ஆஸியைப் பயிற்றுவிக்கிறார் கிலெஸ்பி

 

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக, அவ்வணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் யோர்க்‌ஷையர் பிராந்திய அணியின் முன்னாள் பயிற்றுநருமான ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடர், 22ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. ஆனால், இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 23ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளது.

 

முக்கியமான அந்தத் தொடருக்குத் தயார்படுத்தல்களில் ஈடுபடுவதற்காக, வழக்கமான பயிற்றுநர் டெரன் லீமன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அதன் காரணமாக இலங்கைத் தொடருக்கு, ஜஸ்டின் லாங்கரே பதில் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஜஸ்டின் லாங்கரின் உதவிப் பயிற்றுநராகவே, ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அவுஸ்திரேலிய அணியின் எதிர்காலப் பயிற்றுநர்களாக இருக்க வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் இரண்டு பேரான ஜஸ்டின் லாங்கரும் ஜேஸன் கிலெஸ்பியும், ஒரே தொடரில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யோர்க்‌ஷையர் அணிக்கு வெற்றிகரமான பயிற்றுநராகச் செயற்பட்ட கிலெஸ்பி, தனக்குக் கிடைத்த வாய்ப்புத் தொடர்பில், குறிப்பாக தனது முன்னாள் சக வீரரான லாங்கருடன் பணியாற்றவுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, "ஜஸ்டின் லாங்கருடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, அற்புதமானது. அவர் என்னுடைய நண்பரும் முன்னாள் சக வீரரும் தான். ஆனால், இந்த வகைப் போட்டிகளில், வெற்றியைச் சுவைத்த ஒருவராவார். அவரிடமிருந்து ஏதாவதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமாயின், அது சிறப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

ஸ்மித் சதம்; மழை குறுக்கீடு

 

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, வெற்றி – தோல்வியற்ற முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது. போட்டியின் இறுதி நாளான நாளை, 98 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், இரண்டு அணிகளும் தமது இரண்டாவது இனிங்ஸை இன்னமும் ஆரம்பிக்கவேயில்லை.

 

மெல்பேணில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 278 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 4565 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இது, பாகிஸ்தான் அணி பெற்ற 443 ஓட்டங்களை விடவும் 22 ஓட்டங்கள் அதிகமாகும்.

 

உஸ்மான் கவாஜா 95 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 10 ஓட்டங்களுடனும் நேற்றைய நாளை ஆரம்பித்தனர். ஆனால், மேலதிகமாக 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில், கவாஜா ஆட்டமிழந்தார். பின்னர், 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப்பும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

 

நேற்று , தனது 17ஆவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற உப தலைவர் டேவிட் வோணரின் சத எண்ணிக்கையைச் சமப்படுத்திய தலைவர் ஸ்மித், தனது 17ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர், ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார். தவிர மிற்சல் ஸ்டார்க், 7 ஓட்டங்களுடன் காணப்படுகிறார்.
ஏற்கெனவே மழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இப்போட்டியில், இன்றைய தினமும் 55.5 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டன. இன்னும் மழை பெய்யும் வாய்ப்பிருப்பால், போட்டியில் முடிவு எட்டப்படும் வாய்ப்புகள் இல்லையென்றே கருதப்படுகிறது. பந்துவீச்சில் சொஹைல் கான், யாசீர் ஷா, வஹாப் றியாஸ் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

கைநழுவுகிறது இலங்கையின் வாய்ப்பு

 

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில், கடந்த திங்கட்கிழமை (21) ஆரம்பமான முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கைநழுவுகிறது.

 

தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற தென்னாபிரிக்க அணி, இன்றைய (28) மூன்றாம் நாள் ஆட்டமுடிவில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்களைப் பெற்று, 432 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது களத்தில், குயின்டன் டி கொக் 42 ஓட்டங்களையும், பப் டு பிளெஸி 41 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது உள்ளனர். ஸ்டீபன் குக் 117, டீன் எல்கர் 52, ஹஷிம் அம்லா 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா இரண்டு விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், நுவான் பிரதீப், டுஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

முன்னதாக, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், ஏழு விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்றிருந்த இலங்கையணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 43, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 39, தினேஷ் சந்திமால் 28, ரங்கன ஹேரத் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வேர்ணன் பிலாந்தர் ஐந்து விக்கெட்டுகளையும், கைல் அபொட் மூன்று விக்கெட்டுகளையும், கேஷவ் மஹராஜ், கஜிஸ்கோ றபடா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

தென்னாபிரிக்க அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், ஜெ.பி.டுமினி 63, ஸ்டீபன் குக் 59, டீன் எல்கர் 45, குயின்டன் டி கொக் 37, பப் டு பிளெஸி 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் ஐந்து விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத், நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

மீண்டும் வைத்தியசாலையில் நிக்கொலஸ்

 

இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளரான மார்க் நிக்கொலஸ், மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். சனல் 9 தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளரான நிக்கொலஸ், தற்போது அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாளில் நேர்முக வர்ணனைப் பணியில் இருந்தபோது, கடுமையான வலி காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கிருந்து விடுவிக்கப்பட்ட நிக்கொலஸ், மூன்றாம் நாளான இன்று, தனது கடமையை மீண்டும் ஆரம்பித்தார். ஆனால், அவர் அவ்வாறு ஆரம்பித்துச் சில மணிநேரங்களில், மீண்டும் வலியை உணர்ந்தமையால, மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெல்பேணில் ஓட்ட மழை; அஸார் 205; வோணர் 144

 

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, பாரிய திருப்பங்கள் ஏற்பட்டாலொழிய, வெற்றி – தோல்வியற்ற முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

 

மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில், ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக 8ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அஸார் அலியும் சொஹைல் கானும், 108 ஓட்டங்களைப் பகிர்ந்து, அணிக்கு முன்னிலையை வழங்கினர்.

 

இதில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அஸார் அலி, ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வாண்டில் ஏற்கெனவே முச்சதமொன்றைப் பெற்ற அஸார் அலி, இதுவரையில் 3 தடவைகள், இரட்டைச் சதத்தைத் தாண்டியுள்ளார். ஏனையோரில் சொஹைல் கான் 65, அசத் ஷபீக் 50 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், ஜக்ஸன் பேர்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்கள் பகிரப்பட, 2ஆவது விக்கெட்டுக்காக, 198 ஓட்டங்கள் பகிரப்பட்டன. துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர், 143 பந்துகளில் 144 ஓட்டங்களைக் குவித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 17ஆவது சதமாகும். தவிர, உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார்.

 

போட்டியில் இன்னமும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், வெற்றி – தோல்வியற்ற முடிவே பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான முடிவு பெறப்பட்டால், மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி 17 போட்டிகளுக்குப் பின்னர், வெற்றி – தோல்வியற்ற முடிவு பெறப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

முஷ்பிக்கூர் வெளியே

 

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, நாளை அதிகாலை 3:30க்கு ஆரம்பித்தது. இதில், பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளரும் சிரேஷ்ட வீரருமான முஷ்பிக்கூர் ரஹீம் பங்கேற்கவில்லை.

 

ரஹீமுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக, இந்தப் போட்டியில் மட்டுமல்லாது, அடுத்த போட்டியிலும் அவர் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டிகளின் பின்னர் இடம்பெறவுள்ள 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அதன் பின்னரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்குபற்ற முடியாது போகலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டு வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என்பதை உறுதிப்படுத்திய அணியின் பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அதற்கு முன்னர் அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியுமாயின், அது அதிர்ஷ்டமாக அமையுமெனக் குறிப்பிட்டார்.

தடுமாறுகிறது இலங்கை: போராடுகிறார் தனஞ்சய

 

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று (26) ஆரம்பமான முதலாவது போட்டியில், இன்றைய (27) இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி தடுமாறி வருகிறது.

 

தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று, தென்னாபிரிக்க அணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 105 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பதாகவே முடிவுக்கு வந்திருந்தது. 

 

தற்போது களத்தில், தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களுடனும், டுஷ்மந்த சமீர ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

 

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, வேர்ணன் பிளாந்தர் மூன்று விக்கெட்டுகளையும், கைல் அபொட் இரண்டு விக்கெட்டுகளையும், கேஷவ் மஹராஜ், கஜிஸ்கோ றபடா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

முன்னதாக, முதல் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் 286 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், தென்னாபிரிக்க அணி சார்பாக ஜீன் போல் டுமினி 63, ஸ்டீபன் குக் 59, டீன் எல்கர் 45, அணித்தலைவர் பப் டு பிளெஸி 37, விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் 37 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த இனிங்ஸில், சுரங்க லக்மால் 63 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் போட்டிகளில், இனிங்ஸொன்றின் அவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

 

சுரங்க லக்மால் தவிர, ரங்கன ஹேரத், நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

 

ஸ்‌கோச்சேர்ஸை வென்றது சிக்ஸர்ஸ்

 

அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் தொடரில், இன்று (27) இடம்பெற்ற போட்டியொன்றில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பேர்த் ஸ்‌கோச்சேர்ஸ் அணியையே ஆறு விக்கெட்டுகளினால் சிட்னி சிக்ஸர்ஸ் தோற்கடித்துள்ளது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய பேர்த் ஸ்‌கோச்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

 

131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 18 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், சாம் பில்லிங்ஸ் 40(30), ஜொஹான் போத்தா ஆட்டமிழக்காமல் 30(30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அன்ரூ தயே மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

றசலின் துடுப்புக்கு மீண்டும் அனுமதி

 

அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்றே றசலின் கறுப்பு துடுப்பு மட்டையை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. 

 

பந்தைப் பாதுகாக்க உதவும் தெளிவான மேற்புற அட்டை சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே, பிக் பாஷ் தொடரில், அன்றே றசலின் கறுப்புத் துடுப்பு மட்டையைப் பயன்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது.

 

பிக் பாஷ் தொடரில், சிட்னி தண்டேர்ஸ் அணியின் முதலாவது போட்டியில் கறுப்புத் துடுப்பு மட்டையை அன்றே றசல் பயன்படுத்தியிருந்தபோதும், குறித்த துடுப்பு மட்டையால் பந்தில் கறுப்பு அடையாளங்கள் ஏற்படுகின்றன என்ற போட்டி அதிகாரிகளின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து, குறித்த துடுப்பாட்ட மட்டைக்கான அனுமதியை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீளப்பெற்றிருந்தது.