3ஆவது போட்டியை வெல்ல முயல்வோம்: மத்தியூஸ்

 

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து, இத்தொடரை இழந்துள்ள போதிலும், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், உயர்வான மனநிலையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

 

முதலாவது போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி, 2ஆவது போட்டியின் முதல் இனிங்ஸில் இங்கிலாந்து பெற்ற 498 ஓட்டங்களுக்குப் பதிலளித்து, 101 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, டினேஷ் சந்திமாலின் 126, அஞ்சலோ மத்தியூஸின் 80, ரங்கன ஹேரத்தின் 61, கௌஷால் சில்வாவின் 60 ஓட்டங்களின் துணையோடு, 475 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி, வெற்றியிலக்கான 79 ஓட்டங்களை, ஒரு விக்கெட்டை இழந்து அடைந்திருந்தது.

 

இப்போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தாலும், முதலாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி, இப்போட்டியின் முதல் இனிங்ஸில் காணப்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, அவ்வணி மீளப் போராடிய விதம் ஆகியன, பாராட்டைப் பெற்றிருந்தன.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மத்தியூஸ், 'முதல் இனிங்ஸின் பின்னர், அணிக்குள் போராட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து நாம் கதைத்தோம். இரண்டாவது இனிங்ஸில், ஏராளமான மீளும் தன்மையை வெளிப்படுத்தினோம். முழு துடுப்பாட்டப் பிரிவாலும், அது சிறப்பான பெறுபேறாகும்" எனத் தெரிவித்தார்.

 

இலங்கை அணி, போட்டிகளில் தோற்றாலும், அவற்றில் போராடியே தோற்றும் வழக்கத்தைக் கொண்ட அணி என்ற பெருமையைக் கொண்டிருந்தாலும், முதலாவது போட்டியில் போராட்டமே இல்லாமல் தோல்வியடைந்திருந்ததோடு, இரண்டாவது போட்டியின் முதல் இனிங்ஸிலும் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது. இதன்படி, இத்தொடரில் அவ்வணி முதலில் துடுப்பெடுத்தாடிய 3 இனிங்ஸ்களிலும் போராட்டத்தை வெளிப்படுத்தாது, 150 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெறாமை குறித்துக் கலந்துரையாடியதாகவும், இலங்கையின் போராட்டக் குணத்தை மீளக் கொண்டுவருவது குறித்துக் கலந்துரையாடியதாகவும், மத்தியூஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்து, இத்தொடரை இலங்கை தோற்றுள்ள நிலையில், 3ஆவது போட்டி தொடர்பாக, இங்கிலாந்துக்கு அவர் எச்சரிக்கையை வழங்கினார்.

 

'இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. நாங்கள் தொடரை ஏற்கெனவே இழந்துள்ளோம். எனவே, நாம் சாதாரணமாகச் சென்று, (மூன்றாவது) போட்டியை வெல்ல முயல வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில், இலங்கையின் ரங்கன ஹேரத்தின் 300 விக்கெட்டுகள், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சனின் 450 விக்கெட்டுகள், அலஸ்டெயர் குக்கின் 10,000 ஓட்டங்கள் ஆகிய மைல்கல்கள் அடையப்பட்டிருந்த நிலையில், அம்மூவருக்கும் தனது வாழ்த்துகளையும், அஞ்சலோ மத்தியூஸ் வெளிப்படுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>