இங்கிலாந்தில் புதிய முகங்கள்

உலகக்கிண்ண படுதோல்விக்கு பின் தமது முதலாவது ஒருநாள் போட்டியை அயர்லாந்துடன் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஜேம்ஸ் டெய்லர் தலைமையில் அறிவிக்கபட்டுள்ள அணியில் முதன்முறையாக இங்கிலாந்து அணியில் 6 பேர் அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதில் இங்கிலாந்தின் பிராந்திய அணியான கென்டின் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய விக்கெட் காப்பாளர் சாம் பில்லிங்ஸ், மற்றுமோர் பிராந்திய அணியினா சரேயின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரரும், இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான சபார் அன்சாரி, சமர்செட்டின் சகலதுறை வீரர் லூவிஸ் குரோகரி, ஹம்ஷயர் அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜேம்ஸ் வின்ஸ், நொர்த்தம்ஷையர் அணியின் சகலதுறை வீரர் டேவிட் விலி ஆகியோர் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளனர்.

 

மேலும் இவர்களோடு இருபது இருபது போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட ஜேசன் ரோயும், கடந்த 2014ஆம் உலகக்கிண்ண இருபது இருபது போட்டிகளுக்கு பின் அணியில் இடம்பெறாத டிம் பிரஸ்னனும், அணி நிர்வாகத்தால் சரிவர கையாளப்படாத பின், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டி ஆரம்பித்ததும், அப்போட்டியில் இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்படாமல் விட்டால் அடில் ரஷீட், மார்க் வூட் ஆகியோரும் ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஜொனி பரிஸ்டோ இடம்பெற்றுள்ளார்.

 

கடந்த உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து குழாமில் இருந்து மூவரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித்தலைவர் மோர்கன், பொப்பாரா ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டும், கிறிஸ் வோக்ஸ் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 9 வீரர்கள் மேற்கிந்தியதீவுகளில் உள்ளார்கள்.

 

இங்கிலாந்து அணி

 

ஜேம்ஸ் டெய்லர் ( அணித்தலைவர்), சபார் அன்சாரி, ஜொனி பரிஸ்ட்டோ ( விக்கெட் காப்பாளர்), சாம் பில்லிங்க்ஸ் ( விக்கெட் காப்பாளர்), டிம் பிறஸ்னன், ஸ்டீவின் பின், லூயிஸ் குரோகரி, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் விலி

பொத்துவில் வொண்டர்ஸ் வெற்றி

பொத்துவில் றைஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய, பத்து ஓவர்கள்களைக் கொண்ட, தெரிவுசெய்யப்பட்ட 16 அணிகள் கலந்து கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியின், பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் மோதிய வொண்டர்ஸ் அணி, பவர்போயிஸ் அணிகளில் பொத்துவில் வொண்டர்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கியது.

 

முதலில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வொண்டர்ஸ் அணியின் தவைர் முதலில் துடுப்பெடுத்தாட கூறியதற்கிணங்க நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைக் மிக வேகமாகக் குவித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பவர்போய்ஸ் அணியினர் 08 ஓவர்களில் சகல விகெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

 

 போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.அஜ்மிரும், போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக எம்.ஐ.எம். கியாஸூம் தெரிவாகினர். நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித் ஆகியோர் கலந்து கொண்டு பரிசல்களையும், கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

ஆசிரியர்களுக்கான மென்பந்து கிரிக்கெட்

மலையக ஆசிரிய முன்னணி நடாத்தும் ஆசிரியர்களுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மே மாதம் 3ம்,  4ம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

அணிக்கு ஆறுபேர்கொண்ட இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று முதலாம் இடத்தினை பெறும் அணிக்கு ரூபா 10000 மும் இரண்டாம் இடத்தினை பெறும் அணிக்கு ரூபா 5000 மும் மூன்றாம் இடத்தினை பெறும் அணிக்கு ரூபா 3000 மும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்படவிருக்கின்றது.

 

மேலும் விளையாட்டு வீரர் ஆசிரியர் என்பது அப்பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.அனுமதி கட்டணமாக ரூபா 1000 செலுத்தப்பட வேண்டும்.

 

எனவே இதில் பங்குப்பற்ற விரும்பும் அணிகள் எதிர்வரும் 3ம் திகதி காலை 8.00 மணிக்கு முன்பதாக குறித்த மைதானத்திற்கு சமூகமளிக்குமாறு மலையக ஆசிரிய முன்னணி வேண்கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஐபிஎல் 2015 : சென்னை மயிரிழையில் வெற்றி

சென்னை சேப்பாக்ககம் மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் அபார களத்தடுப்பில் ஈடுபட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 ஓட்டங்களால் மயிரிழையில் வெற்றி பெற்று தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 9வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணியின் தலைவர் கௌதம் காம்பீர் தமது அணி முதலில் களத்தடுப்பில் என அறிவித்தார். கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணியில் மோர்னே மோர்க்கல், ஜொஹான் போத்தா, சுனில் நரைனுக்கு பதிலாக பட் கம்மின்ஸ், ரயான் டென்டொஷாட்டே, பிராட் ஹொக் இடம்பெற்றனர்.

 

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்திலேயே திணறினாலும் வேகமாக ஓட்டங்களை பெற்று 4.4 ஓவர்களில் 42 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றபோது சாவ்லாவின் பந்துவீச்சில் எல்‌பி‌டபில்யு முறையில் பிரண்டன் மக்குலம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டிவெய்ன் ஸ்மித் ரன் அவுட்டாக, அன்ரே ரசலின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் ரெய்னாவும், தோனியும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசிய பிராட் ஹொக்கிடம் போல்ட் முறையில் ஜடேஜா ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

 

பந்துவீச்சில் கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணி சார்பாக பியூஷ் சாவ்லா, அன்ரே ரஸல் தலா 2 விக்கெட்களையும், பிராட் ஹொக் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். பட் கம்மின்ஸ் எதுவித விக்கெட்களை கைப்பற்றாத போதும் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக பாஃ டுபிளிசிஸ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும், டிவெய்ன் ஸ்மித் 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

பதிலுக்கு 135 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய  கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணி  தமது இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே ஆரம்பத்துடுப்பாட்டவீரர் காம்பீரின் விக்கெட்டினை பறிகொடுத்தாலும் மற்றைய ஆரம்பத்துடுப்பாட்டவீரரான ரொபின் உத்தப்பா அதிரடியாக ஆட ஒருநிலையில் ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு ஓட்டம் பெற்றாலே வெற்றி என்ற நிலை காணப்பட்டது. இருந்தும் தொடர்ந்து வந்த யூசுப் பதான், ரயான் டென்டொஷாட்டே ஓட்டங்களை பெற திணறவும், அன்ரே ரஸல் ரன்அவுட்டாகவும் இறுதி 3 பந்துகளில் ரயான் டென்டொஷாட்டே 6,4,4 என 14 ஓட்டங்களை பெற்றபோதும் 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களையே பெற்றது.

 

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக  டிவெய்ன் பிராவோ 3 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணி சார்பாக ரொபின் உத்தப்பா  17 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் உள்ளடங்கலாக 39 ஓட்டங்களையும், ரயான் டென்டொஷாட்டே 38 ஓட்டங்களையும் பெற்றார்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக டிவெய்ன் பிராவோ தெரிவானார்.

பங்களாதேஷ் – 236/4

பங்களாதேஷ் குளுனாவில் இன்று(28) ஆரம்பமாகியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் முதலாவது நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சை ஆடி வரும் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

 

முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்டிபிகார் ரஹீம் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பங்களாதேஷ் சார்பாக துடுப்பாட்டவீரர் சௌமியா சர்க்காரும், வேகப்பந்துவீச்சாளர் மொகமட் ஷாகிட்டும் இன்றைய போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டவேளை, பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டவீரர் சமி அஸ்லாம் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். அதேநேரம் பாகிஸ்தான் அணியில் சஜீட் அஜ்மல் உள்வாங்கப்படவில்லை.

 

 

துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் மெதுவாகவே தமது ஆட்டத்தை தொடங்கியது. ஆடுகளத்தில் பந்துவீச்ச்ளார்களுக்கு சாதகமான எதுவித அம்சங்கள் இல்லாதபோதும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். அணி 52 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமீம் இக்பால் 25 ஓட்டங்களுடன் யசீர் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் மதிய நேர இடைவேளையின் பின் இம்ரல் கைஸ் அரைச்சதம் பெற்று அடுத்த பந்தில் மொகமட் ஹபீசின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

 

தொடர்ந்து களத்துக்குள் நுழைந்த மஹ்முதுல்லாவும், மொமினுள் ஹக்கும் சிறந்தவொரு இணைப்பாட்டத்தை வழங்க, பலமான ஒரு நிலைக்கு பங்களாதேஷ் சென்ற சமயம் 49 ஓட்டங்களுடன் மஹ்முதுல்லா வகாப் ரியாசின் பந்துவீச்சில், சஃராஸ் அகமட்டின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மொமினுள் ஹக் இன்றையநாள் ஆட்டத்தின் இறுதிப்பந்தில் பரிதாபகரமாக 80 ஓட்டங்களுடன் சுல்பிக்கார் பாபரின் பந்துவீச்சில் எல்‌பி‌டபில்யு முறையில் ஆட்டமிழந்தார்.

 

 

இன்றைய நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு, விக்கெட்கள் கைப்பற்ற பல வாய்ப்புகள் கிடைத்தும் மோசமாக களத்தடுப்பில் ஈடுபட்டு வாய்ப்புகளை கோட்டை விட்டது. இருந்தபோதும் சிறப்பாக செயற்பட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வஹாப் ரியாஸ், யசீர் ஷா, சுல்பிக்கார் பாபர், மொகமட் ஹபீஸ் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். பங்களாதேஷ் சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக  மொமினுள் ஹக் 80 ஓட்டங்களை பெற்றார்.

அட்டாளைச்சேனை நியுஸ்டார் வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் ஓக்கிட் லீக் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாகதெரிவுசெய்யப்பட்டுள்ளது.

 

 

இறுதிப்போட்டியின்போது முதலில் துடுப்பெடுத்தாடிய  அட்டாளைச்சேனை மார்க்ஸ்மன் விளையாட்டுக் கழக அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியுஸ்டார் கழக அணியினர் 7.2 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

 

 

நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பாக முகம்மட் அஸ்லம் 47 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழியமைத்து போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன், இச்சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியு ஸ்டார் அணியின் ஐ. றிசாட் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உதவி அதிபருமான பீ முஹாஜீரின் தலைமையில் நேற்று முன்தினம் மாலை (26)  அல் – ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியு ஸ்டார் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

 

 

 

ஐபிஎல் 2015 : ஹைதரபாத் அணி வெற்றி

சண்டிகார், மொகாலி பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓட்டங்களினால் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

 

முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியில் விரேந்தர் சேவாக், கரன்வீர்சிங்க்கு பதிலாக மனன் வொஹ்ரா, ரிஷி தவான் இடம்பெற்றனர். சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியில் டேல் ஸ்டெய்ன், லோகேஷ் ராகுலுக்கு பதில் மொய்ஸஸ் ஹென்றிகூஸ், ஆஷிஷ் ரெட்டி இடம்பெற்றனர்.

 

சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி துடுப்பாட்டத்தில் வழமைபோன்று அணித்தலைவரும், ஆரம்பத்துடுப்பாட்டவீரருமான டேவிட் வோனர் மட்டுமே சிறப்பாக வேகமாக ஓட்டங்களை பெற்றார். மொய்ஸஸ் ஹென்றிகூஸ், நமன் ஒஜா துடுப்பெடுத்தாடிய பந்துகளின் ஓட்ட எண்ணிக்கையே பெற்று இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை பெறாதபோதும் ஆஷிஷ் ரெட்டி இறுதி ஓவரில் பெற்ற 2 சிக்சர்கள் கைகொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக டேவிட் வோனர் 41 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சர் உள்ளடங்கலாக  58 ஓட்டங்களை பெற்றார். மொய்ஸஸ் ஹென்றிகூஸ், நமன் ஒஜா முறையே 30, 28 ஓட்டங்களை பெற்றனர். ஆஷிஷ் ரெட்டி 8 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாக அக்ஷார் பட்டேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

 

பதிலுக்கு  151 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி ஆரம்பத்தில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தபோதும், பின்னர் வந்த ஜோர்ஜ் பெய்லி அடித்து ஆடவும், அதன் பின் அவர் ஆட்டமிழந்தபோதும் இருதடவைகள் பிடியெடுப்பு தவறவிடப்பட்ட சஹா, அக்ஷார் பட்டேல் வெற்றி இலக்கை சென்ற போதும் போல்டின் ஒரு ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

 

 

பந்துவீச்சில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக  போல்ட் 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாக சகா 42 ஓட்டங்களை பெற்றார்.

 

 

போட்டியின் ஆட்டநாயகனாக சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின்  ட்ரென்ட் போல்ட் தெரிவானார்.