யாழ். மத்திக்கு இனிங்ஸ் வெற்றி

எஸ்.அலன்ராஜ், அதிரடியாக ஆடி சதம் (103) பெற்றுக்கொடுக்க, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது இனிங்ஸ் மற்றும் 109 ஓட்டங்களால் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி அணியை வென்றது.
 
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு –3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் ஆட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 28ஆம் திகதி நடைபெற்ற போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து ஸ்கந்தவரோதய அணி மோதியது.
 
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 99.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.அலன்ராஜ் 103, எஸ்.மதுஷன் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்கந்தா சார்பாக, கே.கஜீவன் 4, எம்.சுஜீதரன், சரத்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
 
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தா அணி, 42.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எம்.சுஜீதரன் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்தி சார்பாக எஸ்.மதுஷன் 60 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும், எஸ்.அலன்ராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
 
ஃபொலோஒன் அடிப்படையில் மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தா அணி, 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் வி.விதுஷந்த் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்தி சார்பாக எம்.மதுஷன் 28 ஓட்;டங்களுக்கு 4 விக்கெட்களையும், ஜே.யரோசன், எஸ்.மதுஷன், எஸ்.அலன்ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்கள்.

ஏழாவது போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் ஏழாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

டில்ஷான், திரிமன்ன ஜோடி ஆரோக்கியமானதொரு ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. குமார் சங்ககாரவின் சதமும் இணைந்துகொள்ள, இலங்கை அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. டில்ஷான் 81 ஓட்டங்களையும் குமார் சங்ககார ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கொரே அன்டர்சன் 3 விக்கெட்களையும், ரிம் சௌதி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

பதிலளித்துத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தது. மத்தியவரிசை வீரர்கள் ஓரளவுக்கு நிதானமாக துடுப்பெடுத்தாடினாலும் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தமை நியூசிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இறுதியில் 45.2 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. வில்லியம்ஸன் 54 ஓட்டங்களையும், லூக் ரோன்ச்சி 47 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் நுவன் குலசேகர, சமிந்த எரங்க மற்றும் தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட 23 வயதான மித வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். 

போட்டியின் நாயகனாக குமார் சங்ககாரவும், தொடர் நாயகனாக கேன் வில்லியம்ஸனும் தெரிவானார்கள். ஏழு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் சர்வதேசத் தொடரை, ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 4 க்கு 2 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றிக்கொண்டது.

தடுமாறும் தவான்; இந்திய அணியில் மாற்றம் வருமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஷிகர் தவான், அண்மைய நாட்களில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்து தடுமாறிவருகிறார். ஓட்டங்களைப் பெறுவதில் இவர் எதிர்நோக்கும் சிக்கல், அணிக்கும் பெரிய பிரச்சினையைத் தோற்றுவித்துவருகிறது. 

தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாக வேண்டுமானால் அடுத்து இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றேயாகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இப்படியானதொரு அழுத்தத்துக்குள் தவானின் துடுப்பாட்டத் தடுமாற்றம் இந்திய அணியின் மனோ திடத்தைப் பாதிப்பதாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான கவாஸ்கர், 'தவானுடைய துடுப்பாட்ட நுட்பத்தில் குறைபாடு காணப்படுகிறது. பந்துகளை எதிர்கொள்ளும்போதான அவரது அமைவும், நகர்வும் திருத்தத்துக்கு உட்படுத்தப்படவேண்டியவையாக உள்ளன. இதுவே அவரது தடுமாற்றத்துக்கும், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதற்குமான காரணமாக உள்ளது. இதேபோன்ற பிரச்சினை முரளி விஜய்க்கும் இருந்தது. ஆனால், அதனை அவர் விரைவாகச் சரிசெய்துகொண்டுவிட்டார். அதனால்தான் அவரால் இங்கிலாந்துக்கு எதிராகவும், அவுஸ்திரேலியாவிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாட முடிந்தது' என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது தவான் காயத்துக்கு உள்ளாகி அவுட்டாகாமலே வெளியேற நேர்ந்தது. பின்னர், அணி தோல்வியை நோக்கி நகர்ந்தபோது மீண்டும் துடுப்பெடுத்தாட வரவும் நேரிட்டிருந்தது. அந்தக் காயம் அவரது அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் தன்னம்பிக்கையைப் பாதித்திருக்கிறதா? என்ற கேள்வியும் பல தரப்பினரால் எழுப்பப்படுகிறது. 'அவரது காயத்தைக் காரணமாக்கி, உலகக்கிண்ணத் தொடருக்கான அணியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முரளி விஜய்யை உள்வாங்க வேண்டும்' என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. 

ஆனால், அணித்தலைவர் டோனியினால் இந்தக் கருத்து, 'நகைச்சுவையானது' என்று நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 

'தவான் அணியில் முக்கியமானதொரு வீரர். நம்பிக்கையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். ஒவ்வொரு போட்டியினதும் பெறுபேறுகளைக் கொண்டு வீரர்களை மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு போட்டிக்குமே வேறு வேறு அணிகளைத்தான் தெரிவுசெய்யவேண்டியிருக்கும். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள அணிக்கெதிராக விளையாடிக்கொண்டிருக்கிறோம். அதுவும், அவர்களுக்கு சாதகமான, நன்கு பரிச்சயமான ஆடுகளங்களில். அப்படிப் பார்க்கும்போது எமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களின் பெறுபேறுகள் திருப்திதரக்கூடிய அளவிலேயே உள்ளன. சில தடுமாற்றங்களிலிருந்து மீண்டுவர போதுமான கால அவகாசம் வழங்கப்படவேண்டியது முக்கியமானது' என்கிறார் டோனி.

கடந்த வருடத்தில் நியூசிலாந்துடனான தொடரில் ஆரம்பித்துப் பார்த்தால் மெல்பேர்ணில் தவான் பெற்ற ஒற்றை இலக்க ஓட்டமானது, கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் அவர் பெற்ற மூன்றாவது ஒற்றை இலக்க ஓட்டம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 

2014ஆம் ஆண்டில், திலகரட்ன டில்ஷான், ஹசிம் அம்லா ஆகியோர் மாத்திரமே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக தவானை விட அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாக உள்ளனர்.

தவான் விளையாடிய இன்னிங்ஸ்களைவிட டில்ஷான் ஏழு இன்னிங்ஸ்கள் அதிகமாக விளையாடியிருக்கும் அதேவேளை, தவானுக்கு சமமான எண்ணிக்கையான இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா, 892 ஓட்டங்களை 80.57 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில் பெற்றிருக்கிறார். தவான், தனது 815 ஓட்டங்களைப் பெற்றதோ 86.51 என்ற துடுப்பாட்ட வேக சராசரியில். 

தவானது கடந்த கிரிக்கெட் பருவகாலத்திலான 18 ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்னிங்ஸ்களில் தலா நான்கு போட்டிகள் நியூசிலாந்திலும் இங்கிலாந்திலும் விளையாடப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே, சில வாரங்களுக்கு முன்வரை இந்திய அணிக்கு அதிரடி ஆரம்பத்தை தந்துகொண்டிருந்த தவானுடைய தற்போதைய துடுப்பாட்டத் தடுமாற்றம் அவரை அணியிலிருந்து தூக்குவதற்கான வாய்ப்பை வழங்கிவிடுமா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே அணித்தலைவர் டோனியின் பதிலாக இருக்கிறது. அதேநேரம், தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களுக்கு இலகுவாக ஆட்டமிழந்துவிடுவது, தவானின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, அடுத்து நடக்கவிருக்கும் இறுதி லீக் போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியிலிருந்து தவானுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது. 

இது, அவருக்கு தன்னை எடைபோட்டுப் பார்க்கவும், சீர்படுத்திக்கொள்ளவும் கால அவகாசத்தை வழங்கக்கூடும். 

உடல் உபாதையிலிருந்து குணமாகிவிட்டார் என்று கருதப்படும் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடத் தயாராகிவிட்டால் தவானுக்கான ஓய்வு கிடைக்கக்கூடும். அல்லது மத்திய வரிசையில் அவரைத் துடுப்பெடுத்தாடச் செய்யும் எண்ணம் டோனிக்கு எழக்கூடும். தொக்கி நிற்கும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள 30ஆம் திகதிவரை நாம் காத்திருக்கவேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் வீரரின் அறையில் ‘இயல்நிலை அற்றவர்’

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கி உள்ள ஹோட்டலில், பாகிஸ்தான் சகலதுறை கிரிக்கெட் வீரர் ஹரிஸ் சொஹைலின் அறைக்குள் இயற்கையை தாண்டிய ஒருவர் வந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வீரர்கள் ஹரிஸ் சொஹைலின் அறைக்கு சென்ற வேளையில் அவருக்கு இந்த சம்பவம் காரணமாக கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியா அவரின் அறை, ஹோட்டல் நிர்வாகத்தினால் மாற்றப்பட்டுள்ளது. 

உலகக்கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தில் பயிற்சிப்போட்டிகளிலும், நியூசிலாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் விளையாடவுள்ளது.

பந்துவீச லசித் மாலிங்க ஆரம்பித்துவிட்டார்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் பந்து வீச ஆரம்பித்துள்ளார். காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட லசித் மாலிங்க கடந்த 4 மாதங்களாக பந்துவீசவில்லை. இந்த நிலையில் அவருடைய உபாதை குணமடைந்துள்ள நிலையில் மீண்டும் பந்துவீச ஆரம்பித்துள்ளார். 

24ஆம் திகதி முதல் அவர் பந்துவீச ஆரம்பித்துள்ளார். முதல் நாளில் 30 பந்துகளை அவர் வீசியுள்ளார். அதன் போது எந்த சிரமங்களையும் அவர் எதிர்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர் பந்துவீச்சை அதிகரித்து முழுமையாக தயாராகிவிடுவார் என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழுத்தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் உலகக்கிண்ண தயார்படுத்தல் திருப்தியில்லை: ஜெயசூரியா

நியூசிலாந்தில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் விதம் தனக்கு திருப்தியில்லை என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். நான்காவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி விளையாடும் விதமும், உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலும் போதுமானதாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றம் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும். இந்த தொடரில் ஒரே நல்ல விடயம் உலகக்கிண்ண தொடரின் முதற் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி விளையாடுகின்றது. அத்துடன் உலகக்கிண்ணம் நடைபெறும் ஒரு நாடான நியூசிலாந்தில் 2 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது. 

பந்துவீச்சு பிரச்சினையாக உள்ளது. அழுத்தத்தை எதிரணி உடைத்து ஓட்டங்களை பெற்றுக் கொள்கின்றது. பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். லசித் மாலிங்க இல்லாமை பின்னடைவே. நுவான் குலசேகர, சுரங்க லக்மால் ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் உள்ளது எனவும் சனத் ஜெயசூரியா மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணிக்கு வெற்றி

தென்னாபிரிக்கா – மேற்கிந்திய அணிகளுக்கிடையில் போர்ட் எலிசபெத்தில் இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாபிரிக்க அணிக்கெதிராக 9 வருடங்களின் பின்னர் பெற்ற வெற்றி இதுவென்பது சிறப்பானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடும்படி தென்னாபிரிக்காவைப் பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேவிட் மில்லர், 133 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 130 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

மேற்கிந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் ஜசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் ஷெல்டன் கொட்ரல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுடன் சரிந்தபோதிலும் இடைநிலை வீரர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணமாக 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது (266 ஓட்டங்கள்).

மார்லன் சாமுவெல் 68 ஓட்டங்களுடனும் டரென் சம்மி 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிதானமாக, தனிமனிதனாக துடுப்பெடுத்தாடிய அன்ரே ரஸ்ஸல், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றார். இதில், 5 ஆறு ஓட்டங்களும் 5 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

தென்னாபிரிக்க அணி சார்பில் போல் டுமினி, பர்ஹான் பிஹார்டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் நாயகனாக அன்ரே ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரின் நிலை 3 இற்கு 1 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா வசமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட ஆமிர், உடனடியாக அணிக்குள் வர முடியாது

சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆமிர், அடுத்த மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபட முடியும் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவர் உடனடியாக அணித் தெரிவுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மொஹமட் ஆமிரின் 5 வருட தடை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற தளர்வுகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டது. இதன்படி சர்வதேசக் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆமிரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து இருந்தனர். இதன் பின்னர் பாகிஸ்தான் ஊடகங்கள், ஆமிர் அடுத்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவார் என செய்தி வெளியிட்டு இருந்தன. இந்த நிலையிலேயே பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி "பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கான செயற்றிட்டம் உள்ளது. அதன்படி மீண்டும் அவர் விளையாட அணிக்குள் தெரிவு செய்யப்படுவாரா என்ற முடிவு எடுக்கப்படவேண்டிய நிலை உள்ளது” எனக் கூறியுள்ளார். 

இனி வரும் 5 தொடக்கம் 6 மாத காலப்பகுதியில் அவர் தன்னை நல்லவராக, மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என நிரூபிக்கவேண்டும். அதன் பின்னர் அவரின் போர்ம், பந்துவீச்சு திறைமை போன்றனவற்றை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே அணித் தெரிவில் அவர் மீது கவனம் செலுத்தப்படும் என மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் ஜான்ஸனின் துடுப்பாட்டத்தால் சென்றலைட்ஸ் அணி வெற்றி

விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், போட்டியொன்றில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 30 ஓவர்கள் கொண்ட இந்தச் சுற்றுப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஜொலிஸ்டார் விளையாட்டு கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம், யாழ். பல்கலைக்கழக அணி ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றுகின்றன.

சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற போடடியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நேரம் போதாமையால் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிட்சன் பொற்றிக் 40 ஓட்டங்களையும், என்.சற்குனேஸ்வரன் 33 ஓட்டங்களையும், எம்.தனஞ்செயகுமாரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சென்றலைட்ஸ் அணி சார்பாக, அஜித் டார்வின், கே.கிஷாந்தன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

163 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய, சென்றலைட்ஸ் அணி, 26 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் ஜான்சன் 46, என்.செல்ரன் 32 ஓட்டங்களையும் பெற்றதுடன், அஷகன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பல்கலைக்கழகம் சார்பாக எஸ்.றொமேஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

மீண்டும் பந்துவீச முடியும்: அஜ்மல்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல், நேற்று இந்தியாவின் சென்னையில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சோதனையை தொடர்ந்து தனது தூஸ்த்ரா பந்துவீச்சு அடங்கலாக அனைத்துவித பந்துவீச்சுகளும் கடுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தான் மீள பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுளார். தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் முடிவு அவர்களின் கைகளிலேயே இருப்பதாகவும் சைட் அஜ்மல் மேலும் தெரிவித்துள்ளார். 

சைட் அஜ்மலின் பந்துவீச்சு விதிமுறைகளை தாண்டி இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் எந்திர உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் படி விதிமுறைகளை தாண்டி அவர் பந்துவீசுவது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இவர் பந்துவீச முடியாமல் தடைசெய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உதவியுடன் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கின் உதவியுடன் தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து கொண்டார் அஜ்மல். இதற்கு முதல் ஒருதடவை சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் பரிசோதனைக்கு கோரி பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த திகதியை பிற்போட்டுக் கொண்டது. 

இந்த நிலையில் நேற்று சோதனை செய்துகொண்ட அஜ்மலின் பந்துவீச்சு மாற்றங்கள் அடைந்து 15 பகை கோணத்திற்கு உட்பட்டு இருந்தால், அவர் மீண்டும் பந்துவீச அனுமதி வழங்கப்படும். தவறும் பட்சத்தில் ஒரு வருடம் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை அஜ்மல் பந்துவீச முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு நடைபெற்றால் 37 வயதான அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.