தொடரை வென்றது அவுஸ்திரேலியா

 

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில், இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே, தொடரை, 3-1 என்ற ரீதியில் கைப்பற்றியது.

 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், தமது அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்தார். தனுஷ்க குணதிலக, சீக்குகே பிரசன்னா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் ஆகியோருக்குப் பதிலாக அவிஷ்க பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா, சச்சித் பத்திரண ஆகியோர் இலங்கையணியில் இடம்பெற்றிருந்தனர். அவுஸ்திரேலிய அணியில், ஜோஸ் ஹெசில்வூட், காயமடைந்த ஷோர்ன் மார்ஷ் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்கொட் போலண்ட், உஸ்மான் கவாஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, ஆரம்பத்திலேயே, அறிமுக வீரர் அவிஷ்க பெர்ணான்டோ, இத்தொடரில் பிரகாசித்த குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த, புதிதாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறக்கப்பட்ட தனஞ்சய டி சில்வா, மத்தியூஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தில் ஓரளவு மீண்டு வந்த போதும், 27.1 ஓவரில், கெண்டைக்கால் பின் தசைப் பிடிப்பின் காரணமாக, மத்தியூஸ் களத்திலிருந்து வெளியேறியதிலிருந்து தடுமாறிய இலங்கை அணி, இறுதி வீரராக மத்தியூஸ் வந்து ஓட்டங்களைப் பெற்றபோதும் போதுமானளவு ஓட்டங்களைப் பெறவில்லை.

 

இலங்கையணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 76, மத்தியூஸ் 40, சச்சித் பத்திரண 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜோன் ஹேஸ்டிங்ஸ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு 213 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிரடி ஆரம்பம் வழங்கினார் ஆரோன் ஃபின்ஞ், 18 பந்துகளில் அரைச்சதம் கடந்த அவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேக அரைச்சதம் பெற்ற அவுஸ்திரேலியர் என்ற சாதனையை சமப்படுத்தினார். பின்னர் வந்த ஜோர்ஜ் பெய்லியும் அதிரடியுடன் நிலைக்க, 8.1 ஓவர்களிலேயே 100 ஓட்டங்களை அவுஸ்திரேலியா கடந்தது. இதுவே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அவுஸ்திரேலிய அணி, வேகமாக 100 ஓட்டங்களை கடந்த சந்தர்ப்பமாகும். இந்த அதிரடிக்குள்ளும், சிறப்பாக பந்துவீசிய சச்சித் பத்திரண மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

31 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து அவுஸ்திரேலியா வெற்றியிலக்கை அடைந்தது. ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 90(85), ஆரோன் ஃபின்ஞ் 55(19), ட்ரெவிஸ் ஹெட் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

போட்டியின் நாயகனாக ஜோன் ஹேஸ்டிங்ஸ் தெரிவானார்.

தொடரை வென்றது இங்கிலாந்து


 

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின், நொட்டிங்ஹாமில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், உலக சாதனையுடன் வெற்றி பெற்ற இங்கிலாந்து, முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே, தொடரை 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்தது.

 

மேற்படி ஓட்ட எண்ணிக்கையின் மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸொன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து ஏற்படுத்திக் கொண்டது.  இதற்கு முன்னர், 2006ஆம் ஆண்டு, நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கையணி பெற்ற 443 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.

 

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 171(122), ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 90(51), ஜோ ரூட் 85(86), ஒயின் மோர்கன் 57(27) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

இதில், அலெக்ஸ் ஹேல்ஸ் பெற்ற 171 ஓட்டங்களே, இங்கிலாந்து வீரரொருவரால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ஆகும். இதற்கு முன்னர், 1993ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக றொபின் ஸ்மித்தால், ஆட்டமிழக்காமல் பெறப்பட்ட 167 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. இது தவிர, இப்போட்டியில், 22 பந்துகளில், பட்லர் அரைச்சதத்தை கடந்திருந்த நிலையில், இங்கிலாந்து வீரரொருவரால் பெறப்பட்ட வேகமாக அரைச்சதம் இதுவாகும். இதற்கு முன்னர், போல் கொலிங்வூட் 24 பந்துகளில் அரைச்சதம் பெற்றிருந்தார்.

 

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக, ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் நவாஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். வஹாப் றியாஸ், தனது 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாவது மோசமான பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்து கொண்டார். இரண்டு அணிகளும் 400 ஓட்டங்கள் குவித்த, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில், அவுஸ்திரேலியாவின் மைக் லூயிஸ் 113 ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததே மோசமான பெறுதி ஆகும்.

 

பதிலுக்கு, 445 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 169 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஆமிர் 58(28), ஷர்ஜீல் கான் 58(30), சப்ராஸ் அஹமட் 38(43), மொஹமட் நவாஸ் 34(36) ஓட்டங்களைப் பெற்றனர். இதில், 22 பந்துகளில் அரைச்சதம் பெற்ற ஆமிர், 11ஆவது இலக்க வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்து கொண்டார். இதற்கு முன்னர், 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில், இங்கிலாந்துக்கெதிராக ஷோய்ப் அக்தர் பெற்ற 43 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

 

பந்துவீச்சில், இங்கிலாந்தி அணி சார்பாக, கிறிஸ் வோக்ஸ் நான்கு, அடில் ரஷீட் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.

 

போட்டியையும் தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா

 

தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா, முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், தொடரை, 1-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

 

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, தமது முதலாவது இனிங்ஸில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 481 ஓட்டங்களைப் பெற்றபோது, தமது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஃபஃப் டு பிளெசிஸ் 112, ஜெ.பி.டுமினி 88, குயின்டன் டி கொக் 82, ஹஷிம் அம்லா 58, ஸ்டீபன் குக் 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நீல் வக்னர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 77, ஹென்றி நிக்கொல்ஸ் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேல் ஸ்டெயின், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வேர்ணன் பிளாந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், குயின்டன் டி கொக் 50, டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் சௌதி மூன்று, ட்ரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

400 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹென்றி நிக்கொல்ஸ் 76, பி.ஜெ.வோட்லிங் 32, டௌ பிறேஸ்வெல் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேல் ஸ்டெய்ன் ஐந்து, வேர்ணன் பிளாந்தர், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக குயின்டன் டி கொக் தெரிவானார்.

 

இப்போட்டியின் முடிவில், டெஸ்ட் போட்டிகளில் 416 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஏழாவதாக, 414 விக்கெட்டுகளுடன் உள்ள வஸீம் அக்ரமை முந்தினார். இன்னும் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், குறித்த பட்டியலில் ஆறாம் இடத்திலுள்ள ஷோர்ன் பொலக்கை முந்துவதோடு, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க பந்துவீச்சாளராக மாற முடியும்.

 

இதேவேளை, இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்திலிருந்த தென்னாபிரிக்கா, தற்போது ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியதுடன், ஆறாம் இடத்திலிருந்த நியூஸிலாந்து, ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் உலக சாதனையை தகர்த்தது இங்கிலாந்து

 

தற்போது ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக, 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி குவித்த 443 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளது.

 

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கெனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 122 பந்துகளில், 4, ஆறு ஓட்டங்கள், 22, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 171 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர், 51 பந்துகளில், 7, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், ஜோ ரூட், 86 பந்துகளில், 8, நான்கு ஓட்டங்களுடன் 85 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஒயின் மோர்கன், 27 பந்துகளில், 5, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக வஹாப் றியாஸ், தனது 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

தொடரிலிருந்து மார்ஷ் வெளியேற்றம்

 

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ், இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளார்.

 

தம்புள்ளையில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஷோன் மார்ஷின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டதாகவும், மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-கதிர்ச் சோதனையில், அவருக்கு என்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

மார்ஷுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், உஸ்மான் கவாஜா இடம்பெறவுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் அவர் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த நிலையிலேயே, தற்போது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் இடம்பெற்றுவரும் இந்தத் தொடரில், அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த மிற்சல் மார்ஷ், அத்தொடர் முடிவிலேயே அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியதோடு, பின்னர் ஸ்டீவன் ஸ்மித், 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் நாடு திரும்பியிருந்தார். மார்ஷுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் நேதன் கூல்ட்டர் நைல், காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியிருந்தார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டி, தம்புள்ளையில் நாளை பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை ‘வலித்தது’

 

இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையைத் தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட்ட திலகரட்ண டில்ஷான், அதுபோன்ற தனிப்பட்ட விடயங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்ததாகத் தெரிவித்தார்.

 

இலங்கையின் முன்னாள் தலைவரான திலகரட்ண டில்ஷான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது போட்டியுடன் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து குமார் சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவும் விலகிய பின்னர், அந்தப் பதவி, திலகரட்ண டில்ஷானுக்கு வழங்கப்பட்டது. எனினும், அப்பதவிக்காகத் தான் திட்டமிட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார். "அணித்தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால், இன்னொருவரைக் கண்டுபிடிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு அப்பதவியை ஏற்குமாறு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் என்னிடம் கேட்டார்" என, டில்ஷான் தெரிவித்தார்.

 

தனது காலத்தில், தனது அதிர்ஷ்டம் இருந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதன்போது தற்போதைய தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தொடர்பில் தெரிவித்த கருத்து, மத்தியூஸ் மீதான விமர்சனமா என்ற கேள்வியை எழுப்பியது.

 

"துரதிர்ஷ்டவசமாக, இரண்டு பந்துவீச்சாளர்களையும் நாம் இழந்திருந்திருந்தோம். முரளி ஓய்வுபெற்றிருந்தார். நுவான் குலசேகரவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அஜந்த மென்டிஸூக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. சிறப்பான வளங்கள், எனக்கு இருந்திருக்கவில்லை. அஞ்சலோ மத்தியூஸூக்கு ஓராண்டாக கெண்டைக்கால் பின்தசை உபாதை ஏற்பட்டிருந்தது, அதனால் அவர் பந்துவீசியிருக்கவில்லை. அது என்னுடைய துரதிர்ஷ்டமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நான் பதவி விலகிய பின்னர், ஒரு வாரத்துக்குப் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றோம். அந்த வாரத்தில், மத்தியூஸ் பந்துவீச ஆரம்பித்தார். மஹேலவின் நல்ல அதிர்ஷ்டம் காரணமாகத் தான் அது இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

 

டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ், 9 போட்டிகளில் விளையாடிய மத்தியூஸ், 16 இனிங்ஸ்களில் 4 இனிங்ஸ்களில் மாத்திரமே பந்துவீசியிருந்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 22 போட்டிகளில் 12 போட்டிகளில் பந்துவீசிய மத்தியூஸ், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 3 போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால், டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ் மத்தியூஸ் விளையாடிய இறுதி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பந்துவீசியதோடு, இறுதி 5 டெஸ்ட்களில் ஒரே ஓர் இனிங்ஸைத் தவிர அனைத்து இனிங்ஸ்களிலும் அவர் பந்துவீசியிருந்தார். எனவே, மத்தியூஸ் வேண்டுமென்றே அவ்வாறு செயற்பட்டார் என, டில்ஷானின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாது.

 

தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2011ஆம் ஆண்டு இறுதியிலும் 2012ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் இடம்பெற்ற தொடரின் முடிவில், அணித்தலைவர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட டில்ஷான், அதுகுறித்தும் கருத்துத் தெரிவித்தார். "தென்னாபிரிக்கத் தொடரின் முடிவில், எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்தேன். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றேன், 500 ஓட்டங்களைப் பெற்றேன், தொடரின் நாயகனாகத் தெரிவானேன். யார் தலைவராக இருப்பது என்பது எனக்குத் தேவையில்லாதது. என்னை அணித்தலைவர் பதவியிலிருந்து யார் அகற்றினார் என்பது தொடர்பாக நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை. நான் எப்போதும் நாட்டுக்காக விளையாடுபவன். இவ்வாறான தனிப்பட்ட விடயங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கு அது வலித்தது" என்று தெரிவித்தார்.

 

இது தவிர, தலைவராக டில்ஷான் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது தொடரான இங்கிலாந்துக்கான இலங்கைத் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 193 ஓட்டங்களைக் குவித்த டில்ஷான், அப்போட்டியில் விரலில் காயமடைந்தார். அதன் காரணமாக, அடுத்த போட்டியில் அவர் பங்குபற்ற முடியாது போக, அணித்தலைவர் பதவியை ஏற்பதற்கு எவரும் தயாராக இருந்திருக்கவில்லை என டில்ஷான் தெரிவித்தார். அப்போது, சனத் ஜெயசூரியவையோ அல்லது திலின கண்டம்பியையோ அணித்தலைவராக்கும் பேச்சும் காணப்பட்டதாகவும் டில்ஷான் தெரிவித்தார். அடுத்த போட்டியில், குமார் சங்கக்காரவே அணித்தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

 

தனது ஓய்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த டில்ஷான், ஓய்வுபெறுவதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இன்னும் ஓர் ஆண்டுக்காவது விளையாடும் எதிர்பார்ப்பிலேயே இத்தொடரில் களமிறங்கியதாகவும், ஆனால், 25ஆம் திகதி நித்திரையிலிருந்து எழும் போது, ஓய்வுபெறுவதற்கான நேரம் இதுவென உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

 

"உண்மையைச் சொல்வதானால், இன்னும் ஓர் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு என்னால் விளையாட முடியும். ஆனால், எதிர்காலத்தைப் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகள் நான் விளையாடினால், அடுத்த உலகக் கிண்ணத்துக்கு, 18 மாதங்களே இருக்கும். அது, அணியைப் பொறுத்தவரை சரியானதன்று" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றாலும், எதிர்வரும் 6ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், அவர் பங்குபற்றிய பின்னரே, அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பங்களாதேஷ் செல்கிறது ஆப்கானிஸ்தான்

 

பங்களாதேஷ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் பங்குபற்றவுள்ளன. இவ்விரு அணிகளும் பங்குபற்றும் முதலாவது இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுவாகும்.

 

இந்தத் தொடர், 3 போட்டிகள் கொண்ட தொடராக, செப்டெம்பர் 25, 28, ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில், மிர்புரில் ஷேரே பங்களா தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

 

பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டுக்குச் செல்ல சில நாடுகள் அஞ்சும் நிலையில், தொடரொன்றில் அங்கு விளையாடும் விருப்பம், பங்களாதேஷுக்கு நன்மையாக அமையும்.

 

மறுபக்கத்தில், சிம்பாப்வே தவிர்ந்த, டெஸ்ட் விளையாடும் எந்தவொரு நாட்டுக்கெதிராகவும் இருதரப்புத் தொடர்களில் விளையாடியிருக்காத ஆப்கானிஸ்தானுக்கு, இது முக்கியமான ஒரு தொடராகும். இதற்கு முன்னர் இரு அணிகளும் சந்தித்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

 

இந்தத் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நசிமுல்லா டனிஷ், டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் தொடர்களை ஏற்படுத்துவதற்கு பங்களாதேஷ் முயல்வதாகவும், பங்களாதேஷ் ஓர் ஆரம்பமே எனவும் தெரிவித்தார்.

 

முரணான கருத்துகளுடன் டோணி, பிறெத்வெய்ட்

 

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில், போட்டியைத் தொடர முடியாத நிலை காணப்பட்டதாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் கிறெய்க் பிறெத்வெய்ட்டும், போட்டியை நடத்தியிருக்கலாம் என இந்தியத் தலைவர் மகேந்திரசிங் டோணியும், முரணான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

ஆரம்பத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்குக் கடுமையான மழையாக மாறியது. அதன் பின்னர் மழை நின்ற போதிலும், மைதானத்தின் சில பகுதிகளில் சகதி போன்ற நிலை ஏற்பட்டது. மைதானத்திலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் சுப்பர் சொப்பர் கருவிகள் அங்கு காணப்பட்டிருக்காமையால், போட்டியை மீள ஆரம்பித்திருக்க முடிந்திருக்கவில்லை.

 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிறெத்வெய்ட், மைதானத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்கள், பிரச்சினையான பகுதிகளாகக் காணப்பட்டதாகத் தெரிவித்ததோடு, "ஆகவே, என்னுடைய கருத்தின்படி, பாதுகாப்பற்றதாக அது காணப்பட்டது. பந்துவீச்சாளர்கள் ஓடிவரும் பகுதி சிறப்பாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர் பந்தை அடித்தால், வேகமான வகையான இருபதுக்கு-20 போட்டிகளில், களத்தடுப்பாட்ட வீரர் பந்தைத் துரத்திச் சென்று ஏதாவது நடந்தால், அவரது கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடும். விளையாடுவதற்கு நாங்கள் விரும்புவது மாத்திரமன்றி, வசதிகளும் சுற்றுச்சூழலும், அனைவரது கிரிக்கெட் வாழ்வுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எண்ணுகிறோம். ஆகவே எனது கருத்துப்படி, அவை அவ்வாறு இருக்கவில்லை, நடுவர்களும் அந்த முடிவையே எடுத்தார்கள்" என்றார்.

 

ஆனால் டோணியோ, போட்டியைத் தொடருமளவுக்குப் பாதுகாப்பான சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். தேவையான உபகரணம் இல்லாத சூழலிலும் மைதானத்தின் நிலைமை மோசமாக இருந்த காரணத்தாலும் அது மேலும் முன்னேறாது என்ற காரணத்தாலும், போட்டியை நடத்த முடியாது என நடுவர்கள் தெரிவித்தனர் எனக் குறிப்பிட்ட டோணி, "அது, போட்டி அலுவலர்கள் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் 10 ஆண்டுகளுக்கு அண்மித்த அளவுக்கு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன், உண்மையைச் சொல்வதால், இதைவிட மோசமான நிலைமைகளில் விளையாடியிருக்கிறேன்" என்றார்.

 

"2011ஆம் ஆண்டை நான் ஞாபகப்படுத்தினால், இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் முழுவதையும் நாங்கள் மழைக்குள்ளேயே விளையாடினோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

18,000 பேருக்குப் பதில் 45,000 பேர்

 

திலகரட்ண டில்ஷானின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியாக அமைந்த, தம்புள்ளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டியில், அளவுக்கதிகமான இரசிகர்கள் மைதானத்துக்குச் சென்றமையாலேயே, வசதிக்குறைவு ஏற்பட்டது என, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.

 

இந்த மைதானத்தில், 18,000 பேரே அமர முடியுமென்ற போதிலும், அப்போட்டியைப் பார்வையிடுவதற்காக 45,000 இரசிகர்கள் சென்றிருந்ததாக, இலங்கை கிரிக்கெட் சபையின் பாதுகாப்புப் பிரிவு கணித்துள்ளது. இவ்வாறு அதிகமான இரசிகர்கள் சென்றமையின் காரணமாக, இரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதோடு, நுழைவுச்சீட்டுகளைப் பெற்றவர்கள், தங்களுக்குரிய இருக்கைகளில் அமர முடியாத நிலையும் ஏற்பட்டது.

 

இந்நிலைமைக்காக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

 

CSK-உம் RR-உம் பணம் கட்டத்தேவையில்லை

 

இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அணிகளான சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK), ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) ஆகிய அணிகள், தங்களுக்கான வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லையென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

 

இதன்படி, இவ்விரு அணிகளும் 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்பதோடு, 2016ஆம் ஆண்டுக்கான பணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அது திரும்ப வழங்கப்படவுள்ளது.

 

அணிகளின் நிர்வாகிகள், சூதாட்டத்தில் பங்குபற்றியமை அல்லது அதற்கான முயற்சிகள் ஈடுபட்டமை என்ற குற்றத்தின் காரணமாக, இவ்விரு அணிகளுக்கும் தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போதிலும், இந்தியன் பிறீமியர் லீக் அணிகள், வருடந்தோறும் செலுத்தும் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்திருந்தது.

 

இதற்கெதிராக, மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொள்ள, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இணங்கியுள்ளது.

 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள், இவ்வாண்டுக்கான கட்டணத்தைத் தாங்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ளதாகவும், அது திரும்ப வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நிர்வாகிகள், இவ்விடயம் தொடர்பாகக் கருத்தெதனையும் இதுவரையிலும் வெளியிட்டிருக்கவில்லை.