இந்தியக் குழாமில் முகுந்த்

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரான அபினவ் முகுந்த், இந்திய டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இறுதியாக 2011ஆம் ஆண்டே, சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

 

பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒற்றைய டெஸ்ட் போட்டிக்கான குழாமிலேயே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி, பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

 

குழாம்: விராத் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, கருண் நாயர், ரிதிமான் சகா, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ஜயந்த் யாதவ், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், அமித் மிஷ்ரா, அபினவ் முகுந்த், ஹார்டிக் பாண்டியா.

வென்றது பாகிஸ்தான்

 

பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையிலான பயிற்சிப் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு, அபராதமான வெற்றி கிடைத்தது.

 

பிறிஸ்பேணில் இன்று  இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், பாபர் அஸாம் (98), ஷர்ஜீல் கான் (62), உமர் அக்மல் (54), ஷொய்ப் மலிக் (49) ஓட்டங்களின் துணையோடு, 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

 

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அணி, 36.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 196 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜொஷ் இங்கிஷ் 70 ஓட்டங்களைப் பெற்றார். ஹஸன் அலி 3, இமாட் வசீம் 2, ஷொய்ப் மலிக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சசெக்ஸில் டேவிட் விஸே; மீண்டுமொரு கொல்பாக்

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் டேவிட் விஸே, தனது நாட்டுக்காக விளையாடுவதை விடுத்து, “கொல்பாக்” வீரராக, இங்கிலாந்துப் பிராந்திய அணியான சசெக்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

 

தென்னாபிரிக்காவுக்காக 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 20 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் இதுவரை விளையாடியுள்ள டேவிட் விஸே, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற சிறப்பான பெறுபேற்றைக் கொண்டுள்ளார். 

 

இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்டின் முடிவில், அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபொட், துடுப்பாட்ட வீரர் றீலி றொஸோ ஆகியோர், கொல்பாக் முறையில் ஹம்ப்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையிலேயே, டேவிட் விஸேவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  31 வயதான டேவிட் விஸே, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் சேர்க்கப்படுவதாக இருந்த போதிலும், அவரது இந்த அறிவிப்புக் காரணமாக, அக்குழாமிலிருந்து அவர் நீக்கப்பட்டே, அக்குழாம் அறிவிக்கப்பட்டது. 

 

கொல்பாக் வீரர்களைத் தவிர, ஏனைய வீரர்களான ஃபப் டு பிளெஸி, ஹஷிம் அம்லா, குயின்டன் டீ கொக், ஏபி டி வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, கஜிஸ்கோ றபடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக டேவ் ஸ்டெய்ன், கிறிஸ் மொறிஸ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அணியின் தலைவராக, ஃபர்ஹான் பெஹர்டியன் செயற்படவுள்ளார்.   

றொஸ் டெய்லர் அதிருப்தி

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்படாமை குறித்து, நியூசிலாந்து அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் றொஸ் டெய்லர், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது போட்டியில், டெய்லரின் 4ஆம் இலக்கத்தில், கொரி அன்டர்சன் துடுப்பெடுத்தாடியதோடு, அதிரடியாக ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும் பெற்றார்.

 

எனினும், இருபதுக்கு-20 அணியில் சேர்க்கப்படாமை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்த டெய்லர், 3 வகையான போட்டிகளிலும் விளையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேர்வாளர்களின் முடிவை மதிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட டெய்லர், எனினும் உள்ளூர் தொடரில், 80க்கு அதிகமான 2 ஓட்டங்களைப் பெற்று, தன்னை வெளிப்படுத்தியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக மலிங்க இல்லை

 

தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிப்பட்டுவரும் மலிங்க, கடந்தாண்டு பெப்ரவரிக்குப் பின்னர், உத்தியோகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடியிருக்கவில்லை. இறுதியாக 2015ஆம் ஆண்டு நவம்பரிலேயே, ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடினார். அவரது முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, கடந்தாண்டின் உலக இருபதுக்கு-20 தொடர், இந்தியன் பிறீமியர் லீக் தொடர் ஆகியவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார்.

 

எனினும், மீண்டும் போட்டிகளில் பங்குபெறும் நோக்கத்துடன், கடந்தாண்டு செப்டெம்பர் முதலேயே, பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அவர் ஆரம்பித்தார். இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில், அவர் பங்குபற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், கிறிஸ்மஸ் காலத்துக்கு அண்மையாக, மலிங்கவுக்கு ஏற்பட்ட டெங்கு காரணமாக, அவரது உபாதைகளிலிருந்து அவர் மீள்வது, தாமதமாகியுள்ளது. எனவே, தென்னாபிரிக்கத் தொடரில் அவர் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதே, அவரது தற்போதைய இலக்காகக் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

லக்மால் முன்னேற்றம்; மத்தியூஸ் பின்னடைவு

 

சர்வதேச கிரிக்கெட் சபையினால், டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் (3ஆவது டெஸ்ட்), தென்னாபிரிக்கா எதிர் இலங்கை (2ஆவது டெஸ்ட்) ஆகிய போட்டிகளின் முடிவிலேயே, இத்தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில், முதல் 6 இடங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், கேன் வில்லியம்ஸன், டேவிட் வோணர், அஸார் அலி ஆகியோரே, முதல் 6 இடங்களில் காணப்படுகின்றனர்.

 

14ஆவது இடத்தில் காணப்பட்ட யுனிஸ் கான், 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து குயின்டன் டீ கொக் (9இலிருந்து 8க்கு), ஏபி டி வில்லியர்ஸ் (8இலிருந்து 9க்கு), ஹஷிம் அம்லா (7இலிருந்து 10க்கு) ஆகியோர் காணப்படுகின்றனர்.

 

3ஆவது போட்டிக்கு முன்னர் 11ஆவது இடத்தில் காணப்பட்ட இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3ஆவது போட்டியில் போதிய திறமைகளை வெளிப்படுத்தாதன் காரணமாக, 14ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். 23ஆவது இடத்தில் காணப்பட்ட சந்திமால் 26ஆவது இடத்துக்கும், 31ஆவது இடத்தில் காணப்பட்ட தனஞ்சய டி சில்வா 33ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

 

பந்துவீச்சாளர்களில் முதலிரு இடங்களிலும் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவரும் காணப்படுகின்றனர். 5ஆவது இடத்தில் காணப்பட்ட ஜொஷ் ஹேஸல்வூட், பாகிஸ்தானுக்கெதிராகச் சிறப்பாகச் செயற்பட்டு, 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

ரங்கன ஹேரத்துக்குச் சுழற்சியை வழங்கக்கூடாது என, தென்னாபிரிக்க ஆடுகளங்களை, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களாக அந்நாட்டு ஆடுகள மேற்பார்வையாளர்கள் மாற்றியிருந்த நிலையில், விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தவறிய ஹேரத், 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.

 

தொடர்ந்து வரும் இடங்களில் டேல் ஸ்டெய்ன் (4இலிருந்து 5க்கு), ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவேர்ட் ப்ரோட், கஜிஸ்கோ றபடா (17இலிருந்து 8க்கு), வேர்ணன் பிலாந்தர், மிற்சல் ஸ்டார்க் (8இலிருந்து 10க்கு) ஆகியோர் காணப்படுகின்றனர்.

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியிருந்த இலங்கையின் சுரங்க லக்மால், லஹிரு குமார இருவரும், தங்கள் வாழ்நாளின் சிறந்த அடைவைப் பெற்றுள்ளனர். இப்போட்டிக்கு முன்பாக 36ஆவது இடத்தில் காணப்பட்ட லக்மால், 30ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய குமார, முதலிரு போட்டிகளின் பின்னர் முதல் 100 பேரில் ஒருவராக இடம்பெற்றிருக்காத நிலையில், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை காரணமாக, 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 வாரங்களுக்கு மோர்தஸா இல்லை

 

பங்களாதேஷ் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளுக்கான தலைவர் மஷ்ரபி மோர்தஸாவுக்கு, பெருவிரல் முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர், 4 தொடக்கம் 6 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

 

நியூசிலாந்து அணிக்கெதிரான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியின் போதே, மோர்தஸாவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எக்ஸ் கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்துத் தொடரில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் இரண்டிலும், பங்களாதேஷ் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் திரும்பினார் இர்பான்

 

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான், அவுஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். அவரது தாய், காலமாகியுள்ளதையடுத்தே, அவர் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

 

34 வயதான இர்பான், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், உபாதைகள் காரணமாகப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உடற்றகுதியை அவர் நிரூபித்ததையடுத்தே, அவுஸ்திரேலியாவுக்கான குழாமில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

 

தற்போது அவர் நாட்டுக்குத் திரும்பியுள்ளதால், வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பெரும்பாலான போட்டிகளில், இர்பான் பங்குபற்றமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

‘டோணி தான் எப்போதும் தலைவர்’

 

இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விராத் கோலி, தனது தலைவராக, எப்போதும் மகேந்திரசிங் டோணியே இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளின் தலைவராக இருந்த டோணி, கடந்த வாரம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைவராக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, கோலி உறுதிப்படுத்தப்பட்டார். ஏற்கெனவே டெஸ்ட் தலைமைத்துவத்தை வகிக்கும் கோலி, தற்போது ஒட்டுமொத்த அணியின் தலைமைத்துவத்தையும் ஏற்பது தொடர்பாகவும் டோணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

 

"தலைமைத்துவம், என்னைச் சரியான விதத்தில் நடத்திக் கொள்ளுதல் ஆகிய விடயங்களில், அவரிடமிருந்து (டோணி), நான் ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டேன். 'டோணி' என்று நீங்கள் நினைக்கும் போது, மனதில் முதலாவதாக வருவது 'அணித்தலைவர்' என்பது தான்.

 

"என்னைப் பொறுத்தவரை, எனது அணித்தலைவராக அவரே எப்போதும் இருப்பார். ஏனென்றால், எனது கிரிக்கெட் வாழ்வு, அவரது தலைமைத்துவத்தின் கீழேயே ஆரம்பித்தது. என்னை வழிநடத்திய, எனக்கு வாய்ப்புகளை வழங்கிய, கிரிக்கெட் வீரராக நான் வளர்வதற்கு எனக்கு வாய்ப்புகளையும் நேரங்களையும் வழங்கியவராக, அணியிலிருந்து நான் நீக்கப்படுவதைத் தடுத்த ஒருவராக, டோணியே இருப்பார்" என்று கோலி குறிப்பிட்டார்.

 

இருவருக்குமிடையில் இருதரப்பு மரியாதை காணப்படுவதாகக் குறிப்பிட்ட கோலி, "நாம் இருவரும் அற்புதமான நட்பைக் கொண்டுள்ளோம். அவரது கருத்துகளை எனதருகே கொண்டிருப்பதற்கு, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்றும் குறிப்பிட்டார்.

 

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோணி திடீரென ஓய்வுபெற்றபோது, 2015ஆம் ஆண்டு ஜனவரியில், அதற்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்ற கோலி, அப்போது இருந்ததை விட, இப்போது அதிகம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் டோணி விளையாட மாட்டாரென, போட்டிக்கு முதல்நாளே தனக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும், திடீரென அணித்தலைவராக விளையாட வேண்டியேற்பட்டதாகவும், கோலி குறிப்பிட்டார்.

 

கோலியின் கீழ், 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களில் இந்திய அணி ஈடுபடவுள்ள நிலையில், அந்தத் தொடருக்காக அணியை வழிநடத்துதல், தனது வாழ்வின் மிகப்பெரிய அடைவாக அமையுமென, கோலி மேலும் குறிப்பிட்டார்.

மீண்டும் வெள்ளையடித்தது நியூசிலாந்து

 

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

 

பே ஓவல் மைதானத்தில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிவந்த நியூசிலாந்து அணிக்காக, 4ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கேன் வில்லியம்ஸ், கொரி அன்டர்சன் இருவரும், 12 ஓர்களில் 124 ஓட்டங்களைக் குவித்தனர். பின்னர், இறுதி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்திய அன்டர்சன், 200க்கு அண்மையான ஓட்டங்களைப் பெறுவதை உறுதிப்படுத்தினார்.

 

துடுப்பாட்டத்தில் அன்டர்சன், 41 பந்துகளில் 2 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களைக் குவித்தார். கேன் வில்லியம்ஸன், 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் றுபெல் ஹொஸைன், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

195 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 82 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட அவ்வணி, இறுதி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தமையால், ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்தது. துடுப்பாட்டத்தில் சௌமியா சர்கார் 42 (28), ஷகிப் அல் ஹஸன் 41 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக, அன்டர்சன் தெரிவானார்.

 

ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, நியூசிலாந்து அணி வெள்ளையடித்திருந்த நிலையில், தற்போது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரையும் வெள்ளையடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.