அணித்தலைமைப் பதவி டோணியிடமிருந்து கோலிக்குச் செல்ல வேண்டும்: ஷாஸ்திரி

 

இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான விராத் கோலிக்கு, இந்தியாவின் அனைத்து வகையான போட்டிகளின் தலைமைத்துவமும் செல்வதற்கான பொருத்தமான நேரம் இதுவெனத் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் சகலதுறை வீரருமான ரவி ஷாஸ்திரி, இந்தியாவின் கிரிக்கெட்டினை முன்னிலைப்படுத்தி, இந்த முடிவு எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

 

2014ஆம் ஆண்டு இறுதியில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மகேந்திரசிங் டோணி ஓய்வுபெற்றமையையடுத்து, டெஸ்ட் போட்டிகளின் தலைமைத்துவம், விராத் கோலியிடம் சென்றது. இந்நிலையிலேயே, டோணி தலைமை வகிக்கும் ஏனைய வகைப் போட்டிகளின் தலைமைத்துவமும், கோலிக்குச்  செல்ல வேண்டுமென ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

மூன்று ஆண்டுகளில் இந்தியா எங்கே செல்ல வேண்டுமெனப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்த ஷாஸ்திரி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெரிய தொடர்கள் எவையுமில்லாத நிலையில், அதன் பின்னரே உலகக்கிண்ணம் வருவதாகவும் தெரிவித்தார். எனவே, சிந்தித்து, அணியொன்றைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

அடுத்த 18 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளைப் பார்க்கும் போது, இந்திய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெரிதளவில் பங்குபற்றாததோடு, டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குமிடையிலான இடைவெளி, மிகப்பெரியது எனவும் ஷாஸ்திரி தெரிவித்தார். தேர்வாளராக தான் இருந்திருந்தால், விராத் கோலியைத் தலைவராக நியமிப்பது குறித்தே சிந்திப்பார் எனவும் கோலி தெரிவித்தார்.

 

இந்த முடிவு கடினமாக அமையுமென்பதை ஏற்றுக்கொண்ட ரவி ஷாஸ்திரி, இந்தியாவின் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி, கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். தலைவராகக் கோலி நியமிக்கப்பட்டாலும், அணியின் வீரராக மகேந்திரசிங் டோணி தொடர்ந்தும் பங்களிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணி: சிக்கினார் ஷமின்ட எரங்க

 

பந்தை வீசியெறிகிறார் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமின்ட எரங்க மீது, உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது போட்டியின் முடிவைத் தொடர்ந்தே, இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் நடுவர்களாக அலீம் தார், எஸ். ரவி ஆகியோர் செயற்பட்டதுடன், போட்டி மத்தியஸ்தராக அன்டி பைக்றொப்ட் செயற்பட்டிருந்தார்.

 

இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமின்ட எரங்க, பந்தை வீசியெறியும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, இதுவே முதற்தடவையாகும். சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளின்படி, இவ்வாறு குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டு 14 நாட்களுக்குள் ஒருவரது பந்துவீச்சைச் சோதனைக்குள்ளாக்க வேண்டும். சோதனை முடிவு வெளிவரும்வரை, குறித்த பந்துவீச்சாளர் தொடர்ந்தும் பந்துவீச முடியும்.

 

இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீர ஆகியோரை இழந்துள்ள இலங்கை, தற்போது ஷமின்ட எரங்கவையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

 

3ஆவது போட்டியை வெல்ல முயல்வோம்: மத்தியூஸ்

 

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து, இத்தொடரை இழந்துள்ள போதிலும், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், உயர்வான மனநிலையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

 

முதலாவது போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி, 2ஆவது போட்டியின் முதல் இனிங்ஸில் இங்கிலாந்து பெற்ற 498 ஓட்டங்களுக்குப் பதிலளித்து, 101 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, டினேஷ் சந்திமாலின் 126, அஞ்சலோ மத்தியூஸின் 80, ரங்கன ஹேரத்தின் 61, கௌஷால் சில்வாவின் 60 ஓட்டங்களின் துணையோடு, 475 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி, வெற்றியிலக்கான 79 ஓட்டங்களை, ஒரு விக்கெட்டை இழந்து அடைந்திருந்தது.

 

இப்போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தாலும், முதலாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி, இப்போட்டியின் முதல் இனிங்ஸில் காணப்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, அவ்வணி மீளப் போராடிய விதம் ஆகியன, பாராட்டைப் பெற்றிருந்தன.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மத்தியூஸ், 'முதல் இனிங்ஸின் பின்னர், அணிக்குள் போராட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து நாம் கதைத்தோம். இரண்டாவது இனிங்ஸில், ஏராளமான மீளும் தன்மையை வெளிப்படுத்தினோம். முழு துடுப்பாட்டப் பிரிவாலும், அது சிறப்பான பெறுபேறாகும்" எனத் தெரிவித்தார்.

 

இலங்கை அணி, போட்டிகளில் தோற்றாலும், அவற்றில் போராடியே தோற்றும் வழக்கத்தைக் கொண்ட அணி என்ற பெருமையைக் கொண்டிருந்தாலும், முதலாவது போட்டியில் போராட்டமே இல்லாமல் தோல்வியடைந்திருந்ததோடு, இரண்டாவது போட்டியின் முதல் இனிங்ஸிலும் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது. இதன்படி, இத்தொடரில் அவ்வணி முதலில் துடுப்பெடுத்தாடிய 3 இனிங்ஸ்களிலும் போராட்டத்தை வெளிப்படுத்தாது, 150 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெறாமை குறித்துக் கலந்துரையாடியதாகவும், இலங்கையின் போராட்டக் குணத்தை மீளக் கொண்டுவருவது குறித்துக் கலந்துரையாடியதாகவும், மத்தியூஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்து, இத்தொடரை இலங்கை தோற்றுள்ள நிலையில், 3ஆவது போட்டி தொடர்பாக, இங்கிலாந்துக்கு அவர் எச்சரிக்கையை வழங்கினார்.

 

'இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. நாங்கள் தொடரை ஏற்கெனவே இழந்துள்ளோம். எனவே, நாம் சாதாரணமாகச் சென்று, (மூன்றாவது) போட்டியை வெல்ல முயல வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில், இலங்கையின் ரங்கன ஹேரத்தின் 300 விக்கெட்டுகள், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சனின் 450 விக்கெட்டுகள், அலஸ்டெயர் குக்கின் 10,000 ஓட்டங்கள் ஆகிய மைல்கல்கள் அடையப்பட்டிருந்த நிலையில், அம்மூவருக்கும் தனது வாழ்த்துகளையும், அஞ்சலோ மத்தியூஸ் வெளிப்படுத்தினார்.

 

சந்திமால் அதிரடி; போராடித் தோற்றது இலங்கை

 

இலங்கை அணியின் டினேஷ் சந்திமாலின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தின் மத்தியிலும், இங்கிலாந்து அணிக்கெதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 9 விக்கெட்டுகளால் தோல்வியே கிடைத்தது. எனினும், இங்கிலாந்து அணிக்குப் போராட்டத்தை வழங்கியது என்ற அடிப்படையில், இலங்கையின் வீரர்கள், பெருமையடைந்து கொள்ள முடியும்.

 

போட்டியின் முதல் இனிங்ஸில் இங்கிலாந்து பெற்ற 498 ஓட்டங்களுக்குப் பதிலளித்திருந்த இலங்கை அணி, 101 ஓட்டங்களுக்கே ஆட்டமிழக்க, ஃபொலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களுடன் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க, மேலும் 88 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய இலங்கை, மேலும் போராடியது. இறுதியில் அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 475 ஓட்டங்களைப் பெற்றது.

 

இலங்கை சார்பாக மிகச்சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டினேஷ் சந்திமால், 126 ஓட்டங்களைக் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 6ஆவது சதமாகும். தவிர, அஞ்சலோ மத்தியூஸ் 80, கடைநிலை வீரர் ரங்கன ஹேரத் 61, கௌஷால் சில்வா 60, மிலிந்த சிரிவர்தன 35 என ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 5, கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

79 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட்டை மாத்திரம் பெற்று, வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அலஸ்டெயர் குக், நிக் கொம்ப்டன் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 47, 22 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

இப்போட்டியின் நாயகனாக, இப்போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவானார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டி, எதிர்வரும் 9ஆம் திகதி, லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குக்குக்கு 10,000; அன்டர்சனுக்கு 450

 

இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது இங்கிலாந்து வீரராக, நேற்றுத் தன்னை வரலாற்றில் பதிந்துகொண்டார். இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்ஸில் அவர் 5 ஓட்டங்களைப் பெற்றபோதே, இந்த மைல்கல்லை அடைந்தார். இந்த மைல்கல்லை அடைந்த இளைய வீரர் குக் என்பதோடு, மொத்தமாக 12ஆவது வீரராவார்.

 

இலங்கையின் குமார் சங்கக்கார, இந்தியாவின் சச்சின் டென்டுல்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர், 195 இனிங்ஸ்களில் இந்த மைல்கல்லை அடைந்து, முதலிடத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், தனது 229ஆவது இனிங்ஸில் இதை அடைந்த அவர், மெதுவான நான்காவது வீரராவார்.

 

இதேவேளை, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், 450 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6ஆவது வீரராகத் தனது பெயரைப் பதிந்துகொண்டார். இலங்கைக்கெதிராக இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், 4ஆவது விக்கெட்டைக் கைப்பற்றும்போதே, இந்த மைல்கல்லை அடைந்தார்.

 

115 போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்த அவர், இதை மெதுவாக அடைந்த 2ஆவது வீரராவார்.
ஏற்கெனவே இப்போட்டியில் ரங்கன ஹேரத், தனது 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முரளியின் அறிவுரை: ‘பதற்றமின்றி இருங்கள்’

 

டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இரண்டிலும், உலகில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஐ.பி.எல் போட்டிகளில் 2010ஆம் ஆண்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றபோது, 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு, 4 ஓவர்களில் வெறுமனே 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.

 

இப்போது 2016ஆம் ஆண்டில், சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக முரளி செயற்பட்டுவருகிறார். இந்தத் தொடரின் சிறந்த பந்துவீச்சு அணியாக ஹைதராபாத் அணியே, கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டது.

 

எனினும், கிறிஸ் கெயிலின் அதிரடியால் பெங்களூர் அணி முன்னிலை பெற்றபோது, அணியின் பந்துவீச்சாளர்களைப் பதற்றமின்றி இருக்குமாறு தெரிவித்ததாகத் தெரிவித்த முரளி, இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், பெறவேண்டிய ஓட்ட வீதத்தின் அளவு அதிகரிக்குமெனவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

 

ஒரு வீரராக, ஏராளமான கிண்ணங்களை வென்றுள்ள போதிலும், பயிற்றுநராக இதுவே முதற்கிண்ணம் எனத் தெரிவித்த முரளி, அதன் காரணமாக, மிகவும் சிறப்பாக உணர்வதாக மேலும் தெரிவித்தார்.

 

 

ஐ.பி.எல் சம்பியன்களாக சண்றைசர்ஸ்: சாதித்தனர் ‘டேவிட்’கள்

 

இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் ஆரம்பிக்கும் போது, நடப்புச் சம்பியன்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ், நட்சத்திர அணியாகக் கருதப்பட்ட றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், புதிய அணியாக இருந்தாலும் பலமான அணியாகக் கருதப்பட்ட றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் ஆகிய அணிகளே, அதிக வாய்ப்புள்ள அணிகளாகக் கருதப்பட்டன. அதில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்க;ர் அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.

 

மறுபுறத்தில், சிறிய அணியாகக் கருதப்பட்டது தான், சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணி. டேவிட் வோணர், யுவ்ராஜ் சிங் என சில நட்சத்திரங்கள் இருந்தாலும், நட்சத்திரப் பட்டாளம் என்று சொல்லுமளவுக்கு, அவ்வணியில் பெரிய நட்சத்திரங்கள் இருந்திருக்கவில்லை.

 

ஆகவே, பெங்களூர் அணியும் ஹைதராபாத் அணியும் இறுதிப் போட்டியில் மோதியமை, கோலியாத்துக்கும் டேவிட்டுக்கும் (தாவீது) இடையிலான போட்டியென்றே வர்ணிக்கப்பட்டது. டேவிட் அணியாகக் கருதப்பட்ட ஹைதராபாத் அணியின் தலைவராக, டேவிட் வோணரே இருந்தமை, அந்த ஒப்பீட்டுக்கு இன்னமும் சுவாரசியத்தை வழங்கியது.

 

பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில், இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடுவது இலகு என்ற போதிலும், டேவிட்களின் தலைவரான டேவிட் வோணர், முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவை எடுத்தபோது, புருவங்கள் உயர்த்தப்பட்டன.

 

ஆனால், தலைவரின் 69 (38), பென் கட்டிங்கின் ஆட்டமிழக்காத 39 (15), யுவ்ராஜ் சிங்கின் 38 (23) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றபோது, டேவிட்கள் வென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது.

 

ஆனால், தாங்கள் எவ்வளவு பலசாலிகள் என்பதை கோலியாத்கள் வெளிப்படுத்தினர். 10.2 ஓவர்களில் 114 ஓட்டங்கள், எவ்வித விக்கெட் இழப்புமின்றிப் பகிரப்பட்டன. 76 (38) ஓட்டங்களுடன் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்தாலும், விராத் கோலி அதிரடியாக ஆடி, 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பு 140 ஓட்டங்கள் என்ற நிலை காணப்பட்டது.

 

ஆனால், இலகுவில் விட்டுவிட்டாத டேவிட்கள், தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற கோலியாத்கள், தோல்வியடைந்து, டேவிட்களுக்கு வெற்றியை வழங்கினர். டேவிட்களில் புவனேஷ்வர் குமார், முஸ்தபிஸூர் ரஹ்மான், பென் கட்டிங் ஆகியோர், சிறப்பாகப் பந்துவீசியிருந்தனர். போட்டியின் நாயகனாக பென் கட்டிங் தெரிவாக, தொடரின் மிகவும் பெறுமதிமிக்க வீரராக, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோலி தெரிவானார்.

 

தொடரில் அதிக ஓட்டங்களை விராத் கோலி பெற்றார். 16 இனிங்ஸ்களில் 4 சதங்கள், 7 அரைச்சதங்கள் உட்பட 81.08 என்ற சராசரியில் 973 ஓட்டங்களை அவர் குவித்திருந்தார். டேவிட் வோணர், 17 இனிங்ஸ்களில் 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 848 ஓட்டங்களைக் குவிக்க, மூன்றாவது இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் 16 இனிங்ஸ்களில் 52.84 என்ற சராசரியில் 687 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக, புவனேஷ்வர் குமார் காணப்பட்டார். 17 இனிங்ஸ்களில் அவர் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 13 இனிங்ஸ்களில் பெங்களூரின் யுஸ்வேந்த்ரா சஹால் 21 விக்கெட்டுகள், ஷேன் வொற்சன் 16 இனிங்ஸ்களில்  20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த டேவிட் வோணர், அணியின் அடைவை, 'அற்புதமான அணி அடைவு" என விளித்தார். அணியாக இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி எனத் தெரிவித்த அவர், பெங்களூர் அணிக்கெதிராக 200 ஓட்டங்களைப் பெற வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்ததாகவும், தாங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி, பந்துவீசி, களத்தடுப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

 

ஒளிபரப்பு உரிமைகள்: ஸ்டார் இந்தியாவுக்கு எதிராகத் தீர்ப்பு

 

இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பை, தொடர்ந்தும் இலவசமாகப் பேணுவதற்கான முக்கிய தீர்ப்பொன்றை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டு ஒளிபரப்புச் சட்டத்தின்படி, இந்தியா பங்குபற்றும் போட்டிகளில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் அனைத்துக்கான ஒளிபரப்புக் காணொளியை, போட்டி நேரடியாக ஒளிபரப்பாகும் நேரத்தில், விளம்பரங்கள் இல்லாமலும் அனுசரணையாளர்களின் இலச்சினைகள் இல்லாமலும், அரச ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்கு வழங்க வேண்டும். இதன்மூலம், முக்கிய போட்டிகள் அனைத்தும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது அகில இந்திய வானொலி மூலமாகவோ, அப்போட்டிகள், ஒளி/ ஒலிரப்பாகும்.

 

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அல்லது சர்வதேச கிரிக்கெட் சபை ஆகியவற்றினால் வழங்கப்படும் அனுசரணையாளர் இலச்சினைகளை, இல்லாது செய்ய முடியாது எனத் தெரிவித்து, ஸ்டார் இந்தியா நிறுவனம், வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த இலச்சினைகளும், விளம்பரங்களாகவே கருதப்பட வேண்டுமெனத் தெரிவித்தள்ளது.

 

சோதனைக்கு மத்தியில் சாதனைப் பட்டியலில் ரங்கன ஹேரத்

 

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மோசமான திறமை வெளிப்பாடுகளைக் காண்பித்த இலங்கை அணி, மிக மோசமான நிலைமையில் காணப்படுகிறது. இவ்வாறான சோதனையான நிலைமைகளுக்கு மத்தியிலும், இலங்கை அணி மகிழ்ச்சியடைவதற்குக் காரணமொன்று காணப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இலங்கையின் ரங்கன ஹேரத் கடந்தமையே, அதற்கான காரணமாகும்.

 

தனது 69ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் ரங்கன ஹேரத், முதலாவது இனிங்ஸ் முடிவடைந்ததுடன், 124 இனிங்ஸ்களில் பந்துவீசி, 30.04 என்ற சராசரியில் 64.5 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் ஓவரொன்றுக்கு 2.79 ஓட்டங்கள் என்ற சராசரியில், 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது 300ஆவது விக்கெட்டாக, இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் அமைந்தார்.

 

தனது 21ஆவது வயதில், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட ரங்கன ஹேரத், முதல் இனிங்ஸிலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அவரது முதல் விக்கெட், றிக்கி பொன்டிங் ஆவார். இவ்வாறு திறமையை வெளிப்படுத்திய போதிலும், இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் காணப்பட்டமையால், ஹேரத்துக்கான வாய்ப்புகள், அவ்வப்போது மாத்திரமே கிடைத்து வந்தன.

 

அவருக்கான மாற்றத்தை வழங்கிய வாய்ப்பு, 2009ஆம் ஆண்டு கிடைத்தது. முத்தையா முரளிதரன் காயமடைய, காலியில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற போட்டிக்காக, இங்கிலாந்தின் கழகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஹேரத்துக்கு, அவசர அழைப்புக் கிடைத்தது. இலங்கை அணி தோல்வியடையுமென எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், இரண்டாவது இனிங்ஸில் 11.3 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹேரத், அப்போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

 

அந்தப் போட்டிக்கு முன்னர், 14 போட்டிகளில் விளையாடிய 39.39 என்ற சராசரியில் 80.6 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ஹேரத், அந்தப் போட்டியிலிருந்து இதுவரை, 55 போட்டிகளில் 28.77 என்ற சராசரியில் 62.3 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் 264 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

மொத்தமாக அவர் கைப்பற்றிய 300 விக்கெட்டுகள், இலங்கை சார்பாகக் கைப்பற்றப்பட்ட 3ஆவது அதிகூடிய விக்கெட்டுகளாகும். 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முரளிதரன் முதலிடத்திலும் 355 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சமிந்த வாஸ் இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றனர். அத்தோடு, 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும், ரங்கன ஹேரத்துக்கு உண்டு. முதலாமவராக, நியூசிலாந்தின் டானியல் விற்றோரி காணப்படுகிறார்.

 

தனது 69ஆவது போட்டியில் 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றிய ஹேரத், வேகமாக அந்த மைல்கல்லை அடைந்த 9ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை, மிற்சல் ஜோன்சனுடன் பகிர்ந்துகொள்கிறார். வசீம் அக்ரம், கேர்ட்லி அம்ப்ரோஸ், இயன் பொத்தம், ஹர்பஜன் சிங், பிரட் லீ, ஷோன் பொலக், மக்காயா இன்டினி, கொர்ட்னி வோல்ஷ், ஜேம்ஸ் அன்டர்சன், கபில் தேவ், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸகீர் கான், சமிந்த வாஸ் உள்ளிட்ட பலர், ரங்கன ஹேரத்தை விட அதிகமான போட்டிகளை எடுத்துக் கொண்டார்கள் என்பது, ஹேரத்தின் திறமையை வெளிக்காட்டுகிறது.

 

முரளியின் ஓய்வின் பின்னர் இலங்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்திருந்த நேரத்தில், அவரது இடத்தை ஓரளவுக்கு முழுமையாகவே நிரப்பினார் என்ற பெருமை, ஹேரத்துக்கு உண்டு. இன்னும் நிறையக் காலத்துக்கு அவரால் போட்டிகளால் பங்குபற்ற முடியாது என்ற நிலையில், அவருக்கு அடுத்தது யார் என்பதே, தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.

 

ஐ.சி.சியின் நம்பிக்கை: ‘உலக இருபதுக்கு- 20 2018இல் மீளவரும்’

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) சிரேஷ்ட புள்ளிகள், ஸ்டார் ஸ்போர்ட்ஸை இன்று வியாழக்கிழமை (26) சந்தித்திருந்தபோது, உலக இருபதுக்கு- 20 2018இல் மீள வருவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையின் மேலுமொரு படியை ஐ.சி.சி எடுத்து வைத்திருந்தது.

 

2018ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20ஐ நடாத்துவதற்கு முன்னுரிமையான தெரிவாக தென்னாபிரிக்கா காணப்படுவதாக நம்பப்படுகிறது. இதனால், வெள்ளையினத்தவர்கள் அல்லாதவர்களை 60 சதவீதம் அணியில் இணைக்க வேண்டும் போன்ற தென்னாபிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஒரு வருடத்துக்கு உலக நிகழ்வுகளை நடாத்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விதித்த தடையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

 

உலக இருபதுக்கு- 20ஐ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்த வேண்டும் என யோசனைக்கு அனைத்து ஐ.சி.சி அங்கத்துவ நாடுகளும் துணை நின்றாலும், தற்போதுள்ள உரிம வட்டத்திலுள்ள 2020ஆம் ஆண்டு தொடருக்கு மேலதிகமாக, இரண்டு, உலக இருபதுக்கு- 20 தொடர்களை 2018, 2022இல் வாங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயாராக இருக்கின்றதா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.

 

எனினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸூடன் இணக்கம் ஏற்படும் என்றே ஐ,சி.சி எதிர்பார்க்கிறது. ஏனெனில் இவ்வருடம உலக இருபதுக்கு- 20 தொடரில், இந்தியாவின் அரையிறுதிப் போட்டியையும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான போட்டிகளையும் 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பார்வையிட்டிருந்தனர். தவிர, உலகளாவிய ரீதியில் போட்டிகளின் காணொகள், உலகளாவிய ரீதியில் 750 மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போட்டிகளின் காணொளிகள் 250 மில்லியன் தடவைகளே பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இணக்கம் ஏற்பட்டால், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐ.சி.சியின் வருடாந்த மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 2018, 2022 உலக இருபதுக்கு- 20 தொடர்களானது, சம்பியன்ஸ் லீக்குக்காக முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாத ஆரம்பத்திலுள்ள மூன்று வார இடைவெளியில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

 

தென்னாபிரிக்கா போன்று ஐக்கிய அரபு அமீரகமும் தொடரை நடாத்தக்கூடிய இன்னொரு இடமாகக் கருதப்படுகிறது ஏனெனில் அதன் நேர வலயம் இந்தியாவுக்கு நன்றாக ஒத்துப்போவதுடன் காலநிலையும் மேற்குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பாக இருக்கும்.

 

இதேவேளை, சுப்பர்- 10இல் மேலதிகமாக இரண்டு அணிகளை உள்ளடக்குவது தொடர்பிலும் ஐ.சி.சி ஆராய்கிறது. இதன் காரணமாக இவ்வருட உலக இருபதுக்கு- 20 இல் துணை அங்கத்துவ நாடுகளின் சுப்பர்- 10இல் தாம் வெளியேற்றப்பட்டோம் என்ற முறைப்பாட்டை ஓரளவு அணுகலாம் என்று ஐ.சி.சி எதிர்பார்க்கின்றது.