இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்

 

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக இருபதுக்கு-20 இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதவுள்ளது.

 

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். இந்திய அணி சார்பாக காயமடைந்த யுவ்ராஜ் சிங்குக்கு பதிலாக மனீஷ் பாண்டேயும் ஷீகர் தவானுக்காக அஜிங்கியா ராகானேயும் அணியில் இடம்பெற்றனர். மேற்கிந்தியத்தீவுகள் அணியில் காயமடைந்த அன்றே பிளச்சருக்கு பதிலாக லென்டில் சிமோன்ஸ் அணியில் இடம்பெற்றார்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக விராத் கோலி ஒரு ஆறு ஓட்டம், 11, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 பந்துகளில் 89 ஓட்டங்களையும் அஜிங்கியா ரகானே 40 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா, 3, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 31 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சாமுவேல் பத்ரி, அன்றே ரஸல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக லென்டில் சிமொன்ஸ் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 5, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள்  உள்ளடங்களாக 83 ஓட்டங்களையும் ஜோன்சன் சார்ள்ஸ் 36 பந்துகளில் 2, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களையும் அன்றே ரஸல் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 4, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக விராத் கோலி, ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக லென்டில் சிமொன்ஸ் தெரிவானார்.

‘இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?’

 

பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள்ளேயே காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை, ஊடகங்களிடம் எவ்வாறு கசிந்தது எனக் கேள்வியெழுப்பியபோது, நஜாம் சேதியிடமிருந்தும் ஷஹாரியார் கானிடமிருந்தும், அவமானத்தையே தான் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கெனவே, 2010-11 காலப்பகுதியில் பயிற்றுநராக இருந்த வக்கார், அதன் பின்னர் மீண்டும் பதவியைப் பெற்று, அவரது பயிற்றுவிப்பின் கீழ், உலக டெஸ்ட் தரப்படுத்தலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது. எனினும், ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வணி மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியது.

 

இது தொடர்பான அறிக்கையில், இளம் வீரரான உமர் அக்மல், பயிற்சிகளுக்கு ஒழுங்காகச் சமுகமளிப்பதில்லையெனவும் நியூசிலாந்துக்குச் சென்றிருந்த போது, அப்போது முகாமையாளராக இருந்த மொய்ன் கானும், இரவு நேரத்தில் அடிக்கடி வெளியே சென்றதாகவும், வக்கார் யுனிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

தவிர, ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காகச் சேர்க்கப்பட்டிருக்காத அஹ்மட் ஷெஷாத், என்ன காரணத்துக்காக உலக இருபதுக்கு-20 தொடரில் சேர்க்கப்பட்டார் எனவும் ஊடகங்களினதும் வெளி அழுத்தத்தினாலுமே அவர் சேர்க்கப்பட்டார் எனவும் வக்கார் குறிப்பிட்டுள்ளார்.

 

அணித்தலைவரான ஷகிட் அப்ரிடி, துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அணித்தலைவராகவும் சிறப்பாகச் செயற்படவில்லை என்பதைப் பல தடவைகள் எடுத்துக் கூறியும், தனது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த வக்கார், சரியான அணித்தலைமை இல்லாததன் காரணமாக, அணி வீரர்கள் குழம்பியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் அணியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, 13 பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அதில், களத்தடுப்புத் தொடர்பில் அதிக கவனம், உடற்றகுதியில் கவனமெடுப்பது, நவீன காலத்தில் விளையாடிய ஒருவரே பிரதம தேர்வாளராக இருக்க வேண்டும், தேர்வுக் குழுவில் பயிற்றுநருக்கும் இடம், உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் முழுமையான மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

 

அவுஸ்திரேலியாவைச் சந்திக்கிறது மே.தீவுகள்

 

பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

 

மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரிட்னி கூப்பர் 61 (48), ஸ்டபானி டெய்லர் 25 (26), டேன்ட்ரா டொட்டின் 20 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சோபி டெவின், 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் சாரா மக்லாஷன் 38 (30), அமி சட்டர்வைட் 24 (29), சோபி டெவின் 22 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டபானி டெய்லர், 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகனாக, பிரிட்னி கூப்பர் தெரிவானார்.

 

நியூசிலாந்து ஆண்கள் அணியைப் போலவே பெண்கள் அணியும், குழுநிலையில் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்ற போதிலும், ஆண்களைப் போன்றே, அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

 

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சந்திக்கவுள்ளது.

 

உலக இருபதுக்கு-20: ‘எங்களது நாளில்லை’

 

குழுநிலைப் போட்டிகளில் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த நியூசிலாந்து அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற எதிர்பார்த்திருந்த போதிலும், இங்கிலாந்து அணியால் தோற்கடிக்கப்பட்டது.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்திருந்தது. நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருந்தாலும், பின்னர் அதிரடியாக ஆடியிருக்கவில்லை.

 

'130க்கு 3 என்ற நிலையில் இருந்தோம். நீங்கள் விளையாடும் எந்தவொரு இருபதுக்கு-20 போட்டியிலும், அது சிறந்த அடித்தளமாகும். அதை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கவில்லை. நாங்கள் முன்னேற வேண்டிய இடங்களில் அது ஒரு சிறிய பகுதியாகும். நாங்கள் முயலாலாததால் அது நிகழவில்லை, அத்தோடு இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. இருபதுக்கு-20 போட்டிகள், நிலையற்றனவாகும். இன்று (நேற்று ) அது எங்களது நாளாக இருக்கவில்லை" என்றார்.

 

நியூசிலாந்தின் அதிரடி வீரர்களான லூங் ரொங்கி, கொரே அன்டர்சன் இருவரும், full toss பந்துகளுக்கே ஆட்டமிழந்திருந்த போதிலும், அதற்கு முன்னர், சிறப்பாகப் பந்துவீசி, அழுத்தத்தை இங்கிலாந்து அணி ஏற்படுத்தியிருந்ததாக வில்லியம்ஸன் மேலும் தெரிவித்தார்.

 

சமர்செட்டில் மஹேல

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், சமர்செட் அணி சார்பாக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், கிறிஸ் கெயிலுடன் இணைந்து அவர் விளையாடவுள்ளார்.

 

2014ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரை இலங்கை அணி வென்றபோது, முக்கியமான வீரராக இருந்த மஹேல, உலக இருபதுக்கு-20 தொடரின் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராவார். மறுபுறத்தில் கிறிஸ் கெயில், அத்தொடரில் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவராவார்.

 

'மஹேல, சந்தேகப்படமுடியாத திறனைக் கொண்ட துடுப்பாட்ட வீரரொருவராவார். மைதானத்தில் அனைத்து முனைகளிலும் ஓட்டங்களைப் பெறக்கூடியவர். அவ்வாறான அனுபவமும் திறனும் கொண்டவர் கிடைக்கப்பெறும்போது, அவரைப் பிடித்துக் கொள்ள வேண்டும்" என, சமர்செட் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் மற் மேநார்ட் தெரிவித்தார்.

 

இந்தியன் பிறீமியர் லீக், பிக் பாஷ் லீக் போன்றவற்றில் பங்குபற்றிய மஹேல, கடந்தாண்டு இடம்பெற்ற இங்கிலாந்து உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், சசெக்ஸ் சார்பாக விளையாடியிருந்ததோடு, 34.12 என்ற சராசரியில் ஓட்டங்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரோயின் அதிரடியினால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

 

ஆப்கானிஸ்தானுடன் தடுமாறி, ஒரே ஒரு ஓவரில் விளாசப்பட்ட ஓட்டங்களினால் மயிரிழையில் வென்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்றும்,இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளையே வீழ்த்தியிருந்த நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் இப்படி தோற்றுப் போகும் என்றும் யார் எதிர்பார்த்திருப்பார்கள்?இது தான் கிரிக்கெட்டினது, அதை விட T20 கிரிக்கெட்டின் ஆச்சரியமான விடயம்.

 

நேற்றைய இடுகையில் அளவுக்கதிகமாக போற்றிப் புகழ்ந்தே கேன் வில்லியம்சனின் மாயாஜால தலைமைத்துவத்தை அப்படியே இல்லாமல் செய்துவிட்டேனோ?தொட்டது எல்லாம் துலங்கி வந்த வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்ற மாயாஜாலங்களை எல்லாம் நேற்று ஜேசன் ரோய் வெளுத்து வாங்கி நியூசிலாந்தின் உலக T20 கனவைத் தகர்த்து எறிந்திருந்தார்.

 

ஜேசன் ரோயின் கன்னி அரைச் சதம் என்பது பலருக்கும் ஆச்சரியம் தந்த ஒரு விடயமாக இருக்கும்.25 வயதான ரோய்  பற்றி அவர் விளையாடும் சரே பிறந்தியத்துக்காக விளையாடும் இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் சிலாகித்து சிபாரிசு செய்திருந்தனர்.தொடர்ச்சியாகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திவந்த ரோய், நேற்று முக்கியமான போட்டியில் தன்னை நிரூபித்துக்கொண்டார்.

 

உலக T20 சுற்றின் முதற்சுற்றுத் தவிர்ந்து அடுத்த knockout சுற்றுக்களில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை இதுவே.2009 உலக T20போட்டித் தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கையின் டில்ஷான் பெற்ற ஆட்டமிழக்காத 96 தான் அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கை.2012 இறுதிப் போட்டியில் சாமுவேல்ஸும் இலங்கை அணிக்கு எதிராக 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

 

ஆனால் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவான ரோய் சொன்னதைப் போல இங்கிலாந்தின் கடைசி நேரப் பந்துவீச்சுக் கட்டுப்பாடு தான் போட்டியை இங்கிலாந்துப் பக்கம் திருப்பியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்களை எடுத்திருந்த நியூசிலாந்து, கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.அதிலும் கடைசி 4 ஓவர்களில் வெறும் 20 ஓவர்களை மட்டுமே பெற முடிந்தது.

 

தனது முதல் இரு ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த இரு ஓவர்களில் 6 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.ஏற்கெனவே நான் சொன்னது போல, இந்த இங்கிலாந்து அணியை இவ்வகை துரித கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள்.அத்தனை பேரும் T20 சிறப்புத் தேர்ச்சி பெற்ற வீரர்கள்.

 

பெரிய அணிகளை அசத்திய நியூசிலாந்தின் ஆரம்பம் கப்டில், வில்லியம்சன், மன்றோ ஆகியோரினால் வேகம் எடுத்தபோதும், இவர்கள் மூவரின் ஆட்டமிழப்புடன் இங்கிலாந்து அடக்கிவிட்டது.இங்கிலாந்தில் ரோய், 44 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்த பிறகு ஒரு பக்கம் ரூட் நிதானமாக நின்றுகொண்டிருக்க, அதிரடியாய் வந்து பட்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தை கொல்கத்தாவில் இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

 

ஏனைய அணிகள் எல்லாவற்றினதும் பெரிய துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்த சன்ட்னர், சோதி இருவரும் 7.1 ஓவர்களில் நேற்று 70 ஓட்டங்களைக் கொடுத்தனர்.நியூசிலாந்தின் அரையிறுதி தோல்வி சாபம் மீண்டும்.இது ICC தொடர்களில் நியூசிலாந்தின் 9வது தோல்வி.தென் ஆபிரிக்கா, பாகிஸ்தானும் இதேயளவு தோல்விகளைக் கண்டுள்ளன.ஆனால், இந்த இளம் அணியை இன்னும் கட்டமைத்து எதிர்காலத்தில் ஒரு உறுதியான அணியாக உருவாக்கும் திடத்தை இந்த உலக T20 வழங்கி இருக்கிறது.இப்போது எஞ்சியுள்ள 3 அணிகளுமே தங்களது இரண்டாவது உலக T20 கிண்ணத்தைக் குறிவைத்துள்ளன.

—————–

 

இங்கிலாந்தை எதிர்வரும் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில் சந்திக்கும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பலப்பரீட்சை இன்றிரவு மும்பையில்.கெயிலை சமாளிக்கு வழிவகை பற்றி இந்தியா சிந்திக்கும் அதேவேளை, யுவ்ராஜுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயா, அஜியன்கே ரஹானேயா என்பது பற்றி தோனி முடிவு செய்தாலும் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் இன்னும் குழப்பமே.தொடர்ந்து சறுக்கி வரும் இந்தியாவின் மூவர் (தவான்,ரோஹித் ஷர்மா, ரெய்னா) இன்றாவது formக்குத் திரும்புவார்களா என்பது பெரிய ஒரு கேள்வி.

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அன்ட்ரே ப்ளட்ச்சரின் காயம் காரணமாக பேரிழப்பு.இவருக்குப் பதிலாக குழுவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள லென்டில் சிமன்ஸ் இன்று அணியில் இனைக்கப்படுவார் என்று நம்பலாம்.காரணம் ஏற்கெனவே IPL போட்டிகளில் மும்பாய் அணிக்காக ஆடிய அனுபவம் அவருக்குக் கை கொடுக்கும்.இதுவரை இந்தத் தொடரில் மும்பாயில்  பெறப்பட்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையே 172 என்பதால் இன்றும் துடுப்புக்களின் போராக இருக்கும்.

 

எனவே பந்துவீச்சாளரின் அனுபவத் திறன் இரு பக்க அணித் தலைவர்களுக்கும் முக்கியமானது.ஆனால் எல்லோரும் ஆடுகளம் பற்றி நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமியிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது"22 யார் நீளமும், 6 யார் அகலமும் கொண்ட ஆடுகளம் போதும். அதிலே துடுப்பாடலாம்"இது தான் கிரிக்கெட்டுக்கு தேவை.சவால்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் அணி சாதிக்கும்.தமது இரண்டாவது உலக T20 கிண்ணத்துக்கு குறிவைக்கும் இரு அணிகளில் எந்த அணி தடைதாண்டி கொல்கத்தா போகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

A.R.V.லோஷன்

www.arvloshan.com

அணித்தேர்வு குறித்து வோண் விமர்சனம்

 

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றிருக்காத நிலையில், அத்தொடரில் அவ்வணியின் அணித்தெரிவுகள் குறித்து, அவ்வணியின் முன்னாள் வீரரான ஷேன் வோண், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

இத்தொடரில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோணர், மத்தியவரிசையில் களமிறக்கப்பட, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆரொன் பின்ச், முதல் 2 போட்டிகளுக்கும் அணியில் சேர்க்கப்படவில்லை. முன்பு, ஷேன் வொற்சனும் உஸ்மான் கவாஜாவும் பின்னர் ஆரொன் பின்ச்சும் உஸ்மான் கவாஜாவுமே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர்.

 

எனினும், அவ்வணியின் வழக்கமான ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான டேவிட் வோணர், ஆரொன் பின்ச் ஜோடியே களமிறங்கியிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், உஸ்மான் கவாஜா, மூன்றாமிலக்கத்தில் களமிறங்கியிருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, சகலதுறை வீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ், அவுஸ்திரேலிய அணியில் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இறுதி நேரத்தில் பந்துவீசுவதற்கு, அவரே சிறந்தவர் எனவும் தெரிவித்தார்.

 

அணியில் மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், தெரிவுசெய்ய அணியொன்றை, தொடர்ந்தும் தெரிவுசெய்திருக்க வேண்டுமே தவிர, அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.


 

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

 

உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

 

டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 91 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. அவ்வணியின் இறுதி 4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் மாத்திரம் பெறப்பட்டு, 5 விக்கெட்டுகள் இழக்கப்பட்டிருந்தன.

 

துடுப்பாட்டத்தில் கொலின் மன்ரோ 46 (32), கேன் வில்லியம்ஸன் 32 (28), கொரே அன்டர்சன் 28 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அவ்விலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 8.2 ஓவர்களில் 82 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் வெற்றி இலகுவாக்கப்பட்டிருந்தது.

 

துடுப்பாட்டத்தில் ஜேஸன் றோய் 78 (44), ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 32 (17), ஜோ றூட் ஆட்டமிழக்காமல் 27 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷ் சோதி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகனாக, ஜேஸன் றோய் தெரிவானார்.

 

கெயில் எதிர் கோலி: பேட்ஸ் எதிர் டெய்லர்

 

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாள் நாளையாகும். நாளை இடம்பெறவுள்ள போட்டிகளில், ஆண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும் மேற்கித்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளதோடு, பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன. இரண்டு போட்டிகளுமே, மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

 

பெண்களுக்கான போட்டி, மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு 'ஏ"இல் விளையாடிய நியூசிலாந்து அணி, 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தது. நியூசிலாந்தின் ஆண்கள் அணியும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஆண்களைப் போல, ஆதிக்கம் செலுத்திய வெற்றிகளை, பெண்கள் அணி பெற்றிருந்தது. அவ்வணியின் முக்கிய வீராங்கனையாக, அவ்வணியின் தலைவி சுசி பேட்ஸ் காணப்படுகிறார். 4 போட்டிகளில் விளையாடிய அவர், 42.75 என்ற சராசரியில் 116.32 என்ற அடித்தாடும் வீதத்தில், 171 ஓட்டங்களைக் குவித்துள்ளார். தவிர, சோபியா டெவின், றாஷெல் பிறீஸ்ட், சாரா மக்ளாஷன், லெய்க் கஸ்பெரெக், எரின் பேர்மிங்காம் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 போட்டிகளில் விளையாடிய அவற்றின் 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, இங்கிலாந்துக்கெதிராகத் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீராங்கனையாக ஸ்ட‡பானி டெய்லர் காணப்படுகிறார். 4 போட்டிகளில் அவர் 40.50 என்ற சராசரியில் 89.50 என்ற அடித்தாடும் வீதத்தில் 162 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தவிர, ஸ்டெசி-ஆன் கிங், டேன்ட்ரா டொட்டின், அபி பிளெற்சர் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

 

ஆண்களுக்கான போட்டி, இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு 1இல் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீரராக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் காணப்படுகிறார். 2 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர், ஆட்டமிழக்காத ஒரு சதம் உட்பட 104 ஓட்டங்களை 208 என்ற அடித்தாடும் வீதத்தில் பெற்றுள்ளார். தவிர, அவ்வணியின் முக்கிய வீரராகக் காணப்பட்ட அன்ட்ரே பிளெற்சர், உபாதை காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை, அவ்வணிக்கு பலத்த அடியாகக் காணப்படுகிறது. பந்துவீச்சில் சுலைமான் பென், சாமுவேல் பத்ரி, டுவைன் பிராவோ ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

 

குழு 2இல் விளையாடிய இந்திய அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, நியூசிலாந்து அணிக்கெதிராகன போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீரராக, விராத் கோலி காணப்படுகிறார். 4 போட்டிகளில் விளையாடிய அவர், 92 என்ற சராசரியில் 132.37 என்ற அடித்தாடும் வீதத்தில் 184 ஓட்டங்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்பிறிட் பும்ரா ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

 

எனினும் இந்தியாவின் அனுபவ வீரரான யுவ்ராஜ் சிங், காயமடைந்ததன் காரணமாக இக்குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டு, மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ள போதிலும், இப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்று தெரியவில்லை.

 

கடந்த முறை இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் இறுதிப் போட்டிவரை சென்று, இலங்கை அணியிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், அன்ட்ரே பிளெற்சரின் இழப்பால் சிறிதளவு பலமற்றிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு, மற்றோர் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு, இந்திய அணி எதிர்பார்த்துள்ளது.

 

ஜூனில் வருகிறார் ஸ்டார்க்

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்துக்கெதிராக கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பங்குபற்றிய மிற்சல் ஸ்டார்க், அதன் பின்னர் அவரது காலில் காணப்பட்ட உபாதைக்கு, சத்திரசிகிச்சைக்கு உள்ளாகினார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.

 

இந்நிலையிலேயே, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஜூன் 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடருக்கான குழாமிலேயே, மிற்சல் ஸ்டார்க் தெரிவாகியுள்ளார்.

 

மிற்சல் ஸ்டார்க் தவிர, அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லையனும், இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

புதுமுக வீரராக, ட்ரவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வீரரான இவர், உள்;ர்ப் போட்டிகளில் வெளிக்காட்டிய திறமையைத் தொடர்ந்தே, இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

குழாம்: ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், ஜோர்ஜ் பெய்லி, நேதன் கூல்ட்டர்-நைல், ஜேம்ஸ் போக்னர், ஆரொன் பின்ச், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஜொஷ் ஹேஸல்வூட், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நேதன் லையன், மிற்சல் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், மிற்சல் ஸ்டார்க், மத்தியூ வேட், அடம் ஸாம்பா.