Category Archives: Match Previews

மூன்றாவது டெஸ்ட் நாளை

 

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, பல்லேகலவில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணிம் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ள நிலையில், குறித்த போட்டியின் முடிவு, இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதைப் பாதிக்காது என்பதுடன், டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

குறித்த போட்டியில் என்ன முடிவு பெறப்பட்டாலும், முதல்நிலை அணியாக இந்தியா தொடரவுள்ளதோடு, ஏழாம் நிலை அணியாக இந்தியா தொடரவுள்ளது.

 

எவ்வாறெனினும், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இனிங்ஸில், டிமுத் கருணாரட்ன, குசல் மென்டிஸ் ஆகியோரின் சதங்களுடன் ஓரளவான பெறுபேற்றை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு, அதன் தொடர்ச்சியை மீண்டும் வெளிப்படுத்தி, அணியை முன்னோக்கி நகர்த்துவதற்கு, இப்போட்டியிலும் பெறுபேற்றை வெளிப்படுத்துவது அவசியமானதொன்றாக காணப்படுகிறது.

 

இப்போட்டியிலிருந்து, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேரத்தின் இடத்தை, ஏறத்தாழ அவரை மாதிரியான பந்துவீச்சுப் பாணியைக் கொண்ட மலிந்த புஷ்பகுமார நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கையிலுள்ள ஆடுகளங்களில், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளமாக பல்லேகல விளங்குவதால், விக்கெட்டுகளைக் கைப்பற்றக் கூடிய சுழற்பந்துவீச்சாளரே தெரிவாக இருந்தால், லக்‌ஷன் சந்தகான் அணியில் இடம்பெறுவார்.

 

மறுபக்கம், இலங்கை அணி சார்பாக சிறப்பாகச் செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் காயமடைந்துள்ள நிலையில், லஹிரு குமாரவும் விஷ்வ பெர்ணான்டோவும் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை அமைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அணியின் முக்கியமான வீரரான இரவீந்திர ஜடேஜா, தடை காரணமாக, இப்போட்டியில் பங்குபற்ற முடியாமல் போயுள்ள நிலையில், ஏற்கெனவே குழாமில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்வே அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக் கொள்ளபட்ட, ஏறத்தாழ அவரைப் போன்ற அக்ஸார் பட்டேல், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

நான்காவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கிறது

 

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி, மன்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில், இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நாளை ஆரம்பமாகவுள்ளது.

 

இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்ற இங்கிலாந்து, அடுத்த போட்டியில் படு தோல்வியடைந்து, தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. எனினும் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றபோது, அவ்வணியிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

மறுபக்கம், வேர்ணன் பிலாந்தரின் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியில், டீன் எல்கர் தவிர அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கத் தவறியுள்ளனர். சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லா, அணித்தலைவர் பப் டு பிளெஸி ஆகியோரிடமிருந்து குறிப்பிடத்தக்க ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எதிர்பார்த்திருக்கிறது. தெம்பா பவுமா ஓரளவு ஓட்டங்களை பெறுகின்ற நிலையில், அவரிடமிருந்து பெரிய ஓட்ட எண்ணிக்கையை எதிர்பார்த்திருக்கிறது.

 

இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹெனியோ குஹுன், எந்தவொரு இனிங்ஸ்களிலும் சொல்லிக் கொள்ளும் படியாக ஓட்டங்களைப் பெறவில்லை. இப்போதைக்கு இவரின் இடத்துக்கு ஆபத்து இல்லையென்றாலும், தொடர்ந்தும் ஓட்டங்களைப் பெறத் தடுமாறுமிடத்து, குஹுனின் இடம், குழாமில் மேலதிகமாக இடம்பெற்றிருக்கும் இளம் வீரரான ஹெய்னியோ குஹுனுக்குப் போனால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

 

இங்கிலாந்து அணியில், கடந்த போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட டேவிட் மலன் இரண்டு இனிங்ஸ்களிலும் ஓட்டங்களைப் பெறாதபோதும், இப்போட்டியிலும் அவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, அணியில் பெரும்மாலும் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

தென்னாபிரிக்க அணியிலும் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும், சில வேளைகளில், கிறிஸ் மொரிஸுக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் தெனியுஸ் டி ப்ரூன் குழாமில் இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.

நாளை ஆரம்பிக்கிறது இ-20 சர்வதேச போட்டித் தொடர்

 

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி நாளை மதியம் 11.30மணிக்கு நேப்பியரில் ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என வெள்ளையடிக்கப்பட்டதால், பங்களாதேஷ் அணியின் தன்னம்பிக்கை சிறிது குறைவடைந்திருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு பங்களாதேஷ் சவாலை வழங்கி, தான் போட்டிக்குரிய அணி என நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடிய அதே பங்களாதேஷ் அணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியில், காயமடைந்த மார்ட்டின் கப்டிலுக்குப் பதிலாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக நீல் ப்ரூம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதிரத் துடுப்பாட்ட வீரர் டொம் ப்ரூஸ் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த இரண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரரான ஷகிப் அல் ஹஸன் பெரியளவில் ஓட்டங்களைப் பெறாத நிலையில், அவரிடமிருந்து பங்களாதேஷ் அணி ஓட்டங்களை எதிர்பார்க்கிறது.

 

2ஆவது போட்டி நாளை ஆரம்பம்

 

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கேப் டௌணில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி 1:30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

முதலாவது போட்டியில் முதல் இனிங்ஸில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கை அணி, துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தது. மூன்றாவது இனிங்ஸில் இலங்கை அணி, போதியளவில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை. 4ஆவது இனிங்ஸில், 4ஆவது நாளில் சிறப்பாகச் செயற்பட்ட அவ்வணி, 5ஆவது நாளில், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, படுதோல்வியடைந்திருந்தது.

 

இந்நிலையில், இத்தொடரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின், இன்று ஆரம்பிக்கும் போட்டியில் வெற்றி அல்லது வெற்றி – தோல்வியற்ற முடிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், இலங்கை அணி களமிறங்குகிறது.

 

இலங்கையின் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் யாரென்பதே பிரச்சினையாக உள்ளது. அதிரடி வீரர் குசல் பெரேரா, முதலாவது போட்டியில் களமிறங்கினாலும், மோசமான துடுப்பாட்டப் பிரயோகங்களை மேற்கொண்டு, ஆட்டமிழந்திருந்தார். எனவே, அவருக்குப் பதிலாக உபுல் தரங்க களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. மாறாக, குசல் பெரேரா விளையாடி, துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.

 

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, அண்மையிலேயே காயத்திலிருந்து குணமாகிய நிலையில், முழுமையான போட்டி ஆயத்தங்களோடு காணப்பட்டிருக்கவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக லஹிரு குமார விளையாடவும் வாய்ப்புகளுண்டு.

 

தென்னாபிரிக்க அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஆரம்பிக்கிறது முதலாவது போட்டி

 

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை நண்பகல் 1.30க்கு போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பிக்கிறது.

 

இத்தொடருக்கான இலங்கைக் குழாமில், உபாதைகள் காரணமாக சிம்பாப்வேக்கெதிரான குழாமில் இடம்பெறாத அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், உப அணித்தலைவர் தினேஷ் சந்திமால், வேகப்பந்து வீச்சாளர் டுஷ்மந்த சமீர ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளமை, சிம்பாப்வேயில் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கையின் இளம் அணிக்கு மேலதிக பலம் என்றபோதும், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை இலங்கை அணி எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே இந்தத் தொடர் அமையும்.

 

தென்னாபிரிக்காவில், இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளதுடன், எட்டுப் போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் இனிங்ஸ் தோல்வி என்பதோடு, ஒரு போட்டியில் 10 விக்கெட்டால் தோல்வியடைந்துள்ள நிலையில், இம்முறை தொடரை வெல்லவேண்டுமானால், இதுவரையில் இல்லாதளவுக்கு தென்னாபிரிக்காவில் திறமை வெளிப்பாட்டை மேற்கொண்டால் மாத்திரமே சாத்தியம்.

 

மறுபக்கம், அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் தென்னாபிரிக்க அணி களமிறங்குகிறது. தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் நிரந்தரத் தலைவராக பப் டு பிளெஸி நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது தொடர் என்பதால், தனது சிறந்த தலைமைத்துவத்தை இத்தொடரில் வெளிப்படுத்தி முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்.

 

தென்னாபிரிக்க அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல் ஆகியோர் உபாதை காரணமாக இல்லாதபோதும், கஜிஸ்கோ றபடா, கைல் அபொட், வேர்ணன் பிளாந்தர் ஆகியோர் தென்னாபிரிக்க மண்ணில் அச்சுறுத்தலாகவே விளங்குவர். அவுஸ்திரேலியத் தொடரில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறிய சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லாவிடமிருந்து ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எதிர்பார்த்துள்ளது.

 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி: கௌஷால் சில்வா, டிமுத் கருணாரட்ன, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், அஞ்செலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டினேஷ் சந்திமால் (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, ரங்கன ஹேரத், டுஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்

 

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: டீன் எல்கர், ஸ்டீபன் குக், ஹஷிம் அம்லா, ஜீன் போல் டுமினி, பப் டு பிளெஸி (அணித்தலைவர்), டெம்பா பவுமா, குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), வேர்ணன் பிளாந்தர், கைல் அபொட், கேஷவ் மஹராஜ், கஜிஸ்கோ றபடா

நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது போட்டி

 

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஐந்து மணிக்கு மெல்பேர்ணில் ஆரம்பமாகிறது.

 

பிறிஸ்பேர்ணில் இடம்பெற்ற மென்சிவப்பு பகலிரவு டெஸ்ட் போட்டியில், வெற்றியின் இறுதி வரை வந்து பாகிஸ்தான் அணி தோற்றிருந்த நிலையிலேயே, இப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பகலிரவு டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் அதிகப்படியான ஓவர்களை வீசியிருந்த நிலையிலில்‌, இப்போட்டியில் அவர்களால் முழுமையாக 100 சதவீதத்துடன் பெறுபேறுகளை வழங்கமுடியுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

 

எவ்வாறெனினும் மேற்படி சந்தேகம் அவுஸ்திரேலிய தேர்வாளர்களுக்கு இருந்திருக்கவில்லை. 12ஆவது வீரராக சேர்க்கப்பட்டிருந்த வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் ஹில்டன் கார்ட்ரைட்டை குழாமிலிருந்து விடுவித்துள்ளனர். முதலாவது போட்டியில் பங்கேற்ற அதே அவுஸ்திரேலிய அணியே விளையாடவுள்ளது.

 

கார்ட்ரைட் அணியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம், தனது முதலிரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களைப் பெறாத நிக் மடின்ஸனுக்கு மேலுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

மறுபக்கம், முதலாவது போட்டியின் இறுதியில் போராட்டத்தை வழங்கிய பாகிஸ்தான், இப்போட்டியில் சீரான திறமை வெளிப்பாட்டை அணி வீரர்களிடமிருந்து எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக, அண்மைய காலத்தில் ஓட்டங்களைப் பெறாத அசத் ஷபிக், யுனிஸ் கான் ஆகியோர் கடந்த போட்டியில் ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்கிடமிருந்து பாகிஸ்தான் அணி ஓட்டங்களை எதிர்பார்த்துள்ளது.

 

முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி சார்பாக மூன்று இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இப்போட்டியில், முதல் போட்டியில் விளையாடிய ரஹாட் அலிக்குப் பதிலாக இம்ரான் கான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: சமி அஸ்லாம், அஸார் அலி, பாபர் அஸாம், யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் (அணித்தலைவர்), அசத் ஷபிக், சப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்), வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், இம்ரான் கான்

 

அவுஸ்திரேலிய அணி: மற் றென்ஷோ, டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், நிக் மடின்ஸன், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்

நாளை ஆரம்பிக்கிறது தொடர்

 

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. கிறைஸ்ட்சேர்ச்சில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கிறது.

 

அயல் நாடான அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சப்பல்-ஹட்லி தொடரில், அவுஸ்திரேலியாவால் நியூசிலாந்து அணி வெள்ளை -யடிக்கப்பட்டபோதும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில், பங்களாதேஷை நியூசிலாந்து அணி வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக 27 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்தில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 21 போட்டிகள் வெற்றிபெற்றுள்ளது. எவ்வாறெனினும், பங்களாதேஷும், நியூசிலாந்தும் இறுதியாக 2013ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டபோது, நியூசிலாந்தை பங்களாதேஷ் வெள்ளையடுத்திருந்தது.

 

மறுபக்கம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆபத்தான அணியாக இருக்கும் பங்களாதேஷுக்கு, தமது சொந்த மண்ணில் இருக்கும் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களைப் போலல்லாது, பந்து ஸ்விங் நியூசிலாந்து ஆடுகளங்கள் சவாலை வழங்கும்.

 

எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்தபிசூர் ரஹ்மான், உபாதையிலிருந்து குணமடைந்து அணிக்கு திருபியுள்ளமை பங்களாதேஷுக்கு பலத்தை அளிக்கும். தவிர, அணித்தலைவர் மஷ்ரபி மோட்டசா, தஸ்கின் அஹமட் பங்களாதேஷுக்கு கூடுதல் பலம். 

 

நியூசிலாந்து அணியில் சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லர் இல்லாதபோதும், அனுபவ வீரர் நீல் ப்றூம் உள்வாங்கப்பட்டுள்ளமை பலத்தை வழங்கும். விக்கெட் காப்பாளராக மீண்டும் உள்ளே வந்துள்ள லுக் ரொங்கியும் வேகமாக ஓட்டங்களைப் பெறுவார். 

 

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: மார்ட்டின் கப்தில், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), நீல் ப்றூம், கொலின் மன்றோ, லுக் றொங்கி (விக்கெட் காப்பாளர்), கொலின் டி கிரான்ட்ஹொம், மிற்சல் சந்தர், டிம் சௌதி, லொக்கி பெர்கியூசன்

 

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி: தமீம் இக்பால், இம்ருல் கைஸ், சபீர் ரஹ்மான், முஷ்பிகூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), ஷகிப் அல் ஹஸன், மஹ்முதுல்லா, மொசாதிக் ஹொஸைன், தன்பீர் ஹைதர், மஷ்ரபி மோட்டசா, முஸ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹமட்

லோகேஷ் ராகுல் 199: இந்தியா ஆதிக்கம்

 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் இடம்பெற்றுவரும் ஐந்தாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தமது முதலாவது இனிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 86 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியுள்ளது.

 

தற்போது களத்தில், கருண் நாயர் 71 ஓட்டங்களுடனும், முரளி விஜய் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, லோகேஷ் ராகுல் 199 ஓட்டங்களுடனும் பார்த்திவ் பட்டேல் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

 

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக, ஸ்டுவேர்ட் ப்ரோட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

 

முன்னதாக, இங்கிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  துடுப்பாட்டத்தில், மொயின் அலி 146, ஜோ  ரூட் 88, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட லியாம் டோஸன் ஆட்டமிழக்காமல் 66, அடில் ரஷீட் 60, ஜொனி பெயார்ஸ்டோ ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, இரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நாளை 5ஆவது போட்டி

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, சென்னையில் நாளை  ஆரம்பிக்கவுள்ளது.

 

ஏற்கெனவே தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் நோக்கிலும், ஆறுதல் வெற்றியொன்றைப் பெறும் நோக்கில் இங்கிலாந்தும், இப்போட்டியில் களமிறங்குகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில், அவசர அவசரமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டே, இப்போட்டி இடம்பெறவுள்ளது.

 

இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணுக்கால், தோட்பட்டை, பொதுவான களைப்பு ஆகியன காரணமாகவே அவர் இன்று ஆரம்பிக்கும் போட்டியில் பங்குபெற மாட்டார்.

நாளை ஆரம்பிக்கிறது முதல் டெஸ்ட்

 

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை காலை 8.30மணிக்கு பிறிஸ்பேர்ணில் ஆரம்பிக்கிறது.

 

இவ்வாண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் வெள்ளையடிக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான தொடரிலும் இறுதிப் போட்டியிலும் தோல்வியுற்று, வரிசையாக மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

 

இருந்தபோதும், பகலிரவு டெஸ்ட் போட்டியாக, மென்சிவப்புப் பந்தில் இடம்பெறவுள்ள போட்டியில், வழமையான பிறிஸ்பேர்ண் ஆடுகள பந்து மேல் எழுந்து தன்மையுடன், ஒளிக்கோபுர வெளிச்சத்தில் பந்து ஸ்விங் ஆவது, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுடன், பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சுக் குழுவான மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், ரஹாட் அலி ஆகியோருக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டமே நிலையற்றதாகவிருக்கின்ற நிலையில், ஒரு போட்டித் தடையின் பின்னர் அணிக்குத் திரும்பும் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக்கினால் சிறிது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அண்மைய காலங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வரும் அசாட் ஷஃபிக்கிடமிருந்தும் பாகிஸ்தான் அணி ஓட்டங்களை எதிர்பார்க்கிறது. இதேவேளை, உபாதைக்குள்ளாகிய சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மறுபக்கம், இலங்கையில் வைத்து வெள்ளையடிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவிடம் தொடரை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, பாரிய அழுத்தத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணியில் தேர்வாளர்கள் முதல் வீரர்கள் வரையில் மாறியிருந்தனர். இதனையடுத்து, தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது இழந்த கௌரவத்தை தூக்கி நிலைநிறுத்தியிருந்தது.

 

இந்நிலையில், பாகிஸ்தானுடனான தொடரை வென்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவுஸ்திரேலிய அணி நிச்சயம் விரும்பும். தென்னாபிரிக்க அணியுடான இறுதிப் போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப் போட்டியில் சோபிக்காத நிக் மடின்ஸன் ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: மற் றென்ஷோ, டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்ஹொம்ப், நிக் மடின்ஸன், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்

 

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: சமி அஸ்லாம், அஸார் அலி, பாபர் அஸாம், யுனிஸ் கான், மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), அசாட் ஷஃபிக், சஃப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்), வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், ரஹாட் அலி