2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணி சென்றலைட்ஸ்

யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்டர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது.


2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ் திங்கட்கிழமை (29) வெளியிட்டார்.


இந்த தரவரிசை இருபது – 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது.


இருபது – 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்கள் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 3 புள்ளிகளும், 40 ஓவர்கள் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 4 புள்ளிகளும், 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 50 புள்ளிகளும் வழங்கப்படுகின்றது.


இதனைவிட, அணிகள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கும் 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு இலக்குக்கு 0.1 புள்ளிகளும் வழங்கப்பட்டு தரவரிசை கணிக்கப்படுகின்றது.


சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய 22 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றிபெற்று 131.04 புள்ளிகளுடன் முதலிடத்தையும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி பங்குபற்றிய 24 போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றிபெற்று 127.47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், பற்றீசியன் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய 19 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றிபெற்று 85.40 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (72.26), சென்ரல் விளையாட்டுக்கழகம் (69.95), மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம்; (60.82), ஸ்ரீகாமாட்சி விளையாட்டுக்கழகம் (60.76), கிறாஸ்கோப்பர்ஸ் விளையாட்டுக்கழகம் (60.43), யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் (47.63), யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் (44.65) அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.


2010ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த தரவரிசையில், 2010, 2011ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும், 2012ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும், 2013ஆம் ஆண்டு ஜொனியன்ஸ் அணியும் சிறந்த அணிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.


யாழ்ப்பாணத்துக்கு துடுப்பாட்டத்தை 1898ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் பாதிரியார் ஜோர்ஜ் வெப்ஸ்டர் ஞாபகார்த்தமாகவே இந்த தரவரிசை செய்யப்படுவதுடன், வருடத்தில் சிறந்த அணிக்கு வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி

பற்றீசியன் விளையாட்டுக்கழகம்

கோளி – ஜோன்சன் மோதல் தொடர்கின்றது

இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோளி மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர் மிச்சல் ஜோன்சன் ஆகியோருக்கிடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட வாய் தர்க்கம், நேற்றைய நான்காம் நாளிலும் தொடர்ந்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து அவுஸ்திரேலியா வீரர்களின் வசை பாடல்களுக்கு உடனுக்குடன் இந்திய அணியின் உப தலைவர் விராத் கோளி, ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்து வருகின்றார். இதன் காரணமாக முதற்ப் போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் மிச்சல் ஜோன்சன் – விராத் கோளி ஆகியோருக்கிடையில் மோதல் உருவானது. விராத் கோளி தடுத்தாடிய பந்து, ஜோன்சனின் கைகளுக்கு செல்ல, பந்தை எடுத்து விக்கெட்களை நோக்கி ஜோன்சன் எறிந்தார். பந்து, விராத் கோளியின் முதுகை தாக்கியது. கோபமடைந்த கோளி இனி பந்தை எனக்கு எறியாமல் முடிந்தால் விக்கெட்டை தகர்க்க கூடிய முறையில் எறியவும் என கூறினார். 

இதனையடுத்து ஜோன்சனும் பதிலுக்கு கருத்துகளைக் கூற அவரின் பந்துவீச்சை கேலி செய்தபடி கோளி மற்றும் ரெஹானே ஆகியோர் குறி வைத்து தாக்கினர். அவுஸ்திரேலியாவினரின் பாணியில் அவர்கள் செயற்பட்டனர். 

இதனை தொடர்ந்து நேற்று அவுஸ்திரேலியா அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய வேளையில் மிச்சல் ஜோன்சன் துடுப்பாட களமிறங்கினார். அந்தவேளையில் அவரை விராத் கோளி கேலி செய்தார். மிச்சல் ஜோன்சன் ஆட்டமிழந்த வேளையிலும் மீண்டும் விராத் கோளி அவரை நோக்கி கேலியான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். அதனை நடுவர்களிடம் மிச்சல் ஜோன்சன் முறையீடு செய்து மைதானத்தை விட்டு வெளியேறினார். 

இந்த சமபவங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த விராத் கோளி, தன்னை மதிக்காதவர்களை தான் ஒருபோதும் மதிக்கமாட்டேன். சில அவுஸ்திரேலியா வீரர்களுடன் நல்ல நட்பாக பழகி வருகின்றேன். எல்லாம் ஒரே மாதிரி இல்லை. அவுஸ்திரேலியாவின் இதுபோன்ற செயற்பாடுகள் மாறாது. அவர்கள் கற்ற பாடங்களின் மூலம் திருந்துவதாகவும் இல்லை என கூறியுள்ளார். அதேவேளை அவர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலமே தான் அவர்களுடன் தான் ஓட்டங்களை அடித்து பெறக் கூடியதாக உள்ளது எனவும் கூறியுள்ளார். அத்துடன் தனது இந்த நடைமுறை மாறாது எனவும் கூறியுள்ளார்.

கோளியின் ஆக்ரோஷம் நல்லது: டீன் ஜோன்ஸ்

இந்திய அணியின் உப தலைவர் விராத் கோளி, அவுஸ்திரேலியா வீரர்களுடன் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவது நல்லது என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்திய ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இவ்வாறான புதிய கலாசாரம் உருவாகி இருப்பது நன்றே. அத்துடன் இது அவர்கள் வெற்றிகளைப் பெற வேண்டும் என்ற பசி இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. கோளி தனியே இவ்வாறு வசை பாடாமல் ஓட்டங்களையும் குவிக்கின்றார். இது நல்லது. அவரின் வார்த்தைகளை நான் ரசிக்கின்றேன். அவற்றில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது இந்திய இளையவர்களுக்கு நல்ல முன் உதாரணமாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த ஆக்ரோஷம் தனியே வெற்றிகளைப் பெற போதாது. சரியாக துடுப்பாட வேண்டும். இறுதி நாளில் பெரிய ஓட்ட எண்ணிக்கை பெற வேண்டும். அதற்கு கோளி சிறப்பாக துடுப்பாட வேண்டும் எனவும் டீன் ஜோன்ஸ் மேலும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் உலகக்கிண்ண அணி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக்கிண்ணத்திற்கான அணியை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட குழுவில்,

 

மொஹமட் நபியின் தலைமையில், நவ்ரோஸ் மங்கல், ஆஸ்கார் ஸ்டனிக்சாய், சமியுல்லா ஷென்வாரி, அப்ஸார் சசாய் (விக்கெட் காப்பாளர்), நஜிபுல்லா சட்றான், நசீர் ஜமால், மிர்வைஸ் அஷ்ரப், குல்படின் நய்ப், ஹமிட் ஹசன், சபூர் சட்றான், டவால்ட் சடறான், அப்தாப் அலாம், ஜாவிட் அஹ்மடி, உஸ்மான் கானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலதிக வீரர்களாக சபிக்குல்லா (விக்கெட் காப்பாளர்), சரபுடின் அஷ்ரப், இசதுல்லா டவ்லாட்சாய், ஹஷ்மடுல்லாஹ் சேய்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

ஆப்கானிஸ்தான் அணி குழு A இல் இடம் பிடித்துள்ளது. முதற் போட்டியில் ஜனவரி 18ஆம் திகதி, பங்களாதேஷ் அணியுடன் முதற் போட்டியில் விளையாடவுள்ளது.

 

வெற்றி தோல்வியின்றி மூன்றாவது டெஸ்ட் முடிவு

அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி வென்றெடுத்திருக்கிறது. 


மெல்பேர்ணில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அவரது அபாரமான 192 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 530 ஓட்டங்களைப் பெற்றது. 


இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மொஹமட் சமி 4 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 


பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில், அவுஸ்திரேலிய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளித்து 465 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. விராட் கோளி 169 ஓட்டங்களையும், ரஹானே 147 ஓட்டங்களையும் பெற்றனர். 


அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களில் ரையன் ஹரிஸ் 4 விக்கெட்களையும் மிட்செல் ஜோன்சன் 3 விக்கெட்களையும் லியோன் 2 விக்கெட்ளையும் கைப்பற்றினர்.


தனது இரண்டாவது இன்னிங்ஸை வேகத்தோடு ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது இன்னிங்கை முடித்துக்கொண்டு இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஷோன் மார்ஷ் 99 ஓட்டங்களையும், கிறிஸ் ரோஜர்ஸ் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


384 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, மீதமிருந்த ஓவர்களுக்குள் அதனை எட்ட முடியாது என்பதை உணர்ந்து போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவுசெய்யும் நோக்கில் விளையாடியது. 


ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும் மத்தியவரிசை வீரர்கள் நிதானமாக விளையாட, 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை இந்திய அணி பெற்றிருந்தவேளையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்திய அணி சார்பில் விராட் கோளி 54 ஓட்டங்களையும் ரஹானே 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்லில், அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஜோன்சன், ரயன் ஹரிஸ், ஹஸல்வூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


போட்டியின் நாயகனாக ரயன் ஹரிஸ் தெரிவானார்.

உலகக்கிண்ணத்தில் இருந்து விலகினார் சைட் அஜ்மல்

உலகக் கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட குழுவில் இருந்து சைட் அஜ்மல் விலகியுள்ளார். சைட் அஜ்மல், பந்தை வீசி எறிகின்றார் என்ற குற்றச்சாட்டு காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பந்துவீச்சு மாற்றங்களை செய்து, மீண்டும் பந்து வீச தயாராகி, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் மீள் பரிசோதனைக்கு விண்ணப்பிக்க போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. 


இதேவேளை 30 பேர் அடங்கிய பாகிஸ்தானின் உலகக்கிண்ண முன்னோடி குழுவில் சைட் அஜ்மல் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் உத்தியோகபற்றற்ற சோதனைகளில் ஈடுபட்ட போது அவருடைய பதுவீச்சு முழுமையாக 15 பாகை கோணத்துக்குள் இல்லை என்ற முடிவு கிடைத்தது. மீள் பரிசோதனையில் இவருடைய பந்துவீச்சு மீண்டும் விதிமுறைகளை தாண்டி இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர் மீண்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை பந்துவீச முடியாமல் போகும். அத்துடன் உலகக்கிண்ண இறுதி அணியில் சேர்க்கப்பட்டால் மாற்று வீரரை சேர்க்க முடியாமல் போகும். இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட விரும்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் அறிவித்துள்ளார். 


சைட் அஜ்மால் 37 வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் மீண்டும் இவர் பந்துவீச வந்தால் எத்தனை வருடங்கள் விளையாட முடியும் என்ற கேள்வி நிலை உள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இவருக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதும் அரிது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இவரின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுத்ததாகவும், சைட் அஜ்மல் தானாகவே இந்த குழுவில் இருந்து விலகியதாகவும் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் டோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 


அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி – தோல்வியற்று முடிவடைந்த நிலையில் அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தான ஓய்வுபெறுவது தொடர்பான தீர்மானத்தினை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மீதமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோளி தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


மூன்றாவது டெஸ்ட் வெற்றி – தோல்வியற்ற நிலையில் முடிந்து, பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றபோது – டோனி, ஊடகங்களுக்கு தனது ஓய்வு பற்றி அறிவித்திருக்கவில்லை. அந்த நிகழ்வு முடிந்து குறுகிய நேரத்துக்குள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலமாகவே அவரது ஓய்வு பற்றிய தகவல் வெளிவந்தது. எல்லாவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதால் ஏற்படும் சோர்வே இந்த முடிவுக்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டோனியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமைதாங்கியிருக்கும் டோனி, இந்தியா சார்பில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமைதாங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.


சர்வதேச ரீதியில் அதிக டெஸ்ட்களுக்கு தலைமை தாங்கியோர் வரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், விக்கெட் காப்பாளராகவும் அணித் தலைவராகவும் அதிக டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டவராகவும் இவரே திகழ்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 19 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய பங்களாதேஷ் அணியின் முஷ்ஃபிகுர் ரஹிம் இருக்கிறார். 


90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் டோனி, 294 ஆட்டமிழப்புக்களைச் செய்திருக்கிறார். இது இந்திய விக்கெட் காப்பாளர் ஒருவர் செய்திருக்கும் அதிகபட்ச டெஸ்ட் ஆட்டமிழப்புக்களாகும். இரண்டாமிடத்தில் 198 ஆட்டமிழப்புக்களோடு (88 போட்டிகள்) சையட் கிர்மானி இருக்கிறார். 


இந்திய அணிக்குத் தலைமைதாங்கி டோனி பெற்றுக்கொடுத்த டெஸ்ட் வெற்றிகள் 27. இரண்டாமிடத்திலிருப்பவர் 21 போட்டிகளை வென்றுகொடுத்த கங்குலி. சர்வதேச ரீதியில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவர்கள் வரிசையில் டோனி இருப்பது எட்டாமிடத்தில். 


இந்தியாவில் நடைபெற்ற 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறார். சர்வதேச ரீதியில், சொந்த நாட்டு மைதானங்களில் அதிக வெற்றியைப் பெற்ற அணித்தலைவர்கள் வரிசையில் டோனி இருப்பது நான்காமிடத்தில். இந்தியாவைப் பொறுத்தவரையில் அவரது இடம் முதலாவது. 13 வெற்றிகளைப் பெற்றுத்தந்த அசாருதீன் இரண்டாமிடத்திலிருக்கிறார்.


வெளிநாட்டு ஆடுகளங்களில் டோனி தலைமையில் விளையாடிய 30 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றிருப்பது 6 போட்டிகளில் மாத்திரமே. 15 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதுவே அவ்வப்போது டோனியின் டெஸ்ட் தலைமைத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறது. இவரது போட்டி அணுகுமுறைகள் தொடர்பான விவாதங்களையும் தோற்றுவித்திருந்தது. 


இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் 8 பிடியெடுப்புகள், ஒரு ஸ்டம்ப்பிங் உள்ளிட்ட 9 ஆட்டமிழப்புக்களில் டோனி பங்குவகித்திருந்தார். இந்திய விக்கெட் காப்பாளரால் டெஸ்ட் போட்டிகளில் 8 ஆட்டமிழப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட 5 சந்தர்ப்பங்களில் மூன்றில் இடம்பிடித்திருப்பவர் டோனி என்பதும் முக்கியமானதாகும். டெஸ்ட் போட்டிகளில் 38 ஸ்டம்பிங்குகளைச் செய்திருக்கும் டோனி, சர்வதேச ரீதியில் சகநாட்டு வீரரான கிர்மானியுடன் மூன்றாமிடத்திருக்கிறார். 


டெஸ்ட் போட்டிகளில் 4,876 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார் டோனி. இவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 224. விக்கெட் காப்பாளர் பெற்ற அதிகபட்ச ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்ட வரிசையில் டோனி பிடித்திருப்பது மூன்றாமிடத்தை. இவருக்கு முன்னதாக கில்கிறிஸ்ட் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் உள்ளனர்.  


டெஸ்ட் அணித்தலைவராக டோனி சேர்த்த மொத்த ஓட்டங்கள் 3,454. இது இந்திய டெஸ்ட் அணித்தவர் ஒருவர் பெற்ற அதிகபட்ச மொத்த ஓட்டங்களாகும். சுனில் கவாஸ்கர் 3,449 ஓட்டங்களுடன் (47 போட்டிகளில் தலைமை தாங்கி) இரண்டாமிடத்தில் உள்ளார். 


ஏழாம் இலக்க துடுப்பாட்ட வீராராக டெஸ்ட் போட்டிகளில் டோனி சேர்த்தது 2,871 ஓட்டங்கள். கபில்தேவ் 2,861 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்திலிருக்கிறார். ஏழாம் இலக்க வீரராக களமிறங்கிய எந்தவொரு இந்திய துடுப்பாட்ட வீரரும் மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 800 ஓட்டங்களைக்கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநாயகனாக டோனி 2 தடவைகள் தெரிவாகியிருக்கிறார். இரண்டுமே அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக என்பது கவனிக்கத்தக்கது. 


2008ஆம் ஆண்டில், அப்போதை டெஸ்ட் அணித்தலைவர் கும்ப்ளே காயமடைந்த வேளையில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக முதன்முதலில் இந்திய டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கினார் டோனி. கும்ப்ளேயின் ஓய்வுக்குப் பின்னர் அதே வருடத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமையேற்று 2009இல் டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணியை முதலிடம் பெற வைத்தார். 2011 இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் வரை இந்திய அணி டெஸ்ட் தர வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகித்தது. 


அதன் பின்னரான இந்திய டெஸ்ட் அணியின் சரிவு டோனியின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறது. இந்த வருடத்தில் அவரது டெஸ்ட் துடுப்பாட்டமும் ஆட்டம் காண, ஓய்வு பெறும் முடிவுக்கு அவர் அழுத்தப்பட்டுள்ளார். 


இந்த வருடத்தில் 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் டோனியின் ஓட்ட சராசரி வெறும் 33 தான். 2011 இற்குப் பின்னர் டோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளில் விளையாடிய 22 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. அடைந்த தோல்விகள் 13. 


2008ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து, டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி-20 போட்டி, ஐபில், சம்பியன்ஸ் லீக் ரி-20 தொடர் என்று டோனி அயராமல் விளையாடியிருக்கும் சர்வதேசப் போட்டிகள் 398. இவருக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் விளையாடியிருப்பவர் சுரேஷ் ரெய்னா. இவர் விளையாடியிருப்பது 369 போட்டிகளில். 


தொடர்ச்சியான போட்டிகள், அத்தனை விதப் போட்டிகளிலும் அணிகளுக்கு தலைமைதாங்கவேண்டிய, விக்கெட் காப்பிலீடுபடவேண்டிய சுமை ஆகியன 34 வயதை நெருக்கும் டோனியை பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கக் கூடும். இந்த வருடத்தில் காயம் காரணமாக அவர் பட்ட அவதிகளும் டெஸ்ட்டிலிருந்தாவது ஓய்வைப் பெறவேண்டிய அவசியத்தை அவருக்கு உணர்த்தியிருக்கக்கூடும். 


அதிரடியான துடுப்பாட்ட வீரராக, அழுத்தமான தனது முடிவுகளில் பிடிவாதமான அணித்தலைவராக அறியப்பட்ட டோனி, அவரது அலட்டலில்லாத பாணியிலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்தான ஓய்வையும் அறிவித்திருக்கிறார். 


ஊடகச் சந்திப்பு இல்லாமல், ஓய்வு பற்றிய கவலைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், கண்ணீர் சிந்தி ரசிகர்களின் மனதை கிளர்ந்தெழச் செய்யாமல் மிகச் சாதாரணமாகவே தனது டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நியூஸிலாந்துக்கு இலகு வெற்றி

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. நான்காவது நாளிலேயே போட்டியின் முடிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளை இழந்து 441 ஓட்டங்களைக் குவித்தது. நியூஸிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் தலைவருமான பிரண்டம் மக்கலம், 134 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 11 சிக்ஸர்கள், 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 195 ஓட்டங்களைக் குவித்து, தரிந்து கௌஸாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பிரண்டம் மக்கலம், 74 பந்துகளில் சதத்தினைப் பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷமிந்த ஏரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஸால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.


முதலாவது இனிங்ஸில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்று நெய்ல் வாக்னரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஸம் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


தனது இரண்டாவது இனிங்ஸில் ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காம் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 407 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 152 ஓட்டங்களைப் பெற்று த்ரென்ட் போவ்ல்ட்டின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டால். அணித்தலைவர் அஞ்சலோ மத்தீவ்ஸ் 66 ஓட்டங்களையும், ஷாமிந்த எரங்க ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.


நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஸம் மற்றும் மார்க் கிரைக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.


இலகுவான வெற்றியிலக்கினைத் துரத்தி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கான 107ஐ அடைந்தது. 


போட்டியின் நாயகனாக நியூஸிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் தலைவருமான பிரண்டம் மக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.

சிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகிறார் டேவ் வட்மோர்

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டேவ் வட்மோர் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக சிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகக் கடமையாற்றிவந்த ஸ்டெபன் மங்கங்கோ, இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார். இதனையடுத்தே, அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு அணியைத் தயார்செய்யும் முகமாக டேவ் வட்மோர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

டேவ் வட்மோர் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றும் அதேவேளை, துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றுக்கு தனித்தனியான பயிற்சியாளர்கள் வட்மோருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணத்தொடருக்குப் பின்னர், வட்மோருடனான ஒப்பந்த நீடிப்பு பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் சிம்பாப்வே கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

 

 

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராகக் கடமையாற்றியுள்ள டேவ் வட்மோர், உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பல முக்கிய போட்டிகளில் அந்த நாட்டு அணிகளின் சிறந்த பெறுபேறுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

 

 

இவரது பயிற்சியின் கீழ், இலங்கை அணி 1996ஆம் ஆண்டு உலக்கிண்ணத்தை வென்றிருந்தது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தொடரில், இவரது பயிற்றுவிப்பில் விளையாடிய பாகிஸ்தான் அணி, கிண்ணத்தை வென்றது. அதேபோல் 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில், இவரது பயிற்சியில் செயல்பட்ட பங்களாதேஷ் அணி, அந்தத் தொடரில் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளைத் தோற்கடித்ததோடு 'சூப்பர் எட்டு' சுற்றுக்கும் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சங்கா தவறவிட்ட சாதனை

ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. 

 

ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார்.

 

 

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாவது நாள் முடிவின் போது, ஃபொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

 

இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு இன்னமும் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் சங்கா ஆட்டமிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 11,988 ஓட்டங்களை குவித்துள்ளார் குமார் சங்கக்கார.