All posts by Gopikrishna Kanagalingam

தென்னாபிரிக்காவுக்கெதிராக இந்தியா முழு ஆதிக்கம்

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல்நாள் முடிவில், இந்திய அணி முழுமையாக ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.


பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.


ஆரம்பத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி சார்பாக, தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏபி டி வில்லியர்ஸ் மாத்திரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏபி டி வில்லியர்ஸ் 105 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, டீல் எல்கர் 38 ஓட்டங்களையும் மோர்னி மோர்க்கல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரொன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, இன்றைய நாள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று, முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.


துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் முரளி விஜய் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.


இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா அதிரடி ஆரம்பம்

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 

 

பேர்த்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோர்னர் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஜோ பேர்ண்ஸ் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, டேவிட் வோர்னர் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 

 

118 பந்துகளில் சதத்தினைக் கடந்த அவர், 236 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் பெற்றார். 

 

இரண்டாவது விக்கெட்டுக்காக அவரோடு ஜோடி சேர்ந்த உஸ்மான் க்வாஜா 121 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட்களிலும் சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேவிட் வோர்னர் 244 ஓட்டங்களுடனும் ஸ்டீபன் ஸ்மித் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்தியாவுக்கு அதிரடி வெற்றி

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணிக்கு அதிரடி வெற்றி கிடைத்துள்ளது.


மொகாலியில் இடம்பெற்றுவந்த இப்போட்டியில், 3ஆவது நாளிலேயே போட்டி முடிவு கிடைத்துள்ளது.
218 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 39.5 ஓவர்கள் மாத்திரமே நிலைத்து, 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


10 ஓட்டங்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களுடன் காணப்பட்டது. அதன் பின்னர், 7ஆவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அடுத்த 4 விக்கெட்டுகளும் 7 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.


துடுப்பாட்டத்தில், ஸ்டியான் வான் ஸைல் 36 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, இன்னும் 3 வீரர்கள் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கும் அதிகமாகப் பெற்றனர்.


பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் இரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா, வருண் ஆரொன் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


முன்னதாக, 2 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, 200 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 8 விக்கெட்டுகளையும் 39 ஓட்டங்களுக்கு இழந்தது.


துடுப்பாட்டத்தில், செற்றேஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் முரளி விஜய் 47 ஓட்டங்களையும் விராத் கோலி 29 ஓட்டங்களையும் ரிதிமான் சகா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில்,இம்ரான் தாஹிர், சைமன் ஹாமர் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் வேர்ணன் பிலாந்தர், ஸ்டியான் வான் ஸைல் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி, முரளி விஜயின் 75 ஓட்டங்களுடன் 201 ஓட்டங்களைப் பெற, தென்னாபிரிக்க அணி தனது முதல் இனிங்ஸில், ஏபி டி வில்லியர்ஸின் 63 ஓட்டங்களின் துணையோடு 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


இப்போட்டியின் நாயகனாக, ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.

டிசெம்பர் 3இல் கிரிக்கெட் சபைத் தேர்தல்

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்கள், டிசெம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.


இதன்படி, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகசபைக்குப் பதிலாக, ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கிரிக்கெட் சபை உருவாகவுள்ளது.


இடைக்கால நிர்வாகசபை உருவாக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் விமர்சனங்களுக்கு உள்ளாகிய இலங்கை, சிறிது காலத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் நிதி உதவிகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்கரின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.


மொஹாலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி, ஓட்டமெதனையும் பெறாமல் முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன. இறுதியில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.


முரளி விஜய் 75, ரவீந்திர ஜடேஜா 38, செற்றேஸ்வர் புஜாரா 31 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், டீன் எல்கர் 4, இம்ரான் தாஹிர் 2, வேர்ணன் பிலாந்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


பதிலளித்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய நாள் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டீல் எல்கரும் ஹஷிம் அம்லாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் காணப்படுகின்றனர்.


வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளை அஷ்வினும் ஜடேஜாவும் வீழ்த்தினர்.

பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும்

பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘மடிவதாக”வும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, ஹர்ஜபனும் அஷ்வினும் சட்டரீதியற்ற பந்துவீச்சு முறைகளோடு வருடக்கணக்காகப் பந்துவீசிக் கொண்டிருக்க, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உடனேயே, பிலால் ஆசிப் மீது அக்குற்றச்சாட்டு விதிக்கப்படுவதாகவும் அஜ்மல் தெரிவித்திருக்கிறார். (இதில், பிலால் ஆசிப்-இன் பந்துவீச்சு, தவறானதல்ல எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)


உலகின் முன்னணி பந்துவீச்சாளராகவும் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகவும் இருந்துவிட்டு, திடீரென பந்தை வீசியெறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட, பாகிஸ்தான் அணியிலல்ல, பாகிஸ்தான் குழாமிலேயே இடம் கிடைக்க முடியாமல் போன ஒருவரது, இயலாமையால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இல்லாவிடின், பொறாமையால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என, அஜ்மலின் கருத்துக்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக முடியும். உண்மையிலேயே, அவரது கருத்தில் இயலாமையும் பொறாமையும் கலந்திருந்தன என்பது, ஓரளவு தெளிவானது.


திடீரென திரையிலிருந்து காணாமல் போகச் செய்யப்பட்ட திரை நட்சத்திரங்களும், இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதைக் கண்டிருக்கிறோம். அதிகளவிலான புகழுடன் இருந்துவிட்டு, திடீரென எல்லாவற்றையும் இழப்பதென்பது, இலகுவானதல்ல.
ஆனாலும் கூட, அவ்வாறானவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் காணப்படும் உண்மைத் தன்மைகளை ஆராயாமல் விட்டுவிடவும் முடியாது.


அஜ்மல் தெரிவித்த கருத்துக்களில் இருக்கும் தவறுகளை நேரடியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அவர் இலக்கு வைக்கப்பட்டார் என்பது தவறானது. அனுமதிக்கப்பட்ட 15 பாகை முழங்கை மீட்சி அளவுக்குப் பதில், அவரது முழங்கை மீட்சி அளவு, 40 பாகைக்கும் அதிகமாகக் காணப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அந்தளவு அதிகமான அளவைக் கொண்டிருந்துவிட்டு, தன் மீது இலக்கு வைக்கப்பட்டது என்பது சிறிது சிறுபிள்ளைத்தனமானது என்றே கூறப்பட முடியும்.


அத்தோடு, ஒரு சர்வதேச வீரராக, பந்தை எறிவதில் இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, முழங்கை ‘மடிவு” அல்ல, முழங்கையின் ‘நீட்சி அல்லது மீட்சி” தான் கணக்கிலெடுக்கப்படுவது என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் தவறானது.


ஹர்பஜன் சிங், பந்தை எறிகிறாரா என்றால், அதற்கான பதில் இலகுவானதல்ல. ஆகவே, அது தொடர்பில் உறுதியான பதிலெதனையும் கூற முடியாது. ஆனால், அஜ்மலின் கருத்துக் கொண்டிருந்த உட்கருத்தை ஆராய்வது முக்கியமானது. அண்மைக்காலமாக பந்தை எறியும் பந்துவீச்சாளர்கள் மீது, அதிகளவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள் மாத்திரம் அதிலிருந்து தப்பியுள்ளமைக்கான காரணங்கள் விளக்கப்பட வேண்டும்.


ஹர்பஜன் சிங் மீது, முன்பிருந்தே சந்தேகங்கள் காணப்பட்டன. இரவிச்சந்திரன் அஷ்வின் மீது முன்பு காணப்பட்டது. பிரக்ஜான் ஓஜா மீது காணப்பட்டது. அம்பத்தி ராயுடு மீது காணப்படுகின்றது. இதில், ஒருவர் மீது கூட சர்வதேசப் போட்டிகளில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதில்லை. பிரக்ஜான் ஓஜா மீது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உள்ளக செயற்குழுவொன்றே முறைப்பாட்டை மேற்கொண்டு அவரது பந்துவீச்சைத் திருத்தியது. உள்ளகச் செயற்குழுக்களால் அவரது பந்துவீச்சில் தவறைக் கண்டுபிடிக்க முடியுமெனில், சர்வதேச நடுவர்களால் அதைச் செய்ய முடியாது போனது ஏன் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?


மிக மோசமான பந்துவீசும் பாணியைக் கொண்டுள்ள அம்பத்தி ராயுடு, இதுவரையிலும் போட்டி மத்தியஸ்தர்களால் முறைப்பாட்டுக்கு உள்ளானதில்லை. ஹர்பஜன் மீது அண்மைக்காலத்தில் முறைப்பாடு உருவானதில்லை.


இவர்களெல்லோரும் பந்தை வீசியெறிகிறார்கள் என்பது இதன் கருத்தல்ல. பந்துவீச்சுச் சோதனையின் போது, அவர்களின் பந்துவீச்சென்பது, விதிகளுக்கு உட்பட்டதாக மாறலாம். இது, வீரர்களின் நேர்மையையோ அல்லது திறனையும் கேள்விக்குட்படுத்துவது கிடையாது. மாறாக, சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியைக் கொண்டுள்ளவர்கள் மீது, இதுவரையிலும் என்ன காரணத்துக்காக முறைப்பாடு மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், நடுவர்களும் போட்டி மத்தியஸ்தர்களும், வெறுங்கண்ணால் காண்பதை வைத்துத் தான் முறைப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். முத்தையா முரளிதரன், சச்சித்திர சேனநாயக்க, சயீட் அஜ்மல், தரிந்து கௌஷால், சுனில் நரைன், மொஹமட் ஹபீஸ், கேன் வில்லியம்ஸன், மார்லன் சாமுவேல்ஸ், ஷேன் என, முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட அனைவரினதும் பந்துவீச்சு முறைகளும், வெறுங்கண்ணுக்கு, சந்தேகத்துக்குரியனவாகவே காணப்பட்டன. இதில், முரளிதரனின் பந்துவீச்சில் தவறு காணப்பட்டிருக்கவில்லை, தரிந்து கௌஷாலின் தூஸ்ரா மாத்திரம் சில பாகைகளால் தவறாக அமைந்தது. ஆக, வெறுங்கண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, பிரக்ஜான் ஓஜா ஆகியோர் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாமைக்கு, உலக கிரிக்கெட்டை முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் அணிக்காக விளையாடுவதா காரணம் என்ற வினா எழுகிறது.


சர்வதேச கிரிக்கெட் சபையினை இந்தியா உள்ளிட்ட ‘பெரிய” நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, சிறிய நாடுகளை ஒதுக்க முற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற நிலையில், கிரிக்கெட் விடயங்களிலும் அவ்வாறான ஆதிக்கம் காணப்படுமாயின், கிரிக்கெட்டிலிருந்து இரசிகர்களை தூர விலக்கவே உதவும் என்பது யதார்த்தம்.

இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.


3 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களுடன் நேற்றைய 5ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, சிறப்பாகப் போராடிய போதிலும், இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்று, 178 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 71 ஓட்டங்களையும் அடில் றஷீத் 172 பந்துகள் போராடி 61 ஓட்டங்களையும் இயன் பெல் 46 ஓட்டங்களையும் பெற்றனர். 10ஆம் இலக்க வீரர் மார்க் வூட், 95 பந்துகள் போராடி 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


பந்துவீச்சில், யாசீர் ஷா 4, சுல்பிகர் பாபர் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களையும் பெற்றதோடு, பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தி, இங்கிலாந்துக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியில் வெற்றிபெற்று, தென்னாபிரிக்க அணி அத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.


மும்பையில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களைக் குவித்தது. ஒ.நா.ச.போட்டிகளில் பெறப்பட்ட 3ஆவது அதிகூடிய ஓட்டங்கள் இவையென்பதோடு, 2ஆவது, 3ஆவது (2 தடவைகள்) அதிகூடிய ஓட்டங்களை தென்னாபிரிக்காவே கொண்டுள்ளது.


துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஃபப் டு பிளெஸிஸ் 133 (காயம் காரணமாக வெளியேற்றம். 115 பந்துகள்), ஏபி.டி. வில்லியர்ஸ் 119 (61), குயின்டன் டீ கொக் 109 (87) ஓட்டங்களைப் பெற்றனர்.


பந்துவீச்சில், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மோகித் சர்மா, புவனேஷ்வர் குமார் நால்வரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில் புவனேஷ்வர் குமார், 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.


பதிலளித்தாடிய இந்தியா, 35.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 214 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இது, ஒ.நா.ச போட்டிகளில் இந்தியா பெற்றுக் கொண்ட 2ஆவது மிகப்பெரிய தோல்வியாகும்.


துடுப்பாட்டத்தில் அஜின்கியா ரஹானே 87 (58), ஷீகர் தவான் 60 (59) தவிர ஏனையோர் ஏமாற்றமளித்தனர்.
பந்துவீச்சில், கஜிஸ்கோ ரபடா 4, டேல் ஸ்டெய்ன் 3, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


இவ்வெற்றியுடன், இத்தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்தியாவில் வைத்து அவ்வணி கைப்பற்றும் முதலாவது ஒ.நா.ச.போட்டித் தொடர் இதுவாகும்.


இப்போட்டியின் நாயகனாக குயின்டன் டீ கொக்கும் தொடரின் நாயகனாகவும் ஏ.பி.டி. வில்லியர்ஸும் தெரிவாகினர்.


இப்போட்டியில் வைத்து, வேகமான 6,000 ஒ.நா.ச.போட்டி ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை, தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லா படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெஸ்லிக்கு இனிங்ஸ் வெற்றி

பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான போட்டிகளில், வெஸ்லி கல்லூரி அணி வெற்றிபெற்றது.

 

கரதெனிய மத்திய கல்லூரிக்கு எதிரான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணி, 249 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் ஷமொட் அத்துலத்முதலி 69 ஓட்டங்களையும் ஸெனித் விக்கிரமநாயக்க 61 ஓட்டங்களையும் திலின பெரேரா 49 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில், திலும் சுதீர 3 விக்கெட்டுகளையும் உபேந்திரா சுபசிங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கரதெனிய மத்திய கல்லூரி அணி, 49 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.


பந்துவீச்சில், வெஸ்லியின் அன்ட்ரூ பரயஸ், மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்த அவர், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட கரதெனிய மத்திய கல்லூரி அணி, 114 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஓய்வுபெற்றார் விரேந்தர் செவாக்

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். துபாயில் இடம்பெறவுள்ள மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்காகவே அவர் ஓய்வுபெறவுள்ளார்.


சர்வதேசப் போட்டிகள் தவிர, இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் மாத்திரம் தெரிவுசெய்யப்படுவார்கள் என்ற விதி காணப்படுகின்றது.


அத்தொடரில் விளையாடவுள்ளதாகவும், அதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்த செவாக், அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று விடுத்தார்.


இந்தியா சார்பாக 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு போட்டியிலும் பங்குபற்றியிருக்காத செவாக், தனது கிரிக்கெட் வாழ்வு குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.


ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ள மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில், குமார் சங்கக்கார, அடம் கில்கிறிஸ்ட், பிரைன் லாரா, வசீம் அக்ரம், ஜக்ஸ் கலிஸ், மஹேல ஜெயவர்தன, சௌரவ் கங்குலி, மைக்கல் வோண், கிரேம் ஸ்மித் விரேந்தர் செவாக் ஆகிய முக்கிய வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.