Category Archives: Upcoming Matches

முதல் 3 போட்டிகளில் தவான் இல்லை

 

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

 

தவானின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக, அவருடன் இருப்பதற்கு தவான் விரும்பி, விடுமுறை கோரியதன் காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

 

தவானுக்குப் பதிலாக, மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. எனவே, லோகேஷ் ராகுல் அல்லது அஜின்கியா ரஹானே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக, றோகித் ஷர்மாவுடன் களமிறங்குவர்.

 

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. சென்னை சேப்பாகத்தில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டி, பிற்பகல் 1.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் குழாமில் மகமதுல்லா

 

பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் குழாமுக்கு, அவ்வணியின் சகலதுறை வீரர் மகமதுல்லா, மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான 15 பேர் கொண்ட குழாமிலேயே அவர் இடம்பெற்றுள்ளார்.

 

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு வழங்கப்பட்ட ஷகிப் அல் ஹஸன், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பிரகாசிக்கத் தவறிய நசீர் ஹொஸைன் ஆகியோர், இக்குழாமில் சேர்க்கப்படவில்லை.

 

அவுஸ்திரேலியத் தொடரில் தடுமாறிய இம்ருல் கைய்ஸ், சௌமியா சர்க்கார் ஆகியோருக்கு, மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

குழாம்: முஷ்பிக்கூர் ரஹீம், தமிம் இக்பால், சௌமியா சர்க்கார், இம்ருல் கைய்ஸ், சபீர் ரஹ்மான், மகமதுல்லா, லிட்டன் தாஸ், மெஹிடி ஹஸன், தைஜுல் இஸ்லாம், முஸ்தபிஸூர் ரஹ்மான், றூபெல் ஹொஸைன், ஷபியூல் இஸ்லாம், தஸ்கின் அஹமட், சுபாஷிஸ் றோய், மொமினுல் ஹக்.

சுதந்திரக் கிண்ணம் இன்று ஆரம்பிகிறது

 

பாகிஸ்தான், உலகப் பதினொருவர் அணிகளுக்கிடையிலான மூன்று இருபதுக்கு-20 போட்டிகளைக் கொண்ட சுதந்திரக் கிண்ணத் தொடர், லாகூரின் கடாபி அரங்கில், இலங்கை நேரப்படி, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

 

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சர்வதேச அணிகள் செல்லாத நிலையில், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வே மட்டும் சென்றிருந்ததுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டி இவ்வாண்டு லாகூர் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போட்டியில் சில சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

இந்நிலையிலேயே, சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தானுக்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே, குறித்த சுதந்திரக் கிண்ணத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இத்தொடரில், இங்கிலாந்து, அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இலங்கை அணி வீரர்கள், உலகப் பதினொருவர் அணிக்காக விளையாடவுள்ளனர். உலகப் பதினொருவர் அணி, தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட், இருபதுக்கு சர்வதேசப் போட்டிகளுக்கான தலைவர் பப் டு பிளெசியால் தலைமை தாங்கப்படுவதோடு, ஹஷிம் அம்லா, டரன் சமி, போன்றோரை உள்ளடக்கியுள்ளது.

 

இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் குழாம், ஹஸன் அலி, மொஹமட் ஆமிர் எனப் பலமான வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டிருப்பதுடன், ஷடாப் கான், மொஹமட் நவாஸ், இமாட் வசீம் என திறமையான சுழற்பந்துவீச்சாளர்களையும் கொண்டிருக்கின்றது. ஆக, அண்மைய வரவான பக்கார் ஸமனின் அதிரடியோடு, ஷோய்ப் மலிக், அணித்தலைவர் ஷப்ராஸ் அஹமட் ஆகியோரின் அனுபவம் கைகொடுக்கும் சந்தர்ப்பத்தில், உலகப் பதினொருவர் அணியை இலகுவாக வீழ்த்தக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

 

எவ்வாறெனினும், இத்தொடரின் முடிவுகளைத் தாண்டி, எவ்விதத் தடங்கலுமின்றி இத்தொடர் முழுமையாக நடைபெறுமிடத்து, அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி உட்பட வேறு சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸிக்கெதிரான இந்தியக் குழாம் அறிவிப்பு

 

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமிலும் இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

 

குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா, ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, கேதார் யாதவ், அஜின்கியா ரஹானே, மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, அக்ஸார் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி

இலங்கைக்கு முதலாவது பகலிரவு டெஸ்ட்

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டுபாயில், தமது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியை இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

 

குறித்த தொடரின் முதலாவது போட்டி, அபுதாபியில் இம்மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், பகலிரவு டெஸ்ட், அடுத்த மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது.

 

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது.

 

பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்குக் கிடைக்குமா ஆறுதல் வெற்றி?

இலங்கை அணி, இலங்கையில் வைத்து, மொத்தமாக 9 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் போது, அதன் 9ஆவது போட்டி வரை அவ்வணிக்கு வெற்றி கிடைக்காது எனவும், 9ஆவது போட்டியாலாவது ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என யாராவது கூறியிருந்தால், அது கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டிருக்கும்.

 

ஆனால், இந்திய அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளையும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் தோற்றுள்ள இலங்கை, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புத் தான், இலங்கை இரசிகர்களுக்கு உள்ளது.

 

இன்று இடம்பெறவுள்ள போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

எந்த அணியை விளையாடினாலும், என்ன மாற்றங்களை ஏற்படுத்தினாலும், இந்திய அணிக்குச் சவாலை வழங்குவதற்கு, இலங்கை அணி தடுமாறியிருந்தது.

 

இலங்கை அணியின் தடுமாற்றங்கள், பாரிய குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்னதாக, இருபதுக்கு-20 குழாமும் இலங்கையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, மீண்டுமொரு குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய குழாமில், ஜெப்றி வன்டர்சே, தசுன் ஷானக, அகில தனஞ்சய, வனிது ஹஸரங்க, திஸர பெரேரா, மிலிந்த சிரிவர்தன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை அணி, இலங்கையில் வைத்து, இந்தியாவுக்கெதிராக ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை, முன்னைய காலங்களில் வெளிப்படுத்திய போதிலும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், இதுவரை பிரகாசிக்கவில்லை. இதுவரை, இரண்டு போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

 

ஆகவே, ஏற்கெனவே அழுத்தத்தில காணப்படும் இலங்கை அணி, இந்தப் போட்டியில் எவ்வாறு விளையாடும் என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

நியூசிலாந்தின் முதல் பகல் – இரவு டெஸ்ட்

நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியை, ஈடன் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தப் போட்டி, அடுத்தாண்டு மார்ச் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

 

முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி, 2015ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற போது, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவ்வணி விளையாடியிருந்தது. அதன் பின்னர், 5 பகல் – இரவு டெஸ்ட் போட்டிகள், இதுவரை இடம்பெற்றுள்ளன.

போராட்டத்தை வெளிப்படுத்துமா இலங்கை?

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, இன்று (24) இடம்பெறவுள்ளது. பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பகல் – இரவுப் போட்டியாக, மதியம் 2.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

 

முழுமையான இந்தத் தொடரின் டெஸ்ட் தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்திருந்தது. குறிப்பாக, முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, ஒரு கட்டத்தில் 1 விக்கெட்டை இழந்து 139 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 216 ஓட்டங்களுக்கு வீழ்ந்திருந்தது.

 

பின்னர், பந்துவீச்சிலும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி, 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்திருந்தது.

 

இலங்கை அணி, இந்தத் தோல்வியைச் சமாளிப்பதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

அதிலும், கிரிக்கெட் சபை, அமைச்சர்கள், விமர்சகர்கள் என, இலங்கை அணி சந்தித்த விமர்சனங்களுக்கு மத்தியில், அவ்வணியின் இரசிகர்களும், எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, 1ஆவது போட்டியின் முடிவில், இலங்கை அணியின் பஸ்ஸை மறித்து, இலங்கை இரசிகர்கள், ஆர்ப்பாட்டம் புரிந்திருந்தனர்.

 

எனவே, இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தப் போட்டியை, இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் கருத்துப்படி, தோல்விக்கான பயமே, இலங்கை அணிக்கான அதிகமான தோல்விகளை வழங்கிக் கொண்டு வருகிறது. அவ்வாறாயின், அந்தத் தோல்விப் பயம் இல்லாமல், இலங்கை எவ்வாறு விளையாட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

இலங்கை அணியின் சாமர கப்புகெதர, தனது 100ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை, இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார். முதலாவது போட்டியில் ஒரேயோர் ஓட்டத்தை மாத்திரம் பெற்ற அவர், தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியிலேயே விளையாடி வருகிறார். எனவே, அவர் மீது, அதிகப்படியான அழுத்தம் காணப்படுகிறது. அடுத்ததாக, திஸர பெரேராவும், தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறார்.

 

அணியாக, அனைத்து வீரர்களும் தங்களை நிரூபித்தாலேயே, இந்தப் போட்டியில், இந்திய அணிக்கான சவாலை, இலங்கை அணி வழங்க முடியும் என்ற நிலையில், அவ்வணி என்ன செய்யுமென்பதே, தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

செப்டெம்பரில் ‘உலக பதினொருவர்’ தொடர்

உலக பதினொருவர் அணி பங்குகொள்ளும் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

 

இத்தொடரில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு, ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அளவு பாதுகாப்பு வழங்கப்படுமென, பஞ்சாப் மாநில அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்தே, இத்தொடர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கிரிக்கெட் குழாமொன்று, பயிற்றுநர் அன்டி ஃபிளவரின் பயிற்றுவிப்பின் கீழ் செயற்படவுள்ளது. இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழாம், துபாயில் 7 நாட்களுக்குப் பயிற்சியில் ஈடுபடும்.

 

அதன் பின்னர், செப்டெம்பர் 10ஆம் திகதி முதல், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஆரம்பிக்கும்.

ஜடேஜாவுக்குப் பதில் அக்ஸார் பட்டேல்

 

பல்லேகலவில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக, இடதுகை சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான அக்ஸார் பட்டேலை இந்தியா அழைத்துள்ளது.

 

இரவிச்சந்திரன் அஷ்வின், இன்னொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அடுத்ததாக, மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அக்ஸார் பட்டேல் குழாமில் இருக்கின்றார்.

 

இந்தியா சார்பாக, 30 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் ஏழு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ள அக்ஸார் பட்டேல், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.