‘தலைமை தாங்கத் தயார்’

3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாக, தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி தெரிவித்துள்ளார்.

 

தென்னாபிரிக்க டெஸ்ட், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் அணித்தலைவராக, ஃபப் டு பிளெஸி செயற்பட்டு வருகிறார்.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ், அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பதவியை வகிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக, ஃபப் டு பிளெஸி கருதப்படுகிறார்.

 

இந்நிலையிலேயே, 3 வகையான போட்டிகளிலும் தலைவராகச் செயற்படத் தயாராக இருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

அத்தோடு, தலைவராகச் செயற்படும் போது, தனது உச்சபட்ச திறமை வெளிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘திட்டப்படி எதுவும் நடக்கவில்லை’

இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தாங்கள் வகுத்த திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என, அப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட சாமர கப்புகெதர தெரிவித்துள்ளார்.

 

பல்லேகெலவில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. லஹிரு திரிமான்ன மாத்திரம் போராடி, 80 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியாவின் பும்ரா, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இந்திய அணி பதிலளித்தாடும் போது, 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களுடன் சிறிதளவு தடுமாறிய போதிலும், றோகித் ஷர்மாவின் சதம், மகேந்திரசிங் டோணியின் அரைச்சதம் ஆகியவற்றின் உதவியுடன், 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

தோல்வி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கப்புகெதர, “எங்கள் திட்டங்களுக்கேற்ப விடயங்கள் நடக்கவில்லை. மத்திய ஓவர்களில், ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை அதிகம் விளையாடாமலிருக்கத் திட்டமிட்டோம். ஆனால், சரிவர நடக்கவில்லை. 260 தொடக்கம் 275 வரையான ஓட்டங்கள், சவால்மிக்க ஓட்டங்களாக அமைந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

 

வழக்கமான தலைவர் உபுல் தரங்கவுக்கு விதிக்கப்பட்ட 2 போட்டித் தடையைத் தொடர்ந்து, இந்தப் போட்டியில், முதன்முறையாக அணித்தலைமைப் பொறுப்பை ஏற்ற கப்புகெதர, தலைமைத்துவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, “அணித்தலைமையை மகிழ்வாக உணர்ந்தேன். அழுத்தமாக இருந்தது, ஆனால் அதை நான் மகிழ்வுடன் அனுபவித்தேன். அடுத்த போட்டியில், நாங்கள் வெற்றிபெற முடியுமென நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

ஏற்கெனவே, உபுல் தரங்க இல்லாமலுள்ள இலங்கை அணி, டெஸ்ட் அணியின் தலைவர் டினேஷ் சந்திமால், இப்போட்டியில் விரல் முறிவுக்கு உள்ளாகி, இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுவதும் பங்குபற்ற முடியாமல் போனதைத் தொடர்ந்து, அதிகரித்த அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

 

ஆனால், 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில், அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த போட்டிகளில், புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான நிலையிலாவது, இலங்கை அணி, வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என, இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆதிக்கம் செலுத்துகிறது பங்களாதேஷ்

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 2ஆம் நாள் முடிவில், பங்களாதேஷ் அணி, தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

3 விக்கெட்டுகளை இழந்து 18 ஓட்டங்களுடன்,  2ஆவது நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

 

ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், பின்வரிசை வீரர்களின் பொறுப்பான விளையாட்டால், அவ்வணி, ஓரளவு போட்டித்தன்மையான ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் மற் றென்ஷோ 45, அஸ்டன் ஏகர் ஆட்டமிழக்காமல் 41, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் 33, பற் கமின்ஸ் 25, கிளென் மக்ஸ்வெல் 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், தனது 16ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்த ஷகிப் அல் ஹஸன், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், டெஸ்ட் விளையாடும் ஏனைய 9 நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட் பெறுதிகளைக் கைப்பற்றிய 4ஆவது வீரர் என்ற பெருமையை, அவர் பெற்றார்.
தவிர, மெஹெடி ஹஸன் மிராஸ், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

முதலாவது இனிங்ஸில் 260 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றிருந்த நிலையில், 43 ஓட்டங்களால் முன்னிலை வகித்துக் காணப்பட்டு, 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.

 

நேற்றைய நாள் முடிவில் அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 45 ஓட்டங்களுடன் காணப்படுகிறது. இதன்படி, 88 ஓட்டங்களால் அவ்வணி முன்னிலை வகிக்கிறது.
துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால், ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடன் காணப்படுகிறார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, அஸ்டன் ஏகர் கைப்பற்றினார்.

நியூசிலாந்தின் முதல் பகல் – இரவு டெஸ்ட்

நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியை, ஈடன் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தப் போட்டி, அடுத்தாண்டு மார்ச் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

 

முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி, 2015ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற போது, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவ்வணி விளையாடியிருந்தது. அதன் பின்னர், 5 பகல் – இரவு டெஸ்ட் போட்டிகள், இதுவரை இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கு மீண்டும் தோல்வி; தொடரை வசப்படுத்தியது இந்தியா

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரில் அசைக்க முடியாத 3-0 என்ற முன்னிலையைப் பெற்றுள்ளது.

 

கண்டி, பல்லேகெல மைதானத்தில், பகல் – இரவுப் போட்டியாக நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்த போதிலும், பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 80 (105), டினேஷ் சந்திமால் 36 (71), மிலிந்த சிறிவர்தன 29 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 10 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

218 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், றோகித் ஷர்மாவும் மகேந்திரசிங் டோணியும் இணைந்து, இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அவ்வணி, 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மைதானத்தை நோக்கி வெற்றுப் போத்தல்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்ட போட்டி, பின்னர் மீள ஆரம்பிக்கப்படாமல், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

 

துடுப்பாட்டத்தில் றோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 124 (143), மகேந்திரசிங் டோணி ஆட்டமிழக்காமல் 67 (86) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் அகில தனஞ்சய, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

போட்டியின் நாயகனாக, ஜஸ்பிரிட் பும்ரா தெரிவானார்.

 

இதேவேளை, இந்தப் போட்டியில் காயமடைந்த இலங்கையின் டினேஷ் சந்திமாலுக்கு, விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இத்தொடரில் அவர் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உமர் அக்மலுக்கு செயற்குழு வேண்டுமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உமர் அக்மல், தனக்கும் அணியின் பயிற்றுநர் மிக்கி ஆர்தருக்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு, செயற்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

 

பயிற்றுநருக்கு எதிராக, பகிரங்கமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட உமர் அக்மல், அதற்குப் பதிலளிக்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சிறந்த நற்பெயரைக் கொண்ட சிரேஷ்ட வீரர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு, இந்தச் செயற்குழு அமைக்கப்பட வேண்டுமெனக் கோரிய அவர், தன் மீது அவமானப்படுத்தும் கருத்துகளை மிக்கி ஆர்தர் வெளிப்படுத்தினாரா என்பதைக் கண்டறிய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

 

இந்தச் செயற்குழுவால், தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், மிக்கி ஆர்தரிடம் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், மாறாக, மிக்கி ஆர்தர் மேல் தவறு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுமாயின், அவரும் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

 

சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த உமர் அக்மல், போதிய உடற்றகுதியை வெளிப்படுத்தாமை காரணமாக, இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்.

 

இந்நிலையில், கடந்த வாரம் கருத்துத் தெரிவித்த அவர், பயிற்றுநர் மிக்கி ஆர்தர், தன் மீது மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாகவும், அதை அனைத்துப் பொதுமக்களுக்கும் இரசிகர்களுக்கும் வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அணித்தலைமையிலிருந்து விலகினார் டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவராகச் செயற்பட்ட ஏபி டி வில்லியர்ஸ், அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆனால், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் என, 3 வகையான போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், “இருபதுக்கு-20 அணிக்கும் டெஸ்ட் அணிக்கும், அதிசிறந்த அணித்தலைவராக, ஃபப் டு பிளெஸி தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் விரும்புகிறேன் என, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

 

“கடந்த 6 ஆண்டுகளாக, அணியின் தலைவராகப் பணியாற்றியமை, கௌரவமாக அமைந்தது. ஆனால், அணியின் தலைமைப் பொறுப்பை, இன்னொருவர் ஏற்பதற்கான நேரம் இது. யார் அணித்தலைவராக வந்தாலும், என்னுடைய முழுமையான ஆதரவு காணப்படும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதைத் தவிர்த்து வரும் டி வில்லியர்ஸ், தான் விரும்பிய போட்டிகளைத் தெரிவுசெய்து, விரும்பியவாறு பங்குபற்றி வருகிறார் என்ற விமர்சனம் காணப்படுகிறது. ஆனால், அந்த விமர்சனத்தை, அவர் மறுத்தார்.

 

“அது உண்மை கிடையாது. அது, எப்போதுமே உண்மையாக இருந்ததில்லை. தென்னாபிரிக்காவுக்காக விளையாடுவது, முன்னரும் இனியும் எப்போதும், என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

 

உள, உடல்ரீதியான களைப்பு, இளைய குடும்பத்தைக் கொண்டு நடத்துகின்றமை ஆகியவற்றின் காரணமாக, சர்வதேசப் போட்டிகளிலிருந்து தற்காலிக ஓய்வை எடுத்ததாகத் தெரிவித்த அவர், தற்போது, புத்துணர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

“அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டால், ஓட்டங்களையும் பிடிகளையும் என்னால் உத்தரவாதமளிக்க முடியாது. யாராலும் அது முடியாது. ஆனால், ஒவ்வொரு வகையான போட்டியிலும், என்னுடைய 100 சதவீதத்தை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக் கிரிக்கெட் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாகக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நேற்று (24) அறிவித்தார்.   

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, நேற்று மதியம் 2.30க்கு ஆரம்பித்த நிலையில், நேற்றுக் காலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியானது.  
தொடர்ச்சியாகக் கிடைக்கும் மோசமான தோல்விகள்,  நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்ற கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே, இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

 

“இந்த நிபுணர்கள் அனைவரையும் ஒரே மன்றத்தில் அமைந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் எதிர்பார்க்கிறேன். ஆழமான ஆராய்ச்சிகள் இன்றி, நிர்வாகிகள் மீதோ அல்லது வீரர்கள் மீதோ குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை.  

 

“குற்றத்தைச் சுமத்துவது எண்ணம் கிடையாது, மாறாக, பிரச்சினைகளைத் தீர்த்து, தேசிய அணியின் பின்னால் ஒன்றுசேர்வதே எண்ணமாகும்” என்று குறிப்பிட்டார்.  

 

எழுத்துமூலமான சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ள அவர், இதற்கான மன்றம், 2 வாரங்களுக்குள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தைக் கலைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அமைச்சர் ஜயசேகர நிராகரித்தார். இந்தக் கோரிக்கையை, உலகக் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நீண்டகாலமாகக் கோரி வருகிறார்.  

 

“நிர்வாகத்தில் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. அது, சர்வதேச கிரிக்கெட் சபையால் தனிமைப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

 

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம், கடந்த பல ஆண்டுகளாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபைகளாலேயே நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டில், ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான குழுவால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, வீரர்களின் உடற்றகுதியும் பிரச்சினையாக உள்ளதாக, அமைச்சர் ஜயசேகர தெரிவித்துள்ளார். இது, இலங்கை அணியின் மோசமான பெறுபேறுகளுக்குப் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

 

ஏற்கெனவே, இலங்கை வீரர்களின் உடற்றகுதி தொடர்பாகவும் அவர்களின் தொப்பை தொடர்பாகவும் அமைச்சர் தெரிவித்த கருத்து, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, மீண்டும் அதே கருத்தை, அவர் வெளியிட்டுள்ளார்.    

போராட்டத்தை வெளிப்படுத்துமா இலங்கை?

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, இன்று (24) இடம்பெறவுள்ளது. பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பகல் – இரவுப் போட்டியாக, மதியம் 2.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

முழுமையான இந்தத் தொடரின் டெஸ்ட் தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்திருந்தது. குறிப்பாக, முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டை இழந்து 139 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 216 ஓட்டங்களுக்கு வீழ்ந்திருந்தது.

 

பின்னர், பந்துவீச்சிலும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி, 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தது.

 

இலங்கை அணி, இந்தத் தோல்வியைச் சமாளிப்பதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

அதிலும், கிரிக்கெட் சபை, அமைச்சர்கள், விமர்சகர்கள் என, இலங்கை அணி சந்தித்த விமர்சனங்களுக்கு மத்தியில், அவ்வணியின் இரசிகர்களும், எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, 1ஆவது போட்டியின் முடிவில், இலங்கை அணியின் பஸ்ஸை மறித்து, இலங்கை இரசிகர்கள், ஆர்ப்பாட்டம் புரிந்திருந்தனர்.

 

எனவே, இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தப் போட்டியை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் கருத்துப்படி, தோல்விக்கான பயமே, இலங்கை அணிக்கான அதிகமான தோல்விகளை வழங்கிக் கொண்டு வருகிறது. அவ்வாறாயின், அந்தத் தோல்விப் பயம் இல்லாமல், இலங்கை எவ்வாறு விளையாட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

இலங்கை அணியின் சாமர கப்புகெதர, தனது 100ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை, இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார். முதலாவது போட்டியில் ஒரேயோர் ஓட்டத்தை மாத்திரம் பெற்ற அவர், தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியிலேயே விளையாடி வருகிறார். எனவே, அவர் மீது, அதிகப்படியான அழுத்தம் காணப்படுகிறது. அடுத்ததாக, திஸர பெரேராவும், தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறார்.

 

அணியாக, அனைத்து வீரர்களும் தங்களை நிரூபித்தாலேயே, இந்தப் போட்டியில், இந்திய அணிக்கான சவாலை, இலங்கை அணி வழங்க முடியும் என்ற நிலையில், அவ்வணி என்ன செய்யுமென்பதே, தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்ரிடி அதிரடிச் சதம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான ஷஹிட் அப்ரிடி, இங்கிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான நற்வெஸ்ட் இ20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியில், அதிரடியான சதத்தைப் பெற, அவரது அணியான ஹம்ப்ஷையர் அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

 

டேர்பிஷையர் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டேர்பிஷையர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.  துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஹம்ப்ஷையர் அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அப்ரிடி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிச் சதம் பெற, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை, அவ்வணி வெற்றது.

 

இருபதுக்கு-20 போட்டிகளில், தனது முதலாவது சதத்தை, அப்ரிடி பெற்றார். அவரது சதத்துக்கு, வெறுமனே 42 பந்துகளை மாத்திரம் அவர் எடுத்துக் கொண்டமை, இங்கு முக்கியமானதாக அமைந்தது. அவர், அடுத்த பந்திலேயே 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  தவிர, அணித் தலைவர் ஜேம்ஸ் வின்ஸ் 55 (36), ஜோர்ஜ் பெய்லி 27 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மற் கிறிற்ச்லி 3, பென் கொட்டன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

250 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டேர்பிஷையர் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 101 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  துடுப்பாட்டத்தில் பென் கொட்டன் 30 (21) ஓட்டங்களைப் பெற்றார்.  

 

பந்துவீச்சில், கைல் அபொட், லியம் டவ்ஸன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், மேஸன் கிறேன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, ஷஹிட் அப்ரிடி தெரிவானார்.