முதலிடத்தை இழக்குமா அவுஸ்திரேலியா?

 

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் இளமையும் அனுபவமும் கலந்த அணி பெற்றுக் கொண்ட அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, தற்போது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தனது முதலிடத்தை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

 

தற்போது இடம்பெற்றுவரும் மூன்று தொடர்கள், இந்த முடிவில் தாக்கம் செலுத்தவுள்ளன. இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதும் தொடரில், 2 போட்டிகளின் முடிவில் 1-1 என்ற நிலை காணப்படுகிறது. இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதும் தொடரில், முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் மோதும் தொடரில், முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

 

இதில், இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடரில் இங்கிலாந்துக்கு 3-1 என்ற வெற்றி கிடைத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இந்தியாவுக்கு 4-0 என்ற வெற்றி கிடைத்தால், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை இலங்கை வென்றால், அவுஸ்திரேலியாவின் முதலிடம் பறிபோக, இந்திய அணி முதலிடத்திலும் இங்கிலாந்து அணி இரண்டாமிடத்திலும் அவுஸ்திரேலிய அணி நான்காமிடத்திலும் காணப்படும். தொடர்ந்து பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை (7ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்துக்கு), தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், சிம்பாப்வே எனத் தரப்படுத்தல் அமையும்.

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இந்தியாவுக்கு 4-0 என்ற வெற்றி கிடைத்து, இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் 1-1 என முடிவுறுமாயின், இந்தியா முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை இலங்கை கைப்பற்றுமாயின், அவுஸ்திரேலியாவின் முதலிடம் பறிபோகும். இங்கிலாந்துக்கெதிரான தொடரை 2-1 என்ற கணக்கிலோ அல்லது 3-1 என்ற கணக்கிலோ பாகிஸ்தான் வெல்லுமாயின், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை இலங்கை வெல்லுமாயின், முதலிடத்தை பாகிஸ்தான் பிடித்துக் கொள்ளும். இலங்கை அணி 6ஆம் இடத்துக்கு முன்னேற, அவுஸ்திரேலிய அணி 3ஆம் இடத்துக்கு மாறும். பாகிஸ்தான் அவ்வாறு வென்று, இலங்கை – அவுஸ்திரேலியா தொடர் சமநிலையில் முடியுமாயின், பாகிஸ்தான் முதலிடம் செல்ல, அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்குச் செல்லும்.

 

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் பெற்றமைக்கான வருடாந்தப் பரிசையும் டெஸ்ட் முதலிடத்துக்கான கோலையும், இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முதல் நாளிலேயே பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய அணி, அதனை இழக்கும் ஆபத்தை, இவ்வளவு விரைவாகவே எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மக்ஸ்வெல் நீக்கம்

 

கிளென் மக்ஸ்வெல் தொடர்பில் பொறுமையிழந்த அவுஸ்திரேலிய அணித் தேர்வாளர்கள், எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து மக்ஸ்வெல்லை நீக்கியதுடன், தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் துடுப்பாட்டவீரராக மாறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

குறிப்பிடத்தக்களவு தடவைகள் குழாமில் மக்ஸ்வெல் சேர்க்கப்படாதபோதும், 2012ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட பின்னர், முதற்தடவையாக, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கடந்த 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் ஆறு இனிங்ஸ்களில், 11.80 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, குழாமிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.

 

குழாம்: ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோணர்,  ஜோர்ஜ் பெய்லி, நேதன் கூல்டர்-நைல், ஜேம்ஸ் போக்நர், ஆரோன் பின்ஞ், ஜோஷ் ஹேசில்வூட், மொய்ஸஸ் ஹென்றிகூஸ், உஸ்மான் காவாஜா, மிற்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், நேதன் லையன், மிற்செல் ஸ்டார்க், மத்தியூ வேட், அடம் ஸாம்பா

முரளியையும் வோணையும் முந்தினார் ஹேரத்

 

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பல்லேகெலையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 106 ஓட்டங்களால் வெற்றி கிடைத்த நிலையில், பல சாதனைகளையும் ஏற்படுத்திய போட்டியாக அது அமைந்தது.

 

இப்போட்டியின் முதல் இனிங்ஸில் இலங்கை அணி 117 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் வெற்றிபெற்றது. இது, இலங்கை வெற்றிபெற்ற போட்டியொன்றில், முதல் இனிங்ஸில் அவ்வணி பெற்ற மிகக்குறைவான ஓட்டங்களாகும். இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டில் கண்டியில் வைத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 150 ஓட்டங்களைப் பெற்ற பின்னர் வென்றமையே சாதனையாக இருந்தது.

 

இப்போட்டியின் நாயகன் விருதை வென்ற குசால் மென்டிஸ், 176 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்கெதிராக இலங்கையர் ஒருவர் பெற்ற இரண்டாவது அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் படைத்தார். அரவிந்த டீ சில்வா பெற்ற 167 ஓட்டங்களையே அவர் முந்தினார். முதலிடத்தில், ஹோபார்ட்டில் வைத்து குமார் சங்கக்கார பெற்ற 192 ஓட்டங்கள் காணப்படுகின்றன. அத்தோடு, 21 வருடங்களும் 177 நாட்களுமான மென்டிஸ், அவுஸ்திரேலியாவுக்கெதிராக 150 ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது இளைய வீரராக மாறினார். முதலிடத்தில், 19 வருடங்கள் 331 நாட்களாக இருக்கும் போது நதம் பெற்ற தென்னாபிரிக்காவின் கிரேம் பொலக் காணப்படுகிறார்.

 

இப்போட்டியின் நான்காவது இனிங்ஸில், இலங்கையின் ரங்கன ஹேரத், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது, நான்காவது இனிங்ஸில் அவர் கைப்பற்றிய 7ஆவது 5 விக்கெட் பெறுதியாகும். உலக சாதனையாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோண் ஆகியோரும், 7 தடவைகள் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர். ஆனால், அந்த மைல்கல்லை தனது 29ஆவது இனிங்ஸிலேயே ஹேரத் அடைய, முரளிக்கு 35 இனிங்ஸ்களும் வோணுக்கு 53 இனிங்ஸ்களும் தேவைப்பட்டிருந்தன. தவிர, இந்த 5 விக்கெட் பெறுதி, ஹேரத்தினது 24ஆவது ஆகும். இதன்மூலம், 23 விக்கெட் பெறுதிகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் இம்ரான் கான், இந்தியாவின் கபில் தேவ், அவுஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி ஆகியோரை அவர் முந்தினார். இனிங்ஸ் அடிப்படையிலும், அவர்களை விட, குறைவான இனிங்ஸ்களையே ஹேரத் எடுத்துக் கொண்டார்.

 

இப்போட்டியின் 4ஆவது இனிங்ஸில் 9ஆவது விக்கெட்டுக்காக, அவுஸ்திரேலியாவின் பீற்றர் நெவில், ஸ்டீவன் ஓப் கீ ஆகியோர், 178 பந்துகளைச் சந்தித்து, 4 ஓட்டங்களை மாத்திரம் பகிர்ந்தனர். இதன்மூலம், 100க்கும் மேற்பட்ட பந்துகளைச் சந்தித்து, குறைந்த ஓட்ட வீதத்தில் (ஓவருக்கு ஓட்டங்கள்) ஓட்டங்கள் பெறப்பட்ட இணைப்பாட்டம் என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.

 

இந்தப் போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்ட லக்ஷான் சந்தகன், 107 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடதுகை புறச்சுழல் பந்துவீச்சாளர் ஒருவர், தனது டெஸ்ட் அறிமுகத்தில் பெற்ற சிறப்பான பெறுபேறு இதுவாகும்.

 

இப்போட்டியில் வென்றதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கெதிராக தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியை, இலங்கை அணி பதிவுசெய்தது. இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டில் ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது.

 

இரசிகர்களுக்கு நன்றி: மத்தியூஸ்

 

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 26ஆம் திகதி, கண்டி பல்லேகலையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி, சனிக்கிழமை மாலை நேரத்தில் பெறப்பட்டிருந்த நிலையில், இலங்கை அணியின் இரசிகர்களின் ஆதரவுக்காக, தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

 

கடந்தாண்டு நவம்பர் 11ஆம் திகதியிலிருந்து இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்புவரை, 3 வகையான போட்டிகளிலும் 32 போட்டிகளில் பங்குபற்றியிருந்த இலங்கை அணி, ஆறே ஆறு போட்டிகளில் மாத்திரமே வென்றிருந்தது. 22 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்திருந்தது.

 

இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது, உலகின் முதற்தர அணியாகக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதலிடத்துக்கான பரிசையும் அதற்கான கோலையும், பகிரங்க நிகழ்வில் பெற்றுக் கொண்டால், இலங்கை வீரர்களின் மனோதிடம் பாதிக்குமெனத் தெரிவித்து, இரகசியமான முறையில் அதை மேற்கொள்ளுமாறு, இலங்கை கிரிக்கெட் சபை கோருமளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், இலங்கையின் இளம் வீரர்களான குசால் மென்டிஸ், லக்ஷான் சந்தகன் ஆகியோரோடு, அனுபவ வீரரான ரங்கன ஹேரத் பிரகாசிக்க, இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.

 

வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், "கடினமான ஆறு தொடக்கம் எட்டு மாதங்களைத் தொடர்ந்து, அந்த வெற்றி எங்களுக்குத் தேவைப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில், எங்களிடமிருந்து இரசிகர்கள் அப்பால் சென்றுகொண்டிருந்தார்கள். கிரிக்கெட் வீரர்களாக, அதை நாங்கள் உணர்ந்தோம், ஏனெனில், நாங்கள் சிறப்பாக விளையாடும் போது, அனைவரும் விரும்புவார்கள். நீங்கள் தோற்கும்போது கூட அவர்கள் விரும்பலாம், ஆனால் அவர்கள் ஏமாற்றமும் அடைவார்கள். இரசிகர்களுக்காக இந்தப் போட்டியை வென்றமை தான் சிறப்பானது. எங்களோடு இணைந்திருந்தவர்களுக்காக (இரசிகர்கள்) இது சிறந்த வெற்றி, இரசிகர்களுக்கு நாம் நன்றி கூறுகிறோம், ஏனெனில், அவர்களது வெற்றி, மிக முக்கியமானது" என்றார்.

 

"கடந்த ஆறு மாதங்களில், அணியாக நாங்கள், ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்தோம். ஆனால், விளையாட்டின் ஓர் அம்சம் தான் அது. நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டால் பாராட்டப்படுகிறோம். நாங்கள் மோசமாகச் செயற்பட்டால் விமர்சிக்கப்படுகிறோம். வீரர்களாக, அதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இப்போட்டியின் நாயகனான குசால் மென்டிஸ், தனது 7ஆவது போட்டியிலேயே விளையாடியிருந்தார். முதன்முதலாக, நியூசிலாந்துத் தொடருக்காக அவர் சேர்க்கப்படும் போது, ஒரேயொரு முதற்தரப் போட்டியில் மாத்திரம் அவர் விளையாடியிருந்தார். அதிலும் அவர் சொல்லக்கூடியளவு பெறுபேற்றைக் காட்டியிருக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் குழாமுக்கு அவர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, தனது கருத்துகளை மத்தியூஸ் வெளிப்படுத்தினார்.

 

"அவர் மிகவும் சிறந்த வீரரெனத் தேர்வாளர்கள் தெரிவித்தனர், ஆனால் அவரை நான் அதிகம் கண்டிருக்கவில்லை. நியூசிலாந்துக்கு நாங்கள் சென்ற பின்னர், குசால் மிகவும் விசேடமான வீரர் என நானும் நினைத்தேன். நியூசிலாந்திலும் இங்கிலாந்திலும் அவர் கடினமான தொடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், முன்வரிசையில் அவர் சிறப்பாக விளையாடினார் என நினைத்தேன்" என மத்தியூஸ் குறிப்பிட்டார்.

 

இந்தப் போட்டியில் வென்ற போதிலும், இலங்கை அணி இன்னமும் முன்னேற வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், ஆனால் அணியின் மனோநிலை, சிறப்பான நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

 

அவுஸ்திரேலியாவுக்கெதிராக இலங்கைக்கு இரண்டாவது வெற்றி

 

பல்லேகலயில் இடம்பெற்றுவந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களைப் பெற்றதுடன், பின்னர், குஷால் மென்டிஸின் 176 ஓட்டங்கள் துணையோடு, தமது இரண்டாவது இனிங்ஸில் 353 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றியிலக்காக வழங்கியது.

 

இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, இலங்கையணி சார்பாக பந்துவீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

போட்டியின் நாயகனாக குஷால் மென்டிஸ் தெரிவானார்.

 

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியே, ஸ்டீவன் ஸ்மித் அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.  

  

சிலிர்த்தது இளம் சிங்கம்

 

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பல்லேகலயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.

 

ஆறு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தபடி இன்றைய மூன்றாவது நாளினை ஆரம்பித்த இலங்கையணி ஆரம்பத்திலேயே மிற்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் திமுத் கருணாரட்னவை இழந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தில் கௌஷால் சில்வாவின் விக்கெட்டையும் இழந்திருந்தது.

 

இவ்வாறாக, ஒரு பக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் இளஞ் சிங்கமான குஷால் மென்டிஸ் நிதானத்துடன் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்த வண்ணம் இருந்தார்.

 

கௌஷால் சில்வாவோடு 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த மென்டிஸ், அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸுடன் 41 ஓட்டங்களை பகிர்ந்ததோடு, உப அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுடன் 117 ஓட்டங்களை பகிரும்போது, தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

 

அதன் பின்னர், அறிமுக வீரர் தனஞ்சய டி சில்வாவுடன் 71 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், தற்போது களத்தில், ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார். அவர் தனது ஓட்ட எண்ணிக்கையில், 20, நான்கு ஓட்டங்களையும் ஓர் ஆறு ஓட்டத்தையும் பெற்றார். மென்டிஸோடு, தற்போது களத்தில், ஐந்து ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேரா காணப்படுகின்றார்.

 

முன்னர் ஆட்டமிழந்தவர்களில், தினேஷ் சந்திமாள் 42, தனஞசய டி சில்வா 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, மிற்செல் ஸ்டார்க், நேதன் லைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டீவ் ஓ‌ஃப் கெவி, மிற்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் 77.4 ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில், நாளைய நான்காவது நாள் ஆட்டம், 15 நிமிடங்கள் முன்னதாக காலை 9.45க்கு ஆரம்பமாகவுள்ளது. ஆடுகளமானது குறிப்பிடத்தக்களவு சுழலை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், நாளை முழுமையாக ஓவர்கள் வீசப்பட்டால், நான்காவது நாளான நாளையுடன் போட்டி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு?

 

இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

 

இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன.

 

"வெளிநாடுகளிலிருந்து வரும் பயிற்சியாளர்கள், தங்களுக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டு, எவ்வளவுக்குக் குறைந்த வேலை செய்யலாம் எனவே நினைக்கின்றனர்" என, அர்ஜுன தெரிவித்திருந்தார். ஆனால், இதே அர்ஜுனவின் தலைமையில் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி வெல்வதற்கு, டேவ் வட்மோரும் முக்கியமான காரணமாவார். அவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், தனது 8 வயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கே தனது வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருந்தார். அவரே, தன்னை இலங்கையர் என அடையாளப்படுத்துவார் என எண்ண முடியாது. அப்படியானவர் தான், இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

 

2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த – உலகில் தோன்றிய மிகவும் பலமான ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுள் ஒன்றான – அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போது, அணியின் பயிற்றுநராக இருந்தவர், அவுஸ்திரேலியரான டொம் மூடி. 2011ஆம் ஆண்டில், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குச் சென்ற போது பயிற்றுநராக இருந்தவர், அவுஸ்திரேலியரான ட்ரெவர் பெய்லிஸ். 2014ஆம் ஆண்டில் உலக இருபதுக்கு-20 தொடரில் சம்பியனான போது பயிற்றுநராக இருந்த போது பயிற்றுநராக இருந்தவர், இங்கிலாந்தின் போல் பப்ரேஸ். 2012ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போது பயிற்றுநர்களாக இருந்தவர்கள் முறையே தென்னாபிரிக்காவின் கிரஹம் போர்ட், இங்கிலாந்தின் ட்ரெவர் பெய்லிஸ். இப்படியிருக்கையில், வெளிநாட்டவர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துதலென்பது, நகைப்புக்குரியது.

 

அத்தோடு, வெளிநாட்டவர்களால் வழங்கப்படும் பயிற்சிகள் போதாதென்றும், பயிற்சியின் போது குறைந்த ஓவர்களை வீசுமாறு கேட்டுவிட்டு, போட்டியில் அதிக ஓவர்களை வீசுமாறு கேட்பதாலேயே, பந்துவீச்சாளர்கள் காயமடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், அண்மைக்கால இலங்கை வரலாற்றில், இலங்கையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநர்களாக இருந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சிகள், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது, பந்துவீச்சுப் பயிற்றுநர்களே. இவ்வாறான நிலையில், வெளிநாட்டுப் பயிற்றுநர்கள் மீது அதற்காகக் குற்றஞ்சாட்ட முடியுமா?

 

இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரை அணுகுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தவறிவிட்டதாகவும், அவர்களைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு அச்சபை செயற்பட்டதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

ஆனால், பங்களாதேஷின் பயிற்றுநராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சம்பிக்க ஹத்துருசிங்கவோடு முரண்பட்டுக் கொண்டு, அவரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமற்செய்தது, அர்ஜுனவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க.

 

சமிந்த வாஸ், வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக இருந்தபோது, அவருடன் முரண்பாடுகளை வளர்த்ததும் அதே நிஷாந்த. மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களோடு முரண்பட்டதும் இதே நிஷாந்த. இதே நிஷாந்தவுடன் இணைந்து தான், இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலில், ஒரே அணியில் போட்டியிட்டார் அர்ஜுன ரணதுங்க.

 

இலங்கை கிரிக்கெட் சபையை நடத்துவோருக்கு கிரிக்கெட் தெரியாது என்றும் விமர்சித்த அர்ஜுன, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திலங்க சுமதிபால மீதான அவரது விமர்சனத்துக்கு, இருவருக்குமிடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளே காரணமாகும். அது, இருவரிடையிலான உறவைக் கவனிப்போருக்குத் தெளிவாகத் தெரியும்.

 

அத்தோடு, கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பின்னர், வென்ற அணி மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை வெளியிட்டு வருவதென்பது, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அர்ஜுன செயற்படுகிறார் என்பதைக் காட்டுகிறதே தவிர, கிரிக்கெட் மீது அவருக்கு உண்மையில் காணப்படும் பற்றினால் அல்ல என்பதே தெரிகிறது. அத்தோடு, இதற்கு முன்னர் காணப்பட்ட நிஷாந்த ரணதுங்க முக்கிய புள்ளியாக இருந்த கிரிக்கெட் சபை, மிக மிக மோசமாகச் செயற்பட்டமையையும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்பட்டமையையும், அந்த கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்தே கிரிக்கெட் சபைக்கு இவ்வளவு அதிகமான கடன் எற்பட்டது என்பதையும் மறந்த அர்ஜுன, எவ்வாறு அவருடன் இணைந்து போட்டியிட முனைந்தார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் இன்னமும் தயாரில்லை என்பது, அர்ஜுனவின் நோக்கங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

 

கஜிஸ்கோ றபடாவுக்கு விருது மழை

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் வீரரான கஜிஸ்கோ றபடா, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகளை அள்ளியெடுத்துக் கொண்டார்.

 

21 வயதான றபடா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 16 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ள போதிலும், அவ்வணியின் முக்கிய வீரராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

விருது விவரம்:
சிறந்த கிரிக்கெட் வீரர்: கஜிஸ்கோ றபடா
சிறந்த டெஸ்ட் வீரர்: கஜிஸ்கோ றபடா
சிறந்த ஒ.நா.ச.போ வீரர்: கஜிஸ்கோ றபடா
சிறந்த இ-20 ச.போ வீரர்: இம்ரான் தாஹிர்
வீரர்களின் சிறந்த வீரர்: கஜிஸ்கோ றபடா
இரசிகர்களின் சிறந்த வீரர்: கஜிஸ்கோ றபடா
இ-20 போட்டிகளில் சிறந்த பந்து: கஜிஸ்கோ றபடா
சர்வதேசப் போட்டிகளில் சிறந்த புதுமுகம்: ஸ்டீபன் குக்
சிறந்த வீராங்கனை: டேன் வான் நீகேர்க்

 

சோதனைக்கு மத்தியில் முரளி சாதனை

 

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைசிறந்த வீரர்களுக்கான காட்சிப் பட்டியலில் (ICC Cricket Hall of Fame) சேர்க்கப்பட்ட முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

முத்தையா முரளிதரன் தவிர, அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவி கரென் றொல்ட்டன், டொன் பிரட்மனின் அணியில் இடம்பெற்றிருந்த ஆர்தர் மொரிஸ், இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்ஜ் லோமான் ஆகியோரும், இவ்வாறு இப்பட்டியலில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, இவ்வாண்டின் இறுதியில், இவர்களது உள்ளடக்கம் உத்தியோகபூர்வமாக மாற்றப்படும்.

 

கௌரவம் வழங்கப்பட்ட நால்வரையும் பாராட்டிய சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன், "நவீன யுகத்தின் அதிசிறந்த வீரர்களில் ஒருவராக முரளிதரன் காணப்படுகிறார். அவரது (துடுப்பாட்ட வீரர்களை) ஏமாற்றும் இயல்பும் தொடர்ச்சியாகத் திறமையை வெளிப்படுத்தும் இயல்பும், டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி, போட்டித்தன்மை மிக்க அணியாக விருத்தியாவதற்கு உதவியது" என, முரளியைப் பற்றித் தெரிவித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முரளிதரன், இவ்விரண்டு வகையான போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக உள்ளார்.

 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசராக, இலங்கைக்கெதிரான தொடரில் முரளி செயற்படுவதன் காரணமாக, அவர் மீதான ஒரு பகுதியினரின் விமர்சனங்களும் அவர் தொடர்பான சர்ச்சைகளும் காணப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சுழற்றினர் சந்தகன், ஹேரத்; சுழன்றனர் அவுஸ்திரேலியர்

 

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்ற போதிலும், இலங்கை அணி, தனது சுழற்பந்து வீச்சாளர்களின் துணையோடு, ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் பெற்ற 117 ஓட்டங்களுக்குப் பதிலளித்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்ததோடு, 203 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்படி, இன்றைய தினத்தில் 137 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது அவ்வணி.

 

அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் மோசமான துடுப்பாட்டப் பிரயோகம் காரணமாக அவரது விக்கெட் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனுபவ வீரர் ரங்கன ஹேரத்தினதும் அறிமுக வீரர் லக்ஷன் சந்தகனிதும் சுழலில் சிக்கித் தடுமாறியது அவுஸ்திரேலியா.

 

துடுப்பாட்டத்தில் இப்போட்டிக்கு முன்பாக 95.5 என்ற சராசரியுடன் காணப்பட்ட அடம் வோஜஸ், போராடித் துடுப்பெடுத்தாடி, 47 ஓட்டங்களைப் பெற்றார். எனினும், அவரது சராசரி, 92.26 எனக் குறைவடைந்தது. தவிர, மிற்சல் மார்ஷ் 31 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஓப் கீ 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் சந்தகனும் ஹேரத்தும் தலா 4 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

86 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் நோக்கில், குசால் பெரேராவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறக்கியது. எனினும், 4 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் ஆட்டமிழந்தார். 2.2 ஓவர்கள் முடிவில் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவரது விக்கெட் இழக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் மழை குறுக்கிட்டதால், மேலதிகமாக விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கவில்லை. வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, மிற்சல் ஸ்டார்க் வீழ்த்தினார்.

 

இப்போட்டியின் முதல்நாளில் 54.2 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டிருந்த நிலையில், 61.4 ஓவர்கள் மாத்திரமே இன்று வீசப்பட்டன. இதன்படி, 180 ஓவர்களுக்குப் பதிலாக, இப்போட்டியில் இதுவரை 116 ஓவர்கள் மாத்திரமே வீசிமுடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.