பாபர் அஸாம் கன்னிச் சதம்: வென்றது பாகிஸ்தான்

 

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், சார்ஜாவில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், பாகிஸ்தான் இலகுவாக வெற்றியீட்டியது.

 

ஒளிக் கோபுரப் பிரச்சினையால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில், பாகிஸ்தான் அணி, 49 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம், தனது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி சதத்தினைப் பூர்த்தி செய்து 120, ஷர்ஜீல் கான்  54 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறேய்க் பிறாத்வெயிட் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 49 ஓவர்களில், 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 111 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  துடுப்பாட்டத்தில், மார்லன் சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் நான்கு, ஹசன் அலி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக பாபர் அஸாம் தெரிவானார்.

 

இப்போட்டியில் வென்றதன் மூலம், இந்தியாவை முந்தி, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது அணியாக பாகிஸ்தான் மாறியுள்ளது. முதலாவது இடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.

இந்தியாவுக்கெதிராக போராடுகிறது நியூசிலாந்து

 

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

தற்போது களத்தில், ரித்திமான் சகா 14 ஓட்டங்களுடனும் இரவீந்திர ஜடேஜா ஓட்டமெதனையும் பெறாமல் உள்ளனர். முன்னதாக, செட்டேஸ்வர் புஜாரா 87, அஜிங்கியா ரகானே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.

 

பந்துவீச்சில், நியூசிலாந்து அணி சார்பாக, மற் ஹென்றி மூன்று, ஜீதன் பட்டேல் இரண்டு, ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

முன்னர், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

 

இந்திய அணியில், காயமடைந்த லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக ஷீகர் தவான் இடம்பெற்றதுடன், உமேஷ் யாதவுக்குப் பதில் புவனேஸ்வர் குமார் இடம்பெற்றார். நியூசிலாந்து அணியில், உடல் நலமின்மை காரணமாக, அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் அணியில் இடம்பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக ஹென்றி நிக்கொல்ஸ் இடம்பெற்றார். இது தவிர, இஷ் சோதிக்குப் பதிலாக ஜீதன் பட்டேல் அணியில் இடம்பெற்றார்.

DRSஐ பயன்படுத்தாதபோது தீர்ப்புகள் குறித்து முறையிடலாகாது: கோலி

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே (பி.சி.சி.ஐ), தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தைப் (DRS) பயன்படுத்தாது விடுகின்ற போது, நடுவர்களின் தீர்ப்புகள் தவறாகின்ற போது, அது தொடர்பில் முறையிட முடியாது என, இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

 

பி.சி.சி.ஐ-இன் தலைவராக ஶ்ரீனிவாசன் இருந்த போது, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்துக்கு, முழுமையான எதிர்ப்பையே அச்சபை வெளியிட்டது. தற்போது, தலைவர் பதவியிலிருந்து அவர் அகற்றப்பட்டுள்ளதோடு, அத்திட்டத்தை எதிர்த்த மகேந்திரசிங் டோணியும், டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

 

இந்நிலையில், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையில் கொல்கத்தாவில் இன்று ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்த கோலி, "தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு, நாங்கள் நிச்சயமாக யோசிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

 

பந்து செல்லும் திசையைக் கணிப்பிடும் தொழில்நுட்பம் தொடர்பாக, இந்தியாவுக்கு இருக்கும் அதே நம்பிக்கையீனத்தை கோலி வெளியிட்ட போதிலும், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்துக்கு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினார்.

 

"தவறான தீர்ப்புகளை நாங்கள் கடுமையாகக் கருத மாட்டோம். ஏனெனில், நாங்கள் தான் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தைப் பயன்படுத்துவதில்லை என்று முதலில் தீர்மானித்தோம். தட்டிக்கழிப்புகளுக்கு இடமில்லை. அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, அதிலிருக்கும் சந்தேகத்துக்குரிய இடங்கள் தொடர்பாகச் சிந்திக்க முடியும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நடுவர் மறுபரிசீலனைத் திட்டம், உலகளாவிய போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், அது இன்னமும் கட்டாயமாக்கப்படவில்லை. அதைக் கட்டாயமாக்குவதற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் எதிர்ப்பே, முக்கியமான காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தொடரில் அன்டர்சன், வூட் இல்லை

 

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் அன்டர்சன், மார்க் வூட் ஆகியோர் பங்குபற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக பங்களாதேஷ் தொடரில் ஒய்ன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பங்குபெறாத நிலையிலேயே, தற்போது இவர்களிருவரும் பங்குபெற முடியாது என்பது அறிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக தோட்பட்டை உபாதை காரணமாகத் தடுமாறிவந்த அன்டர்சன், அந்த உபாதையிலிருந்து இன்னமும் குணமாகாத நிலையிலேயே, தொடரில் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மார்க் வூட்டுக்கு முன்னர் ஏற்பட்ட இடது கணுக்கால் உபாதை, தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதால், இத்தொடரில் அவராலும் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர்களுக்குப் பதிலாக, டெஸ்ட் குழாமில் ஜேக் போலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் ஸ்டீவன் ஃபின்னும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றில் பி.சி.சி.ஐ-க்கு பலத்த அடி

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாமை குறித்து, அச்சபைக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

லோதா செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், அவற்றில் சிலவற்றைப் பின்பற்றுவதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தயங்கி வந்தது. அந்தப் பரிந்துரைகளுக்கெதிராக, அச்சபையுடன் நெருக்கமான முன்னாள் வீரர்கள் சிலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.

 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற லோதா செயற்குழு, இப்பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு, அச்சபையை மீறி, அமுல்செய்வதற்கான குழுவொன்று உருவாக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் டி.எஸ். தாக்கூர், "சட்டம், தனக்குரியது அன்று என பி.சி.சி.ஐ நினைக்கிறது. எங்களுடைய பணிப்புரைகளை எவ்வாறு அமுல்படுத்துவது என்று எமக்குத் தெரியும். தாங்கள் தான் கடவுள் என பி.சி.சி.ஐ நினைக்கிறது. எங்களுடைய பணிப்புரைக்கேற்ற செயற்படுங்கள், இல்லாவிடில் அதன்படி உங்களைச் செயற்பட வைப்போம். பி.சி.சி.ஐ-இன் செயற்பாடுகள், மோசமானவையாகக் காணப்படுகின்றன" என்றார்.

 

இது தொடர்பில் பதிலளிப்பதற்கு, பி.சி.சி.ஐ-க்கு ஒரு வாரம் காலஅவகாசம் வழங்குவதாக, அச்சபையின் சட்டத்தரணியிடம், பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, கருத்து வெளியிட்டுள்ள லோதா செயற்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான ஆர்.எம்.லோதா, பி.சி.சி.ஐ-இன் தலைவர் அநுரக் தாகூர், நீதிமன்ற உத்தரவை மதிக்காத விதத்தில், கேள்விப்படுத்தப்படக்கூடிய கருத்துகளை மேற்கொண்டுவருவதாகக் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, பல மின்னஞ்சல்கள் அனுப்பட்டதோடு, ஓகஸ்ட் 9ஆம் திகதி, செயற்குழுவில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டும், அவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷுக்கெதிராக ஆப்கானுக்கு வெற்றி

 

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், மொஹமட் நபியின் கலக்கலான சகலதுறைப் பெறுபேறுகளின் உதவியோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி கிடைத்தது.

 

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 24.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் 33.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், மொஷாதிக் ஹொஸைனின் உதவியுடன், 200 ஓட்டங்களை அவ்வணி கடந்தது.

 

துடுப்பாட்டத்தில் மொஸடெக் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 45 (45), முஸ்பிகூர் ரஹீம் 38 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் றஷீட் கான் 3, மிர்வைஸ் அஷ்ரப் 2, மொஹமட் நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதில் நபி, 10 ஓவர்களில் வெறுமனே 16 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்தார்.

 

209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, வெற்றிபெற்றது. 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவ்வணி, பின்னர் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டாலும், நபியின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களுடன் தடுமாறியது. பின்னர், இறுதி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 4ஆவது பந்தை, தவ்லட் ஸட்ரன், 4 ஓட்டங்களுக்கு அடித்து, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

 

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் 57 (95), மொஹமட் நபி 49 (61), மொஹமட் ஷஷாத் 35 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஷகிப் அல் ஹஸன் 2, மொசஸெக் ஹொஸைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, மொஹமட் நபி தெரிவானார்.

 

 

2ஆவது டெஸ்ட்: நீஷம் இல்லை; பட்டேல் தாமதம்

 

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷம் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உபாதை, இன்னமும் குணமாகாத காரணத்தாலேயே இந்நிலை ஏற்பட்டது.

 

நீண்டகாலமாக உபாதைக்குள்ளாகி, இத்தொடருக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நீஷம், முதலாவது போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சிகளில், விலா என்பில் உபாதைக்குள்ளாகியிருந்தார். இதையடுத்து, முதலாவது போட்டியில் அவர் பங்குபற்றாததோடு, 2ஆவது போட்டியில் பங்குபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2ஆவது போட்டியில் அவர் பங்குபெற மாட்டார் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 3ஆவது போட்டியில் அவர் விளையாடுவதும் சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிறெய்க்குக்குப் பதிலாகக் குழாமில் சேர்க்கப்பட்ட ஜீதன் பட்டேல், இங்கிலாந்திலிருந்து வரவிருந்த விமானம், இரத்துச் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று நள்ளிரவே அவர் இந்தியாவைச் சென்றடைந்தார். எனவே, நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்தியாவின் காலநிலைக்குத் தன்னை தயார்படுத்துவதற்கு, ஜீதன் பட்டேலுக்கு சுமார் 35 மணித்தியாலங்கள் மாத்திரமே உள்ளன. எனவே, இந்நிலைமையும், நியூசிலாந்துக்குப் பாதகமாக அமைந்துள்ளது.

 

ஆனாலும், நாளை மறுதின போட்டிக்கான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தாலொழிய, 3 சுழற்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கவே, நியூசிலாந்து விரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, ஜீதல் பட்டேல், இப்போட்டியில் விளையாடுவார் எனக் கருதப்படுகிறது.

இந்தியக் குழாமில் கம்பீர்

 

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையில் இடம்பெறவுள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்தியக் குழாமில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இறுதியாக 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய கம்பீர், 2 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

 

உள்ளூர்ப் போட்டிகளில் அண்மைக்காலமாகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவந்த கம்பீர், அண்மையில் இடம்பெற்ற துலீப் கிண்ணத்தில், 5 இனிங்ஸ்களில் 71.20 என்ற சராசரியில் 356 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
எனினும், முரளி விஜயோடு இணைந்து, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஷீகர் தவான் களமிறங்குவாரா அல்லது கம்பீருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

 

இதேவேளை, சிக்குன்குனியா காரணமாக முதலாவது டெஸ்டில் விளையாடியிருக்காத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இரண்டாவது போட்டியிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, சுழற்பந்த வீச்சாளரான ஜயந்த் யாதவ், இந்தியக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி வில்லியர்ஸுக்கு சத்திரசிகிச்சை

 

தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸுக்கு, முழங்கையில் காணப்படும் உபாதை காரணமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, எட்டு தொடக்கம் பத்து வாரங்களுக்கு, அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்படுகிறது.

 

அவருக்குக் காணப்பட்ட முழங்கை உபாதை காரணமாக, அண்மையில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.

 

தற்போது, அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாட முடியுமா என்பதை ஆராய்வதற்காக, அவருக்கு உடற்றகுதிச் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் சித்தியடையாததைத் தொடர்ந்தே, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சத்திரசிகிச்சை காரணமாக, அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும், பின்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடற்றகுதியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டால், இலங்கைக்கெதிராக டிசெம்பரில் இடம்பெறவுள்ள தொடரில் அவர் பங்குபற்றுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

 

அவுஸ்திரேலியத் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம்: ஃபப் டு பிளெஸிஸ், கைல் அபொட், ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டியன், குயின்டன் டீ கொக், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வெய்ன் பார்ணெல், ஆரொன் ஃபங்கிசோ, அன்டிலே ஃபெஹ்லுக்வாயோ, கஜிஸ்கோ றபடா, றீலி றொஸோ, தப்ரைய்ஸ் ஷம்சி, டேல் ஸ்டெய்ன்.

வெள்ளையடித்தது பாகிஸ்தான்

 

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரின் 3ஆவது போட்டியையும் வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி, 3-0 என்ற கணக்கில் அத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.

 

அபு தாபியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்பத்திலிருந்து தடுமாறினாலும், 12.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 45 பந்துகளில் 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 42 (59), கெரான் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 16 (17), நிக்கொலஸ் பூரன் 16 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இமாட் வசீம், 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

104 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஷொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 43 (34), பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 27 (24), காலிட் லத்தீப் 21 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கெஸ்றிக் வில்லியம்ஸ், 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும், இமாட் வசீம் தெரிவானார்.