ஐ.சி.சியின் நம்பிக்கை: ‘உலக இருபதுக்கு- 20 2018இல் மீளவரும்’

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) சிரேஷ்ட புள்ளிகள், ஸ்டார் ஸ்போர்ட்ஸை இன்று வியாழக்கிழமை (26) சந்தித்திருந்தபோது, உலக இருபதுக்கு- 20 2018இல் மீள வருவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையின் மேலுமொரு படியை ஐ.சி.சி எடுத்து வைத்திருந்தது.

 

2018ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20ஐ நடாத்துவதற்கு முன்னுரிமையான தெரிவாக தென்னாபிரிக்கா காணப்படுவதாக நம்பப்படுகிறது. இதனால், வெள்ளையினத்தவர்கள் அல்லாதவர்களை 60 சதவீதம் அணியில் இணைக்க வேண்டும் போன்ற தென்னாபிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஒரு வருடத்துக்கு உலக நிகழ்வுகளை நடாத்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விதித்த தடையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

 

உலக இருபதுக்கு- 20ஐ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்த வேண்டும் என யோசனைக்கு அனைத்து ஐ.சி.சி அங்கத்துவ நாடுகளும் துணை நின்றாலும், தற்போதுள்ள உரிம வட்டத்திலுள்ள 2020ஆம் ஆண்டு தொடருக்கு மேலதிகமாக, இரண்டு, உலக இருபதுக்கு- 20 தொடர்களை 2018, 2022இல் வாங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயாராக இருக்கின்றதா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.

 

எனினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸூடன் இணக்கம் ஏற்படும் என்றே ஐ,சி.சி எதிர்பார்க்கிறது. ஏனெனில் இவ்வருடம உலக இருபதுக்கு- 20 தொடரில், இந்தியாவின் அரையிறுதிப் போட்டியையும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான போட்டிகளையும் 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பார்வையிட்டிருந்தனர். தவிர, உலகளாவிய ரீதியில் போட்டிகளின் காணொகள், உலகளாவிய ரீதியில் 750 மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போட்டிகளின் காணொளிகள் 250 மில்லியன் தடவைகளே பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இணக்கம் ஏற்பட்டால், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐ.சி.சியின் வருடாந்த மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 2018, 2022 உலக இருபதுக்கு- 20 தொடர்களானது, சம்பியன்ஸ் லீக்குக்காக முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாத ஆரம்பத்திலுள்ள மூன்று வார இடைவெளியில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

 

தென்னாபிரிக்கா போன்று ஐக்கிய அரபு அமீரகமும் தொடரை நடாத்தக்கூடிய இன்னொரு இடமாகக் கருதப்படுகிறது ஏனெனில் அதன் நேர வலயம் இந்தியாவுக்கு நன்றாக ஒத்துப்போவதுடன் காலநிலையும் மேற்குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பாக இருக்கும்.

 

இதேவேளை, சுப்பர்- 10இல் மேலதிகமாக இரண்டு அணிகளை உள்ளடக்குவது தொடர்பிலும் ஐ.சி.சி ஆராய்கிறது. இதன் காரணமாக இவ்வருட உலக இருபதுக்கு- 20 இல் துணை அங்கத்துவ நாடுகளின் சுப்பர்- 10இல் தாம் வெளியேற்றப்பட்டோம் என்ற முறைப்பாட்டை ஓரளவு அணுகலாம் என்று ஐ.சி.சி எதிர்பார்க்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>