இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி  இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன.

இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது.

 

இங்கிலாந்து  ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல்  இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாகவும் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாகவும் என்ற அடிப்படையில் அணி உள்ளது. துடுப்பாட்டவீரர்களில் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களும் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களுமே அதிக இடம் பிடித்துள்ளனர். மத்திய வரிசை இலங்கை அணியை பொறுத்தளவில் இறுக்கமாக இருந்தாலும் பின் மத்திய வரிசை மிக மோசமாக உள்ளது.

 

குறிப்பாக ஆறாமிடம், ஏழாமிடம் என்பன நிச்சய தன்மையற்ற நிலை. இந்த இடத்துக்கான மேலதிக வீரர்கள் தெரிவு செய்யப்படவில்லை. உள்ளூர்ப் போட்டிகளில் முன்வரிசை வீரர்களாக துடுப்பாடும் வீரர்களே பின் மத்திய வரிசையில் துடுப்பபாடப் போகின்றனர் என்றே நம்பலாம். சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என்பன எதிர்பார்க்கப்பட்டது போன்றே அமைந்துள்ளது. 17 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் மேலதிக இரு வீரர்கள் அணியில் உள்ளனர் எனக் கூற முடியும்.

 

அணி விபரம்

அஞ்சலோ மத்தியூஸ் – தலைவர்

டினேஷ் சந்திமால் – உபதலைவர்

தனஞ்சய டீ சில்வா

தசூன் ஷானக்க

தம்மிக்க பிரசாத்

டில்ருவான் பெரேரா

டிமுத் கருணாரட்ன

துஷ்மந்த சமீர

கௌஷால் சில்வா

குஷால் மென்டிஸ்

லஹிரு திரிமான்ன

மிலிந்த சிரிவர்த்தன

நிரோஷன் டிக்வெல்ல

நுவான் பிரதீப்

ரங்கன ஹேரத்

சமின்ட எரங்க

சுரங்க லக்மால்

 

துடுப்பாட்ட வரிசைப் படி பார்த்தல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கௌஷால் சில்வா, திமுத் கருணாரட்ன ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர். இந்த ஜோடி நிரந்தர ஜோடி. இவர்களுக்கு அதிக மேலதிக வீரர்கள் தேவை இல்லை  என்றே கூற முடியும். ஒரு வீரர் தேவை என்று பார்த்தல் ஒருவரை தாண்டி பலர் உள்ளனர்.  கௌஷால் சில்வா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் விளையாடி இருக்கவில்லை.  திமுத் கருணாரட்னவுடன் குஷால் மென்டிஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். பெரியளவில் எதனையும் செய்யாத போதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இவர் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

 

ஆனால் அந்த தொடரில் மூன்றாமிலக்கத்தில் களமிறங்கிய உதரா ஜயசுந்தர ஆரம்ப வீரர். அப்போது உள்ளூர்ப் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர். டெஸ்ட் அறிமுகம் மோசமாக அமைந்தது. ஆனாலும் மீண்டும் நாடு திரும்பிய இவர் ஓட்டங்களை அள்ளி குவித்து வருகின்றார். இந்த வருடத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் 631 ஓட்டங்களை பெற்றுள்ளார். இறுதியாக விளையாடிய போட்டியில் 318 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் நியூசிலாந்து தொடருக்கு இணைக்கப்படும் முன்னரும் கூட சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதும் அவர் வேண்டுமென்றே விலக்கப்பட்டுள்ளதாகவே நம்ப தோன்றுகின்றது.

 

குஷால் மென்டிஸ், உதார ஜயசுந்தர உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல முறையில் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் விக்கெட் காப்பாளாரக அணியில் இடம் பிடித்து இருக்கிறார் என்றால் நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கெட் காப்பாளர். ஒரே ரக வீரர்கள் இருவர் அதுவும் மேலதிக வீரர்களாக அணியில் தேவைதானா?  தினேஷ் சந்திமாலுக்கு உபாதை ஏற்பட்டால் இன்னுமொரு விக்கெட் காப்பாளர் தேவை என்று எடுத்துக்கொண்டாலும் கௌஷால் சில்வாவும் விக்கெட் காப்பாளரே.

 

கௌஷால் சில்வா உபாதையில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆனாலும் பயிற்சிகளின் போது தலையில் பந்து அடிபட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மீண்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் நல்ல போர்மில் உள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் இரு இரட்டைச்சதங்கள் அடங்கலாக 4 போட்டிகளில் 97 என்ற சராசரியில் 582 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். திமுத் கருணாரட்ன சராசரியான போர்மில் உள்ளார். நிரந்தர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் இவரின் இடம் கேள்வியில் இல்லை.

 

ஆரம்ப வீரர்களாக பல வீரர்கள் அணியில் சேர்க்கப்படுள்ள போதும் 2015/16 உள்ளூர் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களை பெற்றுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் தரங்க பரணவித்தான அணியில் இணைக்கப்படவில்லை. 34 வயதான இவர் 10 போட்டிகள் 953 ஓட்டங்களை 79.41 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.

 

விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான பானுக்க ரணசிங்ஹ 901 ஓட்டங்களை 64.35 என்ற சராசரியில் 10 போட்டிகளில் பெற்றுள்ளார். 342 ஓட்டங்கள் கூடுதலான ஓட்டங்கள். நிரோஷன் டிக்வெல்ல 5 போட்டிகளில் 388 ஓட்டங்களை பெற்றுள்ளார். தனஞ்சய டி சில்வா ஆரம்ப துடுப்பாட்ட வீரர். சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர். இவருடைய பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டுமே பலமானது. 10 போட்டிகளில் 868 ஓட்டங்களை 51.82 என்ற சராசரியிலும் 34 விக்கெட்களை 14.23 என்ற சராசரியிலும் பெற்றுள்ளார். ஆக இந்த வீரர்களின் ஒப்பீடுகளை பார்க்கும் போது குஷால் மென்டிஸ் மற்றும் நிரோஷன்  டிக்வெல்ல ஆகியோரின் தெரிவு திருப்தியளிப்பதாக இல்லை என்றே கூற முடியும்.

 

மூன்றாமிடத்துக்கு மீண்டும் லகிரு திரிமான்ன இணைக்கப்பட்டுள்ளார். இவரின் இறுதி வாய்ப்பு இதுவென்றே கூற முடியும். முன்னாள் வீரர்கள் இவருக்கு சரியான வாய்ப்பு வழங்குங்கள். இவர் எங்கள் எதிர்கால வீரர் என்று சிபாரிசு செய்துள்ளமை இவருக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் இவரும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவது இன்னுமொரு விடயம். உள்ளூர்ப்போட்டிகளில் போர்மில் உள்ளார். மற்றைய வீரர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கடந்த மூன்று போட்டிகளில் 2 சதங்களை பெற்றுள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பாவித்து கடந்த காலங்களில் இவரை ஓரங்கட்டியவர்களுக்கு சரியான அடியை இவர் வழங்க வேண்டும். இவர் ஒரு வேளை பயிற்சிப்போட்டிகளிலோ அல்லது ஆரம்ப போட்டிகளிலே சோபிக்கத் தவறினால் இருக்கும் மேலதிக ஆரம்ப வீரர்களில் ஒருவர் அந்த இடத்தை பிடிப்பார்.

 

நான்காமிடம் டினேஷ் சந்திமால். இவர் சர்வதேச ரீதியில் அந்தஸ்தை பெற்றுள்ளார். உபதலைவர், விக்கெட்காப்பாளர். டெஸ்ட் போட்டிகளில் 45.28 என்ற சிறந்த சராசரியைப்பெற்றுள்ளார். ஐந்தாமிடம் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். இவரின் துடுப்பாட்டம் சிறப்பானது. 50.18 என்ற உயரிய சராசரியைப் பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இவரின் பந்து வீச்சு அதிகம் பாவிக்கப்படுவதில்லை. இங்கிலாந்து ஆடுகளங்களில் இவர் அதிகம் பந்து வீசுவது இலங்கை அணிக்கு பலமாக அமையும். இவரின் பந்து வீச்சு பாணி நிச்சயம் கை கொடுக்கும். ஆனால் உபாதைப் பயம், அதிக அழுத்தம் என்பன மத்தியூசை டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவதில் இருந்து தள்ளி வைத்துள்ளது.

 

அடுத்த இரு இடங்கள் மிக முக்கியமானவை. இரு சகலதுறை வீரர்களுக்கான இடமாக தென்படுகின்றது. மிலிந்த சிறிவர்த்தன ஏழாமிடத்தில் துடுப்பாடி நம்பிக்கையை தந்துள்ளார். இனி இவர் ஆறாமிடத்தில் துடுப்பாடுவார். இவரின் சுழற்பந்து வீச்சு கைகொடுக்கும். நியூசிலாந்து தொடரில் அதிகம் பந்து வீசவில்லை. ஆனால் அறிமுக மேற்கிந்திய தொடரில் சிறப்பாக பந்து வீசியவர். இந்த தொடரில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையவுள்ளது. இவரை நம்பித்தான் பின்மத்திய வரிசையில் மேலதிக வீரர்களை சேர்க்கவில்லையோ தெரியவில்லை.

 

அடுத்த இடம் யாருக்கு? தசூன் ஷானகவுக்கே என்றே கூற முடியும். இது ஒரு சிறந்த தெரிவு என கூற முடியும். இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவரின் துடுப்பாட்டமும் பந்து வீச்சும் கைகொடுக்கும். அண்மைய பிறீமியர் லீக் உள்ளூர்ப் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 6 போட்டிகளில் கைபப்ற்றியுள்ளார்.  இந்த வருடத்தில் இவர் உள்ளூர்ப்போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. இவரின் துடுப்பாட்டம் சராசரியானதாக அமைந்துள்ளது. 38.12 என்ற சராசரியில் 1258 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவரின் இடத்துக்கு போட்டியாக அமையக்கூடியவர் தனஞ்சய டி சில்வா எனக் கூற முடியும். இலங்கை அணி ஒரு சுழற் பந்து வீச்சாளருடன் மாத்திரமே களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி பார்த்தால் அடுத்த பலமான சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் தேவை என கணித்தால் தனஞ்சய டி சில்வாவினை இந்த இடத்தில பாவிக்கலாம். இவரின் துடுப்பாட்டம் மேலதிகமாக அணிக்கு பலத்தை சேர்க்கும்.

 

சுழற்பந்து வீச்சாளர் இடம் ரங்கன ஹேரத்துக்கு மட்டுமே. இங்கிலாந்து ஆடுகளங்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது சாத்தியமற்ற விடயம். ஹேரத் உபாதை சிக்கல் இல்லாவிடால் முழுமையாக மூன்று போட்டிகளிலும் விளையாடுவார். டில்ருவான் பெரேரா மேலதிக வீரராகவே இருப்பார்.

 

வேகப்பந்து வீச்சில் இலங்கை அணி முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள் மூவருடன் விளையாடும் வாய்ப்புகளே உள்ளன. நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அஞ்சலோ மத்தியூஸ் அணியில் உள்ளார். இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படின் தசூன் ஷானக அணியால் நீக்கப்பட வேண்டும். அல்லது அந்த இடத்தில இடம் பிடிப்பவர் நீக்கப்படுவார். தசூன் ஷானக சேர்க்கப்பட்டால் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற நிலை இல்லாமல் ஸ்விங் பந்துவீச்சாளர் என்ற இடத்தை அவருக்கு வழங்க முடியும்.

 

வேகப்பந்து வரிசையில் தம்மிக்க பிரசாத் உபாதையில் இருந்து மீண்டு அணிக்குள் இடம் பிடித்துள்ளார். கடந்த வருடத்தின் சர்வதேச டெஸ்ட் வேகப்பந்துவீச்சில் இரண்டாமிடத்தில் உள்ளவர். இவரின் வேகம் அணிக்கு கைகொடுக்கும்.   துஷ்மந்த சமீர கேள்விகள் அற்ற இரண்டாம் தெரிவு. இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் வீரர். இவர்கள் இருவரும் நடைபெற்று வரும் பிறீமியர் லீக் தொடரில் விளையாடவில்லை. விளையாடாமலே அணியில் இடம் பிடிக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள். அடுத்த ஒரு இடத்துக்கு சுரங்க லக்மால், நுவன் பிரதீப், சமின்ட எரங்க ஆகியோர் போட்டியிடப்போகின்றனர். சமின்ட எரங்க விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை மற்ற இருவரிலும் பார்க்க சிறப்பாக கைப்பற்றியுளர். அடுத்த தெரிவாக சுரங்க லக்மால் இருப்பார்.

 

இலங்கை அணி சார்பாக அதிகம் விளையாடும் வீரர்கள் என்ற கணிப்பில் பார்த்தல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள். மூன்று சகலதுறை வீரர்கள். நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள். ஆகா இப்படி ஒரு அணி கிடைக்குமா? நிச்சயம் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த அணியில் ஒரு நம்பிக்கை தோன்றுகின்றது. விளையாடும் 11 பேரிலேயே இந்த நம்பிக்கை அதிகம் உள்ளது. வெளியே உள்ள வீரர்களில் அல்ல என்றும் சொல்ல தோன்றுகின்றது.

 

இங்கிலாந்தில் தொடர் நடைபெற்றுகின்றது. இங்கிலாந்து பலமான அணி. இலங்கை அணியோ மீண்டும் அணியை கட்டியெழுப்பும் நிலையில் உள்ளது. வெற்றி தோல்விகளை தாண்டி இலங்கை அணி இந்த தொடரில் வீரர்களை இனங்கண்டு சரியாக தயார்ப்படுத்தல்களை செய்ய வேண்டும். தோற்றாலும் நன்றாக விளையாடினார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினாலே போதுமானது. அடுத்து இலங்கைக்கு அவுஸ்திரேலியா வரும் போது வெற்றி பற்றி யோசிக்கலாம்.

 

 

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன்

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார்.

 

இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார்.

 

கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (27) ஒக்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைபவ ரீதியாக, மூன்று வகையான போட்டிகளினதும் நியூசிலாந்து அணியின் தலைவராக வில்லியம்ஸன் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார்.

 

நியூசிலாந்து அணியின் அடுத்த சர்வதேச சுற்றுப்பயணம், ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் ஆபிரிக்காவுக்கு இடம்பெறவுள்ள நிலையில், சிம்பாப்வேயிலும் தென்னாபிரிக்காவிலும் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கலந்து கொள்கிறது.

 

அந்தவகையில், தற்போது 25 வயதான வில்லியம்ஸன், ஸ்டீபன் பிளெமிங், ஜோன் பார்க்கருக்கு அடுத்ததாக, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு தலைமை தாங்கவுள்ள மூன்றாவது இளம் தலைவராக மாறவுள்ளார்.

 

இலங்கைத் தொடருக்காக அலன் டொனால்ட்

 

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வெள்ளை மின்னல் என அழைக்கப்படுபவருமான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவரது நியமனம், இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுப் பயிற்றுநராக இருந்த கிறெய்க் மக்டேர்மர்ட், உலக இருபதுக்கு-20 தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, அப்பதவிக்கு அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், முழுநேரத் தொழிலாக, அப்பதவியில் நியமிக்கப்பட்டால், மிகுந்த ஆர்வத்துடன் அதை ஏற்கவுள்ளதாக, அலன் டொனால்ட் தெரிவித்தார். நீண்டநாட்களுக்கு அப்பதவி கிடைக்குமாயின், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுநரான டெரன் லீமனுடன் இணைந்து பணியாற்றுவதை, மிகவும் விரும்புவார் என அவர் தெரிவித்தார்.

 

தென்னாபிரிக்கா சார்பாக 72 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய அலன் டொனால்ட், தனது ஓய்வின் பின்னர், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்குப் பந்துவீச்சுப் பயிற்சியை வழங்கியிருந்தார்.

 

இதேவேளை, இலங்கைத் தொடருக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக ஸ்டுவேர்ட் லோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பயிற்றுநரான கிரெக் பிளெவெட்டின் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அவர் விடுமுறையில் உள்ளதன் காரணமாகவே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

 

 

இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா

 

இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது.

 

தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தவிர, விக்கெட் காப்பாளர்களான குசால் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, கௌஷால் சில்வா ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கௌஷால் சில்வா, தலையில் பந்து தாக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதால், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

வேகப்பந்து வீச்சாளர்களாக தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், ஷமின்ட எரங்க, சுரங்க லக்மமால், துஷ்மந்த சமீர ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷமின்ட எரங்க, 16 மாதங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அவர், குணமடைந்து, உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சுழற்பந்து வீச்சாளர்களாக ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக இருபதுக்கு-20 தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட ஜெப்றி வன்டர்சே மற்றும் தனக்குக் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயற்பட்ட தரிந்து கௌஷால் ஆகியோருக்கு இடங்கிடைக்கவில்லை.

 

இடதுகைத் துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன, இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 20 பேர் கொண்ட தற்காலிகக் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத போதிலும், தற்போது 17 பேர் கொண்ட இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் பிரகாசித்திருக்காத நிலையிலேயே (இறுதி 25 இனிங்ஸ்களில் 19.26 என்ற சராசரி), அவரது உள்ளடக்கம் அமைந்துள்ளது.

 

இத்தொடரின் முதலாவது பயிற்சிப் போட்டி மே 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு, முதலாவது டெஸ்ட் போட்டி, மே 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது அமையவுள்ளது.
இருதரப்பு டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கை அணி இறுதியாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உறுதியானது ஜெயசூரியவின் பதவி

 

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலிலேயே தனது பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகியிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சனத் ஜெயசூரியவைப் பிரதம தேர்வாளராக நியமிக்கும் முடிவை, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கெனவே எடுத்திருந்த போதிலும், விளையாட்டமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதிக்காகக் காத்திருந்தது. இந்நிலையிலேயே, அவரது அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவின் பணிகள், மே 1ஆம் திகதி முதலேயே ஆரம்பிக்குமென்ற போதிலும், தற்போதுள்ள தேர்வுக்குழுவுடன் அவர் இணைந்து செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
ஜெயசூரியவின் தேர்வுக்குழுவில், முன்னாள் விக்கெட் காப்பாளரான ரொமேஷ் களுவிதாரண, முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான எரிக் உபஷாந்த, முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரஞ்சித் மதுரசிங்க ஆகியோரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இதில், ஜெயசூரியவின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக ரொமேஷ் களுவிதாரண திகழ்ந்தவர் என்பதோடு, எரிக் உபஷாந்த, இதற்கு முன்னைய ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவில் பணியாற்றியிருந்தார். ரஞ்சித் மதுரசிங்க, தற்போதுள்ள அரவிந்த டி சில்வா தலைமையிலான தேர்வுக்குழுவில் அங்கம் வகிக்கிறார்.

 

இதற்கு முன்னர் தேர்வாளராக ஜெயசூரிய இருந்தபோது, அப்போதைய சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோருடன் பகிரங்கமாகவே முரண்பட்டிருந்தார். எனினும், அவர்கள் தற்போது ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கோண தொடரில் காயமடைந்த ஹேஸ்டிங்ஸ் இல்லை

 

கணுக்கால் காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறவுள்ள முக்கோணச் சுற்றுத் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஜோன் ஹேஸ்டிங்ஸுக்கு பதிலாக கடந்த அவுஸ்திரேலிய கோடைகாலத்தின் போது இந்தியாவுக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட விக்டோரியா மாநில அணியின் சக வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் போலண்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

 

இந்தியன் பிறீமியர் லீக் அணியான கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணிக்காக போட்டியொன்றுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இடது கணுக்காலில் காயமடைந்த ஜோன் ஹேஸ்டிங்ஸ், இம்மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

2015-16 அவுஸ்திரேலிய கோடை பருவகாலம், ஜோன் ஹேஸ்டிங்ஸுக்கு மீள் எழுச்சியாக அமைந்திருந்தது. நான்கு வருடங்களுக்கு பிறகு, 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பியிருந்த ஹேஸ்டிங்ஸ், பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராக இருந்தார்.  

கௌஷால் சில்வாவுக்கு பூரண சுகம்

 

தலையில் பந்து தாக்கி, காயமடைந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வாவுக்குப் பூரண சுகம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

வைத்தியசாலையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட கௌஷால் சில்வா, இரண்டு நாட்கள் பூரண ஓய்வை எடுத்த பின்னர், மெதுவான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பிப்பார் எனவும், அடுத்த வாரமளவில் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

 

வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட கௌஷால் சில்வாவுக்கு, நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லையென வைத்தியர்கள் அறிவித்த நிலையில், பூரண சுகமடைந்தவர் என்றே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல், உடல்ரீதியான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு வழங்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.

 

தன்னுடைய உபாதை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கௌஷால் சில்வா, 'எனக்குச் சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்து, இந்நிலைக்கு நான் வர உதவிய இலங்கை கிரிக்கெட் சபை, அஞ்சலோ மத்தியூஸ், சனத் ஜெயசூரிய ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு நான் ஓய்வெடுப்பேன், ஆனால், மைதானத்தில் விரைவில் களமிறங்கி, சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.

 

பல்லேகெலயில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டினேஷ் சந்திமால் அடித்த பந்து, அவரது தலைக்கவசத்தையும் தாண்டி அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

‘தென்னாபிரிக்கரென என்னை அழைக்க அவமானம்’

 

விளையாட்டுகளில் கறுப்பினத்தவரின் பங்குபற்றலை அதிகரிப்பதை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக, தென்னாபிரிக்காவின் கிரிக்கெட், றக்பி, வலைப்பந்தாட்ட, தடகளச் சம்மேளனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான ஜக்ஸ் கலிஸ், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

தென்னாபிரிக்கா சார்பாக 166 டெஸ்ட் போட்டிகளிலும் 328 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 25 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய ஜக்ஸ் கலிஸ், விதிக்கப்பட்டுள்ள தடை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, 'தென்னாபிரிக்கரென என்னை நான் அழைப்பதற்கு நான் இந்நாட்களில் அடிக்கடி அவமானமாக உணருமளவுக்கு இது மிகவும் கவலையானது. விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

 

தென்னாபிரிக்க சனத்தொகையில் ஏறத்தாழ 80 சதவீதமாக உள்ள கறுப்பினத்தவர்களும் ஏறத்தாழ 9 சதவீதமாக உள்ள நிறப்பிரிவினரும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களில் போதுமானளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை என்பதோடு, ஏறத்தாழ 9 சதவீதமே உள்ள வெள்ளையினத்தவர்களே, விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

உலக இருபதுக்கு-20 தொடர்: மே.தீவுகள் அணிக்கு ஐ.சி.சி கண்டனம்

 

உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி உட்பட அவ்வணியின் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) தனது உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. டுபாயில் கூடியுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, அங்குவைத்தே, இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 

உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி, அவ்வணியின் இரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் கரீபியன் தீவுகளின் அரச தலைவர்களுக்கும் நன்றி செலுத்தியதோடு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது உச்சபட்சமான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

 

அதன் பின்னர், அணியின் சிரேஷ்ட வீரரான டுவைன் பிராவோவும், அணித்தலைவரின் கருத்துகளை மீளத் தெரிவித்ததோடு, உலகிலுள்ள தொழில்முறைப் பண்புகளற்ற கிரிக்கெட் சபையென, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையை வர்ணித்ததோடு, சபையின் தலைவர் டேவ் கமரோனை, முதிர்ச்சியடையாதவர் எனவும் குறுகிய மனமுடையவர் எனவும் திமிரானவர் எனவும் வர்ணித்திருந்தார்.

 

ஆண்கள் தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பெண்கள் தொடரையும் வென்றதோடு, பெப்ரவரியில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தையும் வென்று, இவ்வாண்டில் 3 தொடர்களை வென்றுள்ள போதிலும், சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் வைத்து, அவ்வணிக்குக் கண்டனமே பிரதானமாகக் கிடைத்தது.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கருத்துகள், பொருத்தமற்றவை எனவும் மரியாதையற்றன எனவும் தெரிவித்த அச்சபை, நிகழ்வின் மரியாதையைக் குறைப்பனவாக அமைந்தன என அச்சபை தெரிவித்துள்ளது. அவ்வீரர்களுக்கெதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்வது குறித்து ஆராயப்பட்டதாகவும் அச்சபை குறிப்பிட்டது. அவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அவ்வீரர்களுக்கு அபராதமோ அல்லது தடைகளோ அல்லது இரண்டுமோ கிடைத்திருக்கும்.

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் நிகழ்வுகளில் இவை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நடத்தை கிடையாது எனத் தெரிவித்த அச்சபை, இவ்விடயம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தது.

 

இறுதிப் போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மீது தெரிவித்த கருத்துகள் தொடர்பாகவும் ஏனைய கருத்துகள் தொடர்பாகவும் தனித்த விமர்சனங்களை முன்வைத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் ஷஷாங் மனோகர், வெற்றியிலும் தோல்வியிலும் பெருந்தன்மையுடன் நடப்பதையும் மதிப்புடன் நடப்பதையும் பெருமைமிகு வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

நேபாளத்துக்குத் தடை

 

இதேவேளை, இடம்பெற்றுவரும் கூட்டங்களின்போது, நேபாள கிரிக்கெட் சங்கத்தைத் இடைக்காலத்தடைசெய்யும் முடிவை, சர்வதேச கிரிக்கெட் சபை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் சபையைக் கலைத்து, தற்காலிகச் செயற்குழுவொன்றை அமைப்பதற்கு, நேபாளத்தின் தேசிய விளையாட்டுச் சபை எடுத்த முடிவைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இடைக்காலத்தடை செய்யப்பட்டுள்ள காலத்திலும், சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, நேபாள அணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

மன்னிப்புக் கோரினார் யுனிஸ் கான்

 

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், பாகிஸ்தானின் உள்ளூர்த் தொடரான பாகிஸ்தான் கிண்ணப் போட்டிகளில் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

அத்தொடரில் கைபெர் பக்துங்க்வா அணியின் தலைவராகச் செயற்பட்ட யுனிஸ் கான், நடுவர்களின் தீர்ப்புத் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டு, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போட்டி மத்தியஸ்தரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அதற்குச் சென்றிருக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. விசாரணைக்குச் சமுகமளிக்காததோடு, இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக யுனிஸ் கான் அறிவித்தார்.

 

இந்நிலையிலேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கானுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள யுனிஸ் கான், இடம்பெற்ற சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியதுடன், தொடர்ந்துவரும் போட்டிகளில் விளையாடும் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், அபராதத்துக்கு மேலதிகமாக அவர் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள், தொடர்ந்தும் இடம்பெறுமென அறிவிக்கப்படுகிறது.