கிரிக்கெட் போட்டியில் தலைக்கவசமணிந்த நடுவர்

 

அவுஸ்திரேலிய நடுவரான ஜெராட் அபூட், அவுஸ்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் தலைக்கவசமணந்து நடுவர் பணியில் ஈடுபட்ட முதலாவது நடுவராக மாறியுள்ளார்.

 

இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் போட்டிகளில், மெல்பேர்ண் றெனிகேட்ஸ் அணிக்கும் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியிலேயே, அவர் இவ்வாறு தலைக்கவசத்துடன் பணிபுரிந்தார்.

 

அவுஸ்திரேலிய நடுவரான ஜோன் வார்ட், இந்தியாவின் ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில் தலையில் தாக்கப்பட்டு, இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையிலேயே, அச்சம்பவமே, தலைக்கவசம் அணியும் அவசியத்தை உணர்த்தியதாக, அவர் குறிப்பிட்டார்.

 

இருபதுக்கு-20 போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வருகின்ற நிலையில், அதிக பலத்துடனும் பந்தை அடிக்கின்றனரெனத் தெரிவித்த அவர், பாதுகாப்பென்பது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

துடுப்பாட்ட வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசத்தையே அவர் அணிந்திருந்த போதிலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் சபை ஆகிய மூன்றும் இணைந்து, நடுவர்களுக்கான தலைக்கவசமொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக, அறிவிக்கப்படுகிறது.

 

நியூசிலாந்துக்கெதிராக இலங்கைக்கு அதிரடி வெற்றி

 

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில், இலங்கை அணிக்கு அதிரடி வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம், இத்தொடரைத் தொடர்ந்தும் உயிர்ப்பில், அவ்வணி வைத்துக் கொண்டுள்ளது.

 

நெல்சனிலுள்ள சக்ஸ்டன் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. காயம் காரணமாக பிரென்டன் மக்கலம் பங்குபற்றமுடியாது போக, அவ்வணியின் தலைவராக கேன் வில்லியம்ஸன் செயற்பட்டார்.

 

முதலாவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 102 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட போதிலும், பின்னர் விக்கெட்டுகளை இழந்தது. 7 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி சார்பாக, இறுதிநிலை வீரர்கள் சிறப்பாகச் செயற்பட, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்ஸன் 59 (73), டொம் லேதம் 42 (47), மைக்கல் சான்ட்னெர் 38 (46), மார்ட்டின் கப்டில் 30 (28) டக் பிரேஸ்வெல் 30 (34) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, ஜெப்றி வன்டர்சே மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

277 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது.

 

அதிரடியாக ஆடிய இலங்கை அணி சார்பாக முதலாவது விக்கெட்டுக்காக 12.4 ஓவர்களில் 98 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அதிரடியாக ஆடிய புதுமுக வீரர் தனுஷ்க குணதிலக, 28 பந்துகளில் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்ததோடு, 45 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். 92 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பெற்ற திலகரட்ண டில்ஷான், ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் காணப்ட்ட லஹிரு திரிமான்ன 87 (103) ஓட்டங்களைப் பெற்றதோடு, டினேஷ் சந்திமால் 27 (39) ஓட்டங்களைப் பெற்றார்.

 

இப்போட்டியின் நாயகனாக, தனுஷ்க குணதிலக தெரிவானார்.

 

இதன்படி, 3 போட்டிகளின் முடிவில், 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

 

2015ஆம் ஆண்டின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்த இப்போட்டியை வென்ற இலங்கை அணி, நியூசிலாந்துடனான தோல்வியுடன் அவ்வாண்டை ஆரம்பித்த போதிலும், அதே நியூசிலாந்துடனான வெற்றியுடன், அவ்வாண்டை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அணியிலிருந்து நீக்கப்பட்ட விதத்தால் காயத்துக்குள்ளான செவாக்

 

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து 2013ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இந்தியாவின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக், அணிலிருந்து நீக்கப்பட்ட விதம், தன்னுடைய மனதைக் காயத்துக்குள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்னர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற செவாக், முதன்முறையாக, 2013ஆம் ஆண்டு, அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

அணியிலிருந்து நீக்கப்பட்டதை, பத்திரிகைகள் வாயிலாகவே தான் அறிந்ததாகத் தெரிவித்த செவாக், அணித் தேர்வாளர்களாலோ, அணி முகாமைத்துவத்தினாலோ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினாலோ, இவ்விடயம் குறித்துத் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

 

அவுஸ்திரேலியாவுக்கான 4 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 3 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியிருந்த செவாக், 27 ஓட்டங்களையே மொத்தமாகப் பெற்றிருந்த நிலையில், அதற்கு முன்னரும் ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்ததால், அடுத்த 2 போட்டிளுக்குமான குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு, அவருக்குக் கிட்டியிருக்கவில்லை.

 

இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் விரேந்தர் செவாக், இந்தியாவில் மிகச்சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் தடுமாறியிருந்தார். தனது கிரிக்கெட் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்தியாவுக்கு வெளியே பெற்றுக் கொண்ட சராசரியை அதிகரித்திருக்க வேண்டுமென எண்ணுவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

 

நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அறிவிக்கப்பட்ட இந்தக் குழாமுக்குத் தலைவராக கேன் வில்லியம்ஸன் பெயரிடப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பிரெண்டன் மக்கலம் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருந்ததையடுத்து, அவர் குழாமிலும் இடம்பெறவில்லை.

 

இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்த கொரே அன்டர்சன், தனித்து துடுப்பாட்டவீரராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, கிராண்ட் எலியட்டும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும் காயத்திலிருந்து இன்னும் குணமடைந்து வரும் ஜேம்ஸ் நீஷம், நதன் மக்கலம் ஆகியோரும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட மற் ஹென்றியும் குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

 

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க தொடரில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குழாமில் சுரங்க லக்மாலும் தனுஷ்க குணதிலகவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, இலங்கையுடான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் ட்ரெண்ட் போல்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மற் ஹென்றியும் ஜோர்ஜ் வோக்கரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

இருபதுக்கு-20 குழாம்- கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், கிரான்ட் எலியட், மார்ட்டின் கப்தில், மிட்செல் மக்லெனகன், அடம் மிலின், கொலின் முன்றோ, லுக்ரொரோங்கி, மிட்செல் சன்டர், இஷ் சோதி, டிம் சௌதி, ரொஸ் டெய்லர்

தென்னாபிரிக்காவை இலகுவாக வென்றது இங்கிலாந்து

 

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இதில், மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி, 241 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

4 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களுடன் இன்றைய இறுதி நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் முக்கிய நம்பிக்கையாக, ஏபி டி வில்லியர்ஸ் இருந்தார். ஆனால், இன்றைய நாளின் மூன்றாவது பந்திலேயே, மொயின் அலியின் பந்துவீச்சில், எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழக்க, தென்னாபிரிக்காவின் நம்பிக்கைக்கு, பலத்த அடியாக மாறியது.

 

தொடர்ந்து, 2 ஓவர்களுக்குப் பின்னர் தெம்பா பவுமா, அவர் ஆட்டமிழந்து 3 ஓவர்களில் டேல் ஸ்டெய்ன், அவர் ஆட்டமிழந்து 3 ஓவர்களில் கைல் அபொட் என, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இறுதியில், 71 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் டீன் எல்கர் 40, ஏபி டி வில்லியர்ஸ் 37, ஸ்தியான் வான் ஸைல் 33, ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில், ஸ்டீவன் பின் 4, மொயின் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தவிர, ஸ்டுவேர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

டேர்பனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிக் கொம்ப்டனின் 85 ஓட்டங்களின் துணையோடு 303 ஓட்டங்களைப் பெற்றது. டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

 

தென்னாபிரிக்க அணி சார்பாக டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பந்துவீச்சில், ஸ்டுவேர்ட் ப்ரோட், மொயின் அலி இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

மீண்டும் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜொனி பெயர்ஸ்டோவின் 79, ஜோ றூட்டின் 73 ஓட்டங்களின் துணையோடு 326 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்காவின் டேன் பியட், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

 

இப்போட்டியின் நாயகனாக, இங்கிலாந்தின் மொயின் அலி தெரிவானார்.

 

நாளை இலங்கை எதிர் நியூசிலாந்து போட்டி

 

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இத்தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக, இப்போட்டி அமையவுள்ளது.

 

நெல்சனிலுள்ள சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி, படுமோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தது. குறிப்பாக 2ஆவது போட்டியில், 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, 8.2 ஓவர்களில் அந்த ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தது. இந்தத் தோல்வியை, அவமானகரமானது என, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸூம் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்னவும் குறிப்பிட்டிருந்தனர்.

 

எனவே, இந்த அவமானத்திலிருந்து மீண்டு, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று, தொடரைத் தொடர்ந்தும் உயிர்ப்பில் வைத்திருக்கும் சவாலுடன், மூன்றாவது போட்டியில் இலங்கை களமிறங்குகிறது.

 

இலங்கை அணியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், எவ்வாறான மாற்றங்களென இதுவரை தெரியவரவில்லை.

 

 

சிம்பாப்வேயை வென்றது ஆப்கானிஸ்தான்

 

ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்படி, இத்தொடரில் 2-0 என்ற கணக்கில், ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

 

முதலாவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில், 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இறுதி 7 பந்துகளில் பெறப்பட்ட 21 ஓட்டங்களின் துணையோடு அவ்வணி, 253 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் கிறெய்க் ஏர்வின் 73 (98), பீற்றர் மூர் 50 (51), ஹமில்டன் மஸகட்ஸா 47 (64) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் தவ்லட் ஸட்ரன் 3, மொஹமட் நபி 2, றொகான் பராக்ஸாய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

254 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதலாவது விக்கெட்டுக்காக 17.5 ஓவர்களில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, 31.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 169 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், மொஹமட் நபி, ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 என்ற கடினமான நிலையை அடைந்தது.

 

எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காது சிறப்பாக ஆடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷஷாத், தனது நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டி சதத்தைப் பூர்த்தி செய்ததோடு, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

துடுப்பாட்டத்தில் மொஹமட் ஷஷாத், ஆட்டமிழக்காமல் 131 (133), மொஹமட் நபி 33 (36), நூர் அலி ஸட்ரன் 31 (52), மிர்வைஸ் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 26 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் எல்ட்டன் சிக்கம்புரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

போட்டியின் நாயகனாக, மொஹமட் ஷஷாத் தெரிவானார்.

 

மலிங்கவுக்குப் பதில் சந்திமால்

 

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக, டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அணித்தலைவர் லசித் மலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கு அவரால் முடியாது என்பதாலேயே, தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில், அவரது முழங்காலில் ஏற்பட்ட ஏற்பட்ட காயத்தினாலேயே, அவரால் பங்குபற்ற முடியாமல் போயுள்ளதோடு, அவருக்குப் பதிலாக சுரங்க லக்மால் இணைக்கப்பட்டுள்ளார்.

 

மேலதிகமாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுக்கும், இத்தொடருக்கான இலங்கைக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஆமிருக்கு எதிர்ப்பு: பதவி விலக அஸார் முயற்சி

 

பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவர் அஸார் அலி, தனது பதவியிலிருந்து விலகுவதற்காக முன்வைத்த கோரிக்கையை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

 

ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமைக்காகத் தடை விதிக்கப்பட்ட மொஹமட் ஆமிர், பாகிஸ்தானின் தேசிய பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டுள்ளமையைடுத்தே, இந்த இராஜினாமா முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

அப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, அஸார் அலியும் மொஹமட் ஹபீஸூம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரின் பேச்சுவார்த்தைகள், எச்சரிக்கைகள் காரணமாக, அதில் கலந்துகொள்ளச் சம்மதித்தனர்.

 

இந்நிலையிலேயே, அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு, அஸார் அலி முயன்றுள்ளார். தற்போது அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு அவர் சம்மதித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் வீரர்களிடத்தில், ஆமிர் தொடர்பில் மறைமுகமான எண்ணங்கள் காணப்படுவதை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளதோடு, பாகிஸ்தான் அணியில் அவர் சேர்க்கப்பட்டால், அணியின் ஒற்றுமை சீர்குலையக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்தில் வில்லியர்ஸின் எதிர்காலம்

 

தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரும், முக்கியமான துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், தனது எதிர்காலம் குறித்த முரண்பாடான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஏபி டி வில்லியர்ஸூம் டேல் ஸ்டெய்னும் வேர்ணன் பிலாந்தரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, சில செய்திகள் வெளியாகியிருந்தன. தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைகளுக்கு எதிராகவே, வில்லியர்ஸூம் ஸ்டெய்னும் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

எனினும், அது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றுவதால், அவற்றைக் குறைப்பது பற்றிக் கவனஞ்செலுத்துவதாக, வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், ஓய்வுபெறுவது குறித்த கருத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை.

 

இவ்விடயம் தொடர்பாக, அடுத்தாண்டு மே மாதத்தில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடவுள்ளதாக, வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

 

டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர் தொடர்பாக, உறுதியான தகவல்களெவையும் வெளியாகவில்லை.