Category Archives: Uncategorised

1ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து – தென்னாபிரிக்கா

பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. பிறிஸ்டலில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.  

 

இலங்கை நேரப்படி, மாலை 3 மணிக்கு, இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளது.  

 

புள்ளிகளின் அடிப்படையில், முதலாவது இடத்தைப் பெற்ற அணிக்கும் 4ஆவது இடத்தைப் பெற்ற அணிக்குமிடையிலான போட்டியாக இது அமையவுள்ளது.  

 

இங்கிலாந்து அணி, தான் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடரில், அவ்வணியின் முதலாவது போட்டியாக அமைந்த, இந்திய அணிக்கெதிரான போட்டியிலேயே, இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தது.  

 

தென்னாபிரிக்க அணி, விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு, 2 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. நியூசிலாந்து அணிக்கெதிரான அவ்வணியின் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது.  

 

இரு அணிகளும் குழுநிலையில் சந்தித்போது, இங்கிலாந்து அணி, 68 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 373 ஓட்டங்களைப் பெற, தென்னாபிரிக்க அணி, 305 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனவே, இந்தப் போட்டியிலும், தென்னாபிரிக்க அணி, விட்டுக்கொடுக்காமல் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இங்கிலாந்தின் டம்மி பியூமொன்ட், 7 போட்டிகளில் 53.14 என்ற சராசரியில் 372 ஓட்டங்களைப் பெற்று, இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகிறார்.  ஆனால், தென்னாபிரிக்காவின் டேன் வான் நியேகேர்க், 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளுடனும், மரிஸன்னே கப் 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடனும், முதலிரு இடங்களில் காணப்படுகின்றனர்.  

 

எனவே, இங்கிலாந்தின் பலமிக்க துடுப்பாட்டத்துக்கும், தென்னாபிரிக்காவின் பலமிக்க பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டியாக, இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.    

ஆப்கானிஸ்தானை வென்றது மே.தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை நேரப்படி, நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது.

 

சென். லூசியாவில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 37.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 51 (73) ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில், அல்ஸாரி ஜோசப், ஷனொன் கப்ரியல், அஷ்லி நேர்ஸ், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு, 136 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 39.2 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியில்க்கை அடைந்து, நான்கு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.

 

துடுப்பாட்டத்தில், ஷை ஹோப் ஆட்டமிழக்காமல் 48 (77), எவின் லூயிஸ் 33 (36) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 3, குல்படின் நைப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.     

பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான்

 

பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில், பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

 

பேர்மிங்காமில் நேற்று (27) இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 102 (140), இம்ருல் கைஸ் 61 (91), முஷ்பிக்கூர் ரஹீம் 46 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான் 4, ஹஸன் அலி, ஷடாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 342 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 49.3 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷொய்ப் மலிக் 72 (66), பாஹிம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 64 (30), மொஹமட் ஹபீஸ் 49 (62), இமாட் வஸீம் 45 (50), அஹமட் ஷெஷாட் 44 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.     

‘பிரச்சினை தொடர்ந்தால் ஆஷஸுக்கு அணி இருக்காது’

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்து, வீரர்களுக்கான ஊதியம் மறுக்கப்படுமாயின், அவுஸ்திரேலியாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள ஆஷஸ் தொடரில், அவுஸ்திரேலிய அணி விளையாடாமல் விடக்கூடுமென, அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் டேவிட் வோணர், வெளிப்படையான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

வீரர்களையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தையும் பொறுத்தவரை, தற்போதுள்ள, வருமானத்தில் குறிப்பிட்டளவு சதவீதம், வீரர்களுக்குச் செல்ல வேண்டுமென்ற வருமானப் பகிர்வுத் திட்டத்தைத் தொடர விரும்புகின்றனர்.

 

எனினும், அதை மறுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, தங்களால் வழங்கப்படும் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஜூன் மாதத்திலிருந்து, வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என எச்சரித்திருந்தது.  
இது தொடர்பில், அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் பலர், தங்களது விருப்பமின்மையை வெளிப்படுத்திய போதிலும், வோணரே, முதன்முறையாக வெளிப்படையான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

“இது, அதி தீவிரமாக மாறுமாயின், அவர்கள் (அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை), ஆஷஸ் தொடருக்கு அணியின்றிக் காணப்படுவார்கள். இணக்கமொன்றுக்கு வர முடியுமென, நான் நம்புகிறேன். எங்களிடம் அணியில்லை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் பருவகாலத்தில் கிரிக்கெட் இல்லை என்ற நிலைமைக்கு வருவதை, நாங்கள் விரும்பவில்லை. அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துடன் பணியாற்றுவது, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையைப் பொறுத்தது.

 

“நியாயமான பங்கையும் வருமானப் பங்கீட்டு முறையையும் நாங்கள் வேண்டுகிறோம். ஆகவே நாங்கள், ஒன்றாக இணைந்து காணப்படப் போகிறோம். விட்டுவிலகி ஓடப் போவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த டேவிட் வோணர், தங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படாவிட்டால், உலகெங்கிலும் இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடுவதற்கு, சர்வதேச வீரர்களுக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் வழங்கப்படும் ஏராளமான வாய்ப்புகளை அவர்கள் பற்றிக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

 

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித்,மிற்சல் ஸ்டார், ஜொஷ் ஹேஸல்வூட், பற் கமின்ஸ் ஆகியோர், இந்தியன் பிறீமியர் லீக் தொடர்களில் விளையாடாமலிருப்பதற்கு, பல ஆண்டுகள் இணைந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்வந்திருந்த நிலையில், அது, “சிரிப்பை வரவழைக்கும் ஒன்று” என, வோணர் தெரிவித்தார்.

 

வோணரின் இந்தக் கருத்துகள், இவ்விடயத்தில் இரு தரப்புகளுமே தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை எடுத்துக் காட்டும் நிலையில், அடுத்தது என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.    

‘திருப்தி அடைகிறேன்’; ‘வருத்தங்கள் இல்லை’

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக், யுனிஸ் கான் இருவரும், தங்களது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து, திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

கருத்துத் தெரிவித்த மிஸ்பா, “இந்தக் கிரிக்கெட் வாழ்வில், நான் பெற்றவை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். என்னவாறான முடிவு, இதைவிடச் சிறந்த ஒன்றை நான் கேட்டிருக்க முடியாது. இந்த அணி தொடர்பாக மகிழ்வடைகிறேன். எனக்கும் யுனிஸுக்கும் அவர்கள் வழங்கிய பிரியாவிடை, சிறப்பானது” என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தன்னால் முடிந்த அத்தனையையும் செய்ததாகத் தெரிவித்ததோடு, தனக்குக் காணப்பட்ட அதிகாரம், பொறுப்பு என்பவற்றுக்கு ஏற்ப, தன்னால் முடிந்தவற்றைச் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

 

இரண்டு சிரேஷ்ட வீரர்கள் ஓய்வுபெறும் நிலையில், அவர்களைப் பிரதியீடு செய்வது கடினமானது என்று தெரிவித்த மிஸ்பா, எனினும், தங்களால் முடியுமென, வீரர்கள் நம்புவது முக்கியமானது என்று தெரிவித்தார்.

 

கருத்துத் தெரிவித்த யுனிஸ் கான், தனது அணித் தலைமைப் பொறுப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தினார். 2009ஆம் ஆண்டில் அவர், டெஸ்ட் தலைமையிலிருந்து விலகிய பின்னரே, மிஸ்பா உல் ஹக், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த யுனிஸ், “நான், அதிகமாக போட்டிகளில் அணித்தலைவராக இருந்திருக்க வேண்டுமென, சிலர் என்னிடம் சொல்வர். ஆனால், என்ன நடந்தாலும், நல்லதற்கே நடக்கும்.

 

“நான், அணித்தலைவராக இருந்திருந்தால், இவ்வளவு ஓட்டங்களை என்னால் பெற முடியாதிருந்திருக்கும். நான், வருத்தங்களை மனதில் கொண்டிருப்பது போல் சிலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை” என்று தெரிவித்தார்.

‘சடுதியான நடவடிக்கைகள் வேண்டாம்’

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) விசேட பொதுக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட்டின் நலன்கள் பாதிக்கப்படக்கூடிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அதில் தலையிடவுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள, நிர்வாகிகள் செயற்குழு தெரிவித்துள்ளது.

செயற்குழுவின் தலைவர் வினோத் ராய்

சர்வதேச கிரிக்கெட் சபையிடமிருந்து, பி.சி.சி.ஐ-க்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறித்து, இரு சபைகளுக்குமிடையில் முரண்பாடு நிலவுகிறது.

 


சர்வதேச கிரிக்கெட் சபையால் நிறைவேற்றப்பட்ட வருமானத் திட்டத்தின் மூலம், தமக்குக் கிடைக்கும் வருமானம் போதாது எனக் கருதும் பி.சி.சி.ஐ, சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றது.

 


குறிப்பாக, உறுப்பினர் பங்குபற்றுமை ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு, பி.சி.சி.ஐ-இன் சில உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். அந்த ஒப்பந்தமே, சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களில், அணிகள் பங்குபற்றுகின்றமைக்கான ஒப்பந்தமாகும்.
இந்நிலையிலேயே, பி.சி.சி.ஐ நிர்வாகிகள் சிலரின் இந்த முயற்சியை, நிர்வாகிகள் குழு, தடுத்து நிறுத்தியுள்ளது.

 


அத்தோடு, இந்திய கிரிக்கெட்டின் நலன்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

‘இளைய அணி போல் விளையாடினோம்’

சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில், இளைய அணியான தாங்கள், இளைய அணி போல் திறமையை வெளிப்படுத்தியதாக, டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் பதில் அணித் தலைவர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

 


வழக்கமான அணித் தலைவர் சகீர் கானுக்கு ஏற்பட்ட உபாதையைத் தொடர்ந்து, அணியின் பதில் தலைவராகப் பணியாற்றும் கருண் நாயர், முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளால் தோல்வியைச் சந்தித்தார்.

 


இந்நிலையில், ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டி, முக்கியமானதாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத் அணி, யுவ்ராஜ் சிங்கின் ஆட்டமிழக்காத 70 (41) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

 

பதிலளித்தாடிய டெல்லி அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.  இந்நிலையில் கருத்துத் தெரிவித்த கருண் நாயர், “அது, மிகச்சிறப்பான வெற்றி என நான் நினைக்கிறேன். இளைய அணியான நாங்கள், இளைய அணி போன்று விளையாட வேண்டும் என்பது குறித்தே கலந்துரையாடினோம். ஆகவே நாங்கள், அங்கு சென்று, அச்சமின்றி விளையாடினோம்” என்றார்.

 


பந்துவீச்சை அடித்து விளையாட முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், அணியின் முதல் 4 துடுப்பாட்ட வீரர்களுமே இளைய வீரர்களாக இருப்பதால், அடித்தாட முடிவு செய்ததாகக் கூறினார்.  தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த யுவ்ராஜ் சிங், எதிரணியின் தலைவர் கருண் நாயர் வழங்கிய பிடி, புவனேஷ்வர் குமாரால் தவற விடப்பட்டமையை, முக்கியமான தருணமாகக் குறிப்பிட்டார்.

சம்பியன்ஸ் லீக்: இலங்கைக் குழாம் அறிவிப்பு

 

ங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் தலைமையில், 15 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமின் உப தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குழாம்:

அஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்புகெதர, அசேல குணரட்ன, டினேஷ் சந்திமால், லசித் மலிங்க, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திஸர பெரேரா, லக்‌ஷன் சந்தகான், சீக்குகே பிரசன்ன.

இவர்களுக்கு மேலதிகமாக, இத்தொடரில் டில்ருவான் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோர், மேலதிக வீரர்களாகச் செயற்படுவர்.

இவர்கள் தவிர, விகும் சஞ்சய, லஹிரு குமார, சச்சித் பத்திரண, மிலிந்த சிரிவர்தன, அகில தனஞ்சய ஆகிய 5 வீரர்களும், மேலதிக வீரர்களாக, கொழும்பில் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருப்பர். தேவையேற்படின், இங்கிலாந்து அல்லது வேல்ஸுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

வென்றது இலங்கை; நாயகனானார் கிறீமர்

சிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுக் கொண்டது. ஆனால் சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர், நாயகனாக மிளிர்ந்தார்.


ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியின் 4ஆவது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களுடன் காணப்பட்ட இலங்கை அணி, அத்துடன் தமது இனிங்ஸை இடைநிறுத்தி, சிம்பாப்வே அணிக்கு 412 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.


இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிம்பாப்வே அணி, ஆரம்பத்திலிருந்து மெதுவாக, பொறுமையாக விளையாடியது. முதலாவது விக்கெட்டுக்காக 16.4 ஓவர்களில் 31 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, பின்னர் 29 ஓவர்களில் 68 ஓட்டங்களுடன், வெற்றி – தோல்வியற்ற நிலைக்குப் போராடும் நிலையை ஆரம்பித்தது. ஆனால், பகல்நேர உணவுநேரத்துக்குச் சற்று முன்பதாகத் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்கள் என்ற நிலையை அடைந்தது. பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அணித்தலைவர் கிறேம் கிறீமரின் பொறுமையான துடுப்பாட்டத்தால் போராடியது.

43 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, 7ஆவது விக்கெட்டுக்காக 19.4 ஓவர்களும், 8ஆவது விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களும் 9ஆவது விக்கெட்டுக்காக 19.3 ஓவர்களும், இணைப்பாட்டம் புரியப்பட்டது. எனினும், போட்டி முடிவதற்கு 10.5 ஓவர்கள் மாத்திரமே காணப்பட்ட போது, 143 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பொறுமையாகப் பெற்றிருந்த கிறேம் கிறீமர், இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சை அடித்தாட முயன்று, ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதன் பின்னர், 8.3 ஓவர்கள் மீதமிருக்கையில், இலங்கை அணியின் வெற்றி பெறப்பட்டது.


இலங்கை அணியின் வழக்கமான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், வழக்கமான உப தலைவர் டினேஷ் சந்திமால் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக, முதன்முறையாக அணித்தலைமைப் பொறுப்பை ஏற்ற ஹேரத், தனது முதலாவது போட்டியிலேயே வெற்றியைப் பெற்றார். ஆனால், பலம் குறைந்த சிம்பாப்வே அணிக்கெதிராக, மிகவும் போராடியே, இந்த வெற்றியைப் பெறக்கூடியதாக அமைந்தது.


இந்தப் போட்டியில், 2,491 பந்துகள் வீசப்பட்டன. இது, இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், அதிக பந்துகள் வீசப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும். 1994ஆம் ஆண்டு, வெற்றி – தோல்வியுற்று முடிவடைந்த போட்டியில் வீசப்பட்ட 2,578 பந்துகளே, இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் அதிக பந்துகள் வீசப்பட்ட சந்தர்ப்பமாக உள்ளது.


இப்போட்டியின் நாயகனாக, சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி, அணிக்காகப் போராடிய, சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேம் கிறீமர் தெரிவானார். இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் 145 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்?

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. 

 

அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட்டுக்கு விஜயம் செய்யும் அணிக்கே, முதலில் துடுப்பெடுத்தாடுவதா? இல்லை களத்தடுப்பிலீடுபடுவதா? என்பதைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவது என்பதை இந்த ஆலோசனைகள் முன்மொழிகின்றன. இதனால், ஆடுகளத்தைத் தயார் செய்யும் அணி, தனக்கு மட்டும் சாதகத்தன்மை கொண்டதாக அதனை அமைக்காமல் பொதுவானதாக அமைப்பதற்கு வழியேற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்துக்கு ரிக்கிபொன்டிங், ஸ்டீவ் வோ, மைக்கேல் ஹோல்டிங் போன்ற முன்னாள் முன்னணி வீரர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இது சார்ந்ததொரு திட்டத்தை வரும் கிரிக்கெட் பருவகாலத்தின் உள்ளூர் போட்டிகளின்போது நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது. கவுன்டி அணி ஒன்று, இன்னோர் அணியின் ஆடுகளத்துக்குச் சென்று விளையாடும்போது, அந்த அணிக்கு முதலில் களத்தடுப்பிலீடுபடும் வாய்ப்பு வழங்கப்படும். அதை அந்த அணி மறுக்கும்பட்சத்தில் மட்டும் நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்படும் இந்த புதிய நடைமுறைகள் குறித்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமன் தனது வரவேற்பினைத் தெரிவித்துள்ளார். அடிலெய்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

 

''நிச்சயமாக இந்தத் திட்டம் கிரிக்கெட்டுக்குள் உள்வாங்கப்படவேண்டும். இதன் மூலம் தனக்கு மட்டும் சாதகமான ஆடுகளங்களை தயாரிக்கும் அணிகளின் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார் லீமன். 

 

''ஆறு வருடங்களுக்கு முன்னர் பகல்-இரவு டெஸ்ட் போட்டி பற்றி எம்.சி.சி திட்டமிட்டபோதே எனக்கு அது ஒரு அற்புதமானவும், சுவாரஸ்யமானதுமான திட்டம் என்பது புரிந்தது. அது, இப்போது விளையாடப்பட்டபோது ரசிகர்களாலும் உணரப்பட்டிருக்கும். இதுபோலவே புதிய திட்டங்களும் டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரஷ்யப்படுத்தும்' என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் டெரன் லீமன்.

 

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும்போது தினமும் வீசப்படவேண்டிய 90 ஓவர்களுக்கு மேலதிகமாக சில ஓவர்களை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறதாம்.