இன்னும் தயாரில்லை; ஆனால் விளையாடுவார்

 

பயிற்சியின் போது, முழங்காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, இன்னமும் குணமடைந்துவரும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், தான் இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை என ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பருவகாலம் ஆரம்பிக்கும் போட்டியாக, நவம்பர் 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அமையவுள்ளது. பருவகாலத்தின் முதலாவது போட்டியில், ஸ்டார்க் பங்குபற்ற வேண்டுமென்பது, அவுஸ்திரேலிய அணியின் எதிர்பார்ப்பு ஆகும்.

 

எனினும், அவரது காயம், இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. காயம், இன்னமும் மூடப்படாமல், தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது. எனினும், அதற்கு மத்தியிலும், முதலாவது போட்டியில் அவர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

‘உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை’

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், "240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங்களுக்கு 4 அல்லது 5 பிடி வாய்ப்புகள் கிடைத்தன. இலகுவான வாய்ப்புகளன்று, ஆனால் நீங்கள் பிடிக்க வேண்டிய பிடிகள். அந்த மோசமான நிலையை, பிடியொன்றைத் தவறவிட்டு, நானே ஆரம்பித்தேன்" என்று குறிப்பிட்டார்.

 

பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடியது என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், தனது பந்துவீச்சாளர்கள் குறித்தும் விமர்சனங்களை வெளிப்படுத்தத் தவறவில்லை. "நாங்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை. ஆம், அத்துடன் அவர்களது சுழற்பந்து வீச்சாளர்கள், எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களை விடச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். எங்களிடம், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதை, நாங்கள் மறைக்க முடியாது" என்றார்.

 

இந்தத் தொடரைத் தொடர்ந்து, இந்தியாவில் இடம்பெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி, பங்களாதேஷில் இடம்பெற்ற தோல்விகளின் வடுக்களால் பாதிக்கப்படுமென்பதையும், குக் ஏற்றுக் கொண்டார்.

 

அதேபோல், முன்னேறிவரும் பங்களாதேஷ் அணிக்கும், தனது பாராட்டுகளை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. "கள நிலைமைகள், மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், அவை தொடர்பில் என்னிடம் முறைப்பாடுகள் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது அது தான். பங்களாதேஷ் அணி, இந்த வெற்றிக்கு மிகவும் உரித்துடையது. அவர்கள், சிறப்பான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

‘பாம்பின் தலைக்கு இலக்கு வைப்பு’

 

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை இலக்கு வைத்துள்ளதாக, தென்னாபிரிக்க அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

 

"பாம்பின் தலையை நீங்கள் வெட்டினால், உடம்பின் ஏனைய பகுதிகளும் வீழ்ந்துவிடும். கடந்த காலங்களில், அதை நாங்கள் செய்திருக்கிறோம். அணித்தலைவரை இலக்கு வைக்க நாங்கள் முயன்றிருக்கிறோம், ஏனெனில், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால், ஏனையோரையும் அது பாதிக்கும்" என்று, டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்டெய்ன், "அவுஸ்திரேலியத் தலைவர்களே, துடுப்பாட்டத்தை முன்கொண்டு செல்கிறார்கள். றிக்கி பொன்டிங், மைக்கல் கிளார்க், பின்பு ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை, மிகச்சிறந்த தலைவரான ஸ்டீவ் வோ-இன் நிலையில் வைக்கலாம். அணித்தலைவரை நீங்கள் கைப்பற்றினார், ஏனைய வீரர்கள், அவர்களில் அதிகம் தங்கியிருப்பர். கப்பலை, அவரே வழிநடத்துகிறார். அவ்வாறான கப்பலில் நீங்கள் ஓட்டை இட்டால், அதை நீங்கள் மூழ்கடிக்கலாம். அது இலகுவானதன்று, ஆனால் அவ்வழியால் நீங்க மூழ்கவைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

 

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான றிக்கி பொன்டிங்கை இலகுவாக ஆட்டமிழக்க வைத்து, அத்தொடரை தென்னாபிரிக்க அணி வென்றிருந்தது. அதே போன்ற பாணியையே, டேல் ஸ்டெய்ன் முன்வைத்துள்ளார்.

 

இலங்கைக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவுஸ்திரேலிய அணி, அதன் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, 0-5 என்ற கணக்கிலும் இழந்திருந்தது. அவ்வாறான நிலையில், அவுஸ்திரேலிய அணி, சிறிதளவு பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் ஸ்டெய்ன் குறிப்பிட்டார்.

ஸ்டோக்ஸின் அபராதம் குறித்து குக் கடுப்பு

 

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நடுவர்களின் பணிப்புரைகளை ஏற்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறித்து, அவ்வணித் தலைவர் அலஸ்டெயர் குக், தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுடன், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்டோக்ஸை, அதை நிறுத்துமாறு கோரப்பட்டதோடு, அணித்தலைவர் குக்குக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ப அவர் நடக்கவில்லையென முறையிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டோக்ஸின் ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.

 

எனினும், இந்த விடயத்தில், நடுவர்கள் தேவையன்று நுழைந்ததாக, குக் தெரிவித்துள்ளார். "சபீரும் ஸ்டோக்ஸும், போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். என்னைப் பொறுத்தவரை, மக்கள் அதை விரும்புகிறார்கள். அதைத் தான் மக்கள் பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

‘பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு அற்புதமான தருணம்’

 

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்டமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்பிக்கூர் ரஹீம், பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணமென இவ்வெற்றியை வர்ணித்தார். பங்களாதேஷ் அணியின் வரலாற்றில், அவ்வணி பெற்றுக் கொண்ட 8ஆவது டெஸ்ட் வெற்றியாக இருந்த போதிலும், அவ்வணியின் மிக முக்கியமான வெற்றியாக இது கருதப்படுகிறது.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ரஹீம், "இது, பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணம். இந்த டெஸ்ட், இருபுறமும் மாறி, மாறிக் காணப்பட்டது. எந்தப் பக்கமாக இப்போட்டி செல்கிறது எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழந்திருக்காத போது, சிறப்பான திறனை, வீரர்கள் வெளிப்படுத்தினர். இந்த கள நிலைமைகளில், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினால், புதிய துடுப்பாட்ட வீரருக்குக் கடினமாக இருக்குமென நாம் நம்பினோம்" என்றார்.

 

தேநீர்பான இடைவேளைக்குச் செல்லும் போது 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காமல் இருந்த நிலையில், அந்த இடைவேளையின் பின்னரே, இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரஹீம், "பயிற்றுநர், சிறிது கோபப்பட்டார். தேநீருக்கு முன்பாக, நாங்கள் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர்கள், சரியான இடத்தில் பந்துவீச வேண்டுமென உணர்ந்து பந்துவீசினர்" என்று குறிப்பிட்டார்.

 

அண்மைக்காலமாக முன்னேறிவரும் பங்களாதேஷ் அணியின் அடுத்த சவாலாக, பங்களாதேஷுக்கு வெளியில் சிறப்பாகச் செயற்படுவதே காணப்படுவதாக, ரஹீம் ஏற்றுக் கொண்டார். "கடந்த 2 ஆண்டுகளாக, பங்களாதேஷுக்குள், நாங்கள் சிறப்பாக விளையாடினோர். ஆனால் எங்களது அடுத்த சவால், வெளிநாடுகளில் விளையாடுதலாகும். ஆடுகளங்களுக்குற்ப நாங்கள் விளையாட வேண்டும். நாட்டுக்குள் கிடைக்கும் அதே கள நிலைமைகளை, எல்லா இடங்களிலும் பெற முடியாது" என்று குறிப்பிட்டதோடு, இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாடும் போது, அந்த நிலையை அடைய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இம்ரான் கானை முந்தினார் மிஸ்பா

 

பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்ற சாதனையை, மிஸ்பா உல் ஹக் படைத்துள்ளார். முன்னாள் சகலதுறை வீரரும் சகலதுறை வீரருமான இம்ரான் கானின் சாதனையே, அவர் முறியடித்துள்ளார்.

 

இதற்கு முன்னர் 48 போட்டிகளில் தலைமை தாங்கியிருந்த மிஸ்பா, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியிலேயே, தனது 49ஆவது போட்டியில் தலைமை தாங்கி, இச்சாதனையைப் படைத்தார்.

 

இம்ரான் கானின் சாதனையை முறியடித்தமை மட்டுமன்றி, 49 போட்டிகளில் தலைமை தாங்கிய சௌரவ் கங்குலியையும், அவர் சமப்படுத்தினார். இருவரும், அதிக போட்டிகளில் தலைமை தாங்கிய அணித்தலைவர்களின் பட்டியலில், 16ஆவது இடத்தில் உள்ளனர்.

 

அதிக போட்டிகளில் தலைமை தாங்கியவராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் கிறேம் ஸ்மித் காணப்படுகிறார். அவர், 109 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். தற்போதுள்ள தலைவர்களில், 54 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள அலஸ்டெயர் குக்கே, முன்னணியில் காணப்படுகிறார்.

‘உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்’

 

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போட்டியில், அவ்வணி பெற்றுக் கொண்ட 76 ஓட்டங்கள் என்ற மோசமான துடுப்பாட்டப் பெறுபேறு தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

"துடுப்பாட்டப் பிரிவாக, நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இந்திய அணியிலிருந்த சுழற்பந்து வீச்சாளர்கள், சிறப்பாகப் பந்துவீசினர். ஆனால், 8 விக்கெட்டுகளை 20 அல்லது அதற்கு அண்மையானஓட்டங்களுக்கு விட்டுக் கொடுப்பதை அது நியாயப்படுத்தாது" என்று அவர் குறிப்பிட்டார்.

 

இந்தத் தொடரில், துடுப்பாட்ட வீரர்களில் டொம் லேதம், அற்புதமாக விளையாடினார் என்று குறிப்பிட்ட வில்லியம்ஸன், இந்தத் தொடரின் குறிப்பிடத்தக்க வீரராக, சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான மிற்சல் சான்ட்னெர் அமைந்தார் என்றார்.

 

"அவர் அற்புதமாக இருந்தார். இளைய வீரர், புதிதாக அணிக்குள் வந்தவர். இங்குள்ள ஆடுகள நிலைமைகள், சுழற்பந்து வீச்சாளருக்குச் சாதகமானவை என்ற போதிலும், இங்கு வரும் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறுவதுண்டு. ஆனால் மிற்ச், ஒவ்வொரு நாளும் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். அவரது துடுப்பாட்டத்தையும் களத்தடுப்பையும் மறக்கவியலாகாது" என, வில்லியம்ஸன் மேலும் குறிப்பிட்டார்.

‘விக்கெட்டுகளைக் கைப்பற்றவே முயன்றேன்’

 

தனது கிரிக்கெட் வாழ்வில், முதலாவது தொடர் நாயகன் விருதை வென்ற அமித் மிஷ்ரா, இத்தொடர் முழுவதிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றவே முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.

 

இத்தொடரின் முதல் 4 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தீர்மானமிக்க 5ஆவது போட்டியில், இந்திய அணி, அதிரடியான வெற்றியைப் பெற்றிருந்தது. இத்தொடரில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த மிஷ்ரா, தொடரின் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மிஷ்ரா, "இந்தத் தொடரில், விக்கெட்டுகளைக் கைப்பற்றவே முயன்றேன். நிலைமைக்கேற்றவாறு பந்து வீசினேன். ஆனால், எனதுஎண்ணம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதாகவேஇருந்தது. ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முயன்றால், உங்களது பந்துவீச்சுக்கு அதிக ஓட்டங்கள் பெறப்படும். இறுதி (5ஆவது) போட்டியில், பந்துவீச்சாளர்கள், சிறப்பாகப் பந்துவீசினர்" என்றார்.

 

சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளர்களான இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட இத்தொடரில், சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளராகக் காணப்பட்ட மிஷ்ரா, சிரேஷ்ட வீரராக, தனது அனுபவங்களை, புதிய வீரர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, தனது கருத்துகளை, அணித்தலைவர் மகேந்திரசிங் டோணியுடனும் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

 

சிரேஷ்ட வீரர்களில்லாது பெறப்பட்ட இந்தத் தொடர் வெற்றியை "முக்கியமான தொடர் வெற்றி" எனக் குறிப்பிட்ட மிஷ்ரா, இளைய வீரர்கள் காணப்படும் நிலையில், அவர்களின் மனோநிலையை உயர்ந்தளவில் பேணுவது அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

தொடரைச் சமப்படுத்தியது பங்களாதேஷ்

 

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வரலாற்று வெற்றியைப் பெற, தொடர், 1-1 என்று சமநிலையானது.

 

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தமது முதலாவது இனிங்ஸில், தமிம் இக்பாலின் 104, மொமினுள் ஹக்கின் 66 ஓட்டங்களின் துணையோடு, 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொயின் அலி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

அடுத்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் 54, கிறிஸ் வோக்ஸின் 46, அடில் ரஷீட்டின் ஆட்டமிழக்காத 44 ஓட்டங்களின் துணையோடு 244 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மெஹெடி ஹஸன் மிராஸ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்,

 

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இம்ரல் கைஸ் 78, மஹ்முதுல்லா 47, ஷகிப் அல் ஹஸன் 41, தமிம் இக்பால் 40, ஷுவகட்டா ஹொம் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் நான்கு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதனையடுத்து, 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் விக்கெட் எதனையும் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 59, பென் டக்கெற் 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மெஹெடி ஹஸன் மிராஸ் ஆறு விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹஸன் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இப்போட்டியில் 12 விக்கெட்டுகளையும் இத்தொடரில் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மெஹெடி ஹஸன் மிராஸ், போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.  

 

இலங்கையின் சிம்பாப்வே சுற்றுப் பயணம்

 

இலங்கை அணி, சிம்பாப்வே நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. சிம்பாப்வே அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணி 12 வருடங்களுக்கு பின்னர் சிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுளள்து.

 

மார்வன் அத்தப்பத்துவின் தலைமையில்யில், இலங்கை அணி மிகப்பலமாக இருந்த வேளையில், சிம்பாப்வே சென்று சிம்பாப்வே அணியைப் பிரித்து மேய்ந்து விட்டு வந்திருந்தனர். ஆனால் தற்போது அது சாத்தியமா? சிம்பாப்வே அணியும் கூட கொஞ்சம் சவால் விடும் நிலையில் உள்ளது. அவுஸ்திரேலிய அணியை இலங்கையில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து வெற்றியீட்டி இலங்கை பலமாகவே உள்ளது. சிம்பாப்வே அணியிடம் தோல்விகளைச் சந்தித்து வருமளவுக்கு இலங்கை அணி ஒன்றும் மோசமாக இல்லை.

 

உபாதையடைந்த வீரர்களைத் தவிர்த்து  பலமான அணியாகவே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையடைந்துள்ள நிலையில் அணிக்கு பாதிப்பு என்றே கூறலாம். ஏனெனில் தினேஷ் சந்திமாலும் உபாதையிலிருந்து குணமாகி வருவததால் தலைமையிடம் பின்னடைவாகவே உள்ளது. இவர்களைத்   தவிர்த்து மற்றைய முக்கிய வீரர்கள் யாவரும் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் இலங்கை அணிக்கு நல்லதொரு பயிற்சித்  தொடராக அமையவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான தொடரை  மேற்கொள்ளவுள்ளது. இது நல்ல களத்தினை இலங்கை அணிக்கு வழங்கும். தென்னாபிரிக்காவின் அண்டைய நாட்டில் இந்த்த தொடர்  நடைபெறுவதனால் இலங்கை அணி வீரர்கள் காலநிலையை பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அத்துடன் ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பங்குபற்றுவதானால் இலங்கை அணி நல்ல பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஓரளவு வீரர்கள் தயார் செய்யப்பட்டு விட்டாலும் பந்துவீச்சாளர்கள் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தென்னாபிரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராக இல்லை என்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவே. தம்மிக்க பிராசத், துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதையடைந்துள்ள நிலையில் இவர்கள் இந்தத் தொடரிலும் மீள முடியவில்லை. எனவே இவர்கள் இருவரும் அடுத்த தொடரில் விளையாட முடியுமா என்பது கேள்வியே. மீண்டும் அணிக்குள் வந்தாலும் மேலதிகமாக இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை. மேலதிகமாக அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில் தெரிவுக்குகுழுவினர் அதற்கேற்றபடி அணியை தெரிவு செய்துள்ளனர்.

 

இலங்கை அணி விபரம்

குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், கெஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்ல, ரங்கன ஹேரத்(தலைவர்), டில்ருவான் பெரேரா, லக்ஷான் சன்டகான், கஸூன் மதுசங்க, லஹிரு குமார, சுரங்க லக்மால், அசேல குணரட்ன, உப்புல் தரங்க 

 

இரு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மத்தியுஸுக்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் காரணமாக,  அணியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தரங்க மத்திய வரிசையில் விளையாடுவார் என நம்பலாம். தினேஷ் சந்திமால் அணியில் இடம் பிடிக்கவில்லை. அவரின் பெருவிரலில் செய்துகொண்ட சத்திர சிகிச்சை முழுமையாக குணமடையாத நிலையில் அவருக்கு பதிலாக நிரோஷான் டிக்கவெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வீரர். அத்துடன் விக்கெட் காப்பாளர். விக்கெட் காப்பாளர் அணிக்கு தேவையில்லை. ஏற்கனவே  3 விக்கெட் காப்பளர்கள் அணியில் உள்ளனர். இவர் அணியில் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்துவரும் ஒருவர். ஆனால் இவரின் தெரிவில் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. இவரிலும் பார்க்க சிறப்பாக ஓட்டங்களை குவித்து வரும் வீரர்கள் உள்ள போதும் இவருக்கு இடம் வழங்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற முதற் தரப்போட்டிகளிலும் ஓட்டங்களை பெரிதாக இவர் பெறவில்லை. இப்படி எல்லாம் எழுதியபடி கொஞ்சம் கடந்த முதற்தர போட்டிகளில் ஓட்டங்களை பெற்றவர்களை பார்த்தால் இவரே கூடிய ஓட்டங்களை பெற்றவர் இவரே.

 

திமுத் கருணாரட்ன அடுத்த வீரர். அவர் அணியில் தொடர்கிறார். ஆக மத்திய வரிசையின் முக்கிய இரு வீரர்களும், இலங்கை அணியின் முக்கியமான இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் இல்லாத நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பலம் இழந்துள்ளதாகவே கூற வேண்டும். தலைவராக முதற் தடவையாக ரங்கன ஹேரத் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு எல்லாமே காலம் தாமதமாகியே கிடைத்து வந்துளளது. தலைமைப் பொறுப்பை இவாறு செய்து காட்டப் போகின்றார்? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

 

திமுத் கருணாரட்ன டெஸ்ட் போட்டிகளில் அண்மைய போட்டிகளில் மோசமாகவே துடுப்பாடியுளார். ஆனாலும் கடந்த காலங்களில் இவர் சிறப்பாக செயற்பட்டமையும், அண்மைய முதற் தர போட்டிகளில் சதமடித்துள்ளமையும் இவருக்கு வாய்ப்புகளை தந்துள்ளது. இவரை விட வேற எந்த தெரிவும் தெரிவுக்குழுவினருக்கு இல்லை. மற்றைய துடுப்பாட்ட இடங்கள் சரியாக இருக்கின்றன. தினேஷ் சந்திமாலின் இடத்திற்கு டிக்வெல்ல விளையாடுவார். ஆனாலும் அணியில் இடம் பிடித்துள்ள அசேல குணரட்ன அந்த இடத்தில விளையாடுவது இலங்கை அணிக்கு பலமாக அமையும். மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் இவர்.  மத்தியூஸ் இல்லாத நிலையில் சகலதுறை வீரர் அணிக்கு தேவை என்ற நிலையில் அசேல குணரட்ன விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி பார்த்தல் டிக்வெல்ல, தரங்க ஆகியோருக்கிடையில் ஒரு போட்டி நிலவலாம்.

 

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் , டில்ருவான் பெரேரா ஆகியோர் அணியில் நிச்சயம் விளையாடக் கூடியவர்கள். ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடுவதாக இருந்தால் ரங்கன ஹேரத் மட்டும் விளையாடுவார்.மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் லக்ஷான் சன்டகான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.   வேகப்பந்து வீச்சாளர்களில் சுரங்க லக்மால் நிச்சயமானவர். அவுஸ்திரேலிய அணியுடன்  அறிமுகத்தை மேற்கொண்ட விஸ்வ பெர்னாண்டோ அணியால் நீக்கப்பட்டுள்ளார். 2 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை கைபப்ற்றினார். பின்னர் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் அணியில் இல்லை. என்ன தெரிவு இதுவென புரியவில்லை. இந்த நிலையில் புதிய பந்துவீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். விஸ்வ பெர்னாண்டோ இடதுகர வேகப்பந்து வீச்சாளர். இது இன்னுமொரு பலம். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடியுள்ள லஹிரு கமகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைய முதற் தர போட்டிகளில் ஓரளவு சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

 

வேகப்பந்து வீச்சாளராக அணியில் இணைக்கப்பட்டுள்ள லஹிரு குமார அதிகம் பேசபப்டுபவராக உள்ளார். 19 வயதான கண்டியை சேர்ந்த இவர் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் போட்டிகளில்   மிக சிறப்பாக பந்துவீசியுளார். இங்கிலாந்து 19 வயதுக்குட்ப்பட்ட அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளையும்,  நான்கு விக்கெட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். இதனை தொடர்ந்து இலங்கை A அணியில் இவர் இணைக்கப்பட்டார். ஆனால் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றினார். ஆனாலும் இவர் மீது தெரிவுக்குழுவினர் நம்பிக்கை வைத்து தெரிவு செய்துள்ளனர். இவரின்  உடல்வாகும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றால் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிம்பாப்வே அணியுடன் இவருக்கு அறிமுகம் நிச்சசயம் வழங்கப்படும். சிறப்பாக செயற்பட்டால் அவருக்கு அணியில் வாய்ப்புகள் தொடரும். 19 வயதுக்குட்பட்ட ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளமையினால் ஒரு நாள் தொடரிலும் கூட இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

 

வேகப்பந்து வீச்சாளர்களில் கஸூன் மதுசங்கவும் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் 86 முதற் தர இனிங்சில் 139 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 25 வயதான இலங்கை அணியின் தெரிவில் நம்பிககையை ஏற்படுத்தியுள்ள ஒருவர். சுரங்க லக்மாலுடன் இன்னுமிருவர் விளையாடும் வாய்ப்புகள் உள்ளனவென்றால் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் கிடைக்கும். அசேல குணரட்ன அணியில் இணைக்கப்பட்டால் இவர்களில் ஒருவர் மட்டும் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

 

இலங்கை அணி  துடுப்பாட்டத்தில் சிறந்த நிலையை அடைந்து வருகின்றது. வேகப்பந்து வீச்சு மட்டுமே இலங்கை அணிக்கு பிரச்சினை தரும் விடயமாக இருந்துளளது. இந்த தொடரில் அதனை சீர்செய்த்துக்கொண்டாள் பலமான தென்னாபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் நம்பிக்கையாக எதிர்கொள்ள முடியும்.

 

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் 10 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுளளது. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்துள்ளன. இந்த 5 போட்டிகளைத்தான் கவனிக்க வேண்டும். சிம்பாப்வே தங்கள் நாட்டில் கொஞ்சம் பலமாகவே செயற்படுவார்கள். அண்மைக்காலங்களில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் சிம்பாப்வே சென்ற வேளைகளில் சிம்பாப்வே அணி தோல்விகளையே சந்தித்தது.

 

2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற தொடர் சமநிலை முடிவை 3 போட்டிகளால் பெற்றுக்கொண்டது. 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சென்ற முதற் தொடரில் மழை குறுக்கிட, சிம்பாப்வே அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை சமன் செய்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 1-0 என்ற வெற்றியை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2-0 என்ற வெற்றியினை இலங்கை அணி மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. எனவே கடந்த கால தொடர்களின் பாடங்களின் அடிப்படையில் இலங்கை அணி செயற்படவேண்டும்.

 

போட்டி அட்டவணை

முதற் போட்டி – ஒக்டோபர் 29 – நவம்பர் 02 – பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.

இரண்டாவது போட்டி – நவம்பர் 06  – நவம்பர் 10 – பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.