பெய்லிஸால் இங்கிலாந்தை முன்னிலைக்குக் கொண்டுவர முடியும்: மஹேல

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரெவர் பெய்லிஸால் இங்கிலாந்து அணியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவர முடியுமென, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை ட்ரெவர் பெய்லிஸ் பணியாற்றிய காலத்தில், 2009ஆம் ஆண்டுவரை இலங்கை அணியின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

 

 

இந்நிலையிலேயே, இங்கிலாந்தின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரெவர் பெய்லிஸ் தொடர்பாக அவர் உயர்வான கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

 

"என்ன செய்யப்பட வேண்டுமென்பதை அவர் அறிவார் என நான் உறுதியாக நினைக்கிறேன், அவர் அதற்கு சிறப்பாக முயற்சிப்பார். இந்த இங்கிலாந்து அணியில் திறமை மிக்க இளைய வீரர்கள் பலருள்ளதால், பயிற்றுவிப்புப் பதவியை ஏற்க இது மிகச்சிறப்பான தருணம்" என மஹேல தெரிவித்தார்.

 

 

ட்ரெவர் பெய்லிஸ் பின்புலத்தில் நின்று பணிகளை ஆற்ற விரும்புபவர் எனவும், வீரர்கள் முன்னிலையைப் பெற்றுச் செயற்படுவதற்கு அனுமதிப்பவர் எனவும் மஹேல மேலும் தெரிவித்தர்.

ஒன்டொங்க் விலகல்

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக ஆடவிருந்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரரான ஜஸ்டின் ஒன்டொங் முழங்காலில் மேற்கொள்ளவுள்ள சத்திரசிகிச்சை காரணமாக போட்டித்தொடரிலிருந்து விலகியுள்ளார். இவர் குணமடைய 6 வாரங்கள் செல்லும் என கூறப்படுகிறது.

 

கரீபியன் பிரீமியர் லீக்கில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தி இருபது இருபது  தேசிய அணியில் இடம்பிடிக்க காத்திருந்த ஒன்டொங்குக்கு இது பின்னடைவாகும், இருந்தபோதிலும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க குழாமில் இடம்பெற்று சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம்பிடிக்க காத்துள்ளார்.

 

தென்னாபிரிக்காவுக்காக 14 இருபது இருபது போட்டிகளில் விளையாடியுள்ள ஒன்டொங்க் 100 பந்துகளுக்கு 144.95 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 158 ஓட்டங்களை பெற்றுள்ளார். இறுதியாக இவ்வருடம் 2015 இல் ஜனவரியில் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான இருபது இருபது  போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு தலைமைதாங்கி பங்கேற்றிருந்தார்.

பிளற்சர் கைது

 

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் அன்ட்ரே ஃபிளற்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. டொமினிக்காவிலுள்ள டக்ளஸ் சார்ள்ஸ் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக டொமினிக்கா ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

இருபத்து ஏழு வயதான அன்ட்ரே ஃபிளற்சர், இதுவரை 15 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 22 இருபது – இருபது சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார். இறுதியாக, இவ்வாண்டின் ஜனவரியில் இடம்பெற்ற இருபரு – இருபது சர்வதேசப் போட்டியில் அவர் தென்னாபிரிக்காவிற்கெதிராகப் பங்கேற்றிருந்தார்.

 

உள்ளூர் அணியான வின்ட்வேர்ட் தீவுகள் அணிக்காகப் போட்டிகளில் பங்குபெறும் அன்ட்ரே ஃபிளற்சர், பயிற்சிகளுக்காக டொமினிக்காவில் காணப்பட்டதாகவும், அங்கிருந்து வெளியேறும் போதே விமான நிலையத்தில் வைத்து வெடிபொருட்களை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

வின்ட்வேர்ட் அணியின் முகாமையாளர் இந்த கைதினை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அன்ட்ரே ஃபிளற்சருக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

ஜோய்ஸ், முட்டார்க் ஓய்வு

அயர்லாந்தின் துடுப்பாட்ட வீரரான எட் ஜொய்சும், வேகப்பந்து வீச்ளாருமான டிம் முட்டார்க்கும் ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் நீண்ட காலம் ஆடும் பொருட்டு  இருபது இருபது போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

 

அடுத்து வரும் வருடங்களில் அதிகமான ஒருநாள் போட்டிகளும், டெஸ்ட் போட்டிகள் நடைபெறவாய்ப்பு இருப்பதால் அப்போட்டிகளில் நீண்டகாலம் பங்குபற்றும் பொருட்டு இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜோய்ஸ் தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்காக இருபது இருபது அறிமுகத்தை மேற்கொண்ட ஜொய்ஸ் அயர்லாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு இருபது இருபது போட்டிகளில் ஆடத்தொடங்கி இரு இருபது இருபது உலகக்கிண்ணம் உட்பட 16 போட்டிகளில் 36.72 என்ற சராசரியில் அயர்லாந்துக்காக அதிகமாக 404 ஓட்டங்களை குவித்துள்ளார். அடுத்த வருடம் 2016 ஆம் ஆண்டு இருபது இருபது உலகக்கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்க திறமையான அயர்லாந்து வீரர்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை 33 வயதான வேகப்பந்துவீச்சாளரான முட்டார்க் அதிகரித்து வரும் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக தனது கவுண்டி அணியான மிடில்செக்ஸ், அயர்லாந்துக்காக சிறப்பாக செயற்படும் நோக்கோடு இருபது இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்காக 7 இருபது இருபது போட்டிகளில் ஆடியுள்ள முட்டார்க் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

 

சந்தர்போல் நீக்கப்பட்டமை சரியே: மைக்கல் ஹோல்டிங்


அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ற் தொடருக்கான பயிற்சியிலீடுபடும் குழாமிலிருந்து, அவ்வணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஷிவ்நரின் சந்தர்போல் நீக்கப்பட்டமைக்கு அவ்வணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

அண்மைக்காலமாகத் தடுமாறி வந்த ஷிவ்நரின் சந்தர்போல், இறுதியாக விளையாடிய 11 இனிங்ஸ்களில் 16.64 என்ற சராசரியில் 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் சேர்க்கப்படமாட்டார் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தான் விடைபெறுவதற்கான தொடரொன்று வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அந்தக் கோரிக்கை கருத்திற் கொள்ளப்படவில்லை எனவும் சந்தர்போல் விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மைக்கல் ஹோல்டிங், தொடரொன்றைப் பெற வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வீரர்கள் தொடரொன்றில் விளையாட வேண்டுமென தான் நினைக்கவில்லை எனத் தெரிவித்ததோடு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு விளையாடுவதற்கு தான் பொருத்தமானவர் என்பதை ஷிவ்நரின் சந்தர்போல் அண்மைக்காலத்தில் நிரூபித்திருக்கிறார் என தான் நம்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இரண்டு தசாப்தங்களாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு மிகப்பெரிய சேவைகளை சந்தர்போல் ஆற்றியுள்ளதாகத் தெரிவித்த ஹோல்டிங், அவ்வளவு நீண்டகாலம் சந்தர்போல் விளையாடியமை குறித்து மேற்கிந்தியத் தீவுகள் மகிழ்ச்சியடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, எல்லா நல்ல விடயங்களும் முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இளைய வீரரொருவருக்கு சந்தர்போல் வழிவிட வேண்டுமெனத் தெரிவித்த ஹோல்டிங், எனினும் சந்தர்போலுக்கு மாற்றாக வரும் வீரர் உடனடியாகவே சந்தர்போலின் இடைவெளியை நிரப்ப முடியாது என்பது வெளிப்படையானது எனவும் தெரிவித்துள்ளார்.

 

இந்திய நடுவர்கள் தொடர்பாக வீரர்களைக் குறைசொல்கிறார் தௌஃபல்

 

 

பூகோள ரீதியாக இந்திய நடுவர்கள் சிறந்த முறையில் செயற்படுவதில்லை என்ற பொதுவான எண்ணத்திற்காக, அந்நாட்டின் இரசிகர்கள் மீது மாத்திரமன்றி, தேசிய வீரர்கள் மீதும் சைமன் தௌஃபல் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் நடுவர்களுக்கான எலைட் பனல் 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை ஒரேயொரு இந்தியர் மாத்திரமே அதில் இடம்பெற்றுள்ளார். அத்தோடு, பொதுவாகவே, இந்திய நடுவர்கள் சிறப்பான தீர்ப்புக்களை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

 

 

முன்னாள் நடுவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நடுவர்கள் தொடர்பான ஆலோசகரும், வழிகாட்டியுமான சைமன் தௌஃபல், சரியான முடிவுகளை நடுவர் வழங்கும் போது பாராட்டையும், அதேபோல், கடினமான இந்தப் பணி தொடர்பாக புரிந்துணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் என இந்திய வீரர்களைக் கேட்டுள்ளார்.

 

 

நடுவர் சிறப்பாகச் செயற்படும் போது அவர்கள் கண்டுகொள்ளப்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் தவறான முடிவை எடுக்கும்போது அது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படும் எனத் தெரிவித்த சைமன் தௌஃபல், ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

 

கிரிக்கெட் வீரர்கள் எதிர்காலத்தில் நடுவர் பணியில் ஈடுபடுவது இந்நிலைமைக்குத் தீர்வாக அமையுமா எனக் கேட்கப்பட்டபோது, அது நிச்சயமாகப் பலனளிக்கும் என அவர் தெரிவித்தார். ராகுல் ட்ராவிட்டோ அல்லது சச்சின் டென்டுல்கரே நடுவர்களுக்கான ஆடையணிந்து காணப்படுவது மிகச்சிறப்பானதாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

நடுவர்களின் தீர்ப்புத் தொடர்பாக பொதுவாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், இந்திய வீரர்களின் அதிகரித்த விமர்சனங்கள் தொடர்பில் தௌஃபல் வெளிப்படையான அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரட் லீக்கு மக்ரா வழங்கிய ஆலோசனை இப்போது ஸ்டார்க்கிற்கு

 

டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது குறித்து அப்போதைய சக பந்துவீச்சாளர் கிளென் மக்ரா தனக்கு வழங்கிய ஆலோசனையை, பிரட் லீ தற்போது அவுஸ்திரேலியாவின் மிற்சல் ஸ்டார்க்கிற்கு வழங்கியுள்ளார்.

 

 

அவுஸ்திரேலிய அணி அண்மையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் உலக சம்பியன்களாக மாறுவதற்கு பந்துவீச்சில் முக்கிய பங்களிப்பை மிற்சல் ஸ்டார்க் வழங்கியிருந்தார். அத்தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியோர் வரிசையில் ட்ரென்ட் போல்ட்ற்-உடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

 

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகக் கணிக்கப்படுகின்ற போதிலும், ஸ்டார்க் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சாளராக வரவில்லை என்ற விமர்சனம் காணப்படுகிறது.

 

 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரட் லீ, தானும் மிற்சல் ஸ்டார்க் போல் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கான மாற்றத்தின்போது தடுமாறியதாகவும், ஆனால் கிளென் மக்ராவின் ஆலோசனை தனக்கு மிகவும் உதவியாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

தன்னை மிகவும் மாற்றியவை "பொறுமையாக இரு" என்பதாகும் எனத் தெரிவித்த பிரட் லீ, அதையே மிற்சல் ஸ்டார்க்கிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா தடுமாற்றம்

 

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டியின் முதல்நாளில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

 

அன்டிகுவாவில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது,

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, முதலாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

 

தனது முதலாவது விக்கெட்டை 18 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், 4ஆவது விக்கெட்டுக்காக 103 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதன் பின்னர், 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், 6ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 91 ஓட்டங்கள் பகிரப்பட, அவ்வணி சிறப்பான நிலையை அடைந்தது.

 

 

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பாக ஷேன் டொவ்றிச் 78 ஓட்டங்களையும், இரஜிந்திர சந்திரிகா 74 ஓட்டங்களையும், றொஸ்டன் சேஸ், ஜேசன் மொஹமட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 65 ஓட்டங்களையும், 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

 

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜொஷ் ஹேஷல்வூட், பாவத் அலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், நேதன் லையன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கையணி வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உறுதி

 

 

இலங்கை தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இரண்டு விசாரணை அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

 

 

இலங்கை அணியின் வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் 2013ஆம், 2014ஆம் ஆண்டுகள் இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சரினால், இது தொடர்பாக விசாரணை செய்வதெற்கென விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் என்.ஈ. திசாநாயக்க தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக இது நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு கடந்தாண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட அக்குழு, தங்களது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் அண்மையில் கையளித்துள்ளது.

 

 

இதற்கு மேலதிகமாக, இது தொடர்பாக விசாரணை செய்வததெற்கென சட்டத்தரணி திருமதி. மனோலி ஜினதாசவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்திருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் இலங்கை கிரிக்கெட் சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை கருத்து வெளியிட்டுள்ளது.

சிக்கும்புராவுக்கு தடை

 

சிம்பாப்வே அணியின் தலைவர் எல்ட்டன் சிக்கும்புராவிற்கு இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குறித்த நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமைக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் லாகூரில் இடம்பெற்ற போட்டியில், ஏற்பட்ட நேர விரயங்களைக் கருத்திற்கொண்ட பின்னரும், குறித்த நேரத்திற்குள் 3 ஓவர்கள் குறைவாகப் பந்துவீசியிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி, சிக்கும்புராவிற்கு 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டதோடு, வீரர்கள் அனைவருக்கும், அவர்களின் போட்டி ஊதியத்தின் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தர் றொஷான் மஹாநாம இந்த முடிவினை எடுத்தார்.

இதன்படி, முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி தோல்வியுற்ற போதிலும், அதிரடியான சதத்தினைக் குவித்த எல்ட்டன் சிக்கும்புரா, பாகிஸ்தானுக்கெதிரான இறுதி 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டினை சிக்கும்புரா ஏற்றுக்கொண்டதன் காரணமாக, உத்தியோகபூர்வ விசாரணைகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.