சிபிஎல்இல் மிஸ்பா

 

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் பார்படோஸ் ட்ரிடென்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சொய்ப் மலிக்குக்குப் பதிலாகவே அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்தப் பருவகாலத்தில் பார்படோஸ் ட்ரிடென்ஸ் அணி சார்பாக சொய்ப் மலிக் 4 போட்டிகளில் பங்குபற்றி, 127 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஜூன் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள சென் லூஷியா அணிக்கெதிரான போட்டி அவரது இறுதிப் போட்டியாக அமையவுள்ளது.

 

கரீபியல் பிறீமியர் லீக் போட்டிகளில் சொய்ப் மலிக் மிகச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதாகத் தெரவித்த லீக்கின் பணிப்பாளர் டொம் மூடி, மலிக்கை இழப்பது கஷ்டமானது எனவும், ஆனால் அவர் பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளமையை மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் சொய்ப் மலிக் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிலிப் ஹியூஸின் மரணம் பாதித்தது : ஜோன்சன்

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தனது பந்துவீச்சில் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன் தெரிவித்துள்ளார். அது மனதில் தடையொன்றையும் பந்துவீச்சில் வேகம் குறைவடையும் வழிவகுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்தாண்டு நவம்பரில் உள்ளூர் போட்டியொன்றில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பிலிப் ஹியூஸ் பந்து கழுத்துப் பகுதியைத் தாக்கியதன் காரணமாக மரணமடைந்திருந்தார்.

 

அம்மரணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற ஆஷஷ் தொடரில் அதிவேகப் பந்துவீசி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தியிருந்த மிற்சல் ஜோன்சன் அண்மைய தொடர்பாக வேகம் குறைவானவராகக் காணப்பட்டார்.

 

இந்நிலையில் ஆஷஷ் தொடருக்காக இங்கிலாந்துக்கு வந்துள்ள ஜோன்சன் சாக்குப் போக்கு சொல்லும் பழக்கம் தனக்குக் கிடையாது எனத் தெரிவித்தார். ஆனால்  பிலிப் ஹியூஸின் மரணம் மிகவும் கடுமையானதாக இருந்ததாகவும் சில நேரங்களில் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

 

தான் முழுமையாகச் சரியாக இருந்ததாக நினைக்கவில்லை எனத் தெரிவிக்கும் அவர்  மனரீதியாக தான் சரியான உணரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சங்கக்காரவுக்கு பதில் தரங்க

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித்தொடரின், எதிர்வரும் மூன்றாம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணியின் நட்சத்திரவீரர் குமார் சங்கக்கராவுக்கு பதில் உபுல் தரங்க இடம்பெற்றுள்ளார்.

 

இங்கிலாந்து பிராந்திய அணியான சரேக்கு விளையாடவிருப்பதால் பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமுடியாது என முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இறுதியாக தரங்க பாகிஸ்தான் அணிக்கெதிராகவே கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் 92, 45 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும் அதனை தொடர்ந்து நியூசிலாந்த்துக்கு பயணம் செய்த இலங்கையணியில் தனது இடத்தை டிமுத் கருணாரட்ணவிடம்  பறி கொடுத்திருந்தார்.

 

இருந்தபோதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான பயிற்சிப்போட்டியில் 35 , 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

 

ஆனாலும் ஏற்கனவே இலங்கையணிக்குழாமில் ஜெகான் முபாரக், குஷால் பெரேரா ஆகியோர் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட்டில் முதலாவது பகலிரவு டெஸ்ட்

 

முதன்முறையாக இடம்பெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையே இவ்வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பகலிரவுப் போட்டிகள், தற்போது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியே பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

 

பகல் டெஸ்ட் போட்டிகளை விட பகலிரவுப் போட்டிகள் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் எனவும், அதிமான வருமானத்தை போட்டி ஒளிபரப்பாளர்களுக்கு ஈட்டித் தரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், இவ்வகைப் போட்டிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவு நிர்வாக மட்டத்திலும் ஒளிபரப்பாளர்கள் மட்டத்திலும் காணப்பட்டது.

 

இப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள மென்சிவப்பு (பிங்) பந்தின் தன்மை, அதன் உறுதித் தன்மை தொடர்பான கேள்விகளாலும், டெஸ்ட் போட்டிகள் பகலில் விளையாடப்பட வேண்டுமென்ற பாரம்பரிய விருப்பாளர்களாலும், பகலிரவுப் போட்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

நிறக்குருட்டுத் தன்மையுடைய கிரிக்கெட் வீரர்கள் மென்சிவப்புப் பந்தைத் தெளிவாகக் காண்பது கடினமானது என்பதால், அவர்கள் பகலிரவுப் போட்டிகளில் பங்குபற்றமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணித்தலைவராக ரகானே

சிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் தலைவராக முதற்தடவையாக அஜிங்கயா ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்திய அணி சிம்பாவேயில் 3 ஒருநாள் , 2 இருபது இருபது போட்டிகளிளிலும் கலந்து கொள்கிறது.

 

ஒருநாள் அணித்தலைவர் தோனி, டெஸ்ட் அணித்தலைவர் கோலி, ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஷிகர் தவான் ஆகியோர் தமக்கு ஓய்வு வேணும் என கேட்டுக்கொண்டதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

 

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக அணியின் இயக்குனர் ரவி ஷாஸ்திரியும் இந்த தொடருக்காக அணியுடன் பயணிக்கவில்லை.

 

இந்நேரம் தான் இறுதியாக பங்கேற்ற 10 போட்டிகளில் ஓவருக்கு 5.3 என்ற சராசரியில் ஒரு விக்கெட்டுக்கு 43.3 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தூம், 18 என்ற சராசரியில் 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை அணிக்குழாமில் தனியானதொரு விக்கெட்காப்பாளர் தெரிவு செய்யப்படாத நிலையில் ரொபின் உத்தப்பா, கேதார் யாதவ், அம்பாட்டி ராயுடு போன்ற மூன்று பகுதிநேர விக்கெட்காப்பாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

மேலும் பங்களாதேஷ் தொடரில் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருந்த ஹர்பஜன் சிங்கும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை துடுப்பாட்ட வீரர்களில் முரளி விஜய், மனீஷ் பாண்டி, மனோஜ் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ள அதேவேளை மித வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா, சுழற்பந்துவீச்சாளர் கரன் ஷர்மாவும் அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

 

அணி – அஜிங்கயா ரகானே (அணித்தலைவர்), அம்பாட்டி ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் யாதவ், ரொபின் உத்தப்பா, மனீஷ் பாண்டி, ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல், கரன் ஷர்மா, தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், மோஹித் ஷர்மா, சந்தீப் ஷர்மா

 

வென்றது இலங்கை

கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றுவரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கையணி இலகுவாக வெற்றியீட்டியது.

 

இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் 10 விக்கெட்களும் கைவசம் இருந்த நிலையில் 153 என்ற என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்க்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

 

 களத்தில் அணித்தலைவர் மத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும், திரிமானே ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர்.

 

ஆட்டமிழந்தவர்களில் டிமுத் கருணாரட்ன 50 ஓட்டங்களையும், கிரித்துவன் விதானகே ஓட்டங்களையும் பெற்றிருந்த வேளை சங்கக்காரா ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

 

பாகிஸ்தான் அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்களில் யாசிர் ஷா 2 விக்கெட்களையும், சுல்பிகார் பாபர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கையின் தம்மிக பிரசாத் தெரிவானார்.

 

பலமாகும் பந்துவீச்சாளர்கள்

 

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு மூச்சு விடுவதுக்கு சிறிய இடைவெளியை கொடுக்கும் பொருட்டு சர்வதேச கிரிக்கெட் சபை புதிய விதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.

 

இதன் பொருட்டு இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே எத்தனை களத்தடுப்பாளர்களும் நிற்கலாம் என்றும், துடுப்பாட்ட பவர்பிளேயை நீக்குவதென்றும், இன்னிங்ஸின் இறுதி 10 ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே 5 களத்தடுப்பாளர்கள் நிற்கலாம் என்றும், அனைத்து வகையான நோபோலுக்கும் ஒருநாள் போட்டிகளிலும், இருபது – 20 போட்டிகளிலும் ப்ரீஹிட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

 

இந்த திருத்தங்கள் கடந்த மே மாதம் அனில் கும்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முன்னிலை

 

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்சில் ஆடி வரும் இலங்கையணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 9 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்று 166 ஓட்டங்களை பெற்றது.

 

நேற்றைய முதல்நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கையணி ஒரு கட்டத்தில் மோசமான ஷொட் தேர்வுகளால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது எனினும் அணித்தலைவர் மத்தியுஸ், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கௌஷால் சில்வா ஆகியோரின் பங்களிப்பினால் சிறப்பான ஒரு நிலையை பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக அதிகபட்சமாக கௌஷால் சில்வா 80 ஓட்டங்களையும், மத்தியுஸ் 77 ஓட்டங்களையும் பெற்றனர். தற்போது களத்தில் ஹேரத் 10 ஓட்டங்களுடனும், துஸ்மந்த சமீர ஓட்டமெதனையும் பெறாமலும் உள்ளனர்.

 

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக கடந்த காலிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா இந்த இன்னிங்ஸிலும்  5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும் சுல்பிகார் பாபர், மொகமட் ஹபீஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தி இருந்தனர்.

மக்குலம் இல்லை

 

நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரண்டன் மக்குலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித்தொடர்களில் கலந்து கொள்ளமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

கடந்த உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து தொடர்ச்சியாக போட்டிகளில் பங்குபற்றி வருவதாலேயே அவர் மேற்படி தொடர்களில் கலந்து கொள்ளமாட்டார் எனத்தெரியவருகிறது.

 

இருந்தபோதும் இவ்வருட 2015 இறுதியியிலும், அடுத்த வருட 2016 ஆரம்பத்திலும், நியூசிலாந்திலும், அவுஸ்ரேலியாவிலும் இடம்பெறவுள்ள தொடர்களிலும், 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இருபது இருபது உலகக்கிண்ண போட்டிகளிலும் அணித்தலைவராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்து தொடர் முடிவில் 33வயதான பிரண்டன் மக்குலம் ஒருநாள்போட்டிகளில் ஓய்வை அறிவிக்ககூடும் என்றவாறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

வகாப் இல்லை

 

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மிகுதிப்போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின்போது தனது பந்துவீசும் கையான இடது கை விரலின் மொழியில் ஏற்பட்ட முறிவு காரணமாகவே அவருக்கு போட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

வகாப் ரியாஸ் பாகிஸ்தான் அணிக்காக முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் போது இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர் டுஷ்மந்த சமீர வீசிய பந்தொன்று கையில் தாக்கிய நிலையிலேயே இக்காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் முதல்நாளின்போது இலங்கையணியின் முதல் இன்னிங்சில் 9 ஓவர்கள் ரியாஸ் பந்துவீசியியிருந்தார்.

 

 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரியாஸ் காயம் குணமடைய இரண்டுவாரங்கள் தேவைப்படும் நிலையில் ஒருநாள் போட்டியில் பங்கேற்பாரா என்ற நிலை கேள்விக்குறியாக உள்ளது.

 

 

ரியாசுக்கு பதிலாக இன்னுமோர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரகாட் அலியும், காலி டெஸ்ட் போட்டியில் பயிற்சியில் ஈடுபடும்போது காயமடைந்த ஹரீஸ் சொகைலுக்காக பாபர் அசாமும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பயணமாவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.