தேர்வாளர்கள் குழு நியமிக்கப்பட்டது

 

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர் குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. நியமிக்கப்பட்டுள்ள கிறேமி லப்றோயை தலைமைத் தேர்வாளராகக் கொண்ட தேர்வாளர் குழு ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

 

கிறேமி லப்றோயைத் தவிர, இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக உள்ள அசங்க குருசிங்கவும் தேர்வாளர் குழுவில் இடம்பெற்றுள்ளதோடு, காமினி விக்கிரமசிங்க, ஜெரைல் வூட்டர்ஸும் தேர்வாளர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

குறித்த தேர்வாளர் குழுவானது, பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகட்ட 25 பேர் கொண்ட குழாமிலிருந்து 15 பேரை முதலாவதாக தெரிவுசெய்யவுள்ளது.

 

சனத் ஜெயசூரிய தலைமையிலான தேர்வாளர் குழு இராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே, புதிய தேர்வாளர்கள் குழுவைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

சாமர சில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை

 

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வா உள்ளிட்ட, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்றுநர்கள், அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால், தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமர சில்வாவுக்கும் மனோஜ் தேஷப்பிரியவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்ட அதேவேளை, ஏனையோருக்கு ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

 

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியிலேயே, இத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதற்தர கிரிக்கெட் தொடரான பிறீமியர் லீக் தொடரின், "பி" பிரிவுக்கான போட்டியில், களுத்துறை பௌதீக கலாசார கழகத்துக்கும் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான போட்டியிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றது.

 

இந்தப் போட்டியில், இரு அணிகளும் விளையாடிய விதத்தைத் தொடர்ந்து, அதிகமான ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன. போட்டி முடிவில், பாணந்துறை அணி, பிரிவு "ஏ"க்கு தரமுயர்த்தப்பட்டதுடன், களுத்துறை அணி, பிறீமியர் லீக் பிரிவிலிருந்து தரமிறக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டது. எனினும், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை அணி (பாணந்துறை அணியை முந்திக் கொண்டு, "ஏ" பிரிவுக்குச் செல்லவிருந்த அணி), தமது எதிர்ப்பைப் பதிவுசெய்தது.

 

இதைத் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், இரண்டு அணிகளின் தலைவர்களுக்கும், தலா 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய வீரர்கள், பயிற்றுநர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு, தலா ஓர் ஆண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பங்குபற்றிய அனைவரினதும் போட்டி ஊதியங்கள் மீளப் பெறப்படவுள்ளதோடு, அணிகளுக்குத் தலா 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இப்போட்டியின் முடிவு, இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை அணி, "பி" பிரிவிலேயே மீண்டும் காணப்படவுள்ள அதேநேரத்தில், துறைமுக அணி, "ஏ" பிரிவுக்குச் செல்லவுள்ளது. அதேபோன்று, களுத்துறை அணி, சாரா கிண்ணத்தில் விளையாடவுள்ளது. வீரர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்ட அதேநேரத்தில், போட்டியின் உத்தியோத்தர்கள் (நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர்கள்) ஏன், எந்தவிதமான நடவடிக்கைகயையும் எடுக்கவில்லை என்பது தொடர்பாக, விசாரணை நடத்தப்படவுள்ளது.

 

இதில், பாணந்துறை அணித் தலைவர் சாமர சில்வா, இந்தத் திட்டத்துக்கு ஒத்துப் போகாமலேயே, 3ஆவது நாளில் பங்குபற்றவில்லை என்று கூறப்பட்ட போதிலும், அதை நிராகரித்த இலங்கை கிரிக்கெட் சபை, இவ்விடயம் குறித்து, கிரிக்கெட் சபையிடம் அவர் அறிவிக்கத் தவறிவிட்டார் எனவும், விசாரணைகளின் போதும் இவ்விடயத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

போட்டியில் நடந்தது என்ன?

 

இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெற்ற 3 நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய களுத்துறை பௌதீக கலாசார கழக அணி, 390 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இரண்டாவது நாளில், போட்டி பெரிதளவில் பாதிக்கப்பட்ட, அந்நாள் முடிவில், பாணந்துறை விளையாட்டுக் கழக அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இப்போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளில், தொடர்ந்து விளையாடிய பாணந்துறை அணி, 23 ஓவர்களில் 243 ஓட்டங்களைக் குவித்து, 423 ஓட்டங்களைப் பெற்றது.

 

தொடர்ந்து களுத்துறை அணி, 22.5 ஓவர்களில் 197 ஓட்டங்களைப் பெற்றதோடு, சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வெற்றிபெற வேண்டிய 167 ஓட்டங்களை, 13.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, பாணந்துறை அணி பெற்றது. அந்த வெற்றியிலக்கை அடைவதற்கு, பாணந்துறை அணிக்கு 15 ஓவர்களே காணப்பட்டன.

 

முதல் 2 நாட்களும், சாதாரணமாக போட்டி இடம்பெற்ற நிலையில், இறுதி நாளில் 60 ஓவர்களில் 605 ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் மூன்று பேருக்கு காயம்

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி நடைபெற்ற எமிரேட்ஸ் றிவர்சைட் மைதானத்தின் தற்காலிக அரங்கொன்று, பகுதியளவில் தகர்ந்தையையடுத்து, மூன்று பார்வையாளர்கள் காயமடைந்ததுடன், 200 பேர் மைதானத்தின் இன்னொரு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

 

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது, மைதான நேரப்படி, இரவு 9.30 மணியளவில், மைதானத்தின் வட கிழக்கு மூலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்தது. தளத்தின் பகுதியொன்று உட்சென்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், ஓட்டைக்குள்ளால் விழுந்தமை காரணமாக, பெண் பார்வையாளரொருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த மைதானத்தைக் கொண்ட டேர்ஹாம் கவுண்டி கிரிக்கெட் கழகத்தின் அறிக்கையொன்றின்படி, மைதானத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தளமொன்று நிலையற்றதாகி பார்வையாளர் வீழ்ந்ததில் மூன்று பேர்  காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது.

 

செஸ்டர் லி ஸ்றீட்டில், நேற்று  (16) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

 

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எவின் லூயிஸ் 51 (28), கிறிஸ் கெய்ல் 40 (21), றொவ்மன் பவல் 28 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் றஷீட், லியம் பிளங்கெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு, 177 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 19.3 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 43 (17), ஜொஸ் பட்லர் 30 (27), ஜொனி பெயர்ஸ்டோ 27 (21), லியம் பிளங்கெட் 18 (11) ஓட்டங்களைப் பெற்றனர்.  பந்துவீச்சில், கார்லோஸ் பிறத்வெய்ட், கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

போட்டியின் நாயகனாக, சுனில் நரைன் தெரிவானார்.

முதல் 3 போட்டிகளில் தவான் இல்லை

 

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

 

தவானின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக, அவருடன் இருப்பதற்கு தவான் விரும்பி, விடுமுறை கோரியதன் காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

 

தவானுக்குப் பதிலாக, மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. எனவே, லோகேஷ் ராகுல் அல்லது அஜின்கியா ரஹானே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக, றோகித் ஷர்மாவுடன் களமிறங்குவர்.

 

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. சென்னை சேப்பாகத்தில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டி, பிற்பகல் 1.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

‘டெஸ்டில் ஸ்மித்; ஒருநாளில் கோலி’

 

டெஸ்ட் போட்டிகளில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறந்தவர் என்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி சிறந்தவர் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

 

டெஸ்ட் போட்டிகளில், 59.66 என்ற சராசரியை ஸ்டீவ் ஸ்மித் கொண்டிருக்க, 49.55 என்ற சராசரியை விராத் கோலி கொண்டிருக்கிறார்.

 

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 55.75 என்ற சராசரியை விராத் கோலி கொண்டிருக்கையில், 44.26 என்ற சராசரியை ஸ்டீவ் ஸ்மித் கொண்டிருக்கிறார்.

உலக பதினொருவர் அணி வென்றது

 

இலங்கை அணியின் திஸர பெரேரா, அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணிக்கெதிரான சுதந்திரக் கிண்ணத்துக்கான தொடரின் 2ஆவது போட்டியில், உலக பதினொருவர் அணி வெற்றிபெற்றது.

 

லாகூரில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓடட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களில் 41 ஓட்டங்கள் குவிக்கப்பட, தொடர்ந்து வந்த வீரர்களும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 45 (38), அஹமட் ஷெஷாத் 43 (34), ஷொய்ப் மலிக் 39 (23) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் திஸர பெரேராவும் சாமுவேல் பத்ரியும், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

175 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி, 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றாலும், வேகமாக ஓட்டங்களைப் பெற, உலக பதினொருவர் அணி தடுமாறியது. அப்போது, 36 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற வேண்டுமென்ற நிலை காணப்பட்ட போது, திஸர பெரேரா களமிறங்கினார். குறிப்பாக, தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை முந்திக் கொண்டு, திஸர களமிறக்கப்பட்டார்.

 

ஒரு கட்டத்தில், 2 ஓவர்களில் 33 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில், 20 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அவற்றில் 18 ஓட்டங்களை, திஸர பெற்றுக் கொண்டார். இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட, இறுதி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. 20ஆவது ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட திஸர பெரேரா, அதை 6 ஓட்டங்களுக்கு விளாசி, வெற்றியைப் பெற்றுக் கொண்டார். துடுப்பாட்டத்தில் ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 72 (55), திஸர பெரேரா 47 (19) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

போட்டியின் நாயகனாக, திஸர பெரேரா தெரிவானார்.

 

தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், தொடரின் நிலை, 1-1 என மாறியுள்ளது. இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள 3ஆவது போட்டி, தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்: கொழும்பில் விசேட கலந்துரையாடல்

 

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய போக்கு குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை, எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடத்தவுள்ளதாகவும் இதன்போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான தயாசிறி ஜயசேகர இன்று (13) தெரிவித்தார்.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

 

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னாள் தலைவர்கள், முன்னாள் தெரிவுக்குழுத் தலைவர்கள், அணியின் வீரர்கள், மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், விளையாட்டுத் துறைசார்ந்த ஊடகவியலாளர்கள் என முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள சவாலிலிருந்து மீட்பது, வெற்றிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படுவதுடன் அனைவரினதும் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்ளவுள்ளோம். அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை தொகுத்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளிக்கவுள்ளோம்.

 

அதில் அடங்கியுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு கிரிக்கெட் சபைத் தலைவரிடம் நான் கோரவுள்ளேன். அதன்பின்னர் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கலாம்.

 

கேள்வி: கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் விலகியுள்ள நிலையில் பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவதற்கான இலங்கைக் குழாமை யார் தெரிவு செய்தார்கள்?

 

பதில்: தெரிவுக்குழுவினர் விலகுவதற்கு முன்னர், இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களைத் தெரிவு செய்யவென, இடைக்கால குழுவை அவர்களே முன்மொழிந்திருந்தார்கள். அதனடிப்படையிலேயே தெரிவு இடம்பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் புதிய தெரிவுக்குழுவை நான் அறிவிக்கவுள்ளேன்.

 

கேள்வி: பாகிஸ்தானுடனான தொடரில் இலங்கை விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்குச் செல்வதில் இலங்கை அணிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?

 

பதில்: இலங்கை அணிக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே எமது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும். இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களை அறிவிப்போம். பாகிஸ்தான் நாட்டுடன் எமக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. எமக்கு கஷ்டமான நேரங்களில் உதவிகள் புரிந்திருக்கிறார்கள். அண்மையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தபோது பாரிய அளவில் நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் வழங்கியிருந்தது. இவை அனைத்தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

லாகூரும் பாகிஸ்தானும் களைகண்டன

 

சுதந்திரக் கிண்ணத்துக்காக, உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், நேற்று ஆரம்பித்த நிலையில், போட்டி நடைபெறும் லாகூர் மாத்திமல்லாது, முழு பாகிஸ்தானுமே, களைகட்டியிருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

 

2009ஆம் ஆண்டில், இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், பிரதானமான அணிகள், பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு மறுத்துவந்த நிலையில், உள்ளூரில் போட்டிகள் இல்லாமல், பாகிஸ்தான் இரசிகர்கள் வாடியிருந்தனர். இந்நிலையில், உலக பதினொருவர் அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களுக்கு, விசேட மரியாதையும் வழங்கப்பட்டது.

 

போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, பாபர் அஸாமின் 86 (52), அஹமட் ஷெஷாத்தின் 39 (34), ஷொய்ப் மலிக்கின் 38 (20) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த 197 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் திஸர பெரேரா, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், 4 ஓவர்களில் 51 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

 

பதிலளித்தாடிய உலக பதினொருவர் அணி சார்பாக, எந்தவொரு வீரரும் 30 ஓட்டங்களைப் பெறாத நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று, 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் டெரன் சமி ஆட்டமிழக்காமல் 29 (16), ஃபப் டு பிளெஸி 29 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சொஹைல் கான், றும்மன் றயீஸ், ஷடாப் கான் ஆகியோர், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

போட்டியின்ந நாயகனாக, பாபர் அஸாம் தெரிவானார்.

மும்பை அணியில் அர்ஜுன் டென்டுல்கர்

 

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டென்டுல்கரின் மகன் அர்ஜுன் டென்டுல்கம், மும்பையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளது.

 

செப்டெம்பர் 16ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஜே.வை லேலே அழைப்பு கிரிக்கெட் தெதாடரில் பங்குபற்றுவதற்கே, அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

மும்பையின் 16 வயதுக்குட்பட்ட அணியில் முன்னர் இடம்பிடித்திருந்த அவர், இம்மாதம் 24ஆம் திகதி, தனது 18ஆவது வயதைப் பூர்த்தி செய்கிறார்.

 

தந்தையைப் போலல்லாது, இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், இங்கிலாந்து அணியின் வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராகச் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.