ஆஷஸ்: இங்கிலாந்துக்கு இலகு வெற்றி

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.

 

7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களுடன் மூன்றாம் நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 265 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 

துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர் 77 ஓட்டங்களையும் பீற்றர் நெவில் 59 ஓட்டங்களையும் மிற்சல் ஸ்டார்க் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக, ஸ்டீவன் ஃபின் 6 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவேர்ட் ப்ரோட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இங்கிலாந்தின் இயன் பெல், ஜோ றூட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 65, 38 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

மிற்சல் ஸ்டார்க்,ஜொஷ் ஹேஸல்வூட் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி 136 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இப்போட்டியின் நாயகனாக ஸ்டீவன் ஃபின் தெரிவானார்.

 

இப்போட்டியின் முடிவையடுத்து, இத்தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் வென்றது

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அஹமட் ஷெஷாத், ஷொய்ப் மலிக் (ஆட்டமிழக்காமல்), உமர் அக்மல் ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் திஸர பெரேரா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் பினுர பெர்னான்டோ, அஞ்சலோ மத்தியூஸ், லசித் மலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில், லசித் மலிங்க தனது 4 ஓவர்களில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்நதார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 29 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பாக மிலிந்த சிரிவர்தன 18 பந்துகளில் 35 ஓட்டங்களையும் சாமர கப்புகெதர 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் தனஞ்சய டீ சில்வா 32 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னணி வீரர்களான குசால் பெரேரா, திலகரட்ண டில்ஷான், கித்துருவன் விதானகே மூவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

 

பந்துவீச்சில், சொஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளையும் அன்வர் அலி 2 விக்கெட்டுகளையும் இமாட் வசீம், ஷொய்ப் மலிக் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, சொஹைல் தன்வீர் தெரிவானார்.

சி‌பி‌எல் இறுதியில் ட்ரினிடாட் & டொபாகோ

மேற்கிந்தியதீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் ட்ரினிடாட், போர்ட் ஒஃப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில்  ட்ரினிடாட் & டொபாகோ ரெட் ஸ்டீல் – கயானா அமேசன் வொரியர்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ட்ரினிடாட் & டொபாகோ அணி வெற்றிபெற்று முதற்தடவையாக சி‌பி‌எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 

இப்போட்டியில் நாணயசி‌ச்‌சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக லெண்டில் சிமொன்ஸ் 51 பந்துகளில் 8 பவுண்டரி உள்ளடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றார்.

 

பந்துவீச்சில் ட்ரினிடாட் & டொபாகோ அணி சார்பாக சாமுவேல் பத்ரி 4 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவேளை, சுலைமான் பென் தனது 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், டரன் பிராவோ 3 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரினிடாட் & டொபாகோ அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 41 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 49 ஓட்டங்களை பெற்றார்.

 

கயானா அணி சார்பாக பந்துவீச்சில் தேவேந்திர பிஷூ, மேர்ச்சண்ட் டீ லாங், வீராசாமி பெருமாள், சுனில் நரைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக கம்ரான் அக்மல் தெரிவானார்.

மீண்டும் மிஸ்ரா

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய டெஸ்ட் குழாமின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 32வயதான சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

 

இவர் இறுதியாக 2011ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டியொன்றில் பங்கேற்றுள்ளார்.

 

பங்களாதேஷக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் குழாமிலிருந்த கரண் ஷர்மாவுக்கு பதிலாக அமித் மிஷ்ரா இடம்பெற்றமையே, அக்குழாமில் ஏற்படுத்தப்பட்ட ஒரேயொரு மாற்றமாகும்.

 

உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக கரண் ஷர்மாவும், மொகமட் ஷமியும் அணித்தேர்வின்போது கவனத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை. விரல் முறிந்தமை காரணமாக இம்மாதம் இடம்பெற்ற சிம்பாப்வே தொடரிலிருந்து கரன் ஷர்மா விலகியிருந்த வேளை, முழங்காலில் மேற்கொள்ளப்பட்டிருந்த சத்திரசிகிச்சையிலிருந்து மொகமட் ஷமி குணமடைந்து வருகிறார்.

 

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:  விராத் கோலி (தலைவர்), வருண் ஆரோன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவான், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ரிதிமான் சகா, இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல்.

தென்னாபிரிக்கா சிறப்பான ஆரம்பம்

பங்களாதேஷுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியின் மூன்றாம் நாளில், தென்னாபிரிக்க அணி போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி, 326 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷின் மகமதுல்லா 67, தமிம் இக்பால் 57, லிட்டன் தாஸ், ஷகிப் அல ஹசன் 47 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக டேல் ஸ்டெய்ன், சைமன் ஹார்மர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வேர்ணன் பிலாந்தர் 2 விக்கெட்டுகளையும் வான் ஸைல், டீல் எல்கர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதன்படி, 78 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 21.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

 

தென்னாபிரிக்காவின் வான் ஸைல் 33, டீன் எல்கர் 28 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த தென்னாபிரிக்க அணி, 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோஜெர்ஸ் எட்ஜ்பாஸ்டனில் விளையாட அதிக வாய்ப்பு

 

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கிறிஸ் ரோஜெர்ஸ் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் அன்டர்சனின் பந்துவீச்சில் தலைக்கவசத்தின் வலது காதுப்பகுதியில் தாக்கப்பட்டு இரண்டுநாட்களின் பின்  டேவிட் வோனர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நின்று கொண்டிருந்த ரோஜெர்ஸ் தலைச்சுற்று காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

 

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த ஸ்கான்களில் இருந்து அவருக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதற்கு முன்னரும் மேற்கிந்தியஅணிகளுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும், தலைக்கவசத்தில் பந்து பட்டதன் காரணமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுருண்டது தென்னாபிரிக்கா

 

பங்களாதேஷ் – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், நேற்று சிட்டகொங் ஷாகிர் அஹமட் சௌத்திரி மைதானத்தில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில் ஆடிவரும் பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் ஹசிம் அம்லா தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். தென்னாபிரிக்க அணியில் சுழற்பந்துவீச்சாளராக சைமன் ஹார்மர், ஆரம்பத் துடுப்பாட்டவீரராக ஸ்டியான் வான் சில், மத்திய வரிசையில் டெம்பா பவுமா ஆகியோர் களமிறங்கியிருந்தனர். ரீசா ஹென்றிக்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை.

 

பங்களாதேஷ் அணி சார்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளராக முஷ்டாபிசுர் ரஹ்மான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். மற்றைய வேகப்பந்து வீச்சாளராக மொகமட் ஷாகிட் அணியில் இடம்பெற்றிருந்தார். ருபெல் ஹொசைன் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும் விக்கெட் காப்பாளராக லிட்டன் டாஸ், காயத்திலிருந்து குணமடைந்த மஹ்முதுல்லா அணியில் இடம்பெற்றதால் சௌமியா சர்க்கார் அணியில் இடம்பெறவில்லை.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்திருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை பெற்றிருந்த அவ்வணி அதன்பின் தொடர்ச்சியாக தனது இறுதி 9 விக்கெட்களையும் 112 ஓட்டத்துக்கு பறிகொடுத்திருந்தது.

 

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக டெம்பா பவுமா 54 ஓட்டங்களையும், பப் டுபிலிசிஸ் 48 ஓட்டங்களையும், டீன் எல்கர் 47 ஓட்டங்களையும், ஸ்‌டியான் வான் சில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்டாஃபிசுர் ரஹ்மான் 4 விக்க்கெட்டுகளையும், ஜுபைர் ஹொசைன் 3 விக்கெட்களையும் தஜிகுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

 

விலகினார் மிட்செல் சன்ட்னெர்

சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கான கிரிக்கெட் தொடர்களில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மிட்செல் சன்ட்னெர் பங்கேற்கமாட்டார் என் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பயிற்சியின்போது அவரது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் விலகவேண்டி நேரிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவருக்குப் பதிலாக இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்காத ஜோர்ஜ் வோர்க்கர் அணியில் இணைக்கப்படுவார் என்று தெரிகிறது. இறுதியாக நடந்துமுடிந்த உள்ளூர் தொடரில் 48.90 என்ற சராசரியில் 538 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜோர்ஜ் வோர்க்கர், அணித்தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். 
 
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்த மிட்செல் சன்ட்னெர், ஆரம்ப ஒருநாள் தொடரிலேயே மிகச் சிறப்பாக தனது சகலதுறைத் திறமையை வெளிப்படுத்திருந்தார். அவரது காயம் குறித்து கருத்துத் தெரிவித்த நியூசிலாந்துப் பயிற்சியாளர் மைக் ஹெஸன், 'சர்வதேசப் போட்டிகளில் அவரது முன்னேற்றத்தை காண ஆவலாக இருந்தோம். முதல் தொடரிலேயே சிறப்பாக செயற்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட காயம், அவருக்கும் அணிக்கும் இழப்புத்தான். அதேநேரம், அது இன்னுமொரு திறமையாளரான ஜோர்ஜ்ஜூக்கு தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
 
ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணயம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி, சிம்பாப்வேயுடன் 3 ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு-20 போட்டிகளிலும், தென்னாபிரிக்காவுடன் இரண்டு இருபதுக்கு-20, 3 ஒருநாள் சர்வதேசப்போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

நாளை முதலாவது டெஸ்ட்

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை இலங்கைநேரப்படி காலை 9 மணிக்கு சிட்டகொங் ஷாகிர் அகமட் சௌத்திரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி இழந்துள்ள நிலையில், அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட்காப்பாளருமான ஏ‌பி டீவில்லியர்ஸ் குழந்தை பிறக்கவுள்ளமையால் விடுமுறையில் உள்ளதாலும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் அவ்வணி உள்ளது. மறுபுறம் பங்களாதேஷ் அணி வரிசையாக 4 ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேற்றையே தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் அவ்வணியும் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது.

 

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி : டீன் எல்கர், ஸ்டியான் வான் சில், பஃப் டுபிலிசிஸ், ஹஷிம் அம்லா(தலைவர்), டெம்பா பவுமா, ஜெ‌பி டுமினி, குவான்டன் டீ கொக், சைமன் ஹாமர், வெரோன் பிலண்டர், டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல்

 

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி : தமீம் இக்பால், இம்ரல் கைஸ், மொமினுள் ஹக், மஹ்முதுல்லா, முஸ்தீபீகார் ரஹிம்(தலைவர்), ஷகிப் அல் ஹசன், லிட்டன் டாஸ், ஜுபைர் ஹொசைன், தஜிகுல் இஸ்லாம், முஸ்டாபிசுர் ரஹ்மான், மொகமட் ஷாகிட்

 

 

மண் கவ்வியது இலங்கை

 

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடயே இடம்பெற்றுவரும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

 

ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு பதிலாக இடதுகை சகலதுறைவீரர் இமாட் வசீம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களை குவித்தது. அவ்வணி சார்பாக சஃப்ராஸ் அகமட் 77 ஓட்டங்களையும், மொகமட் ஹபீஸ் 54 ஓட்டங்களையும், அசார் அலி 49 ஓட்டங்களையும், அகமட் சசாட் 44 ஓட்டங்களையும், ஷோய்ப் மலிக் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 42 ஓட்டங்களையும், மொகமட் ரிஸ்வான் 22 பந்துகளில் 2 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக ஓரளவு சிறப்பாக பந்துவீசிய சச்சித் பத்திரன ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். லசித் மலிங்க ஒரு விக்கெட்டினை கைப்பற்றியபோதும் தனது 10 ஓவர்களில் 80 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக திரிமானே 56 ஓட்டங்களை பெற்றார்.

 

பாகிஸ்தான் சார்பாக பந்துவீச்சில் யசிர் ஷா 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மேலும் அறிமுக வீரர் இமாட் வசீம் 7.1 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் அன்வர் அலி 5 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக  சஃப்ராஸ் அகமட் தெரிவானார்.

 

தொடரின் நான்காவது போட்டி இதே மைதானத்தில் புதன்கிழமை(22) பகலிரவுப்போட்டியாக மதியம் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.