இன்று ஆரம்பிக்கிறது இலங்கை – சிம்பாப்வே

இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டி, காலி சர்வதேச விளையாட்டரங்கில், காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

இத்தொடர், இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணி, முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்துமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், சர்வதேச ஒருநாள் போட்டி அணிகளின் தரப்படுத்தலில், இலங்கை அணி 8ஆவது என்ற பரிதாபமான நிலையிலேயே காணப்படுகிறது. 7ஆவது இடத்தில், பங்களாதேஷ் அணி காணப்படுகிறது.

 

எனவே, இலங்கைக்கு அதிகளவிலான வாய்ப்புகள், தெளிவாக உள்ள போதிலும் கூட, முன்னைய காலங்களில் காணப்பட்ட அளவுக்கு, இலங்கை அணி பலமாக இல்லை என்பதே உண்மையாகும்.
நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கு எதிராகப் பெற்றுக் கொண்ட சிறப்பான வெற்றியைத் தவிர, அண்மைக்காலத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசித்திருக்காத இலங்கை அணி, தங்களை நிரூபிப்பதற்காகக் களமிறங்குகிறது.

 

சிரேஷ்ட வீரர்களான டினேஷ் சந்திமால், திஸர பெரேரா, சுரங்க லக்மால் போன்றோர், இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான குழாமில் சேர்க்கப்படாத நிலையில், புதுமுக வீரர்கள், பிரகாசிப்பதற்கான வாய்ப்பை, இந்தத் தொடர் வழங்குகிறது.

 

அதேபோல, இலங்கை வீரர்களின் உடற்றகுதி பற்றி, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பகிரங்கமான விமர்சனங்களை முன்வைத்து, அதற்கு லசித் மலிங்க பதிலளித்த பின்னணியில் இந்தத் தொடர் இடம்பெறும் நிலையில், வீரர்களின் உடற்றகுதி பற்றிய கவனமும், அதிகமாகக் காணப்படும்.

 

அதைத் தவிர, அணியின் பயிற்றுநராக இருந்துவந்த கிரஹம் ஃபோர்ட், இத்தொடருக்கு முன்னர் விலகிய நிலையில், இடைக்காலப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட நிக் போதாஸுக்கும், தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பை, இந்தத் தொடர் வழங்குகிறது.

 

இந்தத் தொடரை, 5-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றுமாயின், 7ஆவது இடத்தில் காணப்படும் பங்களாதேஷ் அணியை, தசமப் புள்ளிகளின் அடிப்படையில் முந்தி, 7ஆவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புக் காணப்படுகிறது. எனவே, அந்த இடத்தை இலங்கை அணி பிடிக்குமா என்பதே, இத்தொடரின் முக்கியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விதியை மீறினால் ஆஸி வீரர்களுக்கு ஆஷஸ் ஆப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்நாட்டுக் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இணக்கப்பாடு ஏற்படாது விட்டாலும், அங்கிகரிக்கப்படாத கிரிக்கெட் போட்டிகளில், அவ்வீரர்கள் பங்குபற்ற முடியாது என, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அவ்வாறு பங்குபற்றினால், 6 மாதங்களுக்குத் தடை விதிக்கப்படுமெனவும் அச்சபை எச்சரித்துள்ளது.

 

வீரர்களின் ஒப்பந்தம், நாளையுடன் காலாவதியாகும் நிலையில், புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால், கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தின் கீழில்லாத வீரர்களாக, அவர்கள் மாறுவர்.

 

எனினும், வீரர்களுக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பி வைத்துள்ள கிரிக்கெட் சபையின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் பற் ஹொவார்ட், இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
நாட்டின் கிரிக்கெட் சபையினால் அங்கிகரிக்கப்படாத போட்டிகளில் பங்குபற்றினால், குறைந்தது 6 மாதங்களுக்கு அவர்கள் தடை செய்யப்பட வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறையை அவர் ஞாபகப்படுத்தினார்.

 

அத்தோடு, வெளிநாடுகளில் இடம்பெறும் இருபதுக்கு-20 தொடர்களில் வீரர்கள் பங்குபற்றுவதற்கான, அனுமதிச் சான்றிதழை வழங்குவது குறித்து, ஒவ்வொரு வீரரின் நிலைக்கும் ஏற்ப முடிவெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

 

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான, சரித்திரபூர்வமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர், இவ்வாண்டு நவம்பரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, ஆஷஸ் தொடரில் அவர்கள் பங்குபற்ற முடியாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

மலிங்கவுக்கு மஹேல ஆதரவு

 

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள தடையை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கண்டித்துள்ளார். 

 

இலங்கை அணியின் வீரர்களின் உடற்றகுதி தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விமர்சனத்துக்கு, மறைமுகமாகப் பதிலளித்திருந்த லசித் மலிங்க, கிளியின் கூடு பற்றி, குரங்குக்கு என்ன தெரியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தார். 

 

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தனது ஒப்பந்தத்துக்கு முரணாக, மலிங்க நடந்துகொண்ட 2ஆவது தடவை இதுவெனத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, அது தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்தது. 

 

விசாரணைக் குழு முன் ஆஜராகிய மலிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதோடு, உத்தியோகபூர்வமான மன்னிப்பைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஒரு வருடத் தடை, அவருக்கு விதிக்கப்பட்டது. அத்தோடு, அவரது அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், டுவிட்டர் இணையத் தளத்தில், மஹேலவிடம் கருத்தொன்றை முன்வைத்த இரசிகரொருவர், “வீரர்களைக் கேலியாகப் பேசுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுமதியுண்டு. ஆனால், வீரர் கருத்துத் தெரிவித்தால், அவருக்கு 6 மாதத் தடை (குறிப்பு: இரசிகரின் கருத்தில், தண்டனை பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டது) விதிக்கப்படுமா? இலங்கை கிரிக்கெட் சபை, அதன் மோசமான நிலையில்” என்று கூறியிருந்தார். அவரது கருத்தை ஆமோதித்த மஹேல, “இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்” என்று குறிப்பிட்டார். 

 

அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சரின் நடத்தையை விமர்சித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரரின் வெளியான கேலிச் சித்திரத்தையும், மஹேல மீளப் பகிர்ந்திருந்தார். 

 

தான் விளையாடும் காலத்திலேயே, இலங்கை கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த மஹேல, ஓய்வுபெற்ற பின்னரும், அந்த விமர்சனங்களைத் தொடர்கிறார். இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித மலிங்க விளையாடியிருந்த நிலையில், அவ்வணியின் பயிற்றுநராக, மஹேல ஜெயவர்தன செயற்பட்டிருந்தார்.

இந்தியாவுக்கெதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம்

 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவுக்கிடையேயான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதி மூன்று போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முன்வரிசை துடுப்பாட்ட வீரரான கைல் ஹோப், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சுனில் அம்பிறிஸ் ஆகியோர் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர். முதலிரண்டு போட்டிகளுக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் ஜொனதன் கார்ட்டர், வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோரையே அவர்கள் பிரதியீடு செய்கின்றனர்.  

 

குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), சுனில் அம்பிறிஸ், தேவேந்திர பிஷு, றொஸ்டன் சேஸ், மைக்கல் கமின்ஸ், கைல் ஹோப், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் மொஹமட், அஷ்லி நேர்ஸ், கெரான் பவல், றொவ்மன் பவல்   

சங்காவின் அதிரடி தொடர்கிறது

 

இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

 

பகல் – இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

 

மழையால் பாதிக்கப்பட்ட 2ஆவது நாளில், சரே அணி பெற்ற 142 ஓட்டங்களில் 98 ஓட்டங்களை, சங்கக்காரவே குவித்திருந்திருந்தார்.

 

இந்தப் போட்டியில் அவர் பெற்ற சதத்துடன், இந்தப் பருவகாலத்தில், 6 சதங்களை அவர் குவித்துள்ளார். மேலதிகமாக, 2 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். இதன்படி, 7 போட்டிகளில், 11 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி, 108.6 என்ற சராசரியில் 1,086 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

 

இந்தப் பருவகாலமே, முதற்தரப் போட்டிகளில் தனது இறுதிப் பருவகாலம் என அறிவித்துள்ள குமார் சங்கக்கார, மிகச்சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாக 5 சதங்களைக் குவித்த அவர், 6ஆவது சதத்தைக் குவிக்கும் வாய்ப்பை, 16 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

 

இதைத் தவிர, ஒரு போட்டிக்கு முன்னதாக அவர், அனைத்து வகையான தொழில்முறையான போட்டிகளில், 100 சதங்களைக் கடந்திருந்தார். தற்போது அவர், 101ஆவது சதத்தையும் பெற்றுள்ளார்.

 

இப்போட்டியில் சரே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 516 ஓட்டங்களைக் குவித்து, பலமான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே குழாம்கள் அறிவிக்கப்பட்டன

 

இலங்கை, சிம்பாப்வேக்கிடையேயான தொடரில் பங்கேற்கவுள்ள சிம்பாப்வே குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   
அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், இறுதியாக, கடந்தாண்டு மார்ச்சில், சர்வதேசப் போட்டியொன்றை விளையாடிய இடதுகை சுழற் பந்துவீச்சாளர் வெலிங்டன் மஸகட்ஸா இடம்பெற்றுள்ளார்.  

 

இதேவேளை, சுழற்பந்து வீச்சாளர் நட்ஸாய் மஷியங்கே, டெஸ்ட் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், சிம்பாப்வே சார்பில் இதுவரையில் விளையாடியிருக்காத சகலதுறை வீரர் நேதன் வொலர், டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.  

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம்: சொலொமன் மிரே, ஹமில்டன் மசகட்சா, றயான் பேர்ள், கிரேமி கிறீமர் (அணித்தலைவர்), கிரேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், பீற்றர் மூர் (விக்கெட் காப்பாளர்), சிகண்டர் ராசா, டென்டாய் சட்டாரா, கிறிஸ் மெபு, டொனால்ட் ட்ரிபானோ, றிச்சர்ட் நகரவா, வெலிங்டன் மசகட்சா, மல்கொம் வோலர், சமு சிபாபா, டரிசை முசுகண்டா 

 

டெஸ்ட் குழாம்: றெஜிஸ் சகப்வா, ஹமில்டன் மசகட்சா, றயான் பேர்ள், கிரேமி கிறீமர் (அணித்தலைவர், கிரேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், பீற்றர் மூர் (விக்கெட் காப்பாளர்), சிகண்டர் ராசா, டென்டாய் சட்டாரா, கிறிஸ் மெபு, டொனால்ட் ட்ரிபானோ, நதன் வோலர், நட்ஸாய் மஷியங்கே, மல்கொம் வோலர், கார்ல் மும்பா, டரிசை முசுகண்டா 

 

2001ஆம் ஆண்டுக்கு பிறகு, முதன்முறையாக, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.  

 

இந்நிலையில், சிம்பாப்வேக்கெதிரான, முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கும் இலங்கைக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழாமில், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் டினேஷ் சந்திமால் இடம்பெறாத நிலையில், இலங்கைக்காக இதுவரையில் விளையாடியிருக்காத சகலதுறை வீரர் வனிடு ஹசரங்க இடம்பெற்றுள்ளார். இதேவேளை, சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய, வேகப்பந்து வீச்சாளர்கள் லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் குழாமுக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.  

 

குழாம்: அஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், அசேல குணரத்ன, வனிடு ஹசரங்க, லக்‌ஷன் சந்தகான், அகில தனஞ்சய, நுவான் பிரதீப், லசித் மலிங்க, துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க 

 

இந்நிலையில், இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் பதவி விலகியுள்ள நிலையில், இடைக்கால பயிற்சியாளராக நிக் போத்தாஸ் நியமிக்கப்பட்டுளார். கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் முதல், இலங்கையின் களத்தடுப்புப் பயிற்சியாளராக இருக்கும் போத்தாஸ், இந்தியா தொடர் வரைக்கும், இலங்கையில் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்.     

 

பாகிஸ்தானுக்கெதிராக இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும், சர்வதேச கிரிக்கெட் சபையின் மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், பாகிஸ்தானுக்கெதிராக, அபார வெற்றியொன்றை, இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.

 

லெய்செஸ்டரில், நேற்று மு (27) இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, பாகிஸ்தான் அணியின் தலைவி சனா மிர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். 

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள்ளேயே, தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளை இழந்தபோதும், மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த, நட்டாலி ஷிவர், அணித்தலைவர் ஹீதர் நைட் ஆகியோர், 30 ஓவர்களில், அதிரடியாக 213 ஓட்டங்களைப் பகிர்ந்து, இருவரும் சதங்களைப் பெற்ற நிலையில், பின்னர் வந்த டானியலி வயாட், பிரன் வில்சன் ஆகியோரும் அதிரடி காட்ட, 50 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றது.  

 

துடுப்பாட்டத்தில், நட்டாலி ஷிவர் 137 (92), ஹீதர் நைட் 106 (109), டானியலி வயாட் ஆட்டமிழக்காமல் 42 (27), பிரன் வில்சன் 33 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஸ்மவியா இக்பால் 3, கய்னட் இம்தியாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

 

பதிலுக்கு, 377 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 29.2 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, போட்டியில் மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டி இடம்பெறுவதற்கு மழை அனுமதித்திருக்கவில்லை. ஆக, மழையால் போட்டி இடைநிறுத்தப்படும்போது, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 215 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்த நிலையில், 107 ஓட்டங்களால் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.  

 

போட்டியின் நாயகியாக, நட்டாலி ஷிவர் தெரிவானார்.    

டெஸ்டிலிருந்து ஏபி டி ஓய்வு?

தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, அவரை அம்முடிவிலிருந்து மாற்றாவிட்டால், எதிர்வரும் ஓகஸ்டிலேயே, அவர் இவ்வாறு ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

 

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக, கடந்தாண்டே ஏபி டி வில்லியர்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு அறிவித்திருந்தார் எனவும், அதிலிருந்து அவரை, பின்வாங்க வைத்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தான், எதிர்வரும் ஓகஸ்டில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் அவர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர் ஓய்வுபெறுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்த் ட்ரகன்ஸுக்கு த்ரில் வெற்றி

- குணசேகரன் சுரேன்
ஸ்ரீகுகனின் இறுதி ஓவர் ருத்திரதாண்டவம், கைவிட்டுச் சென்ற போட்டியை மீட்டெடுக்க, இரண்டாவது பருவகால கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கில், நோர்த் ட்ரகன்ஸ் அணி சம்பியனாகியது.

 

கிறாஸ்கொப்பர்ஸ் பிறிமியர் லீக்கின் இரண்டாவது பருவகாலப் போட்டிகள், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்றன.

 

இப்போட்டிகளில் பங்குபற்றிய ஆறு அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதலாவது பிரிவில், டில்கோ றைடர்ஸ், நோர்த் ட்ரகன்ஸ், டீப் டைவர்ஸ் ஆகிய அணிகளும் இரண்டாவது பிரிவில், சயன்ஸ் வேர்ள்ட், டொப் சலஞ்சர்ஸ், சிவன் வொரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றன.

 

முதலாவது சுற்றுப் போட்டிகள், லீக் முறையில் நடைபெற்றன. இரண்டு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்ற அணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன. அந்த வகையில், முதலாவது பிரிவிலிருந்து டில்கோ றைடர்ஸ், நோர்த் ட்ரகன்ஸ் அணிகளும், இரண்டாவது பிரிவிலிருந்து, சயன்ஸ் வேர்ள்ட், சிவன் வொரியர்ஸ் ஆகிய அணிகளும் தகுதிபெற்றன.

 

முதலாவது அரையிறுதிப் போட்டி, சிவன் வொரியர்ஸ் அணிக்கும் நோர்த் ட்ரகன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் வொரியர்ஸ் அணி, 5 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 60 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய நோர்த் ட்ரகன்ஸ் அணி, 4.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், சயன்ஸ் வேர்ள்ட் அணியும் டில்கோ றைடர்ஸ் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய டில்கோ றைடர்ஸ் அணி, மதுசனின் அரைச் சதத்தின் உதவியுடன் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 88 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சயன்ஸ் வேர்ள்ட் அணி, 4.5 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து, 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில், டில்கோ றைடர்ஸ் அணியும் நோர்த் ட்ரகன்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற நோர்த் ட்ரகன்ஸ் அணியின் தலைவர் பிருந்தாகரன், தமது அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

 

அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய டில்கோ றைடர்ஸ் அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியால், விக்கெட்டுகள் எதனையும் இழக்காமல், 5 ஓவர்களில், 64 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிரிதரன் மதுசன் 39 (18), ஜெலாம் கல்கோவன் 23 (12) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பதிலுக்கு, 65 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நோர்த் றாகன்ஸ், 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில், நான்காவது ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசிய, டில்கோ அணியின் எஸ்.மோகன், போட்டியின் போக்கை மாற்றினார். இதனையடுத்து, நோர்த் ட்ரகன்ஸ் அணியினர், தோல்வியடையும் நிலையில் இருந்தனர்.

 

இறுதி ஓவரில் 26 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தன. அந்த ஓவரை, பாக்கியநாதன் ஸ்ரீகுகன் எதிர்கொண்டார். முதல் பந்தில் ஓட்டம் எதனையும் பெற முடியவில்லை. ஆனால், அடுத்த மூன்று பந்துகளையும் ஆறு ஓட்டங்களாக மாற்றினார். தொடர்ந்து, ஐந்தாவது பந்தை, நான்கு ஓட்டங்களாகவும் ஆறாவது பந்தை, ஆறு ஓட்டங்களாகவும் மாற்றிய ஸ்ரீகுகன், கைவிட்டுச் சென்ற வெற்றியை மீண்டும் தனது அணிக்கு பெற்றுக்கொடுத்து, தனது அணியை சம்பியனாக மாற்றினார். நோர்த் ட்ரகன்ஸ், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஸ்ரீகுகன், ஆட்டமிழக்காமல் 50 (14) ஓட்டங்களைப் பெற்றார்.

 

இச்சுற்றுப் போட்டியின் தொடர்நாயகனாக, இத்தொடரில் 178 ஓட்டங்களைப் பெற்ற, டில்கோ றைடர்ஸ் அணியின் கிரிதரன் மதுசன் தெரிவானதோடு, இறுதிப் போட்டியின் நாயகனாக நோர்த் ட்ரகன்ஸ் அணியின் பாக்கியநாதன் ஸ்ரீகுகன் தெரிவானார். சிறந்த களத் தடுப்பாளராக, டில்கோ அணியின் ஜெலாம் கல்கோவன், சிறந்த பந்து வீச்சாளராக சயன்ஸ் வேர்ள்ட் அணியின் செல்வராசா நிரோசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

சம்பியனாகிய நோர்த் ட்ரகன்ஸ் அணிக்கு, 50 ஆயிரம் ரூபாயும் இரண்டாமிடம் பெற்ற டில்கோ றைடர்ஸ் அணிக்கு, 25 ஆயிரம் ரூபாயும், தொடர் நாயகனாகத் தெரிவாகிய மதுசனுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. 

தென்னாபிரிக்கக் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாம் 15 பேர் கொண்டதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹெய்னியோ குஹுன், துடுப்பாட்ட வீரர் ஏய்டன் மர்க்ரம், சகலதுறை வீரர் அன்டிலி பெக்லுவாயோ என, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்காத மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

குழாம்: பப் டு பிளெஸி (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, தெம்பா பவுமா, தியுனிஸ் டி ப்ரூன், குயின்டன் டீ கொக் (விக்கெட் காப்பாளர்), ஜே.பி டுமினி, டீன் எல்கர், ஹெய்னியூ குஹுன், கேஷவ் மஹராஹ், ஏய்டன் மர்க்ரம், மோர்னி மோர்க்கல், கிறிஸ் மொரிஸ், டுவன்னே ஒலிவர், அன்டிலி பெக்லுவாயோ, வேர்ணன் பிலாந்தர், கஜிஸ்கோ றபடா.