பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இங்கே நிலைத்திருக்கும்

 

பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.

 

மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொரு சிறப்பான திட்டம். மென்சிவப்பு கிரிக்கெட் மேலும் வளர்ச்சியடையும் போது அது, பூகோள விளையாட்டாக மாறும்" எனத் தெரிவித்தார். 'பகலிரவு டெஸ்ட் போட்டிகளென்பவை, டெஸ்ட் போட்டிகளை இரவு நேரத்தில் விளையாடுவதற்கு அனுமதிப்பதே தவிர, டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு விளையாடுமென்பதை மாற்றுவதல்ல" எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

மென்சிவப்புப் பந்தின் தன்மையைப் பாதுகாக்க, போட்டியின் ஆடுகளத்திலும் மைதானத்திலும், வழக்கத்துக்கு மாறாக அதிக புற்கள் காணப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியிதாகக் குறிப்பிட்ட அவர், எனினும், மக்கள் இதை விரும்பியதாகவும், இது நிலைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

 

கெய்ன்ஸ் குற்றமற்றவர் என கண்டுபிடிப்பு

 

இலண்டனில் இடம்பெற்ற சௌத்வோர்க் கிரவுண் நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வாரமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், பொய் வாக்குமூலம் வழங்கிய, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர் என நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையோர் இணங்கியுள்ளனர்.

 

பத்து மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் ஆழமாக ஆராய்ந்து நேற்றுக் காலை 10.40 அளவில் இணக்கத்துக்கு வந்த நீதிபதிகள், தீர்ப்பை அளித்திருந்தனர். மேற்படி இந்த முடிவானது, கெய்ன்‌ஸுக்கு பாரிய நிம்மதியை அளித்துள்ளது. தீர்ப்புகளின் படி, எந்தவொரு ஆட்டநிர்ணய பங்கேற்புகளில் இருந்தும் கெய்ன்‌ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

விசாரணைகளின்போது பிரண்டன் மக்குலம், ரிக்கி பொன்டிங், டேனியல் வெட்டோரி ஆகியோர் சாட்சியங்களை வழங்கியிருந்தபோதும், நீதிபதிகள் குழுவால் ஒருமித்த முடிவுக்கு வரமுடியவில்லை. எனினும், நேற்றைய நாளின் போது அரை மணித்தியாலத்தில் நீதிபதிகள் முடிவுக்கு வந்திருந்தனர்.

சந்தேகத்தில் இந்தியா – பாகிஸ்தான் தொடர்

 

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை, இலங்கையில் வைத்து விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விருப்பத்தை வெளிப்படுத்தி, அதற்கு பாகிஸ்தான் அரசாங்கமும் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இந்தியத் தரப்பிலிருந்து இத்தொடர் தொடர்பில் தயக்கங்கள் காணப்படுகின்றன.

 

இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதிகோரி, இந்திய அரசாங்கத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எழுத்துமூல அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதியை வழங்குவதில் அவ்வரசாங்கம் தயக்கத்தை வெளியிட்டுள்ளது.

 

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள், இன்னமும் முரண்பாட்டு நிலைமையிலேயே காணப்படுவதோடு, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு, இந்தியாவில் எதிர்ப்புக் காணப்படுகிறது. எனவே, இத்தொடர் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன.

 

இந்நிலையில், இத்தொடர் இடம்பெறாது போனால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, உள்ளூர் இருபதுக்கு-20 தொடரொன்றை ஏற்பாடு செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்தியாவின் தாமதம் குறித்துத் தாங்கள் கவனமெடுத்துள்ளதாகவும், அதன் காரணமாக இந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும், அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

தடை செய்யப்பட்டார் சுனில் நரைன்

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், பந்தை வீசியெறிவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் இலங்கையில் இடம்பெற்ற தொடரில் வைத்து, பந்தை வீசியெறிவதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து, அவரின் பந்துவீச்சுத் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

 

இதன்போது, அனுமதிக்கப்பட்ட 15 பாகையை விட அதிகமான அளவு, முழங்கையின் விரிவு காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கான பரிசோதனை, இம்மாதம் 17ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள லொப்பொரோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதனையடுத்தே, அவரின் பந்துவீச்சுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் உள்ளிட்ட உள்ளூர்ப் போட்டிகளிலும் அவரால் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

அவரது பந்துவீச்சில் திருத்தம் காணப்படுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கருதுமாயின், பரிசோதனைக்கு முன்னதாக, அச்சபையின் கண்காணிப்பின் கீழ் பங்குபற்ற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்க்குக்கு சத்திரசிகிச்சை இல்லை

 

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்குக்கு, எதிர்பார்க்கப்பட்டது போல சத்திரசிகிச்சை தேவைப்படாது என அறிவிக்கப்படுகிறது.

 

போட்டியின் முதற்பந்தை வீசிய ஸ்டார்க், அப்போதே வலியை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், 9 ஓவர்கள் வீசிய அவர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில், வலி தாங்க முடியாது, மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். அதன் பின்னர், அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் போது, 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் பெறுமதிமிக்க 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

அவரது வலது பாதத்தில், முறிவு காணப்படுகின்ற போதிலும், அதற்குச் சத்திரசிகிச்சை தேவைப்படாது என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள நியூசிலாந்துச் சுற்றுலாவில், அவரால் பங்குகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனினும், அதற்கு முன்னர் இடம்பெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றில் அவரால் பங்குகொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா

உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணி, சாதனை வரலாற்றுப் புத்தகங்களில் தமது பெயரை இணைத்துக் கொண்டது. நியூசிலாந்துக்கெதிரான இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கு 5 விக்கெட்டுகளால் வெற்றி கிடைத்தது.


அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் 3ஆவது நாள் நேற்றாகும்.


187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.


வேகமான ஆரம்பமாக, முதலாவது விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 62 ஓட்டங்களுடன் இலகுவான வெற்றியை நோக்கிப் பயணித்தது. ஆனால், சிறு இடைவெளியில் டேவிட் வோணரும் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆட்டமிழக்க, 3 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடன் தடுமாறியது.


எனினும், அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ் மூவரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, அவுஸ்திரேலிய அணிக்கு முன்னிலையை வழங்கினர்.


துடுப்பாட்டத்தில் ஷோன் மார்ஷ் 49 ஓட்டங்களையும் டேவிட் வோணர் 35 ஓட்டங்களையும் அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா 28 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில், ட்ரென்ட் போல்ட்ற் 5 விக்கெட்டுகளையும் டக் பிரேஸ்வல், மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


முன்னதாக, 5 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.


துடுப்பாட்டத்தில், அறிமுக வீரர் மிற்சல் சான்ட்னெர் 45,  றொஸ் டெய்லர் 32, டக் பிரேஸ்வல் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.


பந்துவீச்சில், மிற்சல் ஸ்டார் இல்லாத நிலையில் சிறப்பாகப் பந்துவீசிய அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜொஷ் ஹேஸல்வூட் 6, மிற்சல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் நேதன் லையன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களையும் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 224 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.


இப்போட்டியின் நாயகனாக ஜொஷ் ஹேஸல்வூடும், தொடரின் நாயகனாக டேவிட் வோணரும் தெரிவாகினர்.


3 போட்டிகள் கொண்ட இத்தொடரை அவுஸ்திரேலிய அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3ஆவது வருடமாகவும் சென். தோமஸுக்கு அனுசணை வழங்கும் JAT

இலங்கையின் முன்னணி மேற்பூச்சு வகைகள் மற்றும் பூர்த்திசெய்யும் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன், சர்வதேச வர்த்தக நாமங்களை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமான JAT ஹோல்டிங்ஸ், சென். தோமஸ் கல்லூரி கிரிக்கெட் அணிக்கு தொடர்ச்சியான 3வது ஆண்டாக, அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.


இந்த அனுசரணை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில், சென். தோமஸ் கல்லூரி காப்பாளர் வண.பிதா.மார்க் பில்லிமொரியா, சென். தோமஸ் கல்லூரி கிரிக்கெட் ஆலோசனை சபையின் தலைவர் கபில விஜேகுணவர்தன மற்றும் JAT ஹோல்டிங்ஸ் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பணிப்பாளர் சுரனி சஹாபந்து ஆகியோர் முன்னிலையில், திரு. குணவர்தன அண்மையில் கைச்சாத்திட்டார்.


இந்த அனுசரணையின் பிரகாரம் கல்லூரியின் முதல் 11பேர் கொண்ட அணிக்கு மட்டும் அனுசரணை மட்டுப்படுத்தப்படாமல், சகல வயது பிரிவுகளையும் சேர்ந்த அணிகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 2015/16 பருவகாலத்தில் சென். தோமஸ் கல்லூரி பங்கேற்கும் சகல டெஸ்ட் (2 நாள் மற்றும் 3 நாள் உள்ளடங்கலாக) மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் அனைத்துக்கும் இந்த அனுசரணை பொருந்தும்.


கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரியை பல விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான JAT ஹோல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன, இந்த தொடர்ச்சியான அனுசரணை வழங்குவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.


1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், நவீன, புத்தாக்கமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளை துறைக்கு JAT வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக வெற்றிகரமாக பயணிக்கும் துயுவு தற்போது மரத்தளபாடங்கள் மேற்பூச்சுத் துறையில் நிகரற்ற முன்னோடி எனும் நிலையை எய்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற நாமங்களான இத்தாலியின் Sayerlack Wood finishing, பிரித்தானியாவின் Crown மற்றும் Permoglaze decorative Emulsion மற்றும் Weather Coat பெயின்ட்கள், மற்றும் அமெரிக்காவின் Herman Miller Desking & Seating ஆகியவற்றை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. இலங்கையில் காணப்படும் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக JAT ஹோல்டிங்ஸ் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி-யை பெரிய நாடுகள் வெருட்டக்கூடாது

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து, அதன் புதிய தவிசாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருமான ஷஷாங் மனோகர், கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால், ஐ.சி.சி-இன் நிர்வாகக் கட்டமைப்பில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில், தலைவர் பதவியென்பது சம்பிரதாயபூர்வமானதாக மாற்றப்பட்டு, பலமிக்க தவிசாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்றும், அதிக நிதியியல் நன்மைகளையும் அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றப்பட்டது.

 

தற்போது, புதிய தவிசாளராகப் பதவியேற்றுள்ள மனோகர், மூன்று பெரிய நாடுகளும் (இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா) சர்வதேச கிரிக்கெட் சபையை வெருட்டும் தற்போதைய நிலையை ஆதரிக்கவில்லையெனத் தெரிவித்தார். இது தனது தனிப்பட்ட கருத்தெனவும் அவர் தெரிவித்தார்.

 

தற்போதைய யாப்பின்படி, பெரிய மூன்று நாடுகளும், கிரிக்கெட் சபையின் பிரதான செயற்குழுக்கள் அனைத்திலும் இடம்பெறுவதாகவும், ஆகவே, வர்த்தக, நிறைவேற்றுக் குழு விடயங்கள், இந்நாடுகளாலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும், இது தவறானதெனவும் தெரிவித்தார். ஒருவர் சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அல்லது துணை அங்கத்துவ நாடுகளிலிருந்து வந்தாலும் கூட, தகுதியானவர்களையே செயற்குழுவில் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

 

தற்போதைய நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் வருமானத்தில் 22 சதவீதம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் செல்லும் நிலையில், அதைத் தான் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், வறுமையான நாடுகளை மேலும் வறுமையாக்கக்கூடாது எனத் தெரிவித்தார். அத்தோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராகத் தான் இருக்கின்ற போதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதியாகவும் தான் உள்ளானரெனவும், எனவே, அச்சபையின் நன்மைகளைப் பற்றியே எண்ணுவாரெனவும், ஐ.சி.சி பற்றிச் சிந்திப்பாரென எவ்வாறு எதிர்பார்ப்பதெனவும், தவிசாளர் முறை பற்றிய தனது விமர்சனங்களையும் அவர் வெளிப்படுத்தினார்.

 

உலக கிரிக்கெட் அரங்கில், இந்தியாவின் ஆதிக்கத்தைத் திணித்த ஸ்ரீனிவாசனின் பதவியிழப்பு, ஷஷாங் மனோகரின் இவ்வாறான கருத்துகள் ஆகியன, பாரிய மாற்றங்களைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

நாக்பூர் ஆடுகளம் மீது விமர்சனம்

 

இந்தியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் நாக்பூர் ஆடுகளம் மீது, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளம், முதல் நாளிலிருந்தே சுழற்சியை வெளிப்படுத்தியது. அத்தோடு, இரண்டாம் இரண்டாம் நாளுக்குள், 32 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன.

 

இந்நிலையில், இந்த ஆடுகளத்தைப் 'பேய்த்தனமானது" என வர்ணித்த அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல், துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்குமிடையில் சமநிலை பேணப்படுவதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

 

உலகம் முழுவதிலுமுள்ள ஆடுகளங்களைத் தயார்படுத்துவதில், சர்வதேச கிரிக்கெட் சபை நேரடியாகப் பங்குபற்ற வேண்டுமெனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம், இல்லாவிடில், இவ்வாறான ஆடுகளங்களைத் தயாரிக்கும் அணிகளின் தரவரிசைப் புள்ளிகளைக் குறைக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

 

ஆடுகளம் தொடர்பான தனது விமர்சனத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜக்ஸ் கலிஸ், பெரும்பாலான சுழற்பந்து வீச்சாளர்கள், இவ்வாறான ஆடுகளங்களிலன்றி, ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆடுளங்களில் பந்துவீசவே விரும்புவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக்கல் வோண், அவுஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹெய்டன், தென்னாபிரிக்க வீரர் றொபின் பீற்றர்சன் ஆகியோரும், இவ்வாடுகளத்துக்கான தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

நாளை முதலாவது பகலிரவுப் போட்டி

 

உலக கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என வர்ணிக்கப்படும், உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
அடிலெய்ட் ஆடுகளத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, நாளை காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பிக்கவுள்ளது.

 

டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள், அண்மைக்காலத் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த நிலையில், அப்போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பரிட்சார்த்த முயற்சியாக, பகலிரவுப் போட்டிகள் கருதப்படுகின்றன. இந்த முயற்சி வெற்றிபெறுமாயின், எதிர்கால டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் போல், அதிகளவிலான பகலிரவுப் போட்டிகளைக் கொண்டிருக்கும் வாய்ப்புக் காணப்படுகிறது.

 

டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பந்துக்குப் பதிலாக, மென்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படவுள்ளதோடு, இந்தப் போட்டிகளை நடாத்துவதில் மிகப்பெரிய சவாலாக, அந்தப் பந்தே காணப்பட்டது. தற்போதும் கூட, அது தொடர்பான கேள்விகள் காணப்படும் நிலையில், நாளை ஆரம்பிக்கும் போட்டியில், அதிக கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக, அப்பந்தும் காணப்படும்.

 

மென்சிவப்புப் பந்தினைப் பாதுகாக்கும் பொருட்டு, வழக்கமான அடிலெய்ட் ஆடுகளத்தை விட, அதிக புற்களைக் கொண்ட ஆடுகளமாக, இது அமைக்கப்பட்டுள்ளதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

3 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகளின் நிறைவில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் நிலையில், இந்தத் தொடரை வெற்றிகொள்வதற்காக அவுஸ்திரேலியாவும், இதைச் சமப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன.

 

இரண்டாவது போட்டியுடன், அவுஸ்திரேலியாவின் மிற்சல் ஜோன்சன் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக பீற்றர் சிடில் களமிறங்கவுள்ளார். காயமடைந்த உஸ்மான் கவாஜாவுக்குப் பதிலாக, ஷோன் மார்ஷ் விளையாடவுள்ள அதேவேளை, ஜொஷ் ஹேஸல்வூடுக்குப் பதிலாக, ஜேம்ஸ் பற்றின்சன் களமிறங்கும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

 

நியூசிலாந்து அணியில், சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிறெய்க்-க்குப் பதிலாக மிற்சல் சான்டரும், வேகப்பந்து வீச்சாளர் மற் ஹென்றிக்குப் பதிலாக நீல் வக்னரும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:

 

அவுஸ்திரேலியா: ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், அடம் வோகஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் ஸ்டார்க், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்

 

நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், பிரென்டன் மக்கலம், பி.ஜே வற்லிங், மார்க் கிறெய்க், டக் பிரேஸ்வெல், நீல் வக்னர், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற்.