இங்கிலாந்து குழாமில் கேட்டன் ஜெனிங்ஸ், லியாம் டோஸன்

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி 2 போட்டிகளுக்குமான இங்கிலாந்துக் குழாமில், இளம் வீரர்களான கேட்டன் ஜெனிங்ஸ், லியாம் டோஸன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

காயமடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹசீப் ஹமீட்டுக்குப் பதிலாக கேட்டன் ஜெனிங்ஸும் சகலதுறை வீரர் ஸபார் அன்சாரிக்குப் பதிலாக லியாம் டோஸனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  
இதில் கேட்டன் ஜெனிங்ஸ், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுநரான றே ஜெனிங்ஸின் மகனாவார்.   

மீண்டும் சிக்கலில் விற்றோரி

 

சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விற்றோரின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக, மீண்டும் கேள்வியெழுப்பபட்டுள்ளது.

 

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கைக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியைத் தொடர்ந்தே, விற்றோரியின் பந்துவீச்சுத் தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே, இவ்வாண்டு பெப்ரவரியில் அவரது பந்துவீச்சுப் பாணி தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டதோடு, அவர் தடை செய்யப்பட்டார். பின்னர் ஜூன் மாதத்தில், தனது பந்துவீச்சுப் பாணியைத் திருத்திய பின்னர், அவர் பந்துவீச அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெண் விருந்தினர்களால் சிக்கிய வீரர்கள்

 

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களான அல்-அமின் ஹொஸைன், சபீர் ரஹ்மான் இருவரும், பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், களத்துக்கு வெளியேயான மிகப்பாரதூரமான ஒழுங்கநெறி மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஏறத்தாழ 15,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களிருவரும், தங்களுடைய ஹொட்டல் அறைகளுக்குள் பெண் விருந்தினர்களைக் கொண்டு சென்றமைக்காகவே இந்தத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் பத்திரிகையொன்று வெளிப்படுத்தியுள்ளது. தொடர் இடம்பெறும் போது, இவ்வாறு செயற்படுவது, ஒழுக்கநெறி மீறலாகக் கருதப்படுகிறது.

 

இதேவேளை, சபீர் ரஹ்மானுக்கும் ஆப்கானிஸ்தான் மொஹமட் ஷஷாத்துக்கும் இடையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக, அவர்களின் போட்டி ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு அபராதம்

 

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியமைக்காக அணித்தலைவர் அஸார் அலிக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதமும், அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

 

வோக்ஸுக்கு பெருவிரலில் சிறுவெடிப்பு

 

மொஹாலியில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடும்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸுக்கு பெருவிரலில் சிறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர்களுக்கு ஓய்வு

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள், ஏற்கெனவே திட்டமிட்டபடி, வெளிநாட்டுச் சுற்றுலாவொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

 

மொஹாலியில் நேற்று நிறைவடைந்த இந்தப் போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் பெரும்பாலான வீரர்கள், டுபாய்க்குச் செல்லவுள்ளனர். தொடர்ச்சியாக நீண்ட நாட்களாகப் போட்டிகளில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கான ஓய்வை வழங்குமுகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் வீரர்கள், டிசெம்பர் 8ஆம் திகதி மும்பையில் ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக, மும்பையில் ஒன்றுகூடவுள்ளனர்.

 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், "இந்த ஓய்வுக் காலம், முக்கியமான நேரத்தில் வருகிறது. தொடர்ச்சியான 3 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின்னர் இது கிடைக்கிறது. இந்த வாரம், எங்களுக்கு ஓய்வாக அமையவுள்ளது. அனேகமான வீரர்கள், டுபாய்க்குப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார். இந்த ஓய்வை வரவேற்ற குக், கிரிக்கெட்டிலிருந்து மனதை எடுத்துக் கொள்ள இது உதவுமெனவும் புத்துணர்ச்சியுடன் மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பை வழங்குமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

 

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்த இங்கிலாந்து அணி, முதலாவது போட்டியில் தோல்வியடைந்த போதிலும், பின்னர் 2-1 என்ற கணக்கில் அந்தத் தொடரை வென்றிருந்தது. அதை ஞாபகப்படுத்திய குக், "ஐந்து நாட்களாக, சிறப்பான பெறுபேறை வெளிப்படுத்துவது தான் எமக்கான சவாலாகும். ஒரு போட்டியில் (முதலாவது டெஸ்ட்) அதை நாம் செய்திருந்தோம். ஆனால் அடுத்த 2 போட்டிகளிலும் நாம் அதைச் செய்திருக்கவில்லை.

 

"2012ஆம் ஆண்டில் நாம் விளையாடிய இந்திய அணி, வேறானாது. இப்போதைய அணியுடன் ஒப்பிடும் போது, சிறிது முதுமையான அணி. அத்தோடு 2012இல், நாம் அனுபவமிக்க வீரர்களாக இருந்தோம்" என்றும் குக் குறிப்பிட்டார்.

‘இந்தியத் தொடரில் கமின்ஸ் விளையாடலாம்’

 

இந்தியாவுக்கெதிராக அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பற் கமின்ஸ் விளையாடக்கூடுமென, அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

2011ஆம் ஆண்டு, 18 வயதானவராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட கமின்ஸ், அப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் பங்களித்திருந்தார். அதனால் அவர், அப்போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

 

ஆனால், அதன் பின்னர், உடற்றகுதிப் பிரச்சினைகள் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பற் கமின்ஸ், இதுவரையில் மேலதிகமாக எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. 5 ஆண்டுகளில் 18 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 15 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலுமே அவர் விளையாடியுள்ளார்.

 

இந்நிலையிலேயே, நியூசிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், பற் கமின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஓர் ஆண்டுக்கும் மேலான காலப்பகுதியில், அவுஸ்திரேலியக் குழாமில் அவர் சேர்க்கப்பட்டுள்ள முதலாவது தடவை இதுவாகும்.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டீவன் ஸ்மித், "அவர் (கமின்ஸ்) அதிக வேகத்துடன் பந்துவீசினார் போல் காணப்பட்டது. ஆகவே அணியில் ஸ்டார்க், ஹேஸல்வூட், கமின்ஸ் ஆகியோரைக் கொண்டிருப்பது சிறப்பானது. அது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது" என்றார்.

 

பற் கமின்ஸ், அண்மைக்காலத்தில் அதிகப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை என்றாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது உடற்றகுதியை நிறைவேற்றுவதன் மூலமாக, இந்தியத் தொடருக்குத் தன்னை அவர் தயார்படுத்த முடியுமென ஸ்மித் குறிப்பிட்டார்.

 

"இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடப் போகிறார். இந்தப் பருவகாலத்தின் இறுதியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தைரியமாகக் கூறுவேன். கிறிஸ்மஸுக்குப் பின்னர், ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்குபற்றுவார் என நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்த ஸ்மித், "இந்தியாவில் விளையாடுவது சாத்தியமானது. ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி, எவ்வாறு நிலைமை உள்ளது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

 

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என வெள்ளையடிப்புச் செய்து வெற்றி பெற்றுள்ளது. அண்மைக்காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக செயற்பட்டு வந்த பாகிஸ்தான் அணி திடீரென மிக மோசமாக தோல்வியடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் முதலிடத்திலிருந்த அணி இந்தத் தொடரின் பின்னர் நான்காமிடத்திலுள்ளது. பாகிஸ்தான் அணி, இலங்கையில் வைத்து 2014ஆம் ஆண்டு தோல்வியடைந்த பின்னர் தற்போதே தொடர் ஒன்றில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

 

இங்கிலாந்தில் வைத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அவ்வளவு பலமில்லாத நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளமை ஆச்சரியமே. நியூசிலாந்து அணிக்கு இது ஒரு நல்ல மீள் வருகை தொடர். கடந்த வருடம் இலங்கை அணியை தமது நாட்டில் வெற்றி பெற்ற பின்னர் நியூசிலாந்து அணி முக்கிய அணியுடனான தொடரை வென்றுள்ளது. அவுஸ்திரேலியா அணியுடன் சொந்த நாட்டில் தோல்வி. அதன்பின்னர் தொடர்ந்து வெளிநாட்டுத் தொடர்கள். சிம்பாப்வே அணியுடன் மாத்திரமே வெற்றி பெறமுடிந்தது.

 

பாகிஸ்தான் அணியை 32 வருடங்களின் பின்னர் தொடர் ஒன்றில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் வைத்து 84ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை வென்ற பின்னர் தற்போதே நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு தொடர்களுக்கும் இடையே 10 தொடர்கள் நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளன. இவற்றில் 7 தொடர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்தளவுக்கு பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அந்த ஆதிக்கத்துக்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.

 

இரு அணிகளுக்குமிடையில் 55ஆம் ஆண்டு ஆரம்பித்த டெஸ்ட் தொடர்களில், மூன்றில் மட்டுமே நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 22 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன.  இவற்றில் 6 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தான் அணி 13 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையில் நியூசிலாந்தில் நடைபெற்ற 31 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 10 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 14 போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்துள்ளன. 55 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதியுள்ளன. 24 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 10 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன. 21 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன.

 

மிகப் பலமாக நியூசிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது மிகப்பெரிய விடயமே. எப்போதும் ஆச்சரியப்பபடவும், அதிர்ச்சியடையவும் வைக்கும் அணி பாகிஸ்தான் அணியே. இந்தத் தொடரிலும் அதுதான் நடந்திருக்கின்றது. மிக அபாரமாக வெற்றிகளை அள்ளிக்குவிக்க ஆரம்பித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பு இருக்க மீண்டும் பழைய நிலைக்கு அணி சென்றுவிட்டது.

 

இந்தத் தொடர் முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களுக்கு சாதகத் தன்மையைத் தந்துள்ளது. பாகிஸ்தான் அணியிலும் பார்க்க நியூசிலாந்து அணிக்குப் பந்து வீச்சுப் பலம் அதிகம். அந்த வித்தியாசமே இந்தத் தொடரின் வெற்றியை தீர்மானித்துள்ளது. 80 விக்கெட்டுகளில் 67 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில் 40 விக்கெட்டுகள் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள். துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக ஓட்டங்களை பெற முடியவில்லை. நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற ஓட்டங்களே அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. முதற்போட்டியின் நான்காம் இனிங்ஸிலும், இரண்டாவது போட்டியின் மூன்றாம் இனிங்ஸிலும் நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டனர். இந்த இரண்டு இனிங்ஸிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களினால் சிறப்பாகச் செயற்பட்டு நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை தகர்க்க முடியவில்லை.

 

வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். குறிப்பாக, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு மிக சிறப்பாக அமைந்தது. அவர்கள் விக்கெட்டுகளை அள்ளி எடுக்க, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் போதியளவு ஓட்டங்களை எடுக்க இயலவில்லை. அண்மைக்காலமாக ஓட்டங்களை அள்ளிக் குவித்து வந்த யுனிஸ்ஸ் கான் கூட ஓட்டங்களைப் பெற முடியாமல் தடுமாறிப்போனார். முதற் போட்டியில் விளையாடிய மிஸ்பா உல் ஹக் கூட தடுமாறிப்போனார்.

 

இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு வீரர்களுக்கு அறிமுகத்தை வழங்கியது. இவர்கள் இருவருமே இந்தத் தொடர் வெற்றியில் முக்கிய பங்கு எடுத்துள்ளனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மார்ட்டின் கப்திலுக்குப் பதிலாக சேர்த்துக்கொள்ளபப்ட்ட ஜீட் றாவல் மூன்று அரைச்சதங்களைப் பெற்றார். கொலின் டி கிறான்ட்ஹொம், முதலாவது இனிங்ஸிலேயே ஆறு விக்கெட்களைக் கைப்பற்றியதோடு, போட்டியின் நாயகன் விருதையும் தனதாக்கினார்.  துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நியூசிலாந்து அணிக்கு சகலதுறை வீரர் ஒருவர் மீண்டும் கிடைத்துளார் எனக்கூறலாம்.  றொஸ் டெய்லர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார். டிம் சௌதியின் பந்து வீச்சு பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை அள்ளி எடுத்துக்கொண்டது. 13 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக் கொண்டார்.

 

ஏழாமிடத்திலிருந்த  நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் ஒரு இடம் முன்னோக்கி வந்துள்ளது. ஆனாலும் இந்த முன்னேற்றம் மற்றைய அணிகளுடன் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் ஒரு தொடர் வெற்றி இன்னமும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை தரலாம். ஆனால் பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்து அணியுடனான தொடரை இந்தியா அணி வெற்றி பெற்ற போது முதலிடத்தை இழந்தது. ஆனால் தற்போது நான்காமிடத்திலுள்ளது.

 

இந்த தொடர் முடிவில் தரப்படுத்தல்

 

1              இந்தியா                            29                           3328                      115

2              இங்கிலாந்து                     44                           4631                       105

3              அவுஸ்திரேலியா             40                           4189                      105

4              பாகிஸ்தான்                      32                           3274                      102

5              தென்னாபிரிக்கா               29                           2944                      102

6              நியூசிலாந்து                      38                           3666                       96

7              இலங்கை                          35                           3370                        96

8              மேற்கிந்தியத் தீவுகள்      30                           2077                        69

9              பங்களாதேஷ்                   15                             978                          65

10           சிம்பாப்வே                         10                              48                            5

 

தொடரில் 100 ஓட்டங்களை தாண்டியவர்கள்

 

றொஸ் டெய்லர்                   2              3              150         102*      75.00     81.08     1              0             

ஜீட் றாவல்                            2              4              148         55           49.33     42.89     0              2             

பாபர் அஸாம்                       2              4              142         90*         47.33     46.10     0              1             

ஷமி அஸ்லாம்                    2              4              122         91           30.50     33.79     0              1             

கேன் வில்லியம்சன்            2              4              120         61           30.00     54.05     0              1             

அஸார் அலி                         2              4              105         58           26.25     26.85     0              1             

 

தொடரில் 5 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்.

 

டிம் சௌதி                          2              4              87.4        213         13           6/80       8/140     16.38     2.42       

டி கிறான்ட்ஹொம்            2              4              50.5        110         9              6/41       7/64       12.22     2.16       

நீல் வக்னர்                         2            4              59.1        163         9              3/34       6/116     18.11     2.75       

மொஹமட் ஆமிர்             2              4              66.0        200         7              3/43       4/55       28.57     3.03       

சொஹைல் கான்               2              4              70.0        267         7              4/99       4/168     38.14     3.81       

இம்ரான் கான்                    1              2              41.1        128         6              3/52       6/128     21.33     3.10       

ட்ரெண்ட் போல்ட்               1           2              33.0        76           5              3/37       5/76       15.20     2.30       

ஹமீட்டைப் புகழ்கிறார் கோலி

 

இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹசீப் ஹமீட்டை, இந்திய அணியின் தலைவர் விராத் கோலி புகழ்ந்துள்ளார்.

 

இந்தத் தொடருக்கு வருவதற்கு முன்னர், விராத் கோலியைச் சந்திப்பது தொடர்பாகத் தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய ஹமீட், விரலில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து இடைவிலக வேண்டிய நிலையில், தனது கிரிக்கெட் நாயகனாலேயே புகழ்ச்சியைப் பெற்றுள்ளார்.

 

"19 வயது வீரருக்கு, அவர் மிகச்சிறந்த இயல்பை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணிக்கு அவர், மிகச்சிறந்த வீரராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவரது திறமைகளை அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தால், அனைத்து வகையான போட்டிகளிலும் அவர், எதிர்காலத்தில் நட்சத்திரமாக வருவார்" என்றார்.

 

அவரது விரலில் காயம் ஏற்பட்டு, வலியுடன் காணப்பட்ட போதும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை அடித்தாடி, ஆட்டமிழக்காத அரைச்சதத்தைப் பெற்றுக் கொண்ட ஹமீட்டின் இயல்பையும் கோலி பாராட்டினார்.

‘வரலாற்றில் சிறந்த வெற்றிகளுள் ஒன்று’

 

பாகிஸ்தான் அணிக்கெதிராக நேற்றுப் பெற்றுக் கொள்ளப்பட்ட டெஸ்ட் வெற்றி, வரலாற்றில் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளுள் ஒன்றாகப் பதியப்படும் என, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

 

இறுதி நாளில் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தேநீர்பான இடைவேளை வரை ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து, வெற்றி – தோல்வியற்ற முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு, நியூசிலாந்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

 

வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த கேன் வில்லியம்ஸன், "சப்ராஸின் விக்கெட், முக்கியமான தருணமாக அமைந்தது. ஆனால், நாளின் 3 வேளைகளுக்குள் ஒரு வேளையில் 9 விக்கெட்டுகளை நீங்கள் வீழ்த்தும் போது, அவை எல்லாமே பெரிய தருணங்கள் தான்.

 

"எல்லாமே விரைவாக நடக்கும். தேநீர் நேரத்தின் போது காணப்பட்ட உணர்வுக்கும் போட்டியின் பின்னர் காணப்படும் உணர்வுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இது, மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளுள் ஒன்றாக அமையும்" என்று தெரிவித்தார்.

 

போட்டியின் ஆடுகளம், துடுப்பாட்டத்துச் சாதகமான ஒன்றாகவே காணப்பட்டதாகத் தெரிவித்த வில்லியம்ஸன், பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டமைக்கு, விசேடமான காரணங்கள் எவையும் இருந்திருக்கவில்லையெனவும் தாங்கள் பொறுமையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் தரப்படுத்தலில் 7ஆம் இடத்தில் காணப்பட்ட அவ்வணி 6ஆம் இடத்துக்கு முன்னேறியதோடு, 2ஆம் இடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி, 4ஆம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.