

எதிர்வரும் 2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பெப்ஸி இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகி மே மாதம் 24ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 

கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் 47 நாட்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அடுத்த வருடம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஒவர்கள் உலகக்கிண்ண போட்டிகள் நிறைவடைந்து 9 நாட்களில் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

2015 ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதிகளை உறுதிப்படுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர், சஞ்சே பட்டேல் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். போட்டிகளின் திகதிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் 2016ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஏப்ரல் 8 முதல் மே 29 வரையும், 2017ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஏப்ரல் 5 முதல் மே 21 வரையும் நடைபெறவுள்ளன.

இதேவேளை அடுத்த வருட ஐ.பி.எல் தொடருக்கான முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது. 

கடந்தமாதம் ஆரம்பமாகிய இப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான காலப்பகுதியில் இதுவரை இரண்டு பரிமாற்றல் செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. 

இதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உன்முகுந் சன்த்தையும் மற்றும் நடப்பு சாம்பியன் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர்.வினய் குமாரையும் மும்பாய் இந்தியன் அணிக்கு பரிமாற்று அடிப்படையில் வழங்கியுள்ளன.

இதேவேளை மும்பை இந்தியன்ஸ் மைக்கல் ஹசி மற்றும் பிரவீன் குமாரை தமது அணியிலிருந்து விடுவித்துள்ளதுடன் இதன்படி இவர்கள் இருவரும் போட்டிக்கு முன்னரான ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தகுதியுடைவர்களாகியுள்ளனர்.

ஹசி (39), இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லையென்பதுடன் மொத்தமாக 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

மேலும் ‘ஒபோ செம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 2014’ தொடருக்கான தகுதிகான் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் ஹசி விளையாடிருந்தார்.

இதில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியுடனான போட்டியில் 40 பந்துகளில் 60 ஓட்டங்களை ஹசி பெற்றிருந்தார். மேலும் தகுதிகான் போட்டிகளில் இப்போட்டியில் மாத்திரமே மும்பை அணி வெற்றிபெற்றிருந்தது. 

இதேவேளை அடிக்கடி உபாதைகளுக்குள்ளாகிய பிரவீன், 2014 ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக 3 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார். 

மேலும் பிரவீன் CLT20 2014 தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்த நிலையில் தோற்பட்டையில் காயமடைந்தமையால் அவர் தொடரில் இருந்து விலகிக்கொண்டார். 

சந்த், 2014 ஐ.பி.எல். தொடர்பில் ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடிய போதிலும் சிறப்பான ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளார். இந்திய ஏ அணிக்காக விளையாடிய சந்த், அவுஸ்திரேயாவில் நடைபெற்ற போட்டிகளிலும் உள்நாட்டில் நடைபெற்ற மேற்கிந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வினய், 2014 ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. அவர் 9 போட்டிகளில் விளையாடி ஓவருக்கு 8.78 என்ற வீதத்தில் ஓட்டங்களை வழங்கியிருந்ததுடன் 7 விக்கெட்டுக்களை மாத்திரமே வீழ்த்தியிருந்தார்.

13,000 ஒ.நா.ச.போட்டி ஓட்டங்களைப் பெற்றார் சங்கா

தற்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் 13,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற மைல் கல்லை இலங்கை அணியின் குமார் சங்ககார பெற்றார். இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்ககார – 13,000 ஓட்டங்களை தாண்டி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். 
 
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கார் முதலில் 13,000 ஓட்டங்களை கடந்த அதேவேளை கூடுதலான 18,426 ஓட்டங்களைப் பெற்று கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். 13,704 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் இரண்டாமிடத்தையும், 13,430 ஓட்டங்களைப் பெற்று சனத் ஜெயசூரியா மூன்றாமிடத்திலும் உள்ளனர். மீதமுள்ள போட்டிகளின் படி குமார் சங்ககார கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் இரண்டாம் இடம் வரையும் முன்னேறும் வாய்ப்புக்கள் உள்ளன. உலகக்கிண்ண முதற் சுற்றுப் போட்டிகள் அடங்கலாக இலங்கை அணி இன்னமும் 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இங்கிலாலாந்து அணிக்கு வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்று வரும் 7 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.
 
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 63 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 62 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக க்றிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும், க்றிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் நான்காவது ஓவரின் போது மழை குறுக்கிட்டமையினால் போட்டி 35 ஓவர்களுக்கு மாட்டுப்படுத்தப்பட்டது. இதன் படி 35 ஓவர்களில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் சிறந்த ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமானது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியது. 84 ஓட்டங்களை 40.3 ஓவர்களில் இருவரும் இணைந்து பெற்றனர். இதில் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும், ஜோ ரூட் 48 ஓட்டங்களையும் பெற்றனர். மூயேன் அலி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜோஸ் பட்லர் போட்டியின் நாயகனாக தெரிவானார். 
 
இந்த தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.