தொடர் கைவிடப்படுவது ஓரளவு உறுதி

 

பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணியின் பங்களாதேஷுக்கான டெஸ்ட் தொடர் இரத்தாவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்கள், அவர்களது மாநில அணிகளுக்கான குழாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

இருந்தபோதும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இன்றே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள மடடோர் ஒருநாள் தொடருக்கு தயாராகும் வரையில், மாநில குழாம்களுடன் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

 

பங்களாதேஷில் உள்ள அவுஸ்திரேலியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்கியதையடுத்தே, அட்டவனையின்படி திங்கட்கிழமை (28) புறப்படவிருந்த வீரர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தலைமையதிகாரி சீன் கரோல், அணி முகாமையாளர் கவின் டோவி, அணியின் பாதுகாப்பு முகாமையாளர் பிராங்க் டிமசி ஆகியோர் பங்களாதேஷுக்கு சென்று அதிகாரிகளையும், பங்களாதேஷின் அவுஸ்திரேலிய  தூதுவரையும் சந்தித்து நிலமைகளை ஆராய்ந்தபோது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தொடர் பெரும்பாலும் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

 

எனினும் அதைத் தொடர்ந்து டாக்கா இராஜதந்திர வலயத்தில் இத்தாலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து நிலைமை மாறியிருப்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும், வீரர்கள் மாநில அணிகளுக்கு அனுபப்பட்டுள்ள நிலையிலும், தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைந்துள்ளது. 

இலங்கைக்கெதிராக சுனில் நரைன்

 

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரிலும், சுனில் நரைன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அறிவிக்கப்பட்டுள்ள ஒ.நா.ச.போ குழாமில், கடந்த உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெற்றிருந்த டெரன் சமி, லென்டில் சிமன்ஸ், சுலைமான் பென், ஷென்டென் கொட்டரெல், நிக்கித மில்லர், கேமர் றோச், டுவைன் ஸ்மித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதோடு, காயம் காரணமாக கிறிஸ் கெயில் உள்ளடக்கப்படவில்லை.

 

கடந்தாண்டு இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 போட்டிகளில், பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சுனில் நரைன், அதற்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே, தற்போது இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஒ.நா.ச.போ குழாம்: ஜேஸன் ஹோல்டர், தேவேந்திர பிஷூ, ஜேர்மைன் பிளக்வூட், கார்லொஸ் பிறத்வெயிற், டெரன் பிராவோ, ஜொனதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளற்சர், ஜேஸன் மொஹமட், சுனில் நரைன், டினேஷ் ராம்டின், ரவி ராம்போல், அன்ட்ரே ரசல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.

 

இ-20 குழாம்: டெரன் சமி, சாமுவேல் பத்ரி, டெரன் பிராவோ, டுவைன் பிராவோ, ஜொனதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளற்சர், ஜேஸன் ஹோல்டர், சுனில் நரைன், கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின், ரவி ராம்போல், அன்ட்ரே ரசல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.

 

தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

 

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. தொடரில் இரண்டாவதும் இறுதியுமான போட்டியை வென்றே, அவ்வணி தொடரைக் கைப்பற்றியது.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 38 (28), சொஹைப் மசூத் 26  (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், டினாஷே பணியங்கர, லூக் ஜொங்வே இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் சியன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 40 (36), சீகன்டர் ராஸா 36 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், மொஹமட் இர்பான், இம்ரான் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக உமர் அக்மல் தெரிவானார்.

 

இத்தொடரின் முதலாவது போட்டியிலும் 136 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி, அப்போட்டியில் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

 

இத்தொடரின் நாயகனாக, பாகிஸ்தானின் இமாட் வசீம் தெரிவானார்.

புதிய தலைவர் ஞாயிறன்று தெரிவு

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவர், வரும் ஞாயிறன்று (ஒக். 4) தெரிவுசெய்யப்படவுள்ளார். மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பொதுக் கூட்டத்திலேயே அவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா, திடீரென மரணமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட இடைவெளிக்கே, புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.

 

புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான ஷாங் மனோகர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய ஆளுங்கட்சியும் பல கிரிக்கெட் சபைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதுமான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவு, மனோகருக்குக் கிடைத்திருப்பதன் காரணமாகவே, அவர் எதிர்ப்புகளின்றித் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்னாபிரிக்காவை வென்றது இந்திய ‘ஏ’

இந்திய ‘ஏ” அணிக்கும் தென்னாபிரிக்காவுக்குமிடையிலான போட்டியில், இந்திய ‘ஏ” அணி வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவின் இந்தியத் தொடருக்கான பயிற்சிப் போட்டியாக இது அமைந்திருந்தது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.


அவ்வணி சார்பாக ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 68 (32), ஃபப் டு பிளெஸிஸ் 42 (27), ஏபி டி வில்லியர்ஸ் 37 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.


பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஹார்டிக் பாண்டியா இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய ‘ஏ” அணி, 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


துடுப்பாட்டத்தில் மாயங் அகர்வால் 87 (53), மனொன் வோக்ரா 56 (42), சஞ்சு சம்சொன் ஆட்டமிழக்காமல் 31 (22) ஓட்டங்களைப் பெற்றனர்.


பந்துவீச்சில் ஜே.பி டுமினி, மார்ச்சன்ட் லீ லாங்க இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தரிந்து கௌஷாலின் தூஸ்ராவுக்குத் தடை

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷாலின் தூஸ்ரா பந்துகள், அளவுக்கு மீறிய முழங்கை விரிவைக் காட்டுவதாகத் தெரிவித்து, அப்பந்துகளை வீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது வழக்கமான ஓஃப் ஸ்பின் பந்துகள், விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்றுநர் இடைநிறுத்தம்

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பில் சிமன்ஸ், அவரது பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர், எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாம் குறித்து, பில் சிமன்ஸ், தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

 

டுவைன் பிராவோ, கெரான் பொலார்ட் இருவரையும் சேர்ப்பதற்கு அவர் விரும்பிய போதிலும், அவர்கள் சேர்க்கப்படாததையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பலமான ஒருநாள் சர்வதேசக் குழாம் தெரிவுசெய்யப்படவில்லை எனவும், அணித்தெரிவில் வெளியழுத்தங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இக்கருத்துகள் காரணமாக, அவரை இடைநிறுத்தம் செய்வதாகவும், அவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்வரை, அவர் இடைநிறுத்தப்பட்டிருப்பார் எனவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

இதன் காரணமாக, இலங்கை வரவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் குழாமுடன் சிமன்ஸ் பயணிக்க மாட்டார் எனவும், தேர்வாளர்களில் ஒருவரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்டின் பப்டிஸ்ட், அவ்வணியின் இடைக்காலப் பயிற்றுநராகப் பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

 

தொடர் குறித்து எதிர்பார்ப்புடன் பங்களாதேஷ்

 

பங்களாதேஷுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த அவுஸ்திரேலியாவின் பயணம் பின்தள்ளிப் போடப்பட்டுள்ளதோடு, அப்பயணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அத்தொடரை நடாத்துவதற்கான எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடருக்காகப் பயணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுமென, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

 

பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் பங்களாதேஷை வந்தடைந்துள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரை அவர்கள் சந்தித்துள்ளனர்.

 

'கிரிக்கெட் விளையாடுவதற்கான அதிகபட்ச பாதுகாப்பான இடங்களில் பங்களாதேஷ் ஒன்று என நான் அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால், நான் பாதுகாப்பு அல்லது புலனாய்வு முகவராண்மைகளைச் சேர்ந்தவனல்லன. எனவே, 'உங்களுக்குத் தெளிவான நிலைமையை அறிய வேண்டுமானால், புலனாய்வுப் பிரிவினருடன் கலந்துரையாடுங்கள்" என நான் தெரிவித்தேன்" என, கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்தார்.

 

சிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

 

சிம்பாப்வேயுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வேயுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

 

ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் சொய்ப் மலிக் 35 (24), மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 33 (32) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சமு சிபாப 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்ககளில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் எல்ட்டன் சிக்கும்புரா 31 (28), ஹமில்டன் மஸகட்ஸா 25 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், இமாட் வசீம் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இப்போட்டியின் நாயகனாக இமாட் வசீம் தெரிவானார்.

 

2 போட்டிகள் கொண்ட இத்தொடரில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அன்வர் அலிக்காக ஆமீர் யமின்

 

சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார்.

 

ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர்.

 

எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

 

முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்கெட் பெறுதி உட்பட 58 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.