இலக்கு 386: தடுமாறுகிறது இலங்கை

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் முடிவில், இந்திய அணி முன்னிலையில் காணப்படுகிறது.

 

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களுடன் இந்திய அணி நேற்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

 

நான்காவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் தடுமாறியது. இறுதியில் இரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி, இந்திய அணி 274 ஓட்டங்களைப் பெறுவதை உறுதிசெய்தார்.

 

துடுப்பாட்டத்தில் அஷ்வின் 58, றோகித் ஷர்மா 50, ஸ்டுவேர்ட் பின்னி 49, அமித் மிஷ்ரா 39, நமன் ஓஜா 35 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதன்படி, 386 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, முதலாவது ஓவரிலேயே முதலாவது விக்கெட்டை இழந்ததோடு, 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதோடு, 3ஆவது விக்கெட்டை 21 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும், இறுதியில் 4ஆம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

கௌஷால் சில்வா, அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 24, 22 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 

இதன்படி, இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு இந்தியாவுக்கு 7 விக்கெட்டுகள் தேவைப்பட, இலங்கைக்கு 319 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

இந்தியா முன்னிலை

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் முடிவில், இந்திய அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களுடன் 3ஆவது நாளை ஆரம்பித்த இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் செற்றேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 145, அமித் மிஷ்ரா 59 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை சார்பாக தம்மிக்க பிரசாத் 4, ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது.

 

ஒரு கட்டத்தில், 6 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களுடன் இலங்கை தடுமாறியது. எனினும், அறிமுக வீரர் குசால் பெரேராவும் ரங்கன ஹேரத்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் குசால் பெரேரா 55, ரங்கன ஹேரத் 49, தம்மிக்க பிரசாத் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 5, அமித் மிஷ்ரா, ஸ்டுவேர்ட் பின்னி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

111 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நேற்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. விராத் கோலியும் றோகித் ஷர்மாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் காணப்படுகின்றனர்.

 

பந்துவீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் தம்மிக்க பிரசாத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதன்படி, 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 132 ஓட்டங்களால் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்தியா அபார வெற்றி

 

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

 

நான்காம் நாள் ஆட்டமுடிவின்போது 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்திருந்த இலங்கையணி ஐந்தாவது நாள் மதியநேர இடைவேளையின் பிற்பாடு சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக அதிகபட்சமாக டிமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்திய  அணி சார்பாக இரவிச்சந்திரன் 5 விக்கெட்களையும், அமித் மிஷ்ரா 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

முன்னதாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதல் இனிங்சில் 393 ஓட்டங்களையும், இலங்கையணி தமது முதல் இனிங்சில் 306 ஓட்டங்களை பெற்றதோடு, இந்திய அணி தமது இரண்டாவது இனிங்சில் எட்டு விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

 

இப்போட்டியின் நாயகனாக இந்திய அணியின் லோகேஷ் ராகுல் தெரிவானார்.
இந்தப்போட்டியுடன் இலங்கையணியின் நட்சத்திரவீரர் குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

விஜய், சகா வெளியே : ஓஜா, கருண் நாயர் உள்ளே

 

இலங்கைக்கெதிரான கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய், விக்கெட் காப்பாளர் ரித்திமான் சகா ஆகியோர் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகியுள்ளனர்.

 

இதில் சகாவுக்கு பதிலாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நமன் ஒஜாவும், முரளி விஜய்க்கு பதிலாக கருண் நாயரும் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

சகாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது வலது கீழ் தொடைப்பகுதியில் காயமேற்ப்பட்டிருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது வெளியே சென்ற சகா மீண்டும் பின்பு களத்திற்கு திரும்பியிருந்தார். எனினும் இலங்கை அணியின் இரண்டாவது இனிங்சின் போது லோகேஷ் ராகுலே விக்கெட்காப்பாளராக செயற்பட்டிருந்தார்.

 

முதலாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக பங்கேற்காத முரளி விஜய்க்கு இரண்டாவது போட்டியின்போது முன்னர் இருந்த வலது தொடை காயம் மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர் முழுமையாக குணமடைவதற்கு மேலதிக உடற்தகுதி பயிற்சிகள் தேவை என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்து அணி வெற்றி

 

நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டி தொடரை சமப்படுத்தியுள்ளது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி  49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் பர்கான் பெகாத்ரீன் 70 ஓட்டங்களையும், ரீலி ரொசோ 39 ஓட்டங்களையும், ஏபி டீவில்லியர்ஸ் 31 ஓட்டங்களையும், வேணன் பிளந்தர் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட டவ் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுக்களையும், அடம் மில்லின் 2 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி, கிரான்ட் எலியட் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மார்ட்டின் குப்தில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும், டொம் லதாம் 64 ஓட்டங்களையும் பெற்றார்.

 

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஆரோன் பன்கிஸோ, இம்ரான் டாகிர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக மார்ட்டின் குப்தில் தெரிவானார். இரு அணிகளுக்கிடையேயான தீர்மானமிக்க மூன்றாவது போட்டி நாளை மறுதினம் டேர்பனில் இடம்பெறவுள்ளது.

 

ஆஸிக்கு இனிங்ஸ் வெற்றி

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான இனிங்ஸ் வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.


6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களுடன், இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 129 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 4ஆவது நாளில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 286 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த போதிலும், அதன் பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக, போட்டியின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், போட்டி மீள ஆரம்பிக்கப்பட்ட போது ஏனைய இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.


துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அலஸ்டெயர் குக் 85 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 42 ஓட்டங்களையும் மொயின் அலி 35 ஓட்டங்களையும் ஜொனி பெயர்ஸ்டோ 26 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, பீற்றர் சிடில் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், மிற்சல் ஜோன்சன், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி 481 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து அணி 149 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டிருந்தது.


இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலியா சார்பாக சதம் பெற்ற ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார்.
இத்தொடரின் இங்கிலாந்து சார்பான நாயகனாக ஜோ றூட்டும், அவுஸ்திரேலியா சார்பாக நாயகனாக கிறிஸ் றொஜர்ஸ§ம் தெரிவாகினர்.


இப்போட்டியே அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

விடைபெற்றார் சங்கா; இந்தியா ஆதிக்கம்


இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.


பி. சரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 413 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, வெற்றிபெறுவதற்கு அவ்வணிக்கு இன்னமும் 341 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.


துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 18 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


முன்னதாக, ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.


இந்திய அணி சார்பாக அஜின்கியா ரஹானே 126 ஓட்டங்களையும் முரளி விஜய் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பாக தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


இலங்கை சார்பாக தனது இறுதி சர்வதேசப் போட்டியில் பங்குபற்றிவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, நேற்றைய தினம் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது. இதன்படி அவர், 134 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 12,400 ஓட்டங்களை 57.40 என்ற சராசரியில் பெற்றுள்ளார். அதில் 38 சதங்களும் 52 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றன.

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி ஆஸி

 

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் லண்டன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இறுதியும், ஐந்தாவதுமான டெஸ்ட்டின் மூன்றாம்நாள் ஆட்டமுடிவில் பொலோ ஒன்னில் தமது இரண்டாவது  இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்று  இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி பயணிக்கிறது.

தற்போது களத்தில் ஜொஸ் பட்லர் 33 ஓட்டங்களுடனும்,  மார்க் வூட் ஓட்டமெதனையும் பெறாமல் உள்ளனர். முன்னதாக துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அலஸ்டெயர் குக் 85 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் ஜொனி பெயர்ஸ்டோ 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நதன் லயன்  இரண்டு விக்கெட்டுக்களையும் பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜோன்சன், ஸ்டீவன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிகபட்சமாக அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மொயின் அலி 30 ஓட்டங்களையும், மார்க் வூட் 24 ஓட்டங்களையும், அலஸ்ட்டீர் குக் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மிட்செல் மார்ஷ், மிட்செல் ஜோன்சன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், பீட்டர் சிடில், நதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

தமது முதலாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 481 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை முன்னேற்றம்

 

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் தொடரின் கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாள் முடிவின்போது தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று முன்னிலை பெற்றது. 

 

தற்போது களத்தில் முரளி விஜய் 39 ஓட்டங்களுடனும், அஜிங்கயானா ரகானே 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட லோகேஷ் ராகுலின் விக்கெட்டினை தமிக்க பிரசாத் கைப்பற்றினார்.

 

தமது முதலாவது இனிங்சில் இலங்கையணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 306 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சார்பாக அஞ்செலோ மத்தியுஸ் 102 ஓட்டங்களையும், லகிரு திரிமானே 62 ஓட்டங்களையும்,  கௌஷால் சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுக்களையும், இரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டினையும் உமேஷ் யாதவ் , ஸ்டூவர்ட் பின்னி தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

 

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடியாய் இந்திய அணி நேற்று தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 393 ஓட்டங்களை பெற்றிருந்தது.

 

இங்கிலாந்து தடுமாற்றம்

 

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் லண்டன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இறுதியும், ஐந்தாவதுமான டெஸ்ட்டின் இரண்டாம்நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்று தடுமாறி வருகிறது.

 

முன்னதாக அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 481 ஓட்டங்களை குவித்திருந்தது. இதில் ஸ்டீவன் ஸ்மித் 143 ஓட்டங்களையும், டேவிட் வோணர் 85 ஓட்டங்களையும், அடம் வொஜஸ் 76 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டார்க் 58 ஓட்டங்களையும்,  கிறிஸ் ரோஜெர்ஸ் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டீவ் பின், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி தலா மூன்று விக்கெட்களையும்,  மார்க் வூட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

 

தற்போது களத்தில் இங்கிலாந்து அணி சார்பாக மொயின் அலி , மார்க் வூட் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். அவ்வணி சார்பாக அதிகபட்சமாக அலஸ்ட்டீர் குக் 22 ஓட்டங்களை பெற்றார்.

 

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் மார்ஷ் மூன்று விக்கெட்களையும், பீட்டர் சிடில், நதன் லயன் தலா இரண்டு விக்கெட்களையும், மிட்செல் ஜோன்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.