பாகிஸ்தான் ஒ.நா. அணியின் தலைவராக ஆஷர் அலி நியமனம்

பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவராக ஆஷர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காதா ஆஷர் அலி, இரண்டு வருடங்களின் பின்னர் அணித்தலைவராக பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.  

மிஸ்பா உல் ஹக், ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரின் இடத்துக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தலைவராக நியமிக்கப்பட்டுளார். இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகரியார் கான் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30 வயதான ஆஷர் அலி, 14 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய அனுபவம், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் உள்ள நல்ல உறவு என்பன இவர் அணித்தலைமை பொறுப்பை பெற வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. மிஸ்பா உல் ஹக், வொக்கார் யூனிஸ் ஆகியோரும் இவரை பரிந்துரை செய்துள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால அதிரடி துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கே 20-20 போட்டிகளின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் தலைவராக மிஸ்பா உல் ஹக் தொடரும் அதேவேளை உபதலைவராக ஆஷர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். 20-20 போட்டிகளின் தலைவராக சஹிட் அப்ரிடி தொடர்கின்றார். 

கடந்த இரண்டு வருட காலமாக ஆஷர் அலி அணியில் இடம் பிடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் அண்மைய உள்ளூர்ப் போட்டிகளில் காட்டிய திறைமை அவர் அணியில் இடம் பிடிக்க போதுமானது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் கூறியுள்ளார்.

வெட்டோரி ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரரும் முன்னாள் தலைவருமான டானியல் வெட்டோரி, தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியே தனது இறுதிப் போட்டி என டானியல் வெட்டோரி அறிவித்துள்ளார். உலகக்கிண்ண இறுதிப் போட்டியை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் வெட்டோரி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 18 வருட காலமாக அணிக்காக விளையாடி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நிறைவு செய்வது தனக்கு பூரண திருப்தியை வழங்கியுள்ளதாக டானியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். 

1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட டானியல் வெட்டோரி, 113 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடங்கலாக 4,531 ஓட்டங்களைப் பெற்றுள்ள அதேவேளை 362 விக்கெட்களைக் கைப்பற்றியுளார். 295 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 4 அரைச் சதங்கள் அடங்கலாக 2,253 ஓட்டங்களை பெற்றுள்ள அதேவேளை 305 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். 7 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்பது இவரின் சிறந்த பந்துவீச்சு. 34 டுவென்டி டுவென்டி போட்டிகளில் 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, 38 விக்கெட்களையும் கைபப்ற்றியுள்ளார்.

அசைக்க முடியாத அவுஸ்திரேலியா; 5ஆவது தடவை உலக சம்பியனாக

5 கண்டங்களிலும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றி, 5ஆவது தடவையாக உலகக்கிண்ணம் வென்று உலகக் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அசத்தல் சம்பியனாக அவுஸ்திரேலியா தன்னை அற்புதமாக வெளிக்காட்டியுள்ளது.

உலகக்கிண்ணம் இம்முறை மிகப் பொருத்தமான அணிக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

மிகச் சிறந்த அணி, சிறப்பாக விளையாடிய அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்தது.

எல்லாவிதமான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்திய அணிக்கு கிண்ணம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் ஆடுகளத்திலேயே பலியான தங்கள் சக வீரனை சகோதரனாக, அவனுக்காக அர்ப்பணிக்க, தங்கள் நாட்டுக்கான ஐந்தாவது உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது அவுஸ்திரேலியா.

தடுமாறாமல், கொண்ட குறி மாறாமல், வெல்வதற்குத் தேவையான அணி, வியூகம், ஆற்றலைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் வெற்றி மிகப் பொருத்தமானதும், எதிர்பார்த்ததுமே.

எந்த அணியையும் வீழ்த்தும் பலமும், பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையுமே அசத்தலாகவும், ஆதிக்கம் செலுத்திப் பெற்றது அவுஸ்திரேலியா.

ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் ஹேஸில்வூட் என்று எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்கள் தடங்களை அழுத்தமாக இந்த வெற்றித்தொடரில் பதித்துள்ளனர்.

தங்களை சிறப்பாக வழிநடத்திய தலைவன், தன்னை உணர்ந்து விடைபெறும் நேரம், அவனுக்காக வழங்க ஒரு கிண்ணம் இந்த உலகக்கிண்ணம்.

33வயதில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிளார்க், உலகை வென்ற, இன்னும் உலகை வெல்லும் ஓர் அணியையும் விட்டுச் செல்கிறார்.

அடுத்த உலகக்கிண்ணத்தை வெல்லும் அவுஸ்திரேலிய அணியை இப்போதிருந்தே புதிய தலைவரின் கீழ் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் வழங்கி செல்லும் கிளார்க்குக்கு வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கியுள்ள பல்வேறு தகவல்களில் மிக முக்கியமானது, இந்த பெரும்பான்மையாக இளம் வீரர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி இன்னும் 10 வருடங்களுக்காவது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

கடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலாவது பந்து முதல் காட்டிய ஆதிக்கமும் நியூசிலாந்தை தலையெடுக்க விடாமல் மடக்கிப் போட்டதும், உண்மையான அவுஸ்திரேலியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தியது.

இறுதிப் போட்டிக்கு முன்னதான அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டில் விளையாடிவிட்டு, மாபெரும் இறுதிப் போட்டியை மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அசுர பலமும் ஆற்றலும், சொந்த நாட்டின் ரசிகர்களின் பலமும் சேர்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது இலகுவான காரியம் அல்ல.

பிரம்மாண்டமான மைதானம், திரண்டு வந்திருந்த 93,000க்கும் அதிகமான ரசிகர்கள் (உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் உலக சாதனை ரசிகர் எண்ணிக்கை இதுவாகும்), முதற்சுற்றில் தோற்றதற்கு பழி வாங்கக் காத்திருந்த அவுஸ்திரேலியாவின் வேகம் என்று அத்தனை விஷயமும் சேர்ந்துகொள்ள நியூசிலாந்து சந்தித்தது மிகப்பெரிய அழுத்தம்.

நாணய சுழற்சி அதிர்ஷ்டம் சேர்ந்தாலும், அவுஸ்திரேலிய அணி ஒரு திட்டத்தோடேயே களமிறங்கி இருந்தது.

அத்தனை பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி பதம் பார்த்திருந்த நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் இரு பந்துகளில் தடுமாறி மூன்றாவது பந்தில் விக்கெட் தகர்க்கப்பட்டதோடு அவுஸ்திரேலிய அணி போட்டியைத் தங்கள் வசப்படுத்திவிட்டது.

மக்கலமிடம் காணப்பட்ட ஒருவகைப் பதற்றம், நியூசிலாந்து அணியின் ஏனைய வீரர்களுக்கும் தொற்றியதுபோல ஒரு போராட்டம் இல்லாமலேயே சரணடைந்தது போல ஆனது நியூசிலாந்தின் துடுப்பாட்டம். க்ராண்ட் எலியட் தவிர்த்து.

ஆபத்தில்லாத ஒரு மக்ஸ்வெல்லின் பந்துக்கு தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக, குமார் சங்கக்காராவை முந்திய மார்ட்டின் கப்டில் ஆட்டமிழந்தது இதற்கு நல்ல உதாரணம்.

ரொஸ் டெய்லர் – எலியட் ஆகியோரின் சத இணைப்பாட்டம், நியூசிலாந்தைக் காப்பாற்றியிருந்தாலும் கூட, போராட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கு சவால் விடும் அளவுக்கோ இல்லை.

அரையிறுதியில் நியூசிலாந்து அணி தடைதாண்டி, இறுதிப் போட்டிக்கு வர உதவிய ஹீரோவான எலியட், அந்தப் போட்டியில் இருந்த அதே மன நிலை & அதேவிதமான அடித்தாடும் ஆற்றலைத் தொடர்ந்தார்.

மிகத் துல்லியமாக பந்துவீசிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவ்வாறு எதிர்கொண்டு நிதானமாகவும் வேகமாகவும் ஆடுவது என்பது இலகுவான காரியமல்ல. 

இந்த இணைப்பாட்டத்தை உடைத்தவர் முக்கியமான விக்கெட்டுக்களை தொடர் முழுவதும் எடுத்த ஜேம்ஸ் போல்க்னர். 

ரொஸ் டெய்லர் ஹடினின் அபார பிடிஎடுப்பு ஒன்றுக்கு ஆட்டமிழக்க, அடுத்த இரு பந்துகளில் போல்க்னர் வீசிய அருமையான பந்து ஒன்று, பயங்கரமான அதிரடி வீரர் அன்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தது.

மக்கலம் போலவே அன்டர்சனும் பூஜ்ஜியம்.

இந்த ஆட்டமிழப்புக்கள், அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளரால் கைப்பற்றப்பட்ட சடுதியான இரு விக்கெட்டுக்கள் 1992இல் இதே மெல்பேர்னில் வசீம் அக்ரம் அடுத்தடுத்து வீழ்த்திய இங்கிலாந்து விக்கெட்டுக்களை ஞாபகப்படுத்தியது.

மிக எதிர்பார்க்கப்பட்ட 'முன்னாள்' அவுஸ்திரேலியரான ரொங்கியும் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு நியூசிலாந்து அணியை வாரிச் சுருட்டியது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சும், அதற்குத் துணை நின்ற களத்தடுப்பும், சமயோசிதமாகவும், அதேவேளையில் எதிரணியை கூடுமான விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும் அணியை வழிநடத்திய தலைவர் கிளார்க்கும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், பொதுவாகவே கண்ணியமான, பழகுதற்கினிய நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறும்போது தகாத வார்த்தைகள் மற்றும் கோபப்படுத்தும் வசைகளுடன் வழியனுப்பியது வேண்டாத செயலாகவே தெரிந்தது.

அதிலும் சிறப்பாக ஆடிவிட்டு களம் விட்டு நீங்கிய எலியட், இறுதிப் போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அமைதியான மனிதர் வெட்டோரி ஆகியோரையும் திட்டி அனுப்பியது அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு குரூர முகத்தைக் காட்டிய செயல்கள்; அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கே இந்த செயல் மகிழ்ச்சியளித்திராது.

நியூசிலாந்து பெற்ற 183 ஓட்டங்கள், 1983 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கையை ஞாபகப்படுத்தியது. அந்தப் போட்டியில் இந்தியா தன்னுடைய மிதவேகப் பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சினால் பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியையே சுருட்டி 40 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றதும் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

ஆனால், இந்த அவுஸ்திரேலிய அணி தமக்குக் கிடைத்த வாய்ப்பை விடுகின்ற அளவுக்கு தடுமாறக்கூடிய அணி அல்ல.

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய ஆரம்ப இணைப்பு சறுக்கியது.

நியூசிலாந்தின் ஐவர் பெற்ற பூஜ்ஜியங்களுக்கு அடுத்தபடியாக ஏரொன் ஃபிஞ்ச் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து மகிழ்ச்சியடையக் கூடியதாக இருந்த ஒரே சந்தர்ப்பம் இது தான்.

முதலில் வோர்னரின் அதிரடி, பின்னர் தனக்கேயான நாளாக அன்றைய நாளை – தன்னுடைய ஒருநாள் சர்வதேசப் போட்டியின் இறுதி நாளை மாற்றிய தலைவர் கிளார்க்கின் அற்புத ஆட்டம், இவை இரண்டையும் சரியாக செலுத்தும் நிதானமான மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவின் எதிர்கால நாயகன் ஸ்டீவ் ஸ்மித் இவற்றோடு அவுஸ்திரேலிய வெற்றி இலகுவானது.

ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது தொடர்ச்சியான 50க்கு மேற்பட்ட ஓட்டப்பெறுதியை அன்றைய தினம் பதிவு செய்து உலகக்கிண்ண சாதனையை ஏற்படுத்தினார்.

ஸ்மித் 3ஆம் இலக்கத்தில் வந்த பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் உறுதியுடன், வலிமைப்பட்டுள்ளது.

வழமையாக வந்தவுடன் வேகமாக அடித்தாடி தான் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மித், அன்றைய தினம் சத இணைப்பாட்டத்தில் தனது தலைவர் கிளார்க்கை அடித்தாட விட்டு அழகு பார்த்தார்.

ஸ்மித்தின் அழகான, நிதானமான ஆட்டம் கண்டு ஒரு தடவை ஹென்றி வீசிய பந்து விக்கெட்டில் படும், பேல்ஸ் கீழே விழாமல் மரியாதை செய்திருந்தது.

72 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த கிளார்க், ஒரு லட்சத்தை அண்மித்த ரசிகரின் கரகோஷத்துடனும் மரியாதையுடனும் நியூசிலாந்து வீரர்களின் வாழ்த்துக்களோடும் விடைபெற்றார்.

அதன்பின் வொட்சன் உள்ளே வர, ஸ்மித்தின் துடுப்பினால் பெறப்பட்ட 4 ஓட்டம் ஒன்றுடன் மீண்டும் ஓர் உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது.

உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்பதுவும், பின்னர் பதினொருவரில் இடம்பிடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவிருந்த வொட்சன் – ஆடுகளத்திலே நிற்க, எதிர்கால அவுஸ்திரேலியா நம்பியிருக்கும் அடுத்த தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஸ்மித்தின் துடுப்பின் மூலம் வெற்றி ஓட்டம் பெறப்பட்டது சிறப்பு.

1992இல் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட வர முடியாமல் போன ஏமாற்றம், இம்முறை தங்கள் மக்களுக்கு முன்னால் பெறப்பட்டது வரலாறில் இடம்பிடிக்கும் ஒரு மாபெரும் பெற்றி.

இப்போது அவுஸ்திரேலிய அணி மட்டுமே அத்தனை கண்டங்களிலும் உலகக்கிண்ணம் வென்றுள்ள ஒரே அணி.

101 பந்துகள் மீதம் இருக்க இலகுவான வெற்றியைப் பெற்ற அணி, இந்த வெற்றியை தங்கள் தலைவர் மைக்கேல் கிளார்க் சொன்னதன் படி, தங்கள் மரித்துப்போன வீரன் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணித்தது.

கோலாகலமான கொண்டாட்டங்களின் மத்தியில், தனது ஓய்வை உலகக்கிண்ண வெற்றியுடன் பெருமையுடன் அறிவித்த கிளார்க் (அவருடன் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினும் சேர்ந்துகொண்டார்), தங்களது பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தங்களது வீரர்கள் அத்தனை பேரையும் பூரண உடற்தகுதியோடு வைத்திருக்கும் அணியின் உதவியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களையும் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

ஒரு தலைவனாக முன்னின்று சரியான பாதையில் செலுத்தி, அணியாக அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தி, இறுதிப் போட்டியில் தானே ஓட்டங்களைக் குவித்து, தன்னைப் பற்றியிருந்த அவநம்பிக்கைகளையும் போக்கி பெருமிதமாக கிளார்க் விடைபெற்றிருக்கிறார்.

மறுபக்கம் 8 போட்டிகளைத் தொடர்ந்து வென்று வந்து, இறுதிப்போட்டியில் தோற்றுப்போன நியூசிலாந்து ரசிகர்களின் அன்பை வென்றுகொண்டது.

இந்த அவுஸ்திரேலிய அசுரப் புயல் முன் எந்த அணியும் நின்றிருக்க முடியாது என்பதே உண்மை.

ஆனால், இப்படியொரு வாய்ப்பு இனியொரு தடவை நியூசிலாந்துக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.

பெரிய இறுதிப்போட்டிகள் வந்திராத அனுபவக் குறைவும், அழுத்தமும் மக்கலமின் திறமையான அணியை சறுக்கிவிட்டது நேற்று.

2011இல் நம்மவர் முத்தையா முரளிதரன் போல, அன்றைய தோல்வியுடன் நியூசிலாந்தின் டானியல் வெட்டோரி ஓய்வு பெறுகிறார்.

முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை உடைத்த போல்க்னர், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

38 சதங்கள் குவிக்கப்பட்ட (இவற்றில் இரண்டு இரட்டைச் சதங்கள்), போட்டியொன்றுக்கு கிட்டத்தட்ட 10 சிக்சர்கள் வீதம் பெறப்பட்ட, துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்த உலகக்கிண்ணத் தொடரின், தொடர் நாயகன் விருது 22 விக்கெட்டுக்களை 10க்கு அண்மித்த சராசரியில் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் இடது கை இளமைப் புயல் மிட்செல் ஸ்டார்க்குக்குக் கிடைத்தது, மிகப்பொருத்தமும், அவரது முயற்சிக்கும் ஆற்றலுக்குமான பரிசேயாகும்.

இந்தியாவின் கிரிக்கெட் 'கடவுள்' சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு இந்த விருதுகளை வழங்க வைத்தது கிரிக்கெட்டுக்கும் பெருமையாகும்.

அவுஸ்திரேலியா கைப்பற்றிய உலகக்கிண்ணம் மற்ற அணிகளை விட 1987 முதல், இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் எங்களிடம் இருக்கிறது என்பதை மீண்டும் அறுதியிட்டு சொல்லியிருப்பதோடு, மைக்கேல் கிளார்க்கையும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தலைவராக உறுதியாக காட்டிவிட்டு செல்கிறது.

ஆனால், மற்ற அணிகளின் தலைவர்கள் விடைபெறும்போது விட்டுச் செல்லும் பாரிய வெற்றிடம் போல இல்லாமல், கிளார்க் அடுத்த தசாப்த காலத்துக்காவது உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ஒரு கிரிக்கெட் அணியையும், அந்த அணியை வழி நடத்தப்போகும் தற்காலிகத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, மற்றும் நீண்டகாலத்துக்கான இளமைத் தெரிவு ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் அடையாளம் காட்டிவிட்டு விடைபெற்றுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் சிகரங்கள், உலக கிரிக்கெட்டில் உன்னத இடம்பிடித்த மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார மற்றும், பாகிஸ்தானின் ஷஹிட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், சிம்பாப்வேயின் நம்பிக்கை நாயகன் பிரெண்டன் டெய்லர் ஆகியோரின் ஓய்வுகளை நெகிழ்ச்சியோடு பார்த்த எமக்கு, இன்னும் முக்கிய மூன்று முத்துக்களின் ஓய்வையும் தந்து அவுஸ்திரேலியா என்ற பொருத்தமான இடத்தை தெரிவு செய்து உலகக்கிண்ணம் விடைபெற்றுள்ளது.

தனது 'இளைய சகோதரன்' பிலிப் ஹியூசுக்கான அர்ப்பணமாக உலகக்கிண்ணத்தை தானே வென்று, அணிக்கும் நாட்டுக்கும் ரசிகருக்கும் பெருமை தேடி, தான் உப ஆகா இருந்தபோது இந்தியாவிடம் இழந்த கிரீடத்தை, சொந்த மண்ணில் வென்று கொடுத்துப் பெருமையுடன் விடைகொள்கிறார் கப்டன் கிளார்க்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டு டெஸ்ட்கள் கொண்ட தொடர்களுக்கான 17 பேர் கொண்ட அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில் சுழல் பந்துவீச்சாளரான ஃபவாட் அஹ்மட், அடம் வோக்ஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இதுவரை அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று, இதுவரை டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளாத பீற்றர் நெவில், பிரட் ஹடினுக்கான மாற்று விக்கெட் காப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபோல்க்னர், ஜோ பேர்ண்ஸ் ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. 

இந்த அணியில் இடம்பிடித்திருப்பவர்களில், ரயன் ஹரிஸ் மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி விபரம்: மைக்கேல் க்ளார்க் (அணித்தலைவர்), ஸ்டீபன் ஸ்மித் (உப தலைவர்), பிரட் ஹடின், ஃபவாட் அஹ்மட், ரையன் ஹரிஸ், ஜோஸ் ஹஸல்வூட், மிட்செல் ஜோன்சன், நதன் லையோன், மிட்செல் மார்ஷ், ஷோன் மார்ஷ், பீற்றர் நெவில், கிறிஸ் ரொஜர்ஸ், பீற்றர் சிடில், மிட்செல் ஸ்ட்ராக், அடம் வோக்ஸ், டேவிட் வோர்னர், ஷேன் வொட்சன்.

பிலெண்டர் தெரிவில் சர்ச்சை; மறுக்கிறது தென்னாபிரிக்கா

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் பதினொருவரில் இன அடிப்படையிலான தெரிவாகவே வெரோன் பிலெண்டர் உள்ளடக்கப்பட்டதாக பரவிவரும் கருத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிறிஸ் நென்ஸானி மறுத்துள்ளார். அவரது கருத்தையே அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவும், அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்சும் வழிமொழிந்துள்ளனர்.

இனவெறிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விளையாட்டுக்களிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, பல வருடங்களுக்குப் பின்னரே மறுபடியும் சர்வதேச விளையாட்டுத் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்னரான தென்னாபிரிக்க அரசின் அவதானமான நடவடிக்கைகள் விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்துவருகின்றன. இதன் அடிப்படையிலேயே குறித்த எண்ணிக்கையில் கறுப்பின வீரர்களுக்கும் தேசிய கிரிக்கெட் அணியில் போதிய இடம் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில்தான் அபொட்டுக்குப் பதிலாக அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பிலெண்டருக்கு வழங்கப்பட்டதாகவும் பரவலாக கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆயினும், இந்தக் கருத்துகளை முற்றாக மறுத்திருக்கும் கிறிஸ் நென்ஸானி, ''அணித் தெரிவுகளில் நான் தலையிட்டதில்லை. இனிமேலும் தலையிடும் எண்ணம் இல்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

சிம்பாப்வேயையும், இந்தியாவையும் உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொண்டபோது ஹசிம் அம்லா, டுமினி, பெஹார்டியன், பிலெண்டர், இம்ரான் தாஹிர் ஆகிய ஐந்து வெள்ளையர்கள் அல்லாத வீரர்கள் தென்னாபிரிக்க அணியின் விளையாடிய இறுதிப் பதினொருவரில் இடம்பிடித்திருந்தனர். மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியின்போது உபாதை காரணமாக டுமினியும் பிலெண்டரும் விளையாட முடியாமல் போக அபொட் மற்றும் ரொஸொவு இருவரும் விளையாடியிருந்தனர். 

பாகிஸ்தானுடனான போட்டியில் டுமினி அணிக்குத் திரும்பினார். பெஹார்டியனுக்குப் பதிலாக விளையாடியிருக்கவேண்டிய பிலெண்டர் உடல் நிலை சீரில்லாததால் விலக, 
அவரது இடத்தில் அபொட் அந்தப் போட்டியில் இடம்பிடித்தார். பின்னர் யு.ஏ.இ உடனான போட்டியில் முழுமையான உடல் தகுதியோடு பிலெண்டர் அணிக்குத் திரும்பியிருந்தார். அப்போதும் வெள்ளையரல்லாத ஐந்து வீரர்கள், விளையாடிய பதினொருவரில் இடம்பிடித்திருந்தனர். 

''அன்றைய போட்டியில் விளையாடிய அணியை எமது பலம் வாய்ந்த அணியாக உணர்ந்தோம்'' என்கிறார் கிறிஸ் நென்ஸானி. அந்த பதினொருவரில் அபொட் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் டு பிளெஸிஸ்கூட உபாதை காரணமாக இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கவை. 

அன்று விளையாடிய பதினொருவரில், காலிறுதிப் போட்டிக்காக இரண்டு மாற்றங்களை தென்னாபிரிக்கா மேற்கொண்டிருந்தது. டு பிளெஸிஸ் அணிக்குத் திரும்பியிருந்த அதேவேளை, பிலெண்டருக்குப் பதிலாக அபொட் விளையாடியிருந்தார். பிலெண்டர் காயமடைந்திருந்ததாலேயே விளையாடியிருக்கவில்லை என்று உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தபோதும், இலங்கை அணியை எதிர்கொள்ளும் ஒரு நுட்பமாகவே அபொட் உள்வாங்கப்பட்டதாக பின்னர் வெளிவந்த தகவல்கள் குறிப்பிட்டன. 

இலங்கைக்கெதிரான காலிறுதிப் போட்டியில் தனது வேகத்தில் மிரட்டிய அபொட், முதலாவது விக்கெட்டை வீழ்த்தி, இலங்கையின் சரிவை ஆரம்பித்துவைத்தார். அத்தோடு, இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 9 விக்கெட்டுக்களை 14.44 என்ற சிறப்பான சராசரியில் வீழ்த்தியிருந்தார். எனவே, அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆயினும், இந்த உலகக் கிண்ணத்தொடரில்  மொத்தமாக 20.3 ஓவர்கள் வீசி, 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிருந்த பிலெண்டர், அபொட்டுக்குப் பதிலாக அணிக்குள் வந்தார். 

நியூசிலாந்தில் வைத்து நியூசிலாந்துக்கு எதிரான அவரது கடந்தகாலப் பெறுபேறுகளும், அவரது ஓரளவு சிறப்பான துடுப்பெடுத்தாடும் ஆற்றலும் அவரை அணிக்குள் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்தியதாக அணி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். 

நியூசிலாந்து ஆடுகளங்களில் ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் பிலெண்டர் 22.62 என்ற சராசரியில் 8 விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார். 

அரையிறுதிக்கான அணியில் அபொட்டை விலக்கி பிலெண்டரை இணைத்தமை சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அந்தப் போட்டி முடிந்து இரண்டு தினங்களின் பின்னர் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் விடுத்துள்ள உள்ளூர் கழகங்களுக்கான புதிய வீரர் தெரிவு நடைமுறை விதி மேலும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. 

வீரர்களுக்கான புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய இரண்டு வார கால அவகாசமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் வெள்ளையரல்லாத ஆறு வீரர்களை (முன்பு ஐந்தாக இருந்தது) அணியில் இணைக்கவேண்டும் என்றும், அதில் மூன்று ஆபிரிக்க கறுப்பின வீரர்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்றும் புதிய தெரிவு முறையை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறையானது, தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டதென்றும், மாற்றங்களுக்கு போதிய அவகாசமில்லாத நிலையில் அணித் தெரிவில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் இப்போது பரவலான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

கிண்ணம் வழங்கும் உரிமை எனக்கே: முஸ்தபா கமல்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராக (ICC President) பங்களாதேஷ் நாட்டின் முஸ்தபா கமல் இருந்து வருகின்றார். இந்த வழமையான தலைமைப் பொறுப்புக்கு மேலாதிக்கம் செலுத்தும் வகையிலேயே ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு தலைவராக (ICC Chairman) நியமிக்கப்பட்டார். 

அதாவது பிக் 3 என அழைக்கப்படும் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் ஆதிக்கம் மூலம் நிர்வாகமுறை மாற்றப்பட்டது. இந்த நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் கிண்ணங்களை வழங்கும் உரிமை சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தலைவருக்கே உண்டு. ஆனால், தலைவரான என்னை அந்த கிண்ணத்தை வழங்கவிடாமல் செய்து குறித்த பதவிக்கான மரியாதையை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இல்லாமல் செய்து விட்டது என முஸ்தபா கமல் குற்றம் சுமத்தியுள்ளார். 

உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பின்னர் தனது நாட்டின் ஊடகங்கள் மூலமாக இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். நாடு திரும்பியதும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில் என்ன நடக்கின்றது. இவற்றிக்கு எல்லாம் யார் காரணம் என்ற தகவல்களை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

துணை அங்கத்துவ நாடுகள் ஒதுக்கப்படவில்லை: ஐ.சி.சி

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணிகள் 10 ஆக குறைக்கப்படுவதானால் துணை அங்கத்துவ நாடுகள் தமக்கான வாய்ப்பை இழக்கும் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஸ்ரீநிவாசன் அதை மறுத்துள்ளார். 

துணை அங்கத்துவ நாடுகளுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. தரப்படுத்தல்களில் முதல் 8 இடங்களை பிடிக்கும் நாடுகள் நேரடியாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறும். 9ஆம், 10ஆம் இடங்களை பிடிக்கும் நாடுகள் துணை அங்கத்துவ நாடுகளுடன் தெரிவுப்போட்டிகளில் மோதி அவற்றில் இருந்து 2 அணிகள் தெரிவு செய்யப்படும். எனவே, திறமையான துணை அங்கத்துவ நாடுகள் உலகக்கிண்ண வாய்ப்பை பெற்றுக் கொள்ளும். எனவே தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளதாக அவர்கள் நினைக்கக்கூடாது என ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். 

300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழு துணை அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த ஸ்ரீநிவாசன், 8 வருட சுழற்சி முறையில் குறித்த நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த பணம் பாவிக்கப்படும் என கூறியுள்ளார். இந்தியாவில் இதுபோன்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அதன் மூலமே இந்திய அணி வளர்ச்சி அடைந்த சிறந்த அணியக திகழ்வதாகவும், துணை அங்கத்துவ நாடுகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தமுறை அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் எனவும் மேலும் ஸ்ரீநிவாசன் தெர்வித்துள்ளார். 

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் , டெஸ்ட் அணிகள் நேரடியாக உலகக்கிண்ணத்திற்கு தகுதி பெறமுடியும் என்ற நிலை இல்லை. அத்துடன் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. அவர்கள் முன்னணி அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் எதிர்கால கூட்டங்களில் பேசி இதற்க்கான தீர்வு பெறப்படும் எனக் கூறியுள்ளார். சிறந்த ஒருநாள் அணிகளே உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும். அவை 8 ஆக, 10 ஆக, 12 ஆக இருக்கலாம். அதிக பணத்தை சாதாரண அணிகளுக்காக செலவழிக்காமல், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு சவால் விடுக்கும் அணிகளுக்காக அவற்றை செலவழிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஏற்றுக்கொள்ளப்படாத தலைவனின் பொருத்தமான பிரியாவிடை

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அவ்வணிகளின் அணித்தலைவர்களாக வருவதென்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அணித்தலைமைப் பொறுப்பிற்கென சிறு வயதிலிருந்தே வீரர்கள் வளர்க்கப்படுவார்கள். மைக்கல் கிளார்க்கும் அவ்வாறே கருதப்பட்டார், வளர்க்கப்பட்டார்.

மைக்கல் கிளார்க், தனது அறிமுக டெஸ்ட் இனிங்ஸில் இந்தியாவிற்கெதிரான பெங்களுரில் வைத்து 151 ஓட்டங்களைப் பெற்று தன்னை வெளிப்படுத்தியதோடு, அவுஸ்திரேலியாவில் தனது அறிமுக டெஸ்ட் இனிங்ஸில் 141 ஓட்டங்களைப் பெற, அவுஸ்திரேலியாவின் அடுத்த நட்சத்திரம் உருவாகுவது உறுதியாகியது. அதனைத் தொடர்ந்து சிறப்பான பெறுபேறுகளைப் பெற, அடுத்த அணித் தலைவராவதற்கான தகுதிகள் மைக்கல் கிளார்க்கிற்கு இருப்பதாகக் கருதப்பட்டது. அவர் 2008ஆம் ஆண்டில் அணியின் உப தலைவராக அறிவிக்கப்பட்டார். உப தலைவராக அறிவிக்கப்பட்டால் அடுத்த அணித்தலைவராக மாறுவது அவுஸ்திரேலிய நடைமுறை என்பதால் அவுஸ்திரேலியாவின் அடுத்த தலைவர் மைக்கல் கிளார்க் என்பது ஓரளவுக்குத் தெளிவானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரசிகர்களிடத்தே அது எப்போதும் அதே மாதிரியானதாக இருந்திருந்ததில்லை.

மைக்கல் கிளார்க்கிற்கு முன்னர் அணியின் நிரந்தரத் தலைவர்களாகக் கடமையாற்றிய றிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ, மார்க் டெய்லா, அலன் போர்டர் போன்றோர் அவுஸ்திரேலிய இரசிகர்களாலும், நிர்வாகிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாகவும், பெரிதும் மதிக்கப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும், கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்ட ஆளுமையும் பெரிதும் வெளிப்படுத்தப்படாததாகவும் காணப்பட்டது. கிரிக்கெட்டையே தங்கள் மூச்சாகக் கொண்டவர்களாக தங்களை வெளிப்படுத்தியவர்களாகக் காணப்பட்டனர். ஆங்கிலத்தில் nerd என்று அழைக்கப்படுபவர்களாக இருந்தனர். அதுதான் அவுஸ்திரேலிய இரசிகர்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளுமையாகவும் இருந்தது. இவர்களிடமிருந்து மைக்கல் கிளார்க் பெரிதும் வித்தியாசமானவராகக் காணப்பட்டார்.

ஆரம்ப காலத்தில் வித்தியாசமான முடியலங்காரத்துடன் திரைப்படங்களில் காதல் இளவரசர்களாகக் காட்டப்படுபவர்கள் போலத் தோன்றிய மைக்கல் கிளார்க், அதன் பின்னர் அவரது அப்போதைய காதலியும், விளம்பர மொடலுமான லாரா பிங்கில்-உடன் காதலுறவில் காணப்பட்டபோது, இருவரது இணைப்பும் முதற்பக்கச் செய்தியாகின. அவுஸ்திரேலியாவில் அதிகம் பேசப்படும் விளையாட்டு சார்ந்த ஜோடியாக இருவரும் மாறினர்.

மைக்கல் கிளார்க் – லாரா பிங்கில் இருவரினதும் உறவுகள் சம்பந்தமான விடயங்கள் அதிகம் கவனத்தை ஈர்த்ததென்றால், இருவரினதும் பிரிவு இன்னமும் அதிகமான கவனத்தை ஈர்த்தது. நியூசிலாந்தில் கிரிக்கெட் தொடருக்காகச் சென்றிருந்த மைக்கல் கிளார்க், தனது காதலியின் (அப்போது இருவரும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்திருந்தது) நிர்வாணப்படங்கள் சஞ்சிகையொன்றில் வெளியாகியிருக்க, தொடரின் நடுவே தனது நாட்டுக்குத் திரும்பியிருந்தார். அடுத்த தலைவர் என வர்ணிக்கப்படும் ஒருவர், தொடரின் நடுவே தனிப்பட்ட விடயமொன்றிற்காக நாட்டிற்குத் திரும்பியதை அவுஸ்திரேலிய இரசிகர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர் உடனடியாக நியூசிலாந்திற்குத் திரும்பி முதலாவது டெஸ்ற் போட்டியில் அற்புதமான சதமொன்றைப் பெற்ற போதிலும், மைக்கல் கிளார்க்கை அணித்தலைவராக ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கம் காணப்பட்டது. அவுஸ்திரேலிய இரசிகர்களாலேயே மைதானங்களில் வைத்து 'கூ' சத்தமிடப்பட்டார் மைக்கல் கிளார்க்.

அவுஸ்திரேலியாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான றிக்கி பொன்டிங், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக 2011ஆம் ஆண்டு அறிவித்தபோது, அதுவரை காலமும் உப தலைவராகக் காணப்பட்ட மைக்கல் கிளார்க் அணித்தலைவராக நியமிக்கப்படுவது தொடர்பாக ஏகோபித்த கருத்துக் காணப்பட்டிருக்கவில்லை. புதிய அணித்தலைவரைத் தெரிவு செய்வதற்கான 14 பேர் கொண்ட குழு ஒன்றுகூடியபோது, மைக்கல் கிளார்க்கின் முன்னாள் சக வீரராக மத்தியூ ஹெய்டன் உட்பட சிலர் மைக்கல் கிளார்க் அணித்தலைவராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மைக்கல் கிளார்க் அதற்குப் பொருத்தமானவர் இல்லை என்ற கருத்துக் காணப்பட்டதோடு, அவருக்கான மாற்றாக அப்போது அணியிலேயே காணப்படாத கமரன் வைட்-இன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் மைக்கல் கிளார்க் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

இளைய மைக்கல் கிளார்க்கிடம் காணப்பட்ட வித்தியாசமான முடியலங்காரங்கள், லாரா பிங்கில் உறவில் காணப்பட்ட பகிரங்கமான கவனயீர்ப்புக்கள் அற்றவராக அணித்தலைவர் மைக்கல் கிளார்க் காணப்பட்ட போதிலும், முன்னாள் வீரர்கள் சிலரும், இரசிகர்கள் பலரும் மைக்கல் கிளார்க்கை சிறந்த அணித்தலைவராக, றிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ, மார்க் டெய்லர், அலன் போர்டர் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இருந்ததில்லை.

நிரந்தர அணித்தலைவராக அறிவிக்கப்பட்டதன் பின்பு ஓரளவு வெற்றிகளைப் பெற்ற போதிலும், அவருக்கான அங்கிகாரம் முழுமையாகக் கிடைத்திருக்கவில்லை. களத்தில் சிறந்த நுட்பங்களைக் கொண்ட அணித்தலைவர் என்ற பெயரை எடுத்த போதிலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சமூகம் அவரை முழுமையான அணித்தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் வைத்து 0-4 என்ற தோல்வி, சம்பியன்ஸ் கிண்ணத்தில் சிறப்பான பெறுபேறுகள் இல்லை என்பன மைக்கல் கிளார்க் மீதான விமர்சனங்களை அதிகரித்திருந்தன. இவ்வாறான விமர்சனங்களைக் கொண்டிருந்த மைக்கல் கிளார்க்கிற்கான மாற்றம் 2013ஆம் ஆண்டு இறுதியிலேயே வந்து சேர்ந்தது.

2013/2014 இற்கான ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை வந்தடைந்ததோடு, அத்தொடரை இலகுவாக வெற்றிகொள்ளும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், பிரட் ஹடின், மிற்சல் ஜோன்சன் ஆகியோரின் மிகச்சிறப்பான பெறுபேறுகளோடு அத்தொடரை 5-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. முதன்முறையாக, மைக்கல் கிளார்க்கினை முழுமையான அணித்தலைவராக ஏற்றுக் கொள்ள அவுஸ்திரேலியா தயாரானது. சரித்திரபூர்வமான வெற்றி, அதைப் பெற்றுக் கொண்ட விதம் ஆகியன மைக்கல் கிளார்க் என்ற அணித்தலைவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது. 

இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னர், தென்னாபிரிக்காவிற்குச் சென்றடைந்த அவுஸ்திரேலியா, அங்கு எவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரை அவுஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தது. ஆனால், முக்கியமாக, வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற கணக்கில் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சார்பாகக் களமிறங்கிய மைக்கல் கிளார்க்கினை தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்க்கலின் பவுண்சர் பந்துகள் பதம் பார்த்தன. உடம்பில் ஏராளமான தடவைகள் அடி வாங்கிய மைக்கல் கிளார்க், வலியையும் பொறுத்துக் கொண்டு ஆடினார். இறுதியில், ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களைப் பெற்றதோடு, அவுஸ்திரேலிய அணி வெற்றிபெறவும் முக்கியமான காரணமாக அமைந்தார். அவரது அந்த இனிங்ஸ் ஏராளமான மரியாதையைப் பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியர்கள் தங்களது அணித்தலைவரிடம் எதிர்பார்க்கும் 'உறுதியான மனநிலை, பலமாக எதிர்த்தாடி, இறுதிவரை போராடும் இயல்பு' ஆகியவற்றை அந்த இனிங்ஸ் வெளிப்படுத்தியது. மதிக்கப்படும் தலைவராக மைக்கல் கிளார்க் மாறினார்.

இவ்வாறு எல்லாமே சிறந்த முறையில் சென்று கொண்டிருந்தாலும், மைக்கல் கிளார்க்கின் உடல்நிலை அவருக்கு எதிரியாக மாறியது. அவரது முதுகுப் பகுதியில் காணப்படும் நீண்டகால உபாதை, அண்மைக்காலங்களில் அதிகம் ஏற்பட்டுள்ள கால் தசைநார் உபாதைகள் அவரால் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்ற முடியாது செய்தது. குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவரால் முழுமையாகப் பங்குபற்ற முடியாது போக, தற்காலிகத் தலைவராகச் செயற்பட்ட ஜோர்ஜ் பெய்லி சிறந்த பெறுபேறுகளைப் பெற, மைக்கல் கிளார்க் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் முக்கியமற்றவராக மாறுகிறார் என்ற கருத்து எழுந்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவரது தனிப்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறுகளும் குறைவடைகின்றன என்ற கருத்து உருவானது. 

உலகக்கிண்ணத்தில் அவரால் உடல் உபாதை காரணமாக ஆரம்பத்தில் அணியோடு இணைந்து கொள்ள முடியாது போக, இங்கிலாந்திற்கெதிரான அவர்களது முதலாவது போட்டியில் தற்காலிகத் தலைவரான ஜோர்ஜ் பெய்லி அழுத்தம் மிக்க சூழ்நிலையில் அரைச்சதமொன்றைப் பெற்றார். இதனால், அணிக்கு மைக்கல் கிளார்க் தேவையானவரா என்ற கருத்துச் சிலரிடம் எழுந்தது. அணியிலும் அவ்வாறான கருத்துக் காணப்படுவதாக சில தகவல்கள் எழுந்தன.

மைக்கல் கிளார்க் – அணிக்குள் வர, அரைச்சதம் பெற்ற ஜோர்ஜ் பெய்லி அணித்தலைவர் பதவியிலிருந்து மாத்திரமன்றி, அணியிலிருந்தும் நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. ஒருநாள் வீரராக, ஃபோர்ம்-இன் அடிப்படையில் ஜோர்ஜ் பெய்லி சிறந்த தெரிவாக அமைவாரா என்ற கேள்வி பலரிடத்தே காணப்பட்டது என்பதை உண்மையானது.

ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இறுதிப்போட்டியே தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியாக அமையும் என்று அறிவித்த போது தான் மைக்கல் கிளார்க் விட்டுச் செல்லப்போகும் இடைவெளியைப் பலர் அறிந்து கொண்டனர், புரிந்து கொண்டனர். அதேபோல, இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது களமிறங்கிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க், 72 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். தனது துடுப்பாட்டப் பெறுபேறுகள் இன்னமும் மழுங்கிப் போயிருக்கவில்லை என்பதை, உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் உறுதிப்படுத்தினார் மைக்கல் கிளார்க். இறுதியில், உலகக்கிண்ண வெற்றியோடு விடைபெறுகிறார் மைக்கல் கிளார்க். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என்பது அவரது இரசிகர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலளிக்கும் விடயம் தான்.

நுட்பமிக்க அணித்தலைமை, ஆக்ரோஷமான அணித்தலைமைப் பாணி, களத்திற்கு வெளியே அமைதியான ஆனால் உறுதியான ஓர் ஆளுமை என்பன மைக்கல் கிளார்க்கினை எதிர்காலத்திற்கு ஞாபகப்படுத்தும். மைக்கல் கிளார்க் என்ற அணித்தலைமை ஆளுமைக்குப் பின்னரே 245 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 44.58 என்ற சராசரியில் 7,981 என்ற ஓட்டங்களைப் பெற்ற அவரது துடுப்பாட்டம் ஞாபகப்படுத்தப்படும் என்பது அவரது அணித்தலைமை எவ்வளவு சிறப்பானது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விவகாரம்: உள்ளக விசாரணை குழு நியமனம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில்  இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலவச wi-fi   சேவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 
ஸ்ரீ லங்கா கிரிகெட்டுக்கு இடைக்கால விசாரணை குழு அமைக்கப்பட்டது ஏன்? ஸ்ரீ லங்கா கிரிக்கெட், பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்கவேண்டும். அதனை கொடுப்பதற்கு பணம் இல்லையாயின் நிதியமைச்சரே அதனை செலுத்த வேண்டும். 
எங்களுடைய கிரிக்கெட் போட்டிகளின் (ஒளிபரப்பு)க்கு கிடைக்கவேண்டிய முழு தொகையை வாங்காமல்; சி.எஸ்.என்க்கு ஒளிபரப்பும் உரிமையை ஏன் ழங்கப்பட்டது. அது பெரும் பிரச்சினையாகும். ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதற்கே இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் பணம் கொடுத்தது. எனினும் அந்த நிதி, பொறியியல் கூட்டுதாபனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். 

 

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவராக ஆஷர் அலி?

பாகிஸ்தான் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவராக ஆஷர் அலி நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காதா ஆஷர் அலி மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரின் இடத்துக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நம்பப்படுகின்றது. இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகரியார் கான் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
30 வயதான ஆஷர் அலி 14 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய அனுபவம், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் உள்ள நல்ல உறவு என்பன இவர், அணித்தலைமை பொறுப்பை பெற வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. மிஸ்பா உல் ஹக், வொக்கார் யூனிஸ் ஆகியோரும் இவரை பரிந்துரை செய்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால அதிரடி துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் உப தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகின்றது. இவருக்கே இருப்பதுக்கு-20 போட்டிகளின் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது. 
பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக்குழுவையும் சகரியார் கான் மாற்ற முடிவு எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான 62 வயதான ஹரூன் ரசீட் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அந்தக் குழுவில் இடம்பெறும் 4 அங்கத்தவர்களையும் மாற்றவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.