இந்தியா – பாகிஸ்தான் தடுமாற்றம் தொடர்கிறது

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதில் காணப்படும் சிக்கல் நிலை, தொடர்ந்தும் நீடிக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில், டுபாயில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று நடந்த போதிலும், இவ்விடயத்தில் முடிவு காணப்படவில்லை.

 

இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் மோசமான உறவுகளுக்கு மத்தியில், கிரிக்கெட் சாத்தியப்படாது என, இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு காணப்படும் நிலையிலும், இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

 

தற்போது, இதிலும் முடிவேதும் பெறப்பட்டிருக்காத நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடைமுறைகளுக்கு ஏற்பட, அச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் பிரசன்னத்தில், இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டியேற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனையைத் தவறவிட்டார் சங்கக்கார

உலகில் தோன்றிய மாபெரும் துடுப்பாட்ட வீரர் எனப் பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் டொன் பிரட்மனின் சாதனையொன்றைச் சமப்படுத்தும் வாய்ப்பை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, 16 ஓட்டங்களால் தவறவிட்டார்.

 

இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார, இதற்கு முன்னர் தான் துடுப்பெடுத்தாடிய 5 இனிங்ஸ்களிலும் சதம் பெற்றிருந்தார். இதன் மூலம், இலங்கை சார்பாக, முதற்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதங்கள் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்த சங்கக்கார, சரே சார்பாகவும் அதே சாதனையைப் படைத்திருந்தார்.

 

ஆனால், முதற்தரப் போட்டிகளில் அதிக சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றோர் என்ற சாதனை, அவுஸ்திரேலியாவின் டொன் பிரட்மன், இங்கிலாந்தின் சி.பி. ப்ரை, தென்னாபிரிக்காவின் மைக் புரொக்டர் ஆகியோரிடம் காணப்பட்டது. அவர்கள், தொடர்ச்சியாக 6 சதங்களைப் பெற்றிருந்தனர்.

 

தனது 6ஆவது சதத்தை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார, கடுமையான இருள் காரணமாக, போட்டி இடைநிறுத்தப்பட்டு, பின்னர் தொடங்கிய போது, அச்சாதனையை அடைந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, சுழற்பந்து வீச்சாளரான டொம் வெஸ்ட்லியின் பந்துவீச்சில், அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலமாக, பிரட்மனின் சாதனையைச் சமப்படுத்தும் வாய்ப்பை இழந்தார்.

 

எனினும், இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளின் பிரிவு 1 இல், இதுவரை 5 போட்டிகளில் 8 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள குமார் சங்கக்கார, 5 சதங்கள், 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 876 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இது, 2ஆவது இடத்திலுள்ள வீரரை விட 294 ஓட்டங்கள் அதிகமாகும்.

தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், இங்கிலாந்தை குறைந்த ஓட்டங்களுக்குள் சுருட்டி, தென்னாபிரிக்கா அபார வெற்றிபோதும், முதலிரண்டு போட்டிகளையும் வென்று, அசைக்க முடியாத முன்னிலையை ஏற்கெனவே பெற்ற இங்கிலாந்து, 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

 

லோர்ட்ஸில், நேற்று (29) இடம்பெற்ற மேற்கூறப்பட்ட போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து, கஜிஸ்கோ றபடா, வெய்ன் பார்னல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது, ஐந்து ஓவர்களில், 20 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருநாள் சர்வதேசப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில், முதல் ஐந்து ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை ஓர்  அணி இழக்கும் முதலாவதாக சந்தர்ப்பமாக, இது அமைந்தது.

 

பின்னர், ஏழாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் வில்லி ஆகியோரின் இணைப்பாட்டம் காரணமாகவும், இங்கிலாந்து சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட டொபி றோலண்ட்-ஜோன்ஸின் இறுதி நேர ஓட்டங்கள் காரணமாகவும், 31.1 ஒவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் என்ற, ஓரளவு கெளரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 51 (67), டொபி றோலண்ட் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 (37), டேவிட் வில்லி 26 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா 4, கேஷவ் மஹராஜ், வெய்ன் பார்னல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 28.5 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்து, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், ஹஷிம் அம்லா 55 (54), குயின்டன் டி கொக் 34 (39), ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 28 (43), ஏ.பி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 27 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் போல் 2, டொபி றோலண்ட் ஜோன்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியில் 23 ஓட்டங்களைப் பெற்றபோது, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 7,000 ஓட்டங்களைப் பெற்ற ஹஷிம் அம்லா, இனிங்ஸ்களின் அடிப்படையில், 7,000 ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களை வேகமாகக் கடந்தவராக மாறினார். 150ஆவது இனிங்ஸில், 7,000 ஓட்டங்களை அம்லா கடந்த நிலையில், இதற்கு முன்னர், 161ஆவது இனிங்ஸில், 7,000 ஓட்டங்களை, விராத் கோலி கடந்திருந்தார்.

 

இப்போட்டியின் நாயகனாக கஜிஸ்கோ றபடா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவானார்.    

ஆப்கான் தொடரில் அக்மல்கள்

ஆப்கானிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

 

6 அணிகள் பங்குகொள்ளும் இந்தத் தொடரில், பாபர் அஸாம், உமர் அக்மல், கம்ரன் அக்மல், தமிம் இக்பால், ஹமில்ட்டன் மஸகட்ஸா, இம்ருல் கைய்ஸ், ஷோன் வில்லியம்ஸ் போன்ற சர்வதேச வீரர்கள் விளையாடவுள்ளனர்.

 

அதிக விலையுள்ள வீரராக, ஆப்கானிஸ்தானின் சகலதுறை வீரர் குல்படின் நெய்ப் காணப்பட்டார். அவர், 108,000 ஐ.அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டார்.

 

ஜூலை 18ஆம் திகதி ஆரம்பித்து, 28ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும், காபூலில் நடைபெறவுள்ளன.

வீரர்களின் சங்கத்தில் ஸ்டார்க் நம்பிக்கை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கும் அதன் வீரர்களுக்குமிடையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முறுகல் நிலையில், தமது நிலைப்பாட்டை வீரர்கள் மாற்றவில்லையெனத் தெரிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், இந்தப் பேரம்பேசல்களில், கிரிக்கெட் சபையோடு பேசுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தையே தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

வீரர்களின் சங்கத்தைத் தாண்டி, வீரர்களோடு நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு, கிரிக்கெட் சபை முயன்றுவரும் நிலையிலேயே, ஸ்டார்க்கின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

 

தாங்கள், நியாயமான பங்கையே கேட்பதாகத் தெரிவித்த ஸ்டார்க், அதிகமானதைத் தாங்கள் கேட்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

நியூசிலாந்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளின் ஓர் அங்கமாக, இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

 

இலண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட்டை இழந்து 63 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. எனினும் ஜேம்ஸ் நீஷம், இறுதியில் சிறிது போராடியிருந்தார்.
துடுப்பாட்டத்தில் லூக் ரொங்கி 66 (63), ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 46 (47) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் இரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 129 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை காரணமாகப் போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போக, டக் வேர்த் லூயிஸ் முறையில், போட்டியின் முடிவு கணிக்கப்பட்டது. இதன்போது, டக் வேர்த் லூயிஸ் முறையில் பெற்றிருக்க வேண்டிய 85 ஓட்டங்களை விட இந்திய அணி, 45 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தது.

 

துடுப்பாட்டத்தில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 52 (55), ஷீகர் தவான் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

இறுதி நேரத்தில் இங்கிலாந்து வென்றது

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி, இறுதி நேரத்தில் வெற்றிபெற்றது.

 

சௌதாம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைக் குவித்தது. 12 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, அதன் பின்னர் தொடர்ச்சியாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

 

துடுப்பாட்டத்தில் தனது 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பூர்த்திசெய்த பென் ஸ்டோக்ஸ், 79 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்தார். தவிர, ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 65 (53), ஒய்ன் மோர்கன் 45 (64), ஜோ றூட் 39 (41), மொய்ன் அலி 33 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கஜிஸ்கோ றபடா, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

331 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களைப் பெற்று, 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

 

முதலாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களைப் பெற்ற அவ்வணி, தொடர்ச்சியாகச் சிறப்பான இணைப்பாட்டத்தைப் பெற்றுவந்தது. இறுதியில், இறுதி ஓவரில் 7 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய மார்க் வூட், 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

 

துடுப்பாட்டத்தில் குயின்டன் டீ கொக் 98 (103), டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 71 (51), ஏபி டி வில்லியர்ஸ் 52 (50), கிறிஸ் மொறிஸ் ஆட்டமிழக்காமல் 35 (22) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் லியம் பிளங்கெட், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.

 

பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான்

 

பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில், பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

 

பேர்மிங்காமில் நேற்று (27) இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 102 (140), இம்ருல் கைஸ் 61 (91), முஷ்பிக்கூர் ரஹீம் 46 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான் 4, ஹஸன் அலி, ஷடாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 342 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 49.3 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷொய்ப் மலிக் 72 (66), பாஹிம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 64 (30), மொஹமட் ஹபீஸ் 49 (62), இமாட் வஸீம் 45 (50), அஹமட் ஷெஷாட் 44 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.     

ஓய்வு பெற்றார் எட் ஜொய்ஸ்

 

இங்கிலாந்தின் பிராந்திய அணியான சசெக்ஸின் முன்னாள் அணித்தலைவரான எட் ஜொய்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இங்கிலாந்து பிராந்தியத் தொடரிலிருந்து, தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது எஞ்சியுள்ள தனது விளையாடும் காலத்தை, அயர்லாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் கவனஞ் செலுத்தும் பொருட்டே, கவுண்டி போட்டிகளிலிருந்து தனது ஓய்வை ஜொய்ஸ் அறிவித்துள்ளார்.  

 

2006ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை, இங்கிலாந்துக்காக 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய பின்னர், 38 வயதான ஜொய்ஸ், 2011ஆம் ஆண்டு முதல், அயர்லாந்துக் குழாமின் முக்கிய உறுப்பினராக விளங்குகிறார்.    

ஆஸி வீரர்களுக்கு புதிய அமைப்பு

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்குமிடையில், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை முகாமை செய்வதற்காக, புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

 

உருவாக்கப்பட்டுள்ள அமைப்பே, வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள், அனுசரணையாளர்களை முகாமை செய்தல், ஊடகங்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் அணுக்கத்தை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கான நிதியளிப்பும் பெறப்படவுள்ளது. 

 

தற்போதுள்ள நடைமுறையின்படி, விரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்துவதோடு, அதற்காக வருடாந்தம், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கு நிதியளித்து வருகிறது. ஆனால், அச்சங்கத்துக்கு நிதியளிப்பதை நிறுத்தப் போவதான சமிக்ஞைகளை, கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

 

இந்நிலையிலேயே, ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து வீரர்களையும் புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில், வீரர்களின் சங்கம் காணப்படுகிறது.

 

வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்குமிடையிலான ஒப்பந்தம், காலாவதியாகுவதற்குள், இரு தரப்புக்குமிடையில் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டால், பல்வேறு வகையான உரிமைகளை வழங்குதல் சம்பந்தமான பணியில் மாத்திரம் புதிய அமைப்புச் செயற்படும் என்பதோடு, ஏனைய அறிவுசார் சொத்துரிமைகள், கிரிக்கெட் சபையிடம் மீண்டும் வழங்கப்படும். 

 

வீரர்களின் அறிவுசார் சொத்துரிமை என்பதற்கும் வீரரின் பெயர், குரல், கையெழுத்து, வணிகக் குறியீடு, புகைப்படம், அவரது திறமை வெளிப்பாடுகள் ஆகியன உள்ளடங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு, வெளியார் பணம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.