அடுத்த போட்டிகளிலும் மலிங்க சந்தேகமே

 

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  இடம்பெற்ற போட்டியில், இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க பங்குபற்றியிருக்காத நிலையில், ஆசியக் கிண்ணப் போட்டிகளின் எஞ்சிய போட்டிகளிலும் அவர் பங்குபெறுவது சந்தேகமானது என எதிர்பார்க்கப்படுகிறது. லசித் மலிங்க இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய அஞ்சலோ மத்தியூஸ், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, லசித் மலிங்கவின் உடற்றகுதி தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

 

'லசித் மலிங்க, எப்போதுமே எங்களுக்கு முக்கியமான பந்துவீச்சாளராவார். துரதிர்ஷ்டவசமாக, பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் அவரால் பங்குபற்ற முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அவர் உடற்றகுதியைப் பெற்றுவிடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

 

லசித் மலிங்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து, 3 மாதங்களின் பின்னர் முதன்முறையாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார். அப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி, போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். எனினும், நேற்று இடம்பெற்ற போட்டியில் அவர் விளையாட முடியாது போனதோடு, போட்டியின் போது, கெந்திக் கெந்தியே அவர் நடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

எனவே, இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரைக் கருத்திற்கொண்டு, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் மேலும் விளையாடும் ஆபத்தான பாதையை மலிங்க தேர்ந்தெடுப்பாரா எனத் தெரியவில்லை.

 

இதேவேளை, இப்போட்டியில், இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக மாறிவரும் இளம் வீரர் துஷ்மந்த சமீர, 14ஆவது ஓவரிலேயே தனது முதலாவது ஓவரை வீசியிருந்தார். இது, விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், 'சமீர சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். இறுதி ஓவர்களில் மலிங்கவின் பணியைச் செய்வதற்கு யாராவது வேண்டுமென எண்ணினோம். அத்தோடு, ஆடுகளத்தில் சுழற்சி இருந்தது. எனவே, சுழற்பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தினேன். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு, ஆறு ஓட்டங்களுக்கு அடிப்பதற்குத் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். அதனால் தான் வேகப்பந்து வீச்சாளர்களைத் தாமதப்படுத்தினேன்" எனத் தெரிவித்தார்.

 

விராத் கோலிக்கு அபராதம்

 

இந்திய அணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரர் விராத் கோலிக்கு, அவரது போட்டி ஊதியத்தின் 30 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நடுவரின் தீர்ப்பை விமர்சித்தமைக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், விராத் கோலிக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட போதே, இச்சம்பவம் இடம்பெற்றது.
அவரது துடுப்பில் பட்டு, அவரது காலில் பந்து பட்ட போதிலும், துடுப்பில் கண்டதைக் கவனிக்காத நடுவர், விராத் கோலி ஆட்டமிழந்ததாகத் தெரிவித்திருந்தார்.

 

அந்த முடிவை ஏற்காத கோலி, முதலில் துடுப்பைக் காட்டியதோடு, பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது, நடுவரைப் பார்த்தவாறே சென்றதோடு, போட்டியின் உணர்வுகளை மதிக்காத சொற்களை வெளிப்படுத்தியிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து, அவருக்கெதிரான 30 சதவீத அபராதத்தை, போட்டி மத்தியஸ்தர் ஜெப் குரோ விதித்தார். தனது குற்றத்தை ஏற்றுக் கொண்ட கோலி, விதிக்கப்பட்ட அபராதத்தையும் ஏற்றார்.

 

அப்போட்டியில், 84 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்த நிலையில், சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடிய கோலி, 49 ஓட்டங்களைப் பெற்று, அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததோடு, போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். இப்போட்டியில், விராத் கோலியின் இனிங்ஸின் ஆரம்பக் கட்டத்தில், விராத் கோலியின் ஆட்டமிழப்பொன்று, நடுவரால் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திலங்க சுமதிபாலவின் உச்சக்கட்ட நகைச்சுவை

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன மீதான இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அண்மைய விமர்சனம், அதிக புருவங்களை உயர்த்தியிருந்தது. உலக இருபதுக்கு-20 தொடரில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜெயவர்தன செயற்படவுள்ளமையே, சுமதிபாலவின் பிரச்சினையாக இருந்தது.

 

மஹேல ஜெயவர்தனவை 'துரோகி" என்று நேரடியாக அழைக்காமை மாத்திரமே, சுமதிபாலவின் விமர்சனத்தில் இருந்த ஒரே குறை. அதைத் தவிர, மஹேலவின் நேர்மை, அவரது நாட்டுப் பற்று, தொழில் மீதான அவரது நற்பண்பு என, அனைத்தையும் சுமதிபால கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

 

இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும், உலக இருபதுக்கு-20 தொடரில் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமது போட்டி அணியொன்றுக்கு மஹேல பயிற்சி வழங்குவது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய சுமதிபால, 'ஓய்வுபெற்று சில மாதங்களில், மற்றோர் அணியால் உலகக் கிண்ணத்துக்காக உள்வாங்கப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார். கழகம், மாகாணம், ஐ.பி.எல் போன்றதோர் அணி, பிராந்திய அணி போன்றவை வித்தியாசமானவை எனத் தெரிவித்த அவர், இது உலகக் கிண்ணம் எனவும், தற்போது விலகிய வீரரொருவர், மற்றைய நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல எனவும் தெரிவித்த அவர், மற்றோர் அணிக்கு ஆதரவு வழங்கவோ அல்லது பயிற்சி வழங்கவோ, ஓய்வின் பின்னர் 24 மாதங்களாவது காத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தார். இலங்கை அணியின் இரகசியங்களை, மற்றைய அணிக்கு வழங்குவது பிழை என்பதே, சுமதிபாலவின் விமர்சனம்.

 

மஹேல மீதான சுமதிபாலவின் இந்த விமர்சனம், விநோதமானது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து மஹேல ஓய்வுபெற்று, ஏறத்தாழ ஒரு வருடமாகிறது. இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, எதிர்வரும் ஏப்ரலுடன் 2 வருடங்களாகின்றன. ஆகவே, சுமதிபால விரும்பும் 24 மாதங்கள், ஓரளவு பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

 

24 மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்றாலும், முன்னாள் வீரரொருவரைக் கட்டுப்படுத்தும் எந்தவோர் உரிமையும், சுமதிபாலவுக்குக் கிடையாது. அத்தோடு, சுமதிபாலவின் விமர்சனத்தின் மோசமான பகுதி என்னவெனில், இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லிக் கொடுக்கப் போகிறார் என, அவராகவே சுமதிபால முடிவெடுத்துக் கொடுக்கிறார். மஹேலவை நன்றாக அறிந்தவர்கள், மஹேலவின் நடத்தை மீது கேள்விகளை முன்வைப்பதில்லை. ஆனால், சுமதிபாலவோ, சந்தேகத்தைக் கூட வெளியிடாமல், நேரடியாகவே குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்.

 

அடுத்து, ஊதியமெதனையும் பெறாமல், ஒரு வருடமாகக் கடினமாக உழைத்து மஹேல தயாரித்த மாகாணமட்ட கிரிக்கெட் தொடரை, சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் சபை பதவியேற்றதும், நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. முன்னாள் வீரர்களை மதிக்கின்ற சபையானால், தூரநோக்கில் சிந்தித்து, அந்தத் தொடரை நடத்தியிருக்க வேண்டாமா? நிர்வாக அரசியலுக்காகவே அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது என்பது, சிறு பிள்ளைக்கும் கூட தெரிந்த உண்மை.

 

இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லக்கூடுமென்றால், ஐ.பி.எல் போன்ற தொடர்களில் விளையாடும் இலங்கை வீரர்கள், தங்கள் நாட்டு வீரர்களைக் காட்டிக் கொடுக்க முடியாதா? தனக்கு யோர்க்கர் பந்துவீசச் சொல்லிக் கொடுத்தது மலிங்க தான் என்கிறார் இந்தியாவின் ஜஸ்பிறிட் பும்ரா. அதைப் போன்றே, இரகசிய விடயங்களை இலங்கை வீரர்கள் வழங்க முடியாதா? அவர்கள் விரும்பினால் அவர்களால் முடியும். ஆனால், அவர்கள் செய்யப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் அவ்வாறு செய்தாலும், கிரிக்கெட் சபை கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால், வீரர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை, இலங்கை கிரிக்கெட் சபை பெற்றுக் கொள்ளுமல்லவா? பணம்.!

 

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மஹேல, தன்பக்க நியாயங்களைச் சிறப்பாக வழங்கியிருந்தார். இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே பயிற்றுநராக இருந்த கிரஹம் போர்ட், தற்போது இலங்கைப் பயிற்றுநராக உள்ள நிலையில், அவ்வணியைச் சேர்ந்த ஜேஸன் றோய் பற்றிய தகவல்களை அவரால் பகிர முடியாதா எனவும் மஹேல கேள்வியெழுப்பியிருந்தார். அத்தோடு, 2 வருடங்களுக்கு முன்னரே இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளதாகவும், அப்போதிருந்த வீரர்களும் தங்கள் நுணுக்கத்தை மாற்றியிருப்பார்கள் எனத் தெரிவித்த மஹேல, 2 வருடங்களுக்கு முன்னர் இருந்த நுணுக்கமே இப்போதும் பயன்படுத்தப்படுகிறது என்றால், அணித் திட்டமிடலில் ஏதோ தவறு எனவும், வீரர்களைப் பற்றி ஆராய்வதற்கு, இங்கிலாந்து அணியில் ஆய்வாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

சுமதிபாலவின் இந்த நடவடிக்கை, முன்னாள் காதலியை/காதலனைக் கட்டுப்படுத்த விரும்பும் முன்னாள் காதலனின்/காதலியின் செய்கை போன்றது தான். ஏனெனில், இலங்கையின் முன்னாள் வீரர்களை அரவணைத்து, அவர்களுக்கான ஊதியத்தை வழங்கி, அவர்களை அணியோடு வைத்துக் கொள்வதற்கு இவர்களால் முடியாது. ஆனால், அவர்கள் செய்வதையெல்லாம் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.

 

இவையெல்லாவற்றுக்கும் மேல், சூதாட்ட நிலையங்கள் கொண்ட மாபெரும் சங்கிலியொன்றுக்கு உரிமையாளர் எனக் குற்றஞ்சாட்டப்படும் திலங்க சுமதிபால, மஹேல போன்றதொரு வீரரின் எண்ணங்கள் தொடர்பாகவும் நடத்தை தொடர்பாகவும் கேள்வியெழுப்புவது தான், உச்சக்கட்ட நகைச்சுவை.

இலங்கையை வென்றது பங்களாதேஷ்

 

இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ணத்தின் மிர்பூர் ஷேரே பங்களா தேசிய அரங்கில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்தது.

 

இப்போட்டியில் இலங்கையணியின் தலைவர் லசித் மலிங்க, காயம் காரணமாக பங்கேற்றிருக்காத நிலையில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற, பதில் தலைவராக கடமையாற்றிய அஞ்செலோ மத்தியூஸ், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், சபீர் ரஹ்மான், 54 பந்துகளில், 3, ஆறு ஓட்டங்கள், 10, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக பெற்ற 80 ஓட்டங்கள் கைகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும் அஞ்செலோ மத்தியூஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தினேஷ் சந்திமால் 37, ஷெகான் ஜயசூரிய 26 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக, அல் அமின் ஹொஸைன் 3, ஷகிப் அல் ஹஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக சபீர் ரஹ்மான் தெரிவானார். நாளைய போட்டியில், பாகிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகமும் இலங்கை நேரப்படி ஏழு மணிக்கு மோதவுள்ளன.

“ஆமிரைப் பாராட்டினேன்”

 

இந்தியாவுக்கெதிராக இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிருக்கு, தனது பாராட்டை வெளிப்படுத்துவதாக, இந்திய அணியின் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

 

இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது, இந்திய அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போது, அற்புதமான முதலாவது ஓவரை வீசிய ஆமிர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மீண்டுமொரு விக்கெட்டை ஆமிர் கைப்பற்ற இந்திய அணி ஒரு கட்டத்தில், 3 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது.

 

எனினும், தனது 49 ஓட்டங்களின் துணையுடன் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராத் கோலி, வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த போது, 'மொஹமட் ஆமிர் பந்துவீசிய விதத்துக்கு, நான் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில் நான், அவர் பந்துவீசும் போதே பாராட்டியிருந்தேன். அவ்வாறான பந்துவீச்சை விளையாடுவது அற்புதமாக இருந்தது" என்றார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது இலங்கை

 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் மோதியிருந்த நிலையில், பதின்னான்கு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அம்ஜாட் கான், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் எனத் தெரிவிதார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக தினேஷ் சந்திமால் 50, டி.எம்.டில்ஷான் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஐக்கிய அரபு அமீரக அணி சார்பாக, அம்ஜாட் கான் 3, மொஹம்மட் நவீட், மொஹம்மட் ஷஷாட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சுவாப்னில் பட்டில் 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, அணித்தலைவர் லசித் மலிங்க 4, நுவான் குலசேகர 3, ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக லசித் மலிங்க தெரிவானார். 

பீற்றர் சிடிலின் எதிர்காலம் சந்தேகத்தில்

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பீற்றர் சிடிலின் எதிர்காலம் குறித்துச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது முகுதுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

 

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் விளையாடிய பீற்றர் சிடில், முதல் இனிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது இனிங்ஸில் அவருக்கு, முதுகு உபாதை ஏற்பட்டிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.

 

மெல்பேணுக்குத் திரும்பிய பீற்றர் சிடில், அவரது முகுதுப் பகுதியில் ஸ்கான்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கீழ் முகுதுப் பகுதியில் என்புடைவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணிசமானளவு காலம், அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போகவுள்ளது. அந்தக் காலத்திலேயே அவர், அவரது இடது கணுக்காலிலும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

 

தற்போது 31 வயதான பீற்றர் சிடில், நீண்ட காலத்தை கிரிக்கெட்டில் விளையாடாது கழிக்கவுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் காணப்படும் வேகப்பந்து வீச்சாளர்களது அதிகரித்த எண்ணிக்கை காரணமாகவும் அவர்களின் திறமை காரணமாகவும், சர்வதேசப் போட்டிகளில் பீற்றர் சிடில், மீண்டும் பங்குபற்றாது போனாலும் ஆச்சரியத்துக்குரியது அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

றோகித்தைப் புகழ்கிறார் டோணி

 

இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் றோகித் ஷர்மாவுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். ஆசியக் கிண்ணப் போட்டிகளில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பிலேயே அவர், இந்தப் பாராட்டை வெளிப்படுத்தினார்.

 

மெதுவாக விளையாடத் தொடங்கிய றோகித் ஷர்மா, அதன் பின்னர் அதிரடியாக விளையாடி, 55 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்தார். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து, 3 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களுடன் தடுமாறிய இந்திய அணிக்கு, றோகித் ஷர்மாவின் துடுப்பாட்டப் பாணியே தேவைப்பட்டிருந்ததாக, டோணி தெரிவித்தார். பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்திய றோகித், நுட்பமாகத் துடுப்பெடுத்தாடியதாகவும், டோணி குறிப்பிட்டார்.

றோகித் தவிர, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய றார்டிக் பாண்டியா, சிறப்பாகப் பந்துவீசிய ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கும், தனது பாராட்டுகளை, டோணி வெளியிட்டார்.

 

நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி, றோகித் ஷர்மாவின் 83 (55), ஹார்டிக் பாண்டியாவின் 31 (18) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக சபிர் ரஹ்மான் 44 (32) ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஆஷிஷ் நெஹ்ராவின் 3 விக்கெட்டுகளின் காரணமாக அவ்வணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

 

விடைபெற்றார் மக்கலம்

 

நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இன்று நிறைவடைந்த 2ஆவது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

 

தனது 14 வருட கிரிக்கெட் வாழ்வில், தனக்கு ஆதரவு வழங்கிய கிரிக்கெட் இரசிகர்கள், நியூசிலாந்து கிரிக்கெட் சபை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தனது குடும்பம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், தற்போதுள்ள நியூசிலாந்து அணி மீது நம்பிக்கை வைக்கலாம் எனத் தெரிவித்த அவர், இவ்வணி, சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். நியூசிலாந்து அணியில், மகிழ்ச்சியையும் சிறப்பான கலாசாரத்தையும் சிறப்பாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அணியிலுள்ள அனைவரும், மிகவும் ஆசுவாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தனது இறுதி டெஸ்ட் போட்டியில், 54 பந்துகளில் சதத்தைப் பெற்ற பிரென்டன் மக்கலம், வேகமான டெஸ்ட் சதம் என்ற சாதனையையும் படைத்தே விடைபெறுகிறார். நியூசிலாந்து அணியைச் சிறப்பாகவும் ஆக்ரோஷமிக்க அணியாகவும் வழிநடத்திய மக்கலம், உலகிலுள்ள மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

 

101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரென்டன் மக்கலம், முச்சதம் ஒன்று உள்ளடங்கலாக 12 சதங்கள், 31 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக, 6,453 ஓட்டங்களை 38.64 என்ற சராசரியில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் முதலிடத்தில் அவுஸ்திரேலியா

 

உலக டெஸ்ட் தரப்படுத்தலின் முதலிடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியை வென்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியமையடுத்தே, முதலிடத்தை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

 

201 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஜோ பேண்ஸ் 65 (162), ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 53 (46), உஸ்மான் கவாஜா 45 (66) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், டிம் சௌதி, நீல் வக்னர் மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பிரென்டன் மக்கலத்தின் வேகமான சதத்துக்கான உலக சாதனையுடன் கூடிய 145 (79) ஓட்டங்களின் துணையோடு 370 ஓட்டங்களைப் பெற்றது. நேதன் லையன் 3, ஹொஷ் ஹேஸல்வூட் 2, ஜேம்ஸ் பற்றின்சன் 2, ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

அவுஸ்திரேலிய அணி தனது முதல் இனிங்ஸில், ஜோ பேண்ஸின் 170, ஸ்டீவன் ஸ்மித்தின் 138 ஓட்டங்களின் துணையோடு 505 ஓட்டங்களைப் பெற்றது. நீல் வக்னர் 6, ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

நியூசிலாந்து அணி தனது 2ஆவது இனிங்ஸில், கேன் வில்லியம்ஸனின் 97 ஓட்டங்களின் துணையோடு 335 ஓட்டங்களைப் பெற்றது. ஜக்ஸன் பேர்ட் 5, ஜேம்ஸ் பற்றின்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஜோ பேண்ஸ் தெரிவானார்.