தொடரை இழந்தது இலங்கை

 

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில், மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி, அந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பையும் தரப்படுத்தலில் முன்னேறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

 

இலண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. 50 ஓவர்களாக ஆரம்பித்த இப்போட்டியில் 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 127 ஓட்டங்களுடன் இலங்கை பலமான நிலையில் காணப்பட்டபோது, மழை குறுக்கிட்டது. கணிசமான நேரம் இழக்கப்பட, 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாறியது.

 

துடுப்பாட்டத்தில் குசால் மென்டிஸ் 77 (64), அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 67 (54), டினேஷ் சந்திமால் 63 (51), தனுஷ்க குணதிலக 62 (64) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டேவிட் வில்லி, அடில் றஷீத் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இங்கிலாந்து அணிக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 42 ஓவர்களில் 308 என்ற இலக்கு வழங்கப்பட்டது. இலங்கை அணி தனது முதல் 18.1 ஓவர்களை, 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக எண்ணி விளையாடியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கான இலக்கு, இன்னமும் அதிகமாக இருந்திருக்க வேண்டுமென்ற கருத்து நிலவியது. ஆனால், இந்த இலக்கே, சவாலான இலக்கெனக் கருதப்படுகிறது.

 

இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, முதலாவது விக்கெட்டை 18 ஓட்டங்களுக்கு இழந்தபோது, இலங்கைக்கு நம்பிக்கை பிறந்த போதிலும், 2ஆவது விக்கெட்டுக்காக 149 ஓட்டங்கள் பகிரப்பட்டு, இலங்கையின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது.

 

துடுப்பாட்டத்தில் ஜேஸன் றோய் அதிரடியாக விளையாடி, 162 (118), ஜோ றூட் 65 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். தனுஷ்க குணதிலக மாத்திரம், ஓரளவு கட்டுப்பாடாக வீசி, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகனாக, ஜேஸன் றோய் தெரிவானார்.

 

இந்தப் போட்டியிலும் வென்று, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியிலும் வென்றால், இந்தத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருக்க முடியும் என்பதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரவரிசையில் ஓரிடம் முன்னேறி, 5ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

 

அவுஸ்திரேலியாவுக்கு உதவுகிறார் சமரவீர

 

பிறிஸ்பேர்ணிலுள்ள அவுஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் நிலையத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் குறிப்பிட்ட காலத்தில், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் சுற்றுப் பயணத்துக்கு முன்பதாக, சில அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்களுடன் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டவீரரான திலான் சமரவீர பணியாற்றுகின்றார்.

 

ஜூன் மாதம் ஓகஸ்ட் மாதம் வரை, அகடமியின் ஆலோசகராக பணிக்கமர்த்தப்பட்டுள்ள சமரவீரவின் பணியானது, எதிர்வரும் இலங்கைத் தொடருக்காக அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்களை தயார்படுத்துவதாக இல்லாதபோதும், அடம் வொஜஸ், ஷோர்ன் மார்ஷ், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் இலங்கைத் தொடருக்காக தயாராகுகையில், அவர்களுடன் இணைந்து ஏற்கெனவே சமரவீர பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.

 

இந்நிலையில், தற்போது, பிறிஸ்பேர்ணிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தான் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள சமரவீர, மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற முத்தரப்புத் தொடரில் பங்கேற்காத சில டெஸ்ட் வீரர்களுடன் தான் பணியாற்றுவதாகவும், அவர்கள் அங்கு பயிற்சிக்கு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறெனினும், அவுஸ்திரேலியாவின் இலங்கைத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணியுடன் செல்வேன் என்று தான் நினைக்கவில்லை என மெல்பேர்ணில் வசிக்கின்ற சமரவீர கூறியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய ஏ அணி வீரர்களுடன் பணியாற்றியிருந்த சமரவீர, இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்துக்கு முன்னரும் அகடமியில் பணியாற்றியிருந்தார்.

 

அவுஸ்திரேலிய அணி வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்நாடுகளின் நிலைமைகளுக்கு பழக்கப்பட்ட பயிற்சியாளர்களை பணிக்கமர்த்துவது அவுஸ்திரேலியாவின் புதிய கொள்கையாக இருக்கையில், இலங்கையணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரன், 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சுற்றுப்பயணத்தின்போது சுழற்பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றியிருந்தார்.

ஷாஸ்திரிக்குப் பாடமெடுக்கும் கங்குலி

 

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ரவி ஷாஸ்திரிக்குமிடையிலான மோதல், பகிரங்கமாக வெடித்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, ஊடகங்கள் மூலமாக எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இப்பிரச்சினை, இந்திய அணியின் பயிற்றுநர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகளைத் தொடர்ந்து ஆரம்பித்ததோடு, தற்போது, ரவி ஷாஸ்திரிக்கு தொழில் மரியாதை குறித்து கங்குலி பாடமெடுக்கும் அளவுக்கு வந்துள்ளது.

 

இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனைச் செயற்குழுவில், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மன் ஆகியோர் உள்ளனர். இந்தியாவின் அடுத்த பயிற்றுநரைத் தெரிவதற்கான முக்கிய பொறுப்பு, இக்குழுவுக்கே வழங்கப்பட்டிருந்தது. அடுத்த பயிற்றுநராகும் ஆர்வத்தில், 2 ஆண்டுகளாக அணியின் பணிப்பாளராகப் பணியாற்றிய ரவி ஷாஸ்திரியும் விண்ணப்பித்திருந்தார்.

 

இறுதியில் அணியின் பயிற்றுநராக அணில் கும்ளே தெரிவாக, தனக்கு அந்தப் பதவி கிடைக்காமை குறித்து வருத்தம் தெரிவித்த ஷாஸ்திரி, தன்னுடைய நேர்முகத் தேர்வின்போது, ஆலோசனைக் குழுவின் உறுப்பினரொருவர் இருந்திருக்கவில்லை எனவும் அந்த நபர், தன் மீது மரியாதையின்மையை வெளிப்படுத்தியதாகவும் தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மரியாதையை வழங்கியிருக்கவில்லை எனவும், ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார். அந்த நேர்முகத் தேர்வில், கங்குலியே கலந்துகொண்டிருக்காத நிலையில், தற்போது பதிலடி வழங்கியுள்ளார் கங்குலி.

 

வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கங்குலி, அச்சங்கத்தின் பணிச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே, இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஷாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

 

"அவருடைய கருத்துகள், மிகவும் தனிப்பட்டனவாக அமைந்ததாக நினைக்கிறேன். இந்திய அணியின் பயிற்றுநர் பதவி அவருக்குக் கிடைக்காமைக்கு, நான் தான் காரணமென அவர் நினைப்பாராயின், முட்டாள்களின் உலகத்தில் அவர் வாழ்கிறார்" எனத் தெரிவித்தார்.

 

கடந்த 20 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயற்குழுக்களில் இருந்த ஷாஸ்திரி, இவ்வாறான கருத்துகளை வெளியிட்டமை குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்த கங்குலி, பயிற்றுநரைத் தெரிவுசெய்யும் இதே பொறுப்பில் ஷாஸ்திரி இருந்ததாகவும் தெரிவித்த கங்குலி, அதுகுறித்து அவர் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

 

ஷாஸ்திரிக்குரிய நேர்முகத் தேர்வு, மாலை 4.15 மணிக்கு இடம்பெறவிருந்ததாகவும், 5 மணிக்கு இடம்பெறவிருந்த வங்க கிரிக்கெட் சங்கக் கூட்டத்துக்காக 5 மணிக்குச் செல்ல விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்கெனவே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்த கங்குலி, ஏனையோருக்கான நேர்முகத் தேர்வுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஷாஸ்திரிக்கான தேர்வு, 5 மணிவரை ஆரம்பிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

 

இதனையடுத்து, 6 மணிக்கு, கூட்டம் முடிவடைந்த பின்னர் இதனைத் தொடரலாமா எனக் கேட்க, ஆலோசனைச் செயற்குழு உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைச் செயலாளரும் சம்மதித்ததாகவும், அதனால் புறப்பட்டுச் சென்றதாகவும் கங்குலி தெரிவித்தார்.

 

ஆனால், கூட்டத்துக்கு வந்த பின்னர், கங்குலியின்றி நேர்முகத் தேர்வை நடத்துவதற்கு ஆலோசனைச் செயற்குழு உறுப்பினர்கள் விரும்ப, அதுகுறித்துத் தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்ததாகவும் கங்குலி தெரிவித்தார்.

 

ஷாஸ்திரியின் முன்னைய ஊடகக் கருத்தில், கங்குலிக்கு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, "அதைப் போன்ற முக்கியமானதொரு பதவிக்கு, யாராவது நேர்முகத் தேர்வுக்கு உள்ளாகும் போது, அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுங்கள்" என்பதே தனது ஆலோசனை என ஷாஸ்திரி தெரிவித்தார்.

 

இதற்குப் பதிலடி வழங்கிய கங்குலி, குறித்த நேர்முகத் தேர்வுக்கு நேரடியாக வராமல், ஸ்கைப் மூலமாக ஷாஸ்திரி பங்குபற்றியமையைச் சுட்டிக்காட்டினார்.

 

"அவருக்கும் எனது ஆலோசனையொன்று இருக்கிறது. உலகில் முக்கியமான பணிகளில் ஒன்றான இந்திய அணியின் பயிற்றுநர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படும் போது, செயற்குழுவுக்கு நேரடியாக முன்னாலிருந்து, தனது அளிக்கையை அவர் வழங்க வேண்டும். மாறாக, பாங்கொக்கில் விடுமுறையில் இருந்துகொண்டு, கமெராக்களின் வழியாக அன்று. குறிப்பாக, இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான அணில் கும்ளே, கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் கதைத்திருந்தார்" என, கங்குலியின் பாணியில், அதிரடியான பதிலை வழங்கியுள்ளார்.

 

றொஷென் சில்வாவுக்கு கிடைக்குமா வாய்ப்பு?

 

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஏ அணி, டரம் பிராந்திய அணியுடனான தனது முதலாவது நான்கு நாள் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணியின் தலைவர் அஷான் பிரியஞ்சன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, தமது முதலாவது இன்னிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் றொஷேன் சில்வா 109, சச்சித் பத்திரண 51 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டரம் அணி சார்பாக, குர்ஜித் சந்து 4, போல் கௌலின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை ஆடிய டரம் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கோர்டன் முச்சால் 70 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 5, லஹிரு கமகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, மூன்றாம் நாளில் 42 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, நான்காவது நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக இடம்பெற்றிருக்கவில்லை. குறித்த இன்னிங்ஸில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தபோது, இலங்கை ஏ அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், மஹேல உடவத்த 45, றொஷேன் சில்வா 43 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர். பந்துவீச்சில் டரம் சார்பாக ஜோஷ் கௌலின்,  றயான் பிறிங்கிள் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தார்.

 

27 வயதான றொஷேன் சில்வா, இதுவரை 85 முதற்தரப் போட்டிகளில் பங்குபற்றி, 17 சதங்கள் உட்பட 50.97 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றுள்ள போதிலும், இதுவரையிலும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், இந்தப் பெறுபேறாவது, அவருக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 

ஐ.பி.எல் 2012 தந்தது மாற்றம்: கோலி

 

உலகத்திலுள்ள மிகவும் உடலுறுதியான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, தனது உடலுறுதி காரணமாகத் தன்னால் சிறப்பாக விளையாட முடிவதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த மாற்றம் ஏற்பட்டமை தொடர்பான விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அண்மைக்காலமாக சதம் மேல் சதம் குவித்துவரும் விராத் கோலி, உலகில் அதிகம் மதிக்கப்படும் துடுப்பாட்ட வீரராகவும் கருதப்படுகிறார்.

 

அவரது இந்த நிலைமைக்கு, 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரே தூண்டுகோலாக அமைந்ததாகத் தெரிவித்தார். அந்தத் தொடரில் 15 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர், 28 என்ற சராசரியில் 364 ஓட்டங்களைப் பெற்றார். அவரது அடித்தாடும் வீதம், 111.65 என்றளவில் காணப்பட்டது. அத்தோடு, இரண்டே இரண்டு அரைச்சதங்களை மாத்திரம் பெற்றிருந்தார். அதன் பின்னரே, தனது வாழ்க்கைமுறை பற்றிய மாற்றத்தை மேற்கொண்டதாக, கோலி தெரிவித்தார்.

 

"2012ஆம் ஆண்டு ஐ.பி.எல் வரை, உடல் விடயம் தொடர்பாக நான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கவில்லை. காலையிலிருந்து இரவு வரை நான் என்ன உண்ண வேண்டும், எவ்வளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவுக்குப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் போன்ற உடற்றகுதியில் சிறிய விடயங்களில் நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை" என்றார்.

 

"அந்த ஐ.பி.எல் தொடரின் பின்னர், எனது உடல் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தேன். வாழ்க்கைமுறை மாற்றமொன்றை மேற்கொண்டேன். என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதற்கேற்றவாறு, எனது உடலின் புதிய பக்கத்தை அடைய விரும்பினேன். ஏனெனில், சராசரியானவனாக நான் இருக்க விரும்பவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

2018 WT20இல் மேலதிக 2 அணிகள்

 

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில், இரண்டு அணிகளுக்கு மேலதிக இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகுதிகாண் சுற்றில் மேலுமிரு அணிகளுக்கும் இடம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

 

இவ்வாண்டு இடம்பெற்ற இடம்பெற்ற தொடரில், தகுதிகாண் சுற்றில் 6 அணிகள் பங்குபற்றியதோடு, அச்சுற்றிலிருந்து 2 அணிகள் பிரதான சுற்றுக்குத் தெரிவாகி, மொத்தமாக 10 அணிகள், பிரதான சுற்றில் விளையாடியிருந்தன.

 

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி, பிரதான சுற்றில் 12 அணிகள் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிகாண் சுற்றில், மேலுமிரு அணிகளைச் சேர்த்து, 8 அணிகள் விளையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அது பிழைத்தால், 6 அணிகளிலிருந்து 4 அணிகள் தெரிவாகக்கூடிய நிலைமை ஏற்படும்.

 

இந்தியா – நியூசிலாந்துத் தொடர் விவரம்

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் இந்தியாவில் இடம்பெறவுள்ள முழுமையான தொடர் பற்றிய விவரங்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் வெளியிடப்பட்டுள்ளன.

 

3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய இந்தத் தொடர், செப்டெம்பர் 22ஆம் திகதியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

 

முதலில் டெஸ்ட் போட்டிகள் செப்டெம்பர் 22 (கான்பூர்), செப்டெம்பர் 30 (இந்தோர்), ஒக்டோபர் 8 (ஈடன் கார்டன்ஸ்) ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கவுள்ளன.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒக்டோபர் 16 (தரம்சாலா), 19 (டெல்லி), 23 (மொஹாலி), 26 (ராஞ்சி), 29 (விசாகப்பட்டினம்) ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன.

 

எனது பாணியை மாற்றவில்லை: மிக்கி ஆர்தர்

 

பாகிஸ்தான் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு, தனது முதலாவது தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ள மிக்கி ஆர்தர், தனது கடந்தகால சர்ச்சைக்குரிய பாணியை, இன்னமும் மாற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக இருந்த மிக்கி ஆர்தர், வீட்டுப் பாடம் செய்யாமையால் 4 வீரர்களை இடைநிறுத்தியமை உட்பட, அவுஸ்திரேலிய அணியில் அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. அப்பதவியிலிருந்து அவர், நீக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவரது புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ள அவர், அவுஸ்திரேலியப் பயிற்றுநர் பதவியிலிருந்து, ஆஷஸ் தொடருக்கு 2 வாரங்கள் இருக்கையில் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

 

"நீங்கள் சென்று, அதைப் பற்றி ஆராய்ந்து, அதுபற்றிச் சிந்திப்பீர்கள். அந்த அனுபவத்திலிருந்து நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். ஆனால், எனது பாணியை நான் மாற்றவில்லை. ஏனென்றால், விழுமியங்களினதும் கொள்கைகளினதும் அடிப்படையில் பணியாற்றுவதற்குச் சிறந்த முறையென நீங்கள் எண்ணுவதை, நீங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என நான் நினைக்கிறேன்" என்றார்.

 

மேலும் அவர், "வீட்டுப்பாட விவகாரம் தொடர்பாகக் கதைப்பதில் நான் களைப்படைந்து விட்டேன். அத்தோடு, அது ஊடகங்களில் அறிக்கையிடப்பட்ட விதம் குறித்தும் களைப்படைந்துள்ளேன்" என்றும் தெரிவித்தார்.

 

கழுகுகள் கிரிக்கெட் இரவு: முடிசூடியது சாவகச்சேரி சிவன்

 

அமரர் மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்தமாக, வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், கடந்த வெள்ளிக்கிழமை (24), சனிக்கிழமை (25), ஞாயிற்றுக்கிழமைகளில் (26) தமது மைதானத்தில் நடாத்திய கழுகுகள் கிரிக்கெட் இரவு என வர்ணித்து நடாத்திய, அணிக்கு எட்டு பேர், ஆறு ஓவர்கள் கொண்ட, நாடாளாவிய ரீதியிலிருந்து 52 அணிகள் பங்கு கொண்ட, விலகல் முறையிலான மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

 

சிவன் விளையாட்டுக் கழகத்துக்கும் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணிக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டிஸ்கோ பி அணி, சிவன் விளையாட்டுக் கழகத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக் கழகம், ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தர்ஷன், எட்டுப் பந்துகளில், 2, ஆறு ஓட்டங்கள், 1, நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

பந்துவீச்சில், டிஸ்கோ பி அணி சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய அபி, 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகியிருந்த சஞ்சீவன், தனது ஓவரில், நான்கு ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு 45 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டிஸ்கோ பி அணி, ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்று, பரிதாபகரமாக ஒரு ஓட்டத்தால் தோல்வியைத் தளுவியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆனந், 2, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

பந்துவீச்சில் சிவன் விளையாட்டுக் கழகம் சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய தீபன், 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தர்ஷன் தனது ஓவரில், ஏழு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

 

மேற்படி இறுதிப் போட்டியின் நாயகனாக, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகத்தின் தர்சன் தெரிவானார்.

 

இத்தொடரில் பங்கேற்ற 52 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 13 அணிகள் இடம்பெற்று, விலகல் முறையிலேயே போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

 

அந்தவகையில், குழு ஏயிற்கான காலிறுதிப் போட்டியில், கொக்குவில் ஸ்ரீ காமாட்சி விளையாட்டுக் கழகத்தை ஒன்பது ஓட்டங்களால் தோற்கடித்து, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், குழு பியிற்கான காலிறுதிப் போட்டியில், பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகத்தை இரண்டு விக்கெட்டுகளால் தோற்கடித்து அரியாலை ஐக்கியம் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்ததுடன், குழு சியிற்கான காலிறுதிப் போட்டியில், மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் ஏ அணியினை ஆறு விக்கெட்டுகளால் தோற்கடித்து கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு சென்றதுடன், குழு டியிற்கான காலிறுதிப் போட்டியில், வதிரி ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.

 

முதலாவது அரையிறுதிப் போட்டியில், அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினை எட்டு ஓட்டங்களால் தோற்கடித்து சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததோடு, இரண்டாவது அரையிறுதியில், கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகத்தினை 38 ஓட்டங்களால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.   

முத்தரப்புத் தொடர்: சம்பியனானது அவுஸ்திரேலியா

 

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் சம்பியன்களாக, அவுஸ்திரேலிய அணி தெரிவாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட அவுஸ்திரேலியா, 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

 

பார்படோஸில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில், 5 விக்கெட்டுகளை இழந்து 156, 6 விக்கெட்டுகளை இழந்து 173, 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவ்வணி சார்பாக, இறுதிநிலை வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

 

துடுப்பாட்டத்தில் மத்தியூ வேட் ஆட்டமிழக்காமல் 57 (52), ஆரொன் பின்ச் 47 (41), ஸ்டீவன் ஸ்மித் 46 (59), மிற்சல் மார்ஷ் 32 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டன், ஷனொன் கப்றியல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

271 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக முதலாவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்கள் பகிரப்பட்டாலும், பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு, 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 212 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டன.

 

துடுப்பாட்டத்தில் ஜோன்சன் சார்ள்ஸ் 45 (61), டினேஷ் ராம்டின் 40 (67), ஜேஸன் ஹோல்டன் 34 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட் 5, மிற்சல் மார்ஷ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக மிற்சல் மார்ஷும், தொடரின் நாயகனாக ஜொஷ் ஹேஸல்வூடும் தெரிவாகினர்.