All posts by Mathan

ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. 

டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்டி பல்லேகலயிலும் நடைபெறவுள்ளன.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிகள் காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மேலதிக நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

T20 போட்டிகள் ஜூலை 30 மற்றும் ஓகஸ்ட் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடருக்கு முன்னதாக, இலங்கை வரும் பாகிஸ்தான் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து – அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டது

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையில் டப்ளினில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டி 18 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் கடும் மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் டெய்லர் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அந்த அணி விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். அத்தோடு 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியில் ஐந்து அறிமுக வீரர்கள் ஒரே போட்டியில் இடம்பிடித்த சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டி ஆரம்பித்த நேரம் முதலே மழைபெய்துகொண்டிருந்தாலும் விளையாடக்கூடிய நிலைமை காணப்பட்டதால் போட்டியை நடத்த நடுவர்கள் தீர்மானித்தனர். ஆயினும் 18 ஆது ஓவர் நிறைவுபெறும் வேளையில் கடும் மழை பிடித்துக்கொண்டதால் போட்டி இடை நிறுத்தப்பட்டது. அந்த வேளையில் அயர்லாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. 

இங்கிலாந்து அணியின் அறிமுகவீரர்களான மார்க் வூட், டேவில் வில்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர். டிம் பிரெஸ்னனும் தன் பங்குக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தொடர்ந்தும் கடுமையான மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சியின் நடவடிக்கை என்னைப் பாதித்தது: அன்டர்சன்

இந்தியாவுடனான தொடரில் இந்திய அணி வீரர் ஜடேஜாவுடன் கிரிக்கெட் விதிகளை மீறி முறுகல் தன்மையோடு நடந்துகொண்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் அன்டர்சன் மீது புகார் எழுப்பப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து ஜேம்ஸ் அன்டர்சன் மீது மட்டுமல்ல ஜடேஜாவின் மீதும் ஐ.சி.சியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

ஐ.சி.சியின் இந்த நடவடிக்கையானது உலகக் கிண்ணத் தொடரில் தனது பந்துவீச்சினைப் பாதித்திருந்ததாக ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கும் அன்டர்சன், ஊடகங்களுடனான சந்திப்பின்போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

'ஐ.சி.சி யினால் என்மேல் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையானது எனது பந்துவீசும் ஆற்றலைப் பாதித்தது. குறித்ததொரு எல்லைக்குள் வீரர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதாக அவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது எனது இயல்பான ஆற்றலை வெகுவாக சிதைத்தது. வரையறைகளுக்குள் இருந்துகொண்டு எமது ஆற்றலை வெளிக்கொணர்வது மிகக் கடினமான காரியமாகும். எனவே, உலகக் கிண்ணத் தொடரில் என்னால் வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் போயிருந்தது. 

ஷேன் வொட்சனுக்கு எதிரான வஹாப் ரியாஸின் அற்புதமான பந்துவீச்சை இந்த உலகமே கண்டு வியந்தது. அதே நேரம் அந்தப் போட்டியின் பின்னர் அந்த வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இந்த உலகத்துக்கு தெரியும். யாரோ உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே தடுமாறவைத்துவிடும். அதனை அனைத்துத் தரப்பினரும் உணரவேண்டும். விளையாட்டினை அதற்குரிய இயல்புத் தன்மையோடு விளையாட அனுமதிக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமானது' என்று தனது உள்ளக் கிடக்கையை வெளிக்கொணர்ந்திருக்கும் அன்டர்சன், மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரில் அந்தப் பாதிப்புகளிலிருந்து விலகி இயல்பாக விளையாட முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

போல் டவுன்டன் விலகுகின்றார்

உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தின் மோசமான பெறுபேறுகள் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து டவுன்டன் விலகுகின்றார்.

கடந்த 2014 பெப்ரவரி, ஹியூ மோரிஸ் பதவிவிலகிய பின் போல் டவுன்டன் பதவிக்கு வந்திருந்தார்.

முன்னாள் அணியின் கப்டனும், நட்சத்திரவீரருமான கெவின் பீற்றர்சனை ஆஷஸ் முடிவடைந்த பின் அணியிலிருந்து நீக்கியமை, ஒருநாள் அணியின் கப்டனான குக்கை உலகக்கிண்ண போட்டிகள் தொடங்க ஒருமாதமிருக்க நீக்கியமை போன்ற சர்ச்சைக்குரிய முடிவுகளை இவரே எடுத்திருந்தார்.

அவுஸ்ரேலியாவின் மேற்கிந்தியதீவுகளுக்கான பயணத்தொடரில் மாற்றம்

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவுஸ்ரேலிய, மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டு நாட்கள் முன்னகர்த்துவதாக அறிவித்துள்ளது. 

புதிய அட்டவணையின்படி முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி டொமினிக்காவிலும், இரண்டாவது டெஸ்ட்போட்டி ஜூன் மாதம் 11ஆம் தேதி ஜமைக்கா சபீனாபார்க்கிலும் இடம்பெறவுள்ளது.

ஐபிஎல்லின் முதலாவது போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

நேற்று கொல்கத்தா ஈடன்கார்டின் மைதானத்தில் இடம்பெற்ற 8ஆவது பருவகால ஐபிஎல்லின் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்களால் 9 பந்து மீதமிருக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆரம்பத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கப்டன் காம்பீர், மும்பை இந்தியன்ஸ் அணியை துடுப்பெடுத்தாட பணித்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக அணியின் கப்டன் ரோஹித் ஷர்மாவும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். மோர்க்கலின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்காமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பின்னர் களம்புகுந்த கொரி அண்டர்சன், ரோஹித் ஷர்மாவின் 131 ஓட்டங்கள் இணைப்பாட்டம் கைகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 98 ஓட்டங்களை பெற்றார். அண்டர்சன் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 41 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார். மோர்க்கல் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, காம்பீர் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்ளடங்கலாக பெற்ற 57 ஓட்டங்கள் கைகொடுக்க பின்னர் வந்த மனிஷ் பாண்டே 24 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்ளடங்கலாக பெற்ற 40 ஓட்டங்கள், சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி உள்ளடங்கலாக பெற்ற 46 ஓட்டங்கள் அதிரடி கைகொடுக்க கடந்தமுறை சாம்பியனான கொல்கத்தா அணி வெற்றியுடன் இப்பருவகால ஐபிஎல்லை தொடக்கியுள்ளது.

இன்று இலங்கை நேரம் இரவு 8 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி டார்டெவில்ஸ் இடையே சென்னையில் போட்டி இடம்பெறவுள்ளது.

விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு

விஸ்டன் – 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வருட விஸ்டனின் பதிப்பு முன்னட்டையில் இடம்பெற்றிருந்த மூன் அலி உட்பட கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் மற்றைய நான்கு சிறந்த வீரர்களாவர்.

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக கபில விஜேகுணவர்த்தன

இலங்கையின் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக கபில விஜேகுணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கபில விஜேகுணவர்த்தன தலைமையிலான தெரிவுக்குழுவில் அமல் சில்வா, பிரண்டன் குருப்பு, ஹேமந்த விக்கிரமரட்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் ஒருநாள், 20-20 குழாமில் இருந்து காயமடைந்த மஷூட் விலகல்

பாகிஸ்தானின் மத்தியகள துடுப்பாட்டவீரரான ஷொய்ப் மஷூட், இடது கையின் மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள என்புமுறிவு காரணமாக பங்களாதேஷ் தொடரின் ஒருநாள், 20-20 அணிகளிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக 20-20 அணியில் இடம்பெற்றிருக்கும் சயிட் நஸீம் ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

லாகூரில் இன்று நடைபெற்ற ஜிம், உடற்தகுதி பயிற்சிகளின் போதே நோவை உணர்ந்தபோதே பின் ஸ்கான் பரிசோதனைகளின்போதே என்புமுறிவு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தவருடமும் பாகிஸ்தான் ஏ அணிக்காக ஆடும்போது இதே உபாதையினால் பாதிக்கப்பட்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டித்தொடரில் இடம்பெறாமல் போனார்.

ஐ.பி.எல் தொடரில் சுனில் நரைன்

தனது மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுப் பாணி சர்வதேச கிரிக்கெட் விதிகளுக்கு அமைவானது என்பதை சுனில் நரைன் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் நிரூபித்ததையடுத்து அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரான ஜக்மோகன் டால்மியா இன்று விடுத்துள்ளார்.

ஐ.சி.சி.யினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் தனது புதிய பந்துவீச்சு முறையை பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அது விதிமுறைகளுக்கு அமைவானதுதான் என நிரூபிக்கும் சான்றிதழ்களை பி.சி.சி.ஐக்கும் வழங்கியிருந்தார். ஆயினும், அதனை முழுமையாக ஏற்க மறுத்த பி.சி.சி.ஐ, சென்னையிலுள்ள பரிசோதனை மையத்தில் அவர் தனது பந்துவீச்சுப் பாணியை பரிசோதித்து, நிரூபிக்கவேண்டும் என உறுதிபடத் தெரிவித்திருந்தது. 

அதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் சுழல் பந்துவீச்சாளருமான வெங்கட்ராகவன், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், முன்னாள் ஐ.சி.சி நடுவர் ஏ.வி.ஜெயப்பிரகாஷ் ஆகியோரைக்கொண்ட பி.சி.சி.ஐயினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு முன்னிலையில் சென்னையிலுள்ள ஐ.சி.சி.யினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீராகவேந்திரா பல்கலைக்கழக பந்துவீச்சுப் பரிசோதனைக் கூடத்தில் சுனில் நரைன் தனது புதிய பந்துவீச்சுப் பாணியை பரிசோதனைக்குட்படுத்திக்கொண்டார். 

இந்தப் பரிசோதனைகளின் முடிவில், அந்த நிபுணர் குழு தனது அறிக்கையை பி.சி.சி.ஐக்கு அனுப்பியது. அந்த அறிக்கையில், சுனில் நரைனின் புதிய பந்துவீச்சு முறையில் அவரது அனைத்துவிதமான பந்துவீச்சுக்களுமே ஐ.சி.சி.யின் விதிகளுக்கு அமைவாகவே இருப்பதாகவும், எனவே, சந்தேகத்துக்குரிய பந்துவீச்சு முறையைக் கொண்ட பந்துவீச்சாளர்கள் என்ற பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையிலேயே, பி.சி.சி.ஐயின் தலைவர் டால்மியா, தனது அறிக்கையை வெளியிட்டிருப்பதாக அறியமுடிகிறது. எனவே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விளையாடவிருக்கும் முதலாவது போட்டியிலிருந்து சுனில் நரைன் அந்த அணியில் பந்துவீசுவார் என எதிர்பார்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் பி.சி.சி.ஐயினால் நடாத்தப்படும் எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் இனி சுனில் நரைன் பங்கேற்கத் தடையேதும் இராது.

பி.சி.சி.ஐயின் இந்த முடிவு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், 'இது எமக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் செய்தியாகும். இந்த முடிவினை மேற்கொண்ட பி.சி.சி.ஐயின் தலைவர், செயலாளர், மற்றும் அனைத்து பி.சி.சி.ஐ அலுவலர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என குறிப்பிட்டுள்ளது.

சுனில் நரைனின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக எழுந்த அண்மைய சர்ச்சைகளைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறப்போவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னர் தெரிவித்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.